நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 15, 2024

விதை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 3
 வியாழக்கிழமை


பெயர்ச் சொல்லும் இதுவே.. 
வினைச் சொல்லும் இதுவே.. 

வித்து - என வருகின்றது திருக்குறளில்...

ஒவ்வொரு விதையும்  பிரபஞ்சத்தின் ஒரு கூறு..

ஒவ்வொரு தானியத்திலும் உயிர்க்குலத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளது என்பர் ஆன்றோர்..

மூண்டு முளைத்தெழும் வித்தெல்லாம் சிவலிங்கம்.. - என்பர்..

விதைகளை - தான்ய லக்ஷ்மி என்பது நமது மரபு..

இன்றைய நாட்களில்
பாரம்பரிய விதைகள் ஒவ்வொன்றும் மிக்க சிரமத்துடன் மீட்டெடுக்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன..

எதுவும் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. 
ஒவ்வொரு ரக விதையும், தேடி அலைந்து கண்டறியப்படுகின்றது..

மண் சார்ந்த மரபு ரக விதைகளைக் கொண்டு  வீட்டுத் தோட்டம் அமைக்கலாம்.. உணவு தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம்.. 

இதனால் வீட்டில் தற்சார்பு ஏற்படும்..

இயன்ற வரை நாமே -
நமது தோட்டத்தில் (மாடித் தளத்தில்) பயிர் வளர்க்கப் பழகிக் கொண்டால் அதுவே பெருமகிழ்ச்சி..

நமது தோட்டத்தில் இருந்து விதை சேகரிப்பு -
செடியின் மூன்றாவது அறுவடையில் இருந்து விதை சேகரிக்கலாம்..

வீட்டுத் தோட்டம் எனில்,
பூச்சிக் கொல்லி விஷம் தெளிக்காத காய்கறிகளுக்கு உத்தரவாதம்..

மண் சார்ந்த விதை, மாடித் தளத்தில் வீட்டுத் தோட்டம்  - 
இதெல்லாம் நடக்கக் கூடியவையா எனில்,

முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..

அடுத்த தலைமுறையினருக்கும் மரபு சார்ந்த விதைகளையும் உணவு முறைகளையும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை..


ஒவ்வொரு வட்டாரத்திற்கும், ஒவ்வொரு காய் வகை  பிரசித்தி பெற்றது. ...

மரபுசார்ந்த காய்களை விளைவித்து நமக்காக எடுப்பதிலும் பிறருக்கு வழங்குவதிலும் ஆர்வமாக இருக்க வேண்டும்...

தற்போது, மருந்து தெளிக்கப்பட்ட  'ஹை ப்ரீடு' காய்களே அதிகமாக சந்தைப்படுத்தப் படுகின்றன..

இவற்றிலிருந்து நாம் தப்பித்தாக வேண்டும்..

அது அவ்வளவு எளிதானதல்ல..

காய்களைக்  கழுவிக் கழுவி பயன்படுத்தினாலும்   அவற்றில் ஊடுருவியிருக்கும்
நச்சுத்தன்மை நீங்குமா.. தெரியாது..


முருங்கை, கத்தரி, வெண்டை, கொத்தவரை, புடலை, பீர்க்கன், சுரை, அவரை, பூசனி போன்றவையே நமது மண்ணின் காய்கள்..



மரபுசார் விதைகளை உற்பத்தி செய்து, பரவலாக்கி பாதுகாக்கும் பணியில் இப்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.. 

நம்மிடம் வழக்கொழிக்கப்பட்ட விதைகள் வெளிநாடுகளில்  பாதுகாக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன..

இதிலிருந்தே உணவுச் சந்தையின் கொடூர முகம் நமக்குப் புலனாகும்..

கனவனும் மனைவியுமாக
கஷ்டப்பட்டு பொருள் ஈட்டுவது என்பதே 
ஒரு சாண் வயிற்றுக்குத் தான்.. 

இப்படிச் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு
பூச்சிக் கொல்லிகள் கலந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கு என்ன தலையெழுத்தோ!..

நுகர்வோர் விழிப்புணர்வாகி, மரபு சார்ந்த காய்களை வற்புறுத்தினால் தான் விவசாயிகளும் அவற்றை விளைவிக்க முன் வருவர்..

நோய்களின் பெருக்கமும் 
ஆயுட்காலம் குறைவதும்
நோய்களில் இருந்து மீள்வதற்கு ஆகின்ற பொருட்செலவும் இன்றைய சூழ்நிலையை நமக்கு உணர்த்தும்..

பூச்சிக்கொல்லி இரசாயனங்களில் இருந்து நாம் விலகி விட்டாலே நமக்கு நல்ல காலம் தான்..

வீட்டுத் தோட்டத்தில்  நன்கு வளர்ந்து நல்ல பயன் கிடைப்பது பல வகையிலும் நிரூபணம் ஆகிக் கொண்டு இருக்கின்றது..


மண் சார்ந்த காய், கீரைகளை வீட்டுத் தோட்டத்தில் (மாடித் தளத்தில்) விளைவித்து பயன்படுத்துவதால், நாம் எவ்வித ஐயமும் இன்றி மகிழ்ச்சியுடன் சாப்பிட இயலும்..

பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய், பழம், கீரை வகைகளைத் தவிர்க்க வேண்டும்.. வாங்கவே கூடாது..

பூச்சிக் கொல்லி இரசாயனங்கள் ஊரிலிருந்து மட்டுமல்லாமல் உலகில் இருந்தே அகல வேண்டும் என்பதே நல்ல மனங்களின் லட்சியம்..

விதை விளைச்சல் என்பவை 
வார்த்தைகள் அல்ல..
நாட்டின் சமூகத்தின் 
வலிமையான வளமையான 
எதிர்காலம்!..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்வோம்
நலமுடன் வாழ்வோம்..
**

ஓம் சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. இந்த ஆதங்கம் எல்லோருக்கும் வரவேண்டும்.  மண்சார்ந்த விதை என்று அவர்கள் விற்பது உண்மைதானா என்று அறியவும் வழியில்லை.  தோட்டம் வைக்கும் அளவு வீட்டில் பெரும்பாலும் யாருமில்லை.  மாடித்தோட்டமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  எங்கள் மாமா வீட்டில், சித்தி வீட்டில்  சிறந்த முறையில் மாடித்தோட்டம் பராமரிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் மாடித்தோட்டம் வைக்க ஆசைதான்.  பொறுமைதான் இல்லை!

    பதிலளிநீக்கு
  3. மாடித் தோட்டம் நல்ல கான்சப்ட். நிறைய செலவாகும். ஆனால் மனத்துக்கு சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  4. மாடித்தோட்டம் - நல்ல விஷயம். தற்போது இருக்கும் வீட்டில் சாத்தியமில்லை. விதைகள் குறித்த சிந்தனைகள் நன்று. நல்ல பல விதை நெல்களை இழந்து வருகிறோம் என்பது வேதனைதான்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பூச்சிகள் இல்லாத பயிர் வளர்ப்பு பற்றிய செய்திகள் படிக்க நன்றாக உள்ளது. வீட்டுத் தோட்டம், செடிகள் வளர்ப்பு முறை என சொன்னது சிறப்பு.

    எனக்கும் மரம், காய் கனி மரங்கள் பூச்செடி, கொடிகள் வளர்க்க வேண்டுமென்ற அவா நிறைய இருந்தது. / இருக்கிறது. இப்போதிருக்கும் அப்பார்ட்மெண்ட் வாழ்வில் இது சாத்தியமில்லையே என வருத்தமாக உள்ளது. பயனுள்ள இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. என் தங்கை மாடி தோட்டம் அமைத்து இருக்கிறாள். காய்கள், கீரைகள், பூக்கள் வரும் போது கொண்டு வந்து கொடுப்பாள்.
    பதிவில் தந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு பூச்சி கொல்லும் தவிர்த்தாலே வருத்தங்கள் ஒழிந்து விடும்.

    மாடித் தோட்டத்தில் சிறிய அளவில் கீரைகள்,மிளகாய் வைத்துள்ளேன்.இடையிடையே பறித்து சமைக்கும் போது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..