நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 31, 2018

நல்ல வண்ணம்

அக்கா... அக்கா!..

வாம்மா.. தாமரை.. வா.. வா!..

என்னக்கா சேதி!... உடனே வரச் சொன்னீங்க?..


இன்னைக்கு ஞானசம்பந்தர் குருபூஜை... கோயில்ல விசேஷம்...
அதான் உன்னையும் கூட்டிட்டு போகலாம்..ன்னு!...

எங்கே அத்தான் பிள்ளைகள் எல்லாம்?..

அவங்க முன்னாலேயே போய்ட்டாங்க...ம்மா!..

முன்னால போய் என்ன செய்யப் போறாங்க?...

இந்த பசங்க எல்லாம்
சிவனடியார் திருக்கூட்டம்...ன்னு ஒன்னு சேர்ந்திருக்குதுங்க....

கோயில்ல விசேஷம் ..ன்னா தோரணம் கட்றது..
அங்கே இங்கே சுத்தம் செய்றது.. பிரசாத விநியோகம் செய்றது..ன்னு
ஏகப்பட்ட வேலைகள்... ஏதோ அவங்களுக்கு ஆர்வமா இருக்கு...

ஓ.. பரவாயில்லையே!... அதுசரி.. அக்கா..
நான் ஒன்னு கேக்கட்டுமா?..

கேளேன்!...

அந்தக் காலத்துல அவங்க.. யாரு ..என்ன பேரு சொன்னீங்க?..

ஞானசம்பந்தர்.. திருஞானசம்பந்தர்!..

திருஞானசம்பந்தர் பொறந்தாங்க... சாமிகிட்ட பால் குடிச்சாங்க...
சாமி பாட்டெல்லாம் பாடுனாங்க... சரி... இத்தனை வருசம் கழிச்சும்
அவங்களைக் கொண்டாடி கும்பிட்டுக்கிட்டு!...

இரு..இரு.. தாமரை.. ஞானசம்பந்தரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?..

அக்கா... தப்பா நினைக்காதீங்க!..
எனக்கு அவங்களப் பத்தி விவரமா தெரியாதுக்கா..
நீங்க கூப்பிட்டீங்களே..ன்னு வந்தேன்....

பூஜை....ல தேவாரம் எல்லாம் பாடுறே!... - வியப்புடன் கேட்டாள் - அக்கா...

ஆமாங்கா...
இந்த ஆன்மீக பத்திரிக்கைகள்..ல வர்றது ஒன்னு ரெண்டு..
அத வச்சிக்கிட்டுத் தான் நான் பாடுறேன்.. மத்தபடி,
உண்மையான வரலாறு..ன்னு எதுவும் தெரியாது..

கடவுள் வாழ்த்துப் பகுதியில -
தேவாரப் பாட்டு பள்ளிக்கூடத்தில சொல்லித் தரலையா!...

இருக்கும்.. நீங்களே படிச்சுக்குங்க.. ந்னு சொல்லிட்டு டீச்சர் போய்டுவாங்க!..
அதுக்கு அப்புறம் நாங்க எங்கே அதைப் படிச்சோம்!...
அந்த காலத் தமிழ் வாய்..ல நுழையாது..ன்னு நாங்களும் சும்மா இருந்துடுவோம்!....

அது தானே!...

ஆனா, தாத்தா அடிக்கடி பாடச் சொல்லுவாங்க....
அவங்களும் பாடுவாங்க... ஆனா புரியாது....
அதிகமா விளக்கம் கேக்கவும் பயமா இருக்கும்..
வீட்டுல.. ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்க.. ந்னு அதட்டல்...

போகட்டும் .. நான் ஒரு புத்தகம் தர்றேன்.. ஆதீன பதிப்பு அது!...
படிச்சுப் பாரு... அதுக்கப்புறம் ஞானசம்பந்தர் பாடின தேவாரம் படிக்கலாம்...

அக்கா.... தேவாரம் பாடுனா பணம் காசு சேரும்... 
நோய் வராது... ஜூரம் போகும்... ன்னு சொல்றாங்களே...
அதெல்லாம்  எப்படி..க்கா!..

உண்மை தாம்மா!... திருக்குறளை நீ நம்பறே!.. இல்லையா!..

ஆமாம்...

அதுல வள்ளுவர் என்ன சொல்றாரு!...

என்ன சொல்றாரு?...

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்...

அப்படி...ன்னு சொல்றார்... இல்லையா...
அப்படி உறுதியான நம்பிக்கையோட ஒரு பாடலையோ ஒரு பதிகத்தையோ பக்தி சிரத்தையா நாம பாராயணம் செய்றப்போ அதனோட பலன் கைமேல!...

உறுதியா சொல்றீங்களா அக்கா!...

இந்த மாதிரி பலன் அடைஞ்சவங்க எத்தனையோ ஆயிரம் பேர்..
அதையெல்லாம் வெளிக்காட்டிக்க மாட்டாங்க....

எங்க வீட்டுல சின்னாத்தா.. ன்னு இருந்தாங்க.. உனக்கு சொல்லியிருக்கேன்...

ஆமா.. சொல்லியிருக்கீங்க!...

அவங்க என்ன படிச்சாங்க... ஒன்னும் இல்லை..
ஆனா, எனக்கு காய்ச்சல் தலைவலி...ன்னா
அடுப்புச் சாம்பலை எடுத்து காளியாயி... மகமாயி..ன்னு சொல்லிட்டு
நெத்தியில பூசி விடுவாங்க.. அது அத்தோட சரியாயிடும்...

கஷாயம் கொடுப்பாங்க...ன்னு சொன்னீங்க!..

அது வேற... கஷாயம் கை கொடுக்காத நேரத்துல என்ன செய்றது?...
ஒவ்வொரு சமயத்தில எனக்கு கடுமையான வயித்து வலி இருக்கும்..
நடு ராத்திரியில டாக்டரத் தேடி எங்கே போறது?..
அவங்க தான் என்னை மடியில போட்டுக்கிட்டு விபூதி பூசி விடுவாங்க!...

..... ...... .....!..

அப்போ அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா...
சிவ சிவ ஹரனே.. ஹர ஹர சிவனே!... அவ்வளவு தான்!..

இதுக்கு பெரிய உபதேசம் எல்லாம் தேவையில்லை...
மனசு சுத்தம் இருந்தாப் போதும்!...

இதைத் தான் -

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினைஅடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே...

- அப்படின்னு, ஞானசம்பந்தர் சொல்றாங்க...

தும்மல் இருமலுக்கு சரி.. பெரிய நோய் ஏதும் வந்தா!?.. இது சரியாகுமா?...

ஆகியிருக்கு....

எங்கே!?...

எத்தனையோ ஆயிரம் இருக்கு.. ஆனாலும்,
அங்கே இங்கே..ன்னு போக வேண்டாம்...
எங்க அண்ணாச்சி அவுங்களைத் தெரியுமில்லே!...

ஆமா.. வலைத்தளத்தில எழுதுறாங்களே!..

அவங்க தான்... இந்த வருசம் ஆரம்பத்தில அவங்களுக்கு
சட்டுன்னு.. நரம்பு தளர்ச்சியாகி கைகால் அசைக்க முடியலை...

துணைக்கு யாரும் இல்லாத அந்த சமயத்தில -
அவங்களுக்கு கை கொடுத்தது - தேவாரமும் பிரார்த்தனையும் தான்!...

..... ..... ..... .....!..

இப்போ தான் ஊருக்கு வந்துட்டுப் போனாங்க....

டாக்டர் கிட்ட காட்டுனாங்களாமா!..

ம்.. இயற்கை மருத்துவம் தான்... உடம்புக்கு ஒன்னும் இல்லை...ன்னு சொல்லிட்டு தைலம் கொடுத்திருக்காங்க... ஆனா,

அதுக்கு முன்னாலேயே அவங்க குலதெய்வம் என்ன கொடுத்தது தெரியுமா!..

என்ன அது!?..

தீர்த்தமும் திருநீறும் அபிஷேக எண்ணெய்யும் தான்!...

இது எல்லாருக்கும் பொருந்துமா!?...

நம்பிக்கை வைக்கிறவங்களுக்கு நடராசன்....ன்னு சொல்வாங்க...
அவங்க அவங்க விதிப்படி ஆகும்... இருந்தாலும்,
வெல்லத்தை வாயில போட்டுக்கிட்டா தான் அருமை தெரியும்!...

நம்பிக்கை வைக்கிறவங்க கிட்ட நடராசன் போறதில்லை...
நம்பிக்கை வைக்காதவங்க கிட்ட யமராசன் போறதில்லை...
இதுக்கு என்ன சொல்றீங்க!..

யமராஜன் போறது சர்வ நிச்சயம்...
நடராஜன் போறதைப் பார்க்க முடியலை தான்...
நீ சொல்றது நிஜம்.. ஆனாலும்,
இதுக்கு நெறைய விளக்கம் இருக்கு..
இப்போ கோயிலுக்கு நேரம் ஆச்சு!...

அக்கா.. ஞானசம்பந்தர் அவங்களப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...


அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தியது ஐதீகம்...

நாடு முழுதும் நடந்து பக்தி நெறியை வளர்த்தார்...

திருக்குலத்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் 
அவரோட மனைவி மதங்க சூளாமணியையும் 
கடைசி வரையில் தன்னுடன் பேணிக்காத்து ஆதரித்தார்...



அப்பர் ஸ்வாமிகளோட சேர்ந்து 
திருவீழிமிழலை..ல மக்கட்பணி செய்தார்..

திருமருகல்....ல - 
ஏழை வாலிபனை மரணத்திலிருந்து மீட்டு அவனை நம்பி வந்த 
பணக்கார வீட்டுப் பெண்ணோடு திருமணம் செய்து வைத்தார்...

மயிலாப்பூர்...ல -
சிவநேசஞ்செட்டியார் மகள் பூம்பாவையை உயிருடன் மீட்டுக் கொடுத்தார்..

மதுரை...ல -
சைவத்தை மீட்டு கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கினார்...


ஞானசம்பந்தர் - திருமணக்கோலம்..
பெரியோர்களுடைய விருப்பத்துக்காக 
ஞானசம்பந்தர் திருமணக் கோலம் கொண்டார்... 
ஸ்தோத்திர பூர்ணாம்பிகா..ன்னு பொண்ணோட பேரு...

மாங்கல்யதாரணம் ஆனதும் 
எம்பெருமானும் அம்பிகையும் அருட்பெருஞ்ஜோதியா காட்சி கொடுத்தாங்க...

அந்த ஜோதி மயத்தில 
தன்னோட மனைவி கையப் பிடிச்சுக்கிட்டு ஐக்கியமானார்... 

ஞானசம்பந்தப் பெருமானோட எப்பவும் இருந்த 
திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய மனைவி மதங்க சூளாமணியார், திருநீலநக்கர், முருக நாயனார் ஆகியோரும் சிவசக்தியோட ஐக்கியம் ஆனாங்க...

அந்த நேரத்தில -
அருளப்பட்ட திருப்பதிகத்தோட திருப்பாட்டு தான் இது...


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நம சிவாயவே!..

மனம் உருகி சொல்றவங்களை
நல்ல நெறியில் செலுத்துவது நம சிவாய மந்திரம்...

நாம நல்ல வழியில நடக்க ஆரம்பிச்சுட்டா
நம்மைச் சுற்றி நடக்கிறதும் நல்லதாகவே நடக்கும்...

நம்மைச் சுற்றி நடக்கிறதெல்லாம் நல்லது தான்....ன்னா
அதை விட வேறென்ன வேணும் சொல்லு!..

அக்கா.. நல்லா தான் சொல்றீங்க!...

தாமரை... இல்லறத்தார் நாளும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இது..
மறந்திடாம மனசுல வைச்சிக்க....

சரிங்க அக்கா!...

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே...(3/24)

இன்று வைகாசி மூலம்..
திருஞானசம்பந்தர் குருபூஜை..

திருஞானசம்பந்தர் 
திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ 

திங்கள், மே 28, 2018

சோதிப் பிழம்பு


அருவமும் உருவம்ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள்ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
-: கச்சியப்ப சிவாச்சார்யார் :-


இன்று வைகாசி விசாகம்.
முருகப்பெருமான் சரவணத் திருப்பொய்கையில் 
திருஅவதாரம் செய்தருளிய திருநாள்..

கந்தனுக்கு உகந்த திருநாட்களுள் ஒன்று..
***

அருணகிரி நாதர் அருளிய
திருப்பாடல்களுடன்
இன்றைய பதிவு..
***

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ...

புண்டரிகர் அண்டமும் கொண்டபகிரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெனச்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே...
-: திருச்செந்தூர் திருப்புகழ் :-



விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.. (070)


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.. (072)




மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.. (090)


மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே.. (093)




திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குடிகொண்டவே.. (102)


செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்தெதிர் நிற்பனே.. (104)
 

-: கந்தரலங்காரம் :- 
***



ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்..
-: கந்தபுராணம் :-

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்.. 
ஃஃஃ 

ஞாயிறு, மே 27, 2018

மலையும் நதியும்

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்!...
- என்று வியந்து நோக்கும் கவியரசர்,

(அந்தத் ) தென்றலோடு உடன் பிறந்தாள்!.. - என்று
செந்தமிழ்க் கன்னியை அடையாளங்காட்டுகின்றார்...

இவருக்கு முன்னோடியாகிய
மகாகவி என்ன சொல்கிறார்..

தமிழ் கண்டதோர்
வைகை பொருணை நதி!... - என்கிறார்...

மகாகவியின் திருவாக்கின்படி -
செந்தமிழாள் தனக்கு இளைய சகோதரிகளாக
வைகையையும் பொருணை எனும் தாமிரபரணியையும் கண்டாள்...

இப்படி 

பொதிகையுடன் தென்றலும்
தென்றலுடன் தமிழும்
தமிழுடன் பொருணையும் - 
இரண்டறக் கலந்து
நம்முடைய ஊனிலும் உணர்விலும்
உயிரிலும் ஓடித் திரிந்தால்!?..

எப்படியிருக்கும்?...

அந்த சுகானுபவத்தைச் சொல்லுதற்கு வார்த்தைகளே இல்லை!..

அதனை அவரவரும் அவரவர்க்கு ஏற்றார் போல
அனுபவித்து உணர்தல் வேண்டும்!..

அதுவன்றி அளவிட்டு உரைப்பதற்கு ஆகாது!..

இத்தகைய சூழலில் நமக்கு இருக்கக் கிடைத்தது -
சில மணி நேரம் மட்டுமே...


மூர்த்தி, தலம், தீர்த்தம் - என்றுரைப்பர் ஆன்றோர்...

அப்படிப் பொருந்தியுள்ள தலங்கள் ஏராளம்... எனினும்,
ஒரு சில தலங்கள் மட்டுமே இன்னும் இயற்கை எழில் மாறாமல் திகழ்கின்றன...

அவற்றுள் ஒன்றுதான் -
காரையாறு - ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில்...

ஆன்மீகத்துக்கு ஆன்மீகம்..
ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்...

இதற்கு மேல் என்ன வேண்டும்!..

ஆன்மீகம் - அதைப் பற்றி யோசிப்பவர்களுக்கு
இருக்கவே இருக்கிறது - ஆரோக்கியம்!...

ஆரோக்கியம் அனைவருக்கும் வேண்டும் தானே!...

அதற்காகவாவது அங்கே செல்லவேண்டும்...
அந்த அமைதியில் அழகில் ஆழ்ந்திருக்க வேண்டும்!..

கீழுள்ள மூன்று படங்களும் 
திருக்கோயில் தளத்திலிருந்து பெறப்பட்டவை

ஸ்ரீ கசமாடஸ்வாமி - தேவியுடன்
மணி விழுங்கி மரம் - ஸ்ரீ பேச்சியம்மன் - பூதகணம்

விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம்
திறக்கப்பட்டு விடுகின்றது ஐயனின் சந்நிதி..

அதன்பின் ஆறு மணிக்கு உஷத்கால பூஜை..
நண்பகல் பன்னிரண்டு மணிக்கு உச்சி காலம்...

அத்துடன் நடை அடைக்கப்பட்டு
மறுபடி நடை திறக்கப்படும் நேரம் மாலை 4.30..

மாலை ஐந்து மணியளவில் சாயரட்சை..
பின்னர் ஒன்பது மணிக்கு அர்த்தஜாம பூஜைகள்..
அந்த அளவில் நடை அடைக்கப்படுகின்றது...

திருக்கோயில் வளாகத்தில் தங்குவதற்கு
குறைந்த வாடகையில் அறைகள் கிடைக்கின்றன...

ஐயனின் சந்நிதி
பாபநாசத்திலிருந்து 10 கி.மீ., தொலைவில் - ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயில்..
மலைமேல் செல்வதற்கு ஆட்டோக்களும் மினி வேன்களும் கிடைக்கின்றன..

காரையாறு அணை நோக்கிச் செல்லும் சாலை நன்றாகவே உள்ளது..


மலையேற்றத்தில் - வனத்துறை அலுவலகத்தில்
பதிவு செய்தபின் மேற்கொண்டு மேலே செல்லவேண்டும்...

நான்கு கி.மீ தொலைவில் இடப்பக்கமாகப் பிரியும்
கரடு முரடாகப் பிரியும் சாலையில் பயணித்தால்
பாபநாசம் நீர் மின் நிலையத்தைக் கடந்து அகத்தியர் கோயில்..
மற்றும் அகத்தியர் அருவி..

அங்கிருந்து மேலே 2. கி.மீ., தொலைவில்
தபஸ்வினி கிருஷ்ணவேணி அம்மாள் மடம் அமைந்துள்ளது...

அதற்கும் அப்பால் கல்யாண தீர்த்தம்...

நாங்கள் அகத்தியர் கோயில் சென்றதோடு சரி...
மற்றொரு சமயம் தான் கல்யாண தீர்த்தம் தரிசனம் செய்ய வேண்டும்...

ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயிலை நோக்கிச் செல்லும் வழி
புலிகள் வாழும் சரணாலயத்தின் அடர்ந்த காட்டு வழி...

ஆனாலும், சிங்கவால் குரங்குகள் தான் அங்குமிங்கும் ஓடித் திரிகின்றன...
புலிகள் எல்லாம் களக்காடு முண்டந்துறை பகுதியில் தான்..

மின் நிலைய ஊழியர்களின் குடியிருப்பு வரையிலும் சாலை நன்றாக உள்ளது..
அதன்பின் கரடுமுடராக இருக்கின்றது.....

அந்தப் பகுதியில் எல்லாம் அங்குள்ள பிள்ளைகள்
கவலையின்றி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்...

சாலையின் வலது ஓரத்தில் அளவில் பெரியதாக
ஸ்ரீ வனபேச்சியம்மன் ஆலயம்...

திரும்பி வரும்போது தரிசிக்கலாம் என்று எண்ணியது பிழையாகி விட்டது...
நேரம் கடந்து விட்டதால் திருநடை அடைத்து விட்டார்கள்...

கண்ட இடத்திலும் வாகனத்தை நிறுத்தக் கூடாது - என்பதனால்
விறுவிறு.. - என்று ஓடிக் கொண்டிருந்தது ஆட்டோ...

எனவே, வழிநடை அழகையெல்லாம் படமாக்க முடியவில்லை..

சேர்வலாறு
செல்லும் வழியில் சேர்வலாறு...
காட்டின் உள்பக்கமாக தாமிரபரணியுடன் கைகோர்த்துக் கொள்கிறது...

ஏதோ ஒரு மழையினால் பாலம் ஆற்றோடு போய்விட்டபடியால்
குறுக்கே இரும்புப் பாலம் போடப்பட்டிருக்கிறது...

பச்சைப் பசுமையான மரங்களின் ஊடாக
பயணிக்கையில் சிலுசிலு என்றிருக்க -

பிரதான சாலையின் இடப்பக்கமாகப் பிரிந்த சிறிய சாலையில்
2. கி.மீ., தொலைவில் ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில்...

பிரதான சாலையில் மேற்கொண்டு ஐந்து கி.மீ., பயணம் செய்தால்
காரையாறு அணைக்கட்டு.. பாபநாசம் நீர்த்தேக்கம்...

நீர்தேக்கத்தில் படகில் பயணித்து அக்கரைக்குச் சென்றால்
அங்கே தான் பாண தீர்த்தம் அருவி.. வான தீர்த்தம் என்றும் சொல்கின்றனர்...

தாமிரபரணியின் முதல் அருவி இதுதான்...

மிகவும் ஆபத்தான இடம்... எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்.. இத்தகைய வெள்ளப்பெருக்கினால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்கின்றனர்...

அதனால், இப்போது பாதுகாப்பு கருதி படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது...

மறுமுறை பாபநாசம் செல்லும்போது
காரையாறு அணைக்கும் சென்று வரவேண்டும் என்பது ஆசை...

கீழுள்ள படங்கள் 
ஸ்ரீ ஐயனார் திருக்கோயிலைச் சுற்றியுள்ள பசுமைக் கோலங்கள்..





ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயிலின்
நான்கு திசைகளிலும் காடும் மலையும் தான்...

இவற்றுக்கு அடி நாதமாக தாமிரபரணியின் சலசலப்பு!...

மீண்டும் மீண்டும் இங்கே வரவேண்டும்!..
- என மனம் விரும்புதற்கு என்ன காரணம் எனில் -
இங்குள்ள இயற்கை அழகு..

இதற்கெல்லாம் மேலாக
ஸ்ரீ சொரிமுத்து ஐயனின் அருள் மழை!...

ஆம்.. அது ஒன்றே காரணம்...


அருள் தரும் ஐயன் அருகிருக்க - வேறெதையோ தேடி அலைகிறார்கள்..

இந்த அளவில் -
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயிலைச் 
சுற்றி எடுக்கப்பட்ட படங்கள் இந்தப் பதிவில்!...

ஐயனார் கோயிலின் அழகும்
அங்கே தவழும் தாமிரபரணியின் எழிலும்
கண்ணுக்குள்ளேயே திகழ்கின்றன....

மனமும் உடலும் ஆரோக்கியமாய் இருப்பதாக உணர்வு..
இதற்கு மேல் வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்!..

பொதிகையும் தாமிரபரணியும்
இறைவனின் கொடை..

இறைவனே இயற்கை எனில் 
இயற்கையே நமக்குக் கொடை!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..
ஃஃஃ 

வெள்ளி, மே 25, 2018

ஸ்ரீ சொரிமுத்து ஐயனார்

ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர் - திருக்கல்யாணத் திருக்காட்சியை
பொதிகை மலைச்சாரலில் (பாபநாசம்) தாமிரபரணிக் கரையில் தரிசித்த
அகத்தியர் பெருமான் - அங்கிருந்து மேலே தனது பயணத்தைத் தொடர்ந்தார்...

நாற்புறமும் இயற்கை அழகு சூழ்ந்திருக்க
நடுவினில் வழிந்தோடும் தாமிரபரணியில்
தீர்த்தமாடி - அதன் கரையில் தியானத்தில் அமர்ந்தார்...

தியானத்தில் அமர்ந்த அகத்தியர் -
தர்ம சாஸ்தாவாகிய ஸ்ரீ ஹரிஹரபுத்ரன் 
தனது பரிவாரங்களுடன் சிவபூஜை நிகழ்த்தும்
அருங்காட்சியினை ஜோதி வடிவாகக் கண்டார்...

அவ்வண்ணமே தரிசனமும் வேண்டி நின்ற அகத்தியருக்கு
பெருங்கருணையுடன் ஈசன் அந்தத் திருக்காட்சியினை நல்கினார்..

ஸ்ரீ தர்ம சாஸ்தா தனது பரிவாரங்களாகிய
ஸ்ரீ சுடலை மாடன் , ஸ்ரீ பிரம்மரக்ஷகி (பிரம்ம சக்தி),
ஸ்ரீ பேச்சியம்மன் மற்றும் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஆகியோருடன்
ஸ்ரீ மகாலிங்கப் பெருமானை வழிபடும் திருக்காட்சியினைக்
கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்..

அவ்வண்ணமே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்..

தர்ம சாஸ்தாவை மூல மூர்த்தியாகக் கொண்டு
ஏனைய பரிவார மூர்த்தி பீடங்களையும் அமைத்து
நாளும் வழிபடலானார்...

இவ்வேளையில், ஈசனிடமிருந்து -
அகத்தியர் பெருமான் தமிழகம் முழுதும் சஞ்சரிக்கும்படியான
ஆக்ஞை பிறந்தது..

அதனை சிரமேற்கொண்ட அகத்தியரும்
மற்ற திருத்தலங்களை நோக்கிப் புறப்பட்டார்...

அகத்தியர் அங்கிருந்து புறப்பட்டதும்
அவர் வழிபட்ட சிவ மூர்த்தங்களை
பூமாதேவி தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டாள்..

கால சூழ்நிலை மாறியது...

பாண்டி நாட்டிலிருந்து சேரநாட்டிற்குச்
செல்லும் சாலை இவ்வழியே அமைந்தது...

மாட்டு வண்டிகளில் மக்கள் தங்கள் பொருள்களுடன்
இவ்வழியில் பயணித்தனர்..

நல்ல நாள் ஒன்றில் வண்டிக் காளையின் கால் குளம்பு பட்டு
சாலையின் ஓரமாக இருந்த கல்லில் இருந்து குருதி வழிந்தது...

பதறித் துடித்த மக்கள் ஓடிச் சென்று மன்னரிடம் விவரம் அறிவித்தனர்...

ஊர் திரண்டு வந்து கூடியது..

பொங்கலும் பூசையும் அமர்க்களப்பட்ட வேளையில்,
பல நூறு ஆண்டுகளுக்கு முன் -

ஸ்ரீஹரிஹரபுத்ரன் சிவ பூஜை செய்த நிகழ்வும்
ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியையும் ஸ்ரீஹரிஹரபுத்ரனையும்
அகத்தியர் வழிபட்ட நிகழ்வும் வெளிப்பட்டன..

அதையொட்டி அங்கே திருக்கோயில்கள் எழுப்பப்பட்டன..

குடமுழுக்குடன் ஆராதனைகள் நிகழ்ந்தவேளையில் வானிலிருந்து
பொன்னும் மணியும் முத்தும் மழை போல சொரியப்பட்டன..

அதனாலேயே
ஸ்ரீஹரிஹரபுத்ரன் - சொரிமுத்து ஐயனார் என்று வழங்கப்பட்டார்...

திருத்தலம் - காரையாறு (பாபநாசம்)

மூலஸ்தான மூர்த்தியின் திருத்தோற்றம்
ஸ்ரீ பூர்ணகலாம்பிகா ஸ்ரீ புஷ்கலாம்பிகா சமேத 
ஸ்ரீ ஹரிஹரபுத்ரன்

தீர்த்தம் - தாமிரபரணி
தலவிருட்சம் - இலுப்பை

திருமூலத்தானத்தில் 
ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா தேவியருடன் ஸ்ரீ ஹரிஹரபுத்ரன்
வலது பக்கம் சற்றே சாய்ந்தபடி பட்டபந்தனம் தரித்து
திருக்கரத்தில் தாமரைச் செண்டு தாங்கிய
திருக்கோலத்தில் அருளாட்சி செய்கின்றார்...

முன்மண்டபத்தில் சப்தகன்னியரும் எதிரில் 
ஸ்ரீ வைரவரும் திகழ்கின்றனர்..



ஸ்வாமியின் சந்நிதி முன்பாக 
நந்தி, யானை மற்றும் குதிரை வாகனங்கள் ஒரே பீடத்தில் திகழ்கின்றன...

கோயிலுக்குப் பின்புறத்தில் பாறைகளின் ஊடாக
சிறு கிளையாகத் தவழ்ந்து வரும் - தாமிரபரணி
சற்று தூரம் ஓடி சரிவினில் சென்று வேகம் எடுக்கிறாள்..

இதன் கரையில் தலவிருட்சமான இலுப்பை..

மணி விழுங்கி இலுப்பையின் அடியில் வழிபாடு
இலுப்பை மரத்தின் அடியில்,
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாதாளபூதம், ஸ்ரீ சங்கிலியார், ஸ்ரீ வனபேச்சியம்மன்
மற்றும் வனதேவதைகள் திகழ்கின்றனர்...

பக்தர்கள் ஸ்வாமியிடம் நேர்ந்து கொண்டு
இலுப்பை மரத்தில் மணிகளைக் கட்டுகின்றனர்...

இப்படிக் கட்டப்படும் மணிகளை நாளடைவில்
இலுப்பை மரம் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்கின்றது ..

இதனால், இலுப்பை மரத்திற்கு -
மணி விழுங்கி மரம் என்று பெயராகி விட்டது..

மேள தாள திருக்கூட்டத்தார்
இங்கே 
ஸ்ரீ மகாலிங்கஸ்வாமி, ஸ்ரீ சொரிமுத்து ஐயனார்,
ஸ்ரீ சங்கிலி பூதத்தார், ஸ்ரீ பிரம்மரக்ஷகி ( பிரம்ம சக்தி)
ஸ்ரீ தளவாய் மாடசாமி,  ஸ்ரீ தூசி மாடசாமி மற்றும்
ஸ்ரீ பட்டவராயர் 
- என, ஏழு திருக்கோயில்கள்..




ஸ்ரீ சங்கிலி பூதத்தார் கோயிலில் 
ஸ்ரீ அகத்தியர் பெருமான் வீற்றிருக்கின்றார்..

ஸ்ரீ பேச்சியம்மன் - ஸ்ரீ பிரம்மரக்ஷகி அம்மன் - ஸ்ரீ சுடலை மாடசாமி

ஸ்ரீ பிரம்மரக்ஷகி கோயிலில் ஸ்ரீ பேச்சியம்மனும்
ஸ்ரீ சுடலை மாடஸ்வாமியும் திகழ்கின்றனர்...




மற்றும் அடுத்தடுத்த சந்நிதிகளில்
ஸ்ரீ கரடி மாடசாமி, ஸ்ரீ தூண்டி மாடசாமி, 
ஸ்ரீ கருப்பசாமி - கருப்பாயி அம்மன், 
ஸ்ரீ இசக்கி அம்மன், ஸ்ரீ இருளப்பன்,
ஸ்ரீ மந்த்ரமூர்த்தி, ஸ்ரீ மேலவாசிபூதம்
ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ பாதாள பூதம்
- என காவல் மூர்த்திகளும் திகழ்கின்றனர்..

இவர்களுடன்,
ஸ்ரீ கச மாடசாமி தனது தேவி ஸ்ரீ கச மாடத்தியுடன் திகழ்கின்றார்..

தேவியருடன் ஸ்ரீ பட்டவராயர்
ஸ்ரீ பட்டவராயர் -
ஸ்ரீ பொம்மக்கா, திம்மக்கா - என,
இரு தேவியருடன் தனிக் கோயிலில் விளங்குகின்றார்...

ஸ்ரீ பட்டவராயரின் இயற்பெயர் முத்துப்பட்டர்..
அந்தணராகிய இவர் வாட்போரில் வல்லவர்..

அருந்ததியர் குலத்துப் பெண்களாகிய -
பொம்மக்கா, திம்மக்கா எனும்
சகோதரிகளைக் கண்டு காதல் கொண்டார்..

காதல் கைகூடிக் கல்யாணமும் நடந்தது..

ஸ்ரீ பட்டவராயர் திருக்கோயில்
தனது மாமனாரின் விருப்பத்தின் பேரில்
செருப்புகளைத் தைக்கும் கலையையும் கற்றுத் தேர்ந்தார்...

மகிழ்ச்சியான வாழ்க்கையின் இடையே ஒருநாள் -
அவர்களுக்குச் சொந்தமான பசுக்களைக் கவர்ந்தது கள்வர் கூட்டம்..


அப்போது நடந்த சண்டையில் பட்டவராயர் வீரமரணம் எய்தினார்...
அவருடன் அவரது தேவியரும் ஆவி துறந்தனர்...

பசுக்களையும் மக்களையும் காத்து நிற்பேன் - என,
பட்டவராயர் வாக்குறுதி அளித்து
ஸ்ரீ ஐயனாருடைய திருவடி நிழலில் கலந்தமையால்
ஸ்ரீ ஹரிஹரபுத்ரனின் பரிவார மூர்த்திகளுடன்
ஸ்ரீ பட்டவராயரும் அவர் தேவியரும் மக்களால் வழிபடப்பட்டனர்...

ஸ்ரீ பட்டவராயருக்குக் காணிக்கை
ஸ்ரீ பட்டவராயருக்குக் காணிக்கையாக
புத்தம்புதிய செருப்புகளை வழங்குகின்றனர்...

ஸ்ரீ பட்டவராயர் அவற்றை அணிந்து கொண்டு
காவல் மேற்பார்வை செய்வதாக ஐதீகம்...

புதிய செருப்புகளும் நாளடைவில் தேய்ந்து காணப்படுவது
பக்தர்களின் நம்பிக்கைக்கு உரமூட்டுகின்றது...

இத்திருத்தலம் -
பாபநாசம் திருக்கோயிலிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ளது..

அமாவாசை தினங்களில் விசேஷ வழிபாடுகள்..
என்றாலும், ஆடி அமாவாசை மகத்தான திருவிழா...

பங்குனி உத்திரமும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது...

ஐயப்பனின் திருத்தலங்களுள்
இத்திருத்தலம் - மூலாதாரம் என்று சிறப்பிக்கப்படுகின்றது...

சித்திரை விஷூ மற்றும் கார்த்திகை மார்கழியில்
சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் இங்கு வந்து செல்வதை
வழக்கமாகக் கொண்டுள்ளனர்...


ஸ்ரீ ஐயனார் சந்நிதி தவிர்த்த
மற்ற சில சந்நிதியின் மூர்த்திகளுக்காக
கிடா வெட்டி பூஜைகள் நடத்துகின்றனர்...

சமையலுக்காக நிறைய அடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன..

முதல்முறையாக இங்கே வந்த ஆண்டு 1990.. அதன்பின் 1991..

அதற்குப் பிறகு - இப்போது தான்...

ஆனாலும், ஸ்வாமியை மறந்திருந்ததாக இல்லை...

தகப்பனுக்கும் பிள்ளைக்குமான உறவு
எந்த காலத்தில் பிரியக்கூடும்!...

என் அப்பனைத் தரிசித்த பரவசத்துடன்
அந்த வெளியினை சுற்றி வந்து
இங்கே பதிவாகியுள்ள படங்களை எடுத்தேன்...

மேலும், சில படங்கள் அடுத்த பதிவினுக்காக!..

சொரிமுத்து ஐயனார் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ