நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 16, 2023

சதயம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 3
ஞாயிற்றுக்கிழமை

இன்று 
திருநாவுக்கரசர் குருபூஜை


திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் 4900 என்றொரு கணக்கு உண்டு..

அவற்றுள்
நமக்குக் கிடைத்திருப்பவை 312 திருப்பதிகங்கள் மட்டுமே..


ஸ்வாமிகள் அருளிச் செய்த திருப் பதிகங்களே தேவாரம்.

இத்திருப்பதிகங்கள் நான்கு, ஐந்து, ஆறு எனும் திருமுறைகளாகத் திகழ்கின்றன..

113 திருப்பதிகங்கள் - நான்காம் திருமுறையிலும்
100 திருப்பதிகங்கள் - ஐந்தாம் திருமுறையிலும்
99 திருப்பதிகங்கள் - ஆறாம் திருமுறையிலும் விளங்குகின்றன..


சமணம் சார்ந்து காஞ்சியில் உற்றிருந்த போது ஈசனருளால் சூலை எனும் வயிற்று வலியால் பீடிக்கப்பட்டவர்..

சகோதரியாகிய திலகவதியார் தமது திருக்கரத்தால் திருநீறு பெற்று மீண்டும் சிவ சமயத்தைச் சார்ந்தவர்..

அதனால்
சமணர்களுடன் சேர்ந்து கொண்டு மகேந்திர பல்லவன் இழைத்த தீங்குகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவர்..  


கல்லுடன் சேர்த்து கடலில் தள்ளப்பட்டும் கல் தெப்பமாக மிதந்து  கரையேறிய நிலையில் - வந்து பணிந்து நின்ற 
மகேந்திர பல்லவனை 
மன்னித்துத் திருநீறு வழங்கியவர்..

திரு அதிகையில்  தமக்கையார் வழங்கிய உழவாரம் கொண்டு திருக்கோயில்களை சீர் செய்தவர்..

எம்பெருமானால் நாவுக்கரசு என்று  பெயர் சூட்டப் பெற்றவர்..

திருக்கோயில் தரிசனம் என்று காசி  கயிலாயம் வரை நடந்தவர்..

திருப்பெண்ணாகடத்தில் சமணம் சார்ந்திருந்த பிழை நீங்குதற்கு இடபக்குறி இடுமாறு விண்ணப்பம் செய்து கொண்டவர்..

ஞான சம்பந்தப் பெருமானால் அப்பர் என அழைக்கப் பெற்றவர்..

நின் பணி செய்து கிடக்கும் என்னைக் காப்பது உனது கடன அல்லவா!.. - என்று திருக்கடம்பூரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டவர்..

திருநல்லூரில் ஈசன் திருவடி சூட்டப் பெற்றவர்..

திரு ஆரூரில் உழவாரப்பணி செய்த போது மண்ணுக்கு உள்ளிருந்து புரண்டு வந்த ரத்தினக் கற்களை உழவாரம் கொண்டு எற்றி எறிந்தவர்..

உழவாரப் பணியின் போது மேனியழகைக் காட்டி நடனமிட்ட அரம்பையர் அஞ்சி ஓடும்படிக்கு அக்கினியாகத் தகித்தவர்..


திருவீழிமிழலையில்  இறைவனிடம் காசு பெற்று கால மாறுபாட்டினால் விளைச்சல் அற்று
வறுமையுற்ற மக்களின்  பசிப்பிணி தீர்த்தவர்..

திங்களூரில் அப்பூதியடிகளின் மகன் நாகம் தீண்டி உயிர் துறக்க - ஈசன் அருள் கொண்டு அச்சிறுவனை மீட்டுக் கொடுத்தவர்..

திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து மக்கட் பணி செய்தவர்..

பழையாறை வடதளியில் சமணர்கள் அடைத்து வைத்திருந்த சிவாலயத்தைத் திறக்கும்படிக்கு உண்ணாநோன்பு இருந்து வெற்றி கண்டு சிவதரிசனம் செய்தவர்..

திருமறைக்காட்டில் வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த கோயில் கதவுகளைத் தமிழால் திறந்து கொடுத்தவர்..


திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் தளர்ந்திருந்த போது
இறைவனால் கட்டமுது வழங்கப் பெற்றவர்..

முழங்கால் மூட்டு தேய்ந்த நிலையிலும் கயிலாய மாமலையில் தவழ்ந்து சென்று ஈசன் அருள் பெற்று மானசரோருவ ஏரியில் மூழ்கி திரு ஐயாறு சூரிய புஷ்கரணியில் எழுந்து கயிலாய தரிசனம் பெற்றவர்..

என்பத்தோராவது வயதில் திருப்புகலூரில் சிவமுக்தி எய்தியவர்..

திருப்பிரமபுரம், திருப்பூந்துருத்தி, திருமறைக்காடு, 
திருப்புகலூர், திருவீழிமிழலை, திருக்கடவூர்,
ஆகிய திருத் தலங்களில் ஞானசம்பந்தப் பெருமானுடன் தரிசனம் கண்டவர்..

திருநீலகண்ட யாழ்ப்பாணர், நீல நக்கர், சிறுதொண்டர், முருகர், குங்கிலியக் கலயர், அப்பூதி அடிகள்  ஆகிய பெருமக்கள் தம்முடன் அன்பினைக் கொண்டவர்..

ஸ்வாமிகளது காலம்  ஆறாம் நூற்றாண்டு (பொது ஆண்டு 547 - 655) என்று அறியப் பட்டுள்ளது..

ஸ்வாமிகள் தரிசித்த திருக்கோயில்கள் 191 என்பர்..


மன்னரும் மக்களும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளைப் போற்றி வணங்கியதற்குச் சான்றாக - 

தஞ்சை பெரிய கோயிலில்  தென்னவன் மூவேந்த வேளான் (1014) என்பவர் திருநாவுக்கரசர் திருமேனியை எழுந்தருளுவித்துத் திருவிளக்கும் அணி கலன்களும்  அளித்துள்ள செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும்,
திருநாவுக்கரசர் நித்ய பூஜைக்கு என்று ராஜராஜ சோழன் கொடை அளித்துள்ள செய்தி திருப்புகலூர் 
கல்வெட்டில் விளங்குகின்றது..


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1

திருநாவுக்கரசர் திருவடிகள் 
போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. நாவுக்கரசர் அடியொற்றி ஐயனின் அருள் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  2. திருநாவுக்கரசர் வரலாறும் , அவர் அருளிய பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன் அவர் குருபூஜையில்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    நாவுக்கரசர் திருவடிகள் போற்றி ! போற்றி!

    பதிலளிநீக்கு
  3. ப்பர் பற்றிக் கூறியுள்ளவை சிறப்பு. சிவாஜி இந்தக் காட்சிகளைச் சிறப்பாக நடித்திருப்பார் திரைப்படத்தில்

    பதிலளிநீக்கு
  4. நாவுக்கரசர் பற்றியவை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. படங்களும்ம் அதற்கு இணையாக...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அனைத்துத் தகவல்களும் சிறப்பு. அருமை. இவை எல்லாம் பொய்யெனச் சொல்பவர்கள் இப்போது சீர்காழியில் யாகசாலைக்குத் தோண்டிய குழியிலிருந்து வெளிவந்த பொருட்களைப் பார்த்துப் பேச வாயில்லாமல் நிற்கின்றனர். ஓம் நமசிவாய!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..