நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
// அது சரி.. மெனெக்கிட - எந்த மொழி இது?.. //
நேற்று எங்கள் பிளாக் கேள்வி பதில் பகுதியின் கருத்துரையில்
அன்பின் நெல்லை அவர்கள் கேட்டிருந்த அந்தக் கேள்விக்கு என்னால் ஆன விளக்கம்..
" வேல மெனெக்கிட - என்பது தமிழ் தான்!.. தமிழே தான்!.. "
" நாம் தான் தமிழை அர்த்தம் பொருத்தமாகப் பேசுபவர்கள் ஆயிற்றே!.. "
" அது எப்படி என்றால் -
வேலை, வினை கெட!..
அதாவது -
நான் செய்ய வேண்டிய வேலையும் கெட்டது.. என் பழைய வினையும் கெட்டது.. "
" எப்படி?.. "
" இவனுக்கு இந்த வேலையை செய்யப் போனதால் எனது வேலை கெட்டுப் போயிற்று.. இவனுக்கு இந்த மாதிரி ஒரு வேலையை ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்து கொடுக்க மறுத்ததால் அப்போது ஏற்பட்ட பாவ வினையும் இத்தோடு கெட்டுப் (விட்டுப்) போயிற்று..
- என்பதாக அர்த்தம்.. "
" அட!... "
" எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்.. படித்தவன் பாட்டைக் கெடுத்தான் - என்ற கதை தான்!.. "
" இது வேறயா?.. "
" ஏடும் எழுத்தாணியும் இருந்த அந்தக் காலத்தில் எழுதுவதற்கு பதம் ஆன ஓலை வேண்டும்.. "
" பச்சை ஓலையும் ஆகாது..
சருகான ஓலையும் ஆகாது..
பதம் ஆன ஓலையும் விலை கொடுத்தால் தான் கிடைத்திருக்கும்.. இப்படியான சூழலில் அரைகுறைப் பேர்வழி எழுதுகின்றேன் என்று ஓலையில் கிறுக்கிக் கிழித்து வைத்தால்!.. அது வேறெதற்கும் ஆகாது.. "
" இதேபோல் எழுத்தறிந்து வாசிக்கத் தெரியாத ஒருவன் ஏற்ற இறக்கங்களுடன் பாடுவேன்!.. என்று சுர வரிசைக்குள் கை வைத்தால்!.. "
"ஆகா.. அருமை!.. "
"இதற்குத்தானே சொல்லி வைத்தார்கள் -
சுக்குமி ,
ளகுதி ,
ப்பிலி!.. - என்று!.."
"நீங்களும் உங்கள் தமிழும்.. ஆளை விடுங்கப்பா!.. "
***