நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 11, 2013

சகல கலாவல்லி

நவராத்திரி வைபவத்தில் சரஸ்வதி தேவியைப் போற்றி வணங்கும் மூன்று நாட்களின் முதல் நாள்!.

சகலகலாவல்லி - அவள் அல்லால் ஏது கதி!.. 

தட்பமும் வெப்பமும் சமமாகத் திகழும் சரத் காலத்தில் நிகழும் நவராத்திரிக்கு - சாரதா நவராத்திரி என்று பெயர். 

சாரதா என்பது அன்னை ஸரஸ்வதியின் திருப்பெயர்களுள் ஒன்று!.

எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளைப் போலவே  - இவளுக்கும் மூன்று கண்கள், ஜடாமகுடம், சந்த்ரகலை, ஜபமாலை, சுவடி, வீணை - எனும் நிறை மங்கலங்கள். 

சகல வித்யைகளுக்கும் காரணனான தக்ஷிணாமூர்த்தியும், வித்யா ஸ்வரூபிணியாகிய ஞானசரஸ்வதியும் ஸ்படிகம் போல் ஒளிர்பவர்கள்.
 
''தக்ஷிணாமூர்த்தியும் ஸரஸ்வதியும்  சுத்த ஸத்வ நிலையைக் குறிக்கும் ஸ்படிக மாலையைத்தான் வைத்திருக்கின்றார்கள். வெண்மை நிறம், சந்த்ரகலை, ஸ்படிக மாலை - இவற்றை நினைத்தாலே நமக்கு தூய்மை சாந்தி எல்லாம் உண்டாகின்றன!..'' 

- என்பது பரமாச்சார்ய ஸ்வாமிகளின் அருள் வாக்கு. 

இத்தகைய ஞானஸரஸ்வதியை எப்படித் துதிப்பது?..

இதற்கு மகாகவி பாரதியார் வழி கூறுகின்றார்.

''தான் எப்போதும் எவ்விடத்திலும் உண்மை சொல்லுதல், பிறர் உண்மை சொல்லுவதை எப்போதும் எவ்விடத்திலும் விருப்பத்தோடு கேட்டல் என்ற இவ்விரண்டுமேயாம். தான் உண்மை சொல்வது மிகவும் சிரமமாய் விட்டது. பிறர் உண்மை சொல்வதைக் கேட்கும் போது நாராசவாணமாய் விட்டது. உண்மைச் சொல்லே ஸரஸ்வதி வசம் நமது வாழ்க்கை எனும் வேள்வியை ஒப்புக் கொடுப்பதற்கு முக்கிய வழி''.

மகாகவி பாரதியார் மேலும் கூறுவதை வாசிக்க - பாரதி இலக்கியப் பயிலகம்

ஸரஸ்வதி மனம் மகிழ்ந்து வாசம் செய்யும் இடங்களை மகாகவி பாரதி விவரிப்பதை நாம் அறிவோம் தானே!..


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் 
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் 
கொள்ளை இன்பம் குலவு கவிதை 
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் 
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே 
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் 
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் 
கருணை வாசகத்து உட்பொருளாவாள்!

வாக்தேவியாகிய ஸரஸ்வதி தேவியைக் குறித்து கவிச்சக்ரவர்த்தி கம்பர் 30 பாடல்களுடன் அழகான அந்தாதி இயற்றியுள்ளார். அத்தனையும் - அமுத தமிழ் கொஞ்சும் அற்புத பாடல்கள்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய 
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தினுள்ளே 
இருப்பள் இங்கு வாராது இடர். 

படிக நிறமும் பவளச்செவ்வாயும் 
கடிகமழ் பூந்தாமரை போல் கையும் - துடியிடையும் 
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் 
கல்லும் சொல்லாதோ கவி.

என்பன - அதன் காப்புச் செய்யுள்கள்.

பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும் 
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி: வெள்ளிதழ் பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள்: இருப்ப என்சிந்தையுள்ளே 
ஏதாம் புவியில் பெறல் அரிதாவது எனக்கு இனியே!.. 

''கலைமகள் என் சிந்தையில் இருக்க புவியில் பெறுதற்கு அரிதானவை என்று ஏதும் இல்லை!..'' - என பெருமை கொள்ளும் கவிச்சக்ரவர்த்தி கம்பர்,

பெருந்திருவும் சயமங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப்பொருளும் தரும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ்சீர் தருமே!.. 
- என்று மங்களகரமாக நிறைவு செய்கின்றார்.


கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழார் எனின்!

இறைவனின் திருவடித்தாமரைகளைப் போற்றி வணங்காத கல்வியினால் என்ன பயன் என்று திருவள்ளுவப் பெருந்தகை வினவுகின்றார். 

அதற்கு நல்லறிவு வேண்டுமே!.. அததகைய நல்லறிவினை அருள்பவளே ஸரஸ்வதி!. 

அவளே அனைத்தினுக்கும் தொடக்கம். 

அவள் வழி காட்டவே - ஞானமூர்த்தியாகிய தக்ஷிணாமூர்த்தியை - பரம் பொருளாகிய சிவபெருமானை அடைகின்றோம்!.. 


''சரஸ்'' எனில் பொய்கை. நமது மனமாகிய பொய்கையில் வசிப்பவள். அதனாலேயே சரஸ்வதி என்று கூறுவர். 

கலைவாணியின் திருக்கரத்தில் திகழும் வீணை கச்சபி எனப்படுவதாகும். கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் - கல்வியையும் மேன்மையையும் குறிப்பன. அட்ச மாலை தூய்மையைக் குறிப்பது. தீயவைகளை விலக்கி நல்லவைகளை மட்டுமே ஏற்கும் அன்னம் அவளது வாகனம். 

இவையெல்லாம் அன்னையின் தன்மையை குறிப்பால் உணர்த்துவன. 


குலோத்துங்க சோழனின் அவைப் புலவராகத் திகழ்ந்த கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் வணங்கி வழிபட்ட சரஸ்வதியின் திருக்கோயில், திருஆரூர் மயிலாடுதுறை வழித்தடத்தில் பூந்தோட்டம் எனும் சிற்றூருக்கு அருகில் உள்ள கூத்தனூரில் உள்ளது. 

இங்கு சரஸ்வதி பூஜை  வெகு சிறப்பாக நிகழ்கின்றது. குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய சிறந்த தலம். 


அன்னையே சரஸ்வதி!.. உன்னை வணங்குகின்றேன். 
வேண்டும் வரங்களை அருள்பவளே!.. 
மனம் மகிழும் வடிவாகத் திகழ்பவளே!.. 

ஒவ்வொரு நாளையும்
புதியனவற்றைக் கற்றுக் கொள்ளும்  
நாளாகத் தொடங்குகின்றேன்!.. 
எளியேனுக்கு - எல்லாம் வெற்றியாக அருள்வாய் தாயே!..

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா

12 கருத்துகள்:

  1. மகாகவி பாரதி வரிகள் சிறப்பு...

    // ஒவ்வொரு நாளையும் புதியனவற்றைக் கற்றுக் கொள்ளும் நாளாகத் தொடங்குகின்றேன்... //

    அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன்.. வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  2. அழகான படங்களும் அற்புதமான பதிவுமாய் தினமும் வரும் கோயிலாக உங்கள் பக்கம் இருப்பது மட்டில்லா மகிழ்ச்சி ஐயா!

    இன்றும் அனைத்தும் அருமை! வாழ்த்துகிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!.. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.. அன்னை அனைவரையும் காத்தருள்வாளாக!..

      நீக்கு
  3. அனைத்தும் அருமையோ அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றீ!..

      நீக்கு
  4. அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்!..தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி!..

      நீக்கு
  5. சிறப்பான பதிவு படங்கள் உட்பட அனைத்தும் அருமை அய்யா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முறையாக வருகை தரும் அன்பின் திரு. பாண்டியன் அவர்களை வரவேற்கின்றேன். அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  6. கலைவாணியின் திருக்கரத்தில் திகழும் வீணை கச்சபி எனப்படுவதாகும். கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் - கல்வியையும் மேன்மையையும் குறிப்பன. அட்ச மாலை தூய்மையைக் குறிப்பது. தீயவைகளை விலக்கி நல்லவைகளை மட்டுமே ஏற்கும் அன்னம் அவளது வாகனம்.

    அருமையான வர்ணனை..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..