நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 14, 2013

விஜய தசமி

அன்பின் நல் வாழ்த்துக்கள்!.. 

மங்கலகரமாகிய நவராத்திரி வைபவத்தில் ஒன்பது நாட்களும் வீரத்துக்கு அதிபதியான ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும்  செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமஹாலக்ஷ்மியையும்  கல்விக்கு அதிபதியான ஸ்ரீ ஞான சரஸ்வதியையும் உள்ளன்புடன் வணங்கி வழிபாடுகள் செய்து மகிழ்ந்தோம்.

இன்று பத்தாம் நாள் விஜயதசமி.


அநீதியை எதிர்த்து  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி - மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்தாள். ஒன்பதாம் நாளன்று மகிஷன் வீழ்ந்தான். ஆணவமும் அகந்தையும் அழிந்தன. 

மறுநாள் தேவர்களும் முனிவர்களும் சகல உயிர்களும் அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியைக் கொண்டாடி மகிழ்ந்த நாள். 

 

அன்னை போர்க் கோலத்தில் இருந்து மீண்டு  சாந்த ஸ்வரூபிணியாக மங்களம் விளங்க திருக்கோலம் கொண்டருளினாள்.

ஊர்க்கும் உண்டு உடையானின் சிறப்பு என்பது சிவநெறி. அதுபோல ஆயுதங்களுக்கும் உண்டு அன்னையின் சிறப்பு !.. 

எனவே அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும் அவள் தாங்கி நின்ற ஆயுதங்களையும் வணங்கி மகிழ்ந்தனர். வெற்றியைக் கொண்டாடியபடியால் - விஜய தசமி.

இந்நாள் - நல்லனவற்றை மேற்கொள்ளவும் புதிய வணிகம் ஆரம்பிக்கவும் உகந்த நாளாக விளங்குகின்றது. 

ஸ்ரீராமன்  - ராவணனை வெற்றி கண்ட நாள் - விஜய தசமி - என்றும்,

பஞ்சபாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசம் முடிந்தபின், வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை மீண்டும் எடுத்துக் கொண்டு, ஸ்ரீதுர்க்கையை வழிபட்ட  நாள்  - விஜய தசமி - என்றும் வழங்குவர்.


விஜய தசமி - குழந்தைகளின் கல்வி தொடக்கத்துக்கு சிறப்பான நாள் என குறிக்கப்படுகின்றது. 
திருஆரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி தேவி திருக் கோயிலிலும் கும்பகோணத்தை அடுத்துள்ள இன்னம்பூர் - ஸ்ரீ நித்யகல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ எழுத்தறிவித்த நாதர் திருக்கோயிலிலும் அட்சராப்பியாச வழிபாடுகள் சிறப்பாக நிகழ்கின்றன. சிவபெருமான் - அகத்திய மகரிஷிக்கு இத்தலத்தில் தமிழ் இலக்கணத்தை உபதேசித்ததாக ஐதீகம்.


விஜய தசமி அன்று தான் அவதார புருஷராகிய ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மகாசமாதி அடைந்தார். மேலும்,

மதுரைக்கு அருகில் சமயநல்லூரில் - ஸ்ரீ மீனாட்சி அன்னையின் அருளால், சங்கு சக்கர ரேகையுடன் பிறந்து,  நேர்ந்து கொண்டபடி - பெற்றோரால் - கோயில் பிள்ளையாக விடப்பட்ட ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் சித்தி ஆனதும் (1932) விஜய தசமி நாளில் தான்!.. 


ஆதியில் ஸ்ரீகுழந்தையானந்த ஸ்வாமிகள்,  (1627) சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் அவதரித்தார். அந்த பிறவி ஈடேறிய பின், மீண்டும் மூன்று முறை அவதரித்ததாகவும் அவற்றை எல்லாம் தன் அன்பர்களுக்குக் காட்டி அருளியதாகவும் திருக்குறிப்புகள் உள்ளன. 

ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் ஜீவசமாதி கோயில் மதுரை அரசரடியில் உள்ளது. மேலும், ஜீவசாமாதியிலிருந்து வெளிப்பட்டும் அன்பர்களின் இடர் தீர்ப்பதாகக் கூறுகின்றனர். 

ஆக, உத்தம புருஷர்களை சிந்திக்கவும் வந்திக்கவும் உகந்த நாள்.

எல்லாவற்றையும் விட இன்னொரு சிறப்பு!.. 

ஒன்பது நாட்களும் ஒருமித்த சிந்தையுடன் - அன்புடனும் பக்தியுடனும் தன்னை வழிபட்டவர்களின் இல்லம் தேடி, 


பத்தாம் நாளன்று அன்னை பராசக்தி வருகின்றாள்!.. 

அம்பிகை நம்மைத் தேடி வருகின்றாள் என்பது எத்தனை மகத்தானது!.. 

அவளை மகிழ்வுடன் நாம் வரவேற்போம்!.. 
அவள் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்!.. 

அம்பிகைப் போற்றி வணங்க திருப்பாடல்களும் தோத்திரப் பாமாலைகளும் கணக்கில் அடங்காதவை. அவற்றுள், 

தலைசிறந்த மாணிக்கமாகக் கருதப்படும் ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தின் சாரமாகத் திகழும் அபிராமி அந்தாதி நமக்குக் கிடைத்த பொக்கிஷம். 

அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டர் அம்பிகையைக் குறித்து இயற்றிய இரண்டு திருப்பதிகங்கள் உள்ளன. 

அவற்றுள் அம்பிகையின் திருப்பெயர்களைத் தாங்கிய திருப்பாடல்!..

சந்த்ர சடாதரி முகுந்த சோதரி துங்க சல சுலோசன மாதவி 
சம்ப்ரம பயோதரி சுமங்கலி சாற்றரும் கருணாகரி 

அந்தரி வராகி சாம்பவி அமர தோதரி அமலை செக சால சூத்ரி 
அகிலாத்ம காரணி விநோதசய நாரணி அகண்ட சின்மய பூரணி 

சுந்தரி நிரந்தரி துரந்தரி வரைராச சுகுமாரி கெளமாரி உத்துங்க 
கல்யாணி புஷ்பாஸ்திராம்புய பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி 

அந்தரி மலர் பிரமராதி துதி வேதஒலி வளர் திருக்கடவூரில் வாழ் 
வாமி! சுபநேமி! புகழ் நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி உமையே!.. 

இப்படி அவளுடைய திருநாமங்களைச் சொல்லி வழிபட்டு நிற்கையில் அவளிடம் என்ன கேட்பது!.. 

இகவாழ்க்கை சிறப்புற பதினாறு பேறுகளையும் கேட்டு, அவற்றின் வழியாக அம்பிகையின் திருப்பாதங்களின் அன்பும் கேட்போம்!..


அவள் திருப்பாதங்களில் அன்பு வைக்க அவளே அருள்வாள்!.. 

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும் 
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும் 
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே!.. ஆதிகடவூரின் வாழ்வே!..
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!.. அருள்வாமி!.. அபிராமியே!..

விஜய தசமி எனும் நன்நாள்
பொலிவு கொண்ட பெண்மை போரிட்டு வென்ற நாள்!..
பேர் கொண்ட பெண்மை பெருமை கொண்ட நாள்!..

பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்!..
பெண்மை வாழ்க என்று தலை வைத்து வணங்குகின்றேன்!..

ஓம் சக்தி!.. ஓம் சக்தி!..
ஓம் சக்தி!..

11 கருத்துகள்:

  1. ஸ்ரீகுழந்தையானந்த ஸ்வாமிகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது... நன்றிகள் ஐயா...

    இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. //இகவாழ்க்கை சிறப்புற பதினாறு பேறுகளையும் கேட்டு, அவற்றின் வழியாக அம்பிகையின் திருப்பாதங்களின் அன்பும் கேட்போம்!..


    அவள் திருப்பாதங்களில் அன்பு வைக்க அவளே அருள்வாள்!.. //

    மகிழ்ச்சி தரும் பதிவு.. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. தங்களின் வருகைக்கும் அன்பின் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. ஸ்ரீ குழந்தையானந்தா சுவாமிகள் பற்றி தெரிந்துகொண்டேன்...
    படங்களும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. அருமையான அன்னையின் சிறப்புகளுடன் அறிந்திராத புதிய தகவல்களும்
    இன்று உங்கள் பதிவில் அறிந்துகொண்டேன்! அழகும் அருமையும் ஐயா!

    விஜய தசமி நல் வாழ்த்துக்கள்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. வருக.. சரவணன்.. வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி!..

    பதிலளிநீக்கு
  6. அருமையான வெற்றிப்பகிர்வுகள்...பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றிகள்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..