நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 6
ஞாயிற்றுக்கிழமை
முன்பெல்லாம் வீட்டைச் சுற்றி இடம் இருக்கும்..
அதில் வீட்டுக்காக செடி கொடிகளை வளர்ப்பது வழக்கம்..
அல்லது
வீட்டுக்குப் பின்புறம் நல்ல தண்ணீர் கிணறு.. பக்கத்தில் தொழுவம்..
கிணற்றில் புழங்குகின்ற தண்ணீரில் - தென்னை மரங்களோடு செடி கொடிகள் ஆகியன மனதுக்கு இதமாகவும் வீட்டிற்கு பயனாகவும் தழைத்திருக்கும்..
இப்போது நிலைமை அவ்வாறு இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்..
வீட்டிலேயே தோட்டம் அமைக்க, பரந்து விரிந்த இடம் இப்போது அமைவதில்லை..
தற்போதைய அமைப்பில் முகப்பு முன் தளம் (பால்கனி) அல்லது மேல் தளம் போதுமானவை..
அந்த இடமும் இல்லை எனில் , வெயில்படும் இடத்தில் தொட்டிகளைத் தொங்கவிட்டு சிறுசிறு செடிகள் வளர்த்து திருப்தி அடையலாம்..
தோட்டம் பலனளிக்கத் தொடங்கியதும் வீட்டிற்கான காய்களின் தேவையில் ஓரளவுக்கு நிறைவும் திருப்தியும் ஏற்படும்..
வீட்டின் வெளிச் சுவர்களில் பூந்தொட்டிகள் வைத்து பராமரிப்பது வீட்டிற்கு மிகவும் அழகூட்டும்..
மிகக் குறைந்த செலவில் மேல் தளத் தோட்டம் அமைக்க முடியும் என்கிறார்கள்..
வெண்டை, அவரை, பாகல் போன்றவை குறிப்பிட்ட பருவத்திலும்
கத்தரி, தக்காளி, மிளகாய், குடை மிளகாய், கீரை போன்றவை எல்லா பருவங்களிலும் விளைகின்றன.
வீட்டுத் தோட்டத்தில் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளைப் பெறமுடியும்.
மாட்டுச்சாணம், ஆட்டுப் புழுக்கை, சாம்பல் போன்றவையே இயற்கை உரங்கள்.. தொட்டிகள் அல்லாத நிலம் எனில்
மண்புழுக்களை வாங்கி இடலாம்..
செடிகள் செழித்து வளரும்போது பூச்சி தாக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்..
விடியற்காலையில் சுத்தமான சாம்பலை செடிகளில் தெளிப்பது பழைமையான முறை..
இப்போது சாம்பலுக்கு வழியே இல்லை..
மாற்றாக, வேப்ப எண்ணெயை நீரில் கலந்து தெளிக்கலாம்..
செடிகள் செழித்து வளர முறையாகத் தண்ணீர் ஊற்றுவதும் அவசியம். அதற்காக வழிய வழிய தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியமில்லை..
தினமும் செடிகள் பராமரித்து தண்ணீர் விடுவதற்கு நேரம் இல்லை எனில்,
ஒரு லிட்டர் பாட்டில்கள் சிலவற்றில் சிறுசிறு துளைகள் இட்டு, வேர் பாதிக்காதபடி தொட்டியில் பதித்து விடலாம்.
இரண்டு நாளைக்கு ஒரு முறை பாட்டிலில் தண்ணீர் ஊற்றி விட்டால், அதில் உள்ள துளைகள் மூலம் வேர்களுக்கு தண்ணீர் பரவி விடும்..
வைகாசி மாதத்தில் தென்னை நார் கழிவுகளுடன் தோட்டத்து மண்ணை சீர் செய்து ஆனி மாதத்தில் இயற்கை எருவையும் சேர்த்து வளப்படுத்திக் கொள்ள வேண்டும்..
ஆறுகளில் நீர் பெருகி வந்து மண் மகளைக் குளிர்விக்கின்ற ஆடிப் பட்டத்தில் விதை
விதைக்க வேண்டும்..
அதிக வெயில்படும் இடம் என்றால் நிழலுக்காக வலைக் குடில் அமைத்துக் கொள்ளலாம்..
கூடுதல் தகவல்கள் தோட்டக் கலை அலுவலகத்தில் கிடைக்கும்..
ஏற்கனவே வீட்டில் மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்..
ஃஃஃ
அன்பின் கவனத்திற்கு
புதுச்சேரி, காரைக்காலில் இருந்து பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் அதில்
புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரோட்டமின் பி எனும் ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது..
அத்துடன், கண்டறிய முடியாத சில ரசாயன வகைகளும், பஞ்சு மிட்டாய்களில் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..
மேலும் விவரங்கள் அறிவதற்கு இணைப்பு:
காய்கனிகள் கீரை பூச்செடிகள் என, தோட்டம் அமைத்தால் எல்லா நற்பயன்களும் நமக்குக் கிடைக்கும்..
சின்னச்சிறு செடி கொடிகளைக் கண்டதும்
வண்ணத்துப் பூச்சிகளுக்கும் குருவிகளுக்கும்
மகிழ்ச்சி பெருகும்..
அந்த மகிழ்ச்சியுடன் அவை நமது
தோட்டத்தை சூழ்ந்து கொண்டால்
அதற்குப் பின் தோட்டம் தானே
பிழைத்துக் கொள்ளும்.
நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க
**
ஓம் நம சிவாய ஓம்
***
இன்றைய பதிவு மனதில் புத்துணர்ச்சி உண்டாக்கும் பதிவு. மலர்கள், செடிகள், பசுமையான காய்கறிகள்...
பதிலளிநீக்குபராமரிப்ப்பது எளிது போல தோன்றினாலும் என் இயல்புக்கு இந்தப் பெருமைகள் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிக்காது! ஆசை இருக்கு தாசில் பண்ண...
பதிலளிநீக்குகொத்துமல்லி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை சிறு டப்பாவில் கட்டி தொங்கவிட்டு, கிச்சனில் வெயில் படும் இடத்தில வைத்தால் / ஜன்னலில் தொங்கவிட்டால் தினசரி அதிலிருந்து அப்படியே பறித்து சமைக்கலாம்!
பதிலளிநீக்குஎன் தங்கை மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறாள். வீட்டுத்தேவைக்கு காய் கிடைத்து விடுகிறது. மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது, மனதில் சங்கடம் ஏற்பட்டால் செடிகளை மாடிக்கு வந்து பார்க்கும் போது அவை மறைந்து விடுகிறது என்கிறாள்.
பதிலளிநீக்குஉள்ளூர் நர்சரி செடி வைத்து இருப்பவர்கள் வந்து அவளை நேர்காணல் செய்து போனார்கள்.
நான் மாயவரத்தில் நிறைய செடி கொடிகள் வைத்து இருந்தேன். இங்கு வந்து பால்கணீயில் நிறைய் பூச்செடிகள், துளசி, ஓமவல்லி, கத்தாழை போன்ற செடிகள் வைத்து இருந்தேன்.
இப்போது திருநீற்று பச்சை, ஒமவல்லி, துளசி கத்தாழை, மணி பிளண்ட் மட்டும் இருக்கிறது.
அவைகளை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
படங்கள் எல்லாம் அருமை.
பஞ்சு மிட்டாயில் வண்ணத்து பயன்படுத்தும் பொருள் புற்று நோயை உண்டாக்கிறது என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
வீட்டுத் தோட்டம் அமைப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
பதிலளிநீக்குநல்ல பல தகவல்களுடன் படங்களும் அழகு தருகின்றன.
பறவைகள் வண்ணத்துப் பூச்சிகள் வந்துபோவது அழகுடன் மகிழ்ச்சியாகவும் இருக்கும். முடிந்த அளவில் தோட்டம் அமைத்து மகிழ்வோம்.
வீட்டுத்தோட்டம் அமைப்பது மகிழ்ச்சி தரும் விஷயம் தான். இப்போதைய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தோட்டங்கள் அமைக்க முடிவதில்லை என்பதில் வருத்தமே.
பதிலளிநீக்கு