நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 30, 2016

தஞ்சை தேரோட்டம்

தஞ்சை பெரிய கோயில்
சித்திரைத் திருவிழாவின் மகா ரதம்..

பதினைந்தாம் திருநாள் (18/4) திங்களன்று 
நிகழ்ந்த தேரோட்டத் திருக்காட்சிகள்.

விடியற்காலை 5.30 மணியளவில் ஸ்ரீ தியாகராஜர் ஸ்ரீ அல்லியங்கோதையுடன் சோமாஸ்கந்த மூர்த்தியாக மூலஸ்தானத்திலிருந்து திருத்தேருக்கு எழுந்தருளினார்..


மகா தீப ஆராதனைக்கு நிகழ்ந்ததும் -
காலை ஏழு மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது..








பக்தர்களின் பஞ்சாட்சர முழக்கத்துடன் தேரடியிலிருந்து புறப்பட்டது திருத்தேர்..

ஸ்வாமி தரிசனம் மற்றும் பக்தர்களின் வழிபாட்டிற்காக -
திருத்தேர் பதினான்கு இடங்களில் நிறுத்தப்பட்டது.

மேல ராஜவீதியில் -

1) ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் (உக்கடை அம்பாள் பள்ளி அருகில்)
2) ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் 
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயில் 
ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயில்
ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்களைக் கடந்து
3) ஸ்ரீமூலை ஆஞ்சநேயர் திருக்கோயில்

ஆகிய இடங்களிலும்,



வடக்கு ராஜவீதியில் -

4) ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயில்
5) ஸ்ரீ ரத்னபுரீஸ்வரர் திருக்கோயில்
6) ஸ்ரீ குருகுல ஆஞ்சநேயர் திருக்கோயில் (FCI அருகில்)

ஆகிய இடங்களிலும் தேர் நின்று செல்லும்.



தொடர்ந்து - கீழ ராஜவீதியில் -

7) ஸ்ரீமாரியம்மன் கோயில் (கொடிமரத்து மூலை)
8) ஸ்ரீ விட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் (அரண்மனை எதிரில்)
9) ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில்
10) ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் 

ஆகிய இடங்களிலும்

ஸ்ரீ தியாகராஜர் - அல்லியங்கோதை
தெற்கு ராஜவீதியில் -

11) ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
12) ஸ்ரீ கமல ரத்ன விநாயகர் திருக்கோயில்
13) ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்
14) ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோயில் 

ஆகிய இடங்களிலும் திருத்தேர் நிறுத்தப்பட்டு பக்தர்களால் வழிபடப்பட்டது.


தேரோட்டத்தில் முன்னதாக ஸ்ரீ விநாயகப் பெருமானும்
ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் முருகப்பெருமானும்
அலங்கார சப்பரங்களில் எழுந்தருளினர்..

மகாரதத்தினை அடுத்து அம்பிகை திருநிலைநாயகியாக எழுந்தருளினாள்..

தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார்..

ராஜவீதிகளில் கம்பீரமாக வலம் வந்த திருத்தேர் -
மதியம் 12.50 மணிக்கு மேலராஜவீதி தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது.

தேரோட்டத்திற்குப் பிறகு - தொடர்ந்த திருவிழாவில் -
பதினாறாம் திருநாளான 19/4 அன்று காலையில் முத்துப் பல்லக்கு.
மாலையில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் திருவீதி எழுந்தருளினார்.

பதினேழாம் திருநாளான 20/4 அன்று ஸ்ரீ தியாகராஜர் தோரணப் பந்தலில் தரிசனம் நல்கினார்..



பதினெட்டாம் திருநாளான (21/4) அன்று ஸ்ரீ தியாகராஜர் ருத்ரபாத மூர்த்தியாக யதாஸ்தான பிரவேசம்.

அதைத் தொடர்ந்து நடராஜர் சிவகாம சுந்தரியுடன் திருவீதியுலா.

மதியம் ஸ்ரீ சந்திர சேகரர் திருச்சுற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்ததைத்
தொடர்ந்து மாலையில் - துவஜ அவரோகணம் நடைபெற்றது...

ஸ்ரீ பிரகதீஸ்வரர் பிரஹந்நாயகியுடன் பெரிய ரிஷபத்தில் எழுந்தருள -
பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா..

அந்த அளவில் மங்கலகரமாக சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது.
***

சில தினங்களுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டிய பதிவு - இது..
இணைய இணைப்பில் தடையேற்பட்டதனால் தாமதமாகி விட்டது..
***

உலகெலாம் தொழவந் தெழு கதிர்ப்பரிதி
ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ
அங்ஙனே அழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே!..
-: அருட்சித்தர் கருவூரார் :-

நலம் வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

வியாழன், ஏப்ரல் 28, 2016

ஏழூர் திருவிழா

அந்த வீட்டின் கூரை பழுது பட்டிருக்கின்றது..

ஆனாலும், உணவு வழங்குவதில் அந்தக் குடும்பமே ஈடுபட்டிருந்தது கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்..

நடந்து வரும் பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்காக நிழல் பந்தலிட்டு அதில் வாடகை நாற்காலிகளை வைத்திருந்தார்கள்..

இவ்வாறு -
சோழ நாட்டின் விருந்தோம்பலைக் கண்ணாரக் கண்டதாக - Facebook ல்
திரு. வடிவேல் பழனியப்பன் என்பவர் மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார்..

மிகவும் பெருமையாக இருக்கின்றது..

சரி...

இந்த மாதிரி வழி நெடுக ஒவ்வொரு வீட்டிலும் -
உணவு, தண்ணீர், மோர் - எல்லாம் வழங்கி உபசரித்தது எங்கே?.. எதற்காக!..

திருஐயாற்றிலிருந்து புறப்பட்டு -
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் -

ஆகிய திருத்தலங்களை வலம் வந்து - மீண்டும் திருஐயாற்றை அடையும்
சப்த ஸ்தானம் எனப்படும் ஏழூர் திருவிழாவின் போது!..


பங்குனி புனர்பூசத்தன்று (மார்ச்/18) அன்று திருமழபாடியில்,நந்தீசனுக்கும் சுயம்பிரகாஷினி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்தது நினைவில் இருக்கும்..

திருமணம் நடந்த வேளையில் - அங்கே கூடியிருந்த மக்கள்,
மணமக்களை தங்கள் ஊருக்கு வந்தருளுமாறு அன்புடன் அழைத்தனர்..

அது கேட்ட எம்பெருமான் - சித்திரை விசாகத்தன்று - தாமே அழைத்து வருவதாக அருளினார்..


அவ்வண்ணமாக - திருஐயாறு பஞ்சநதீஸ்வரத்தில் சித்திரைப் பெருவிழா நிறைவடைந்ததும்,

கடந்த சித்திரை பத்தாம் நாள் விசாகத்தன்று ( 23/4)
அருள்தரும் அறம் வளர்த்த நாயகியுடன் -
நந்தீசனையும் சுயம்பிரகாஷினியையும் அழைத்துக் கொண்டு
எம்பெருமான் - மேற்குறித்த ஆறு திருத்தலங்களுக்கும் கோலாகலமாக எழுந்தருளினார்..

கடந்த 12/4 முதல் 22/4 வரை வெகுசிறப்பாக சித்திரைப் பெருவிழா திருஐயாற்றில் நிகழ்ந்தது..




ஒவ்வொரு நாளும் - சேஷ வாகனம்,  பூத வாகனம், ரிஷப வாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், கோரதம் - என திருவீதி எழுந்தருளிய பெருமானும் அம்பிகையும்

20/4 அன்று திருத்தேரில் எழுந்தருளினர்..



திருத்தேரோட்டம் நிறைவுற்றதும் -

21/4 அன்று மஞ்சள் நீராட்டு, கொடியிறக்கம்.. சப்த பிரதக்ஷிணம்..

22/4 அன்று பிட்சாடனர் திருவீதி எழுந்தருளினார்..

23/4 அன்று சித்திரை விசாகத்தன்று அதிகாலையில் ஐயனும் அம்பிகையும் கண்ணாடிப் பல்லக்கிலும் நந்தீசனும் சுயம்பிரகாஷினி தேவியும் வெட்டி வேர் பல்லக்கிலும் எழுந்தருளினர்..

திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் -

எனும் ஆறு திருத்தலங்களிலிருந்தும் அம்பிகையும் ஈசனும் பல்லக்குகளில் எழுந்தருளி ஐயாறப்பர் பல்லக்குடன் இணைந்து கொண்டனர்..

வழி நெடுக - பல்லக்குகள் சிறப்புடன் வரவேற்கப்பட்டன..

உடன் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.. 

வருவோர் தம் தாகத்திற்கு நீரும் மோரும் வழங்கியதுடன்  -  இல்லங்கள் தோறும் அன்புடன் விருந்து உபசரிப்பு நிகழ்த்தினர் - அப்பகுதியின் மக்கள்..

அன்றிரவு காவிரியில் திருப்பாதம் தாங்கி - வாணவேடிக்கை நடத்தப்பட்டது..










மறு நாள் (24/4) திருநெய்த்தானத்தில் இருந்து புறப்பட்டு -
திருஐயாற்றை அடைந்தபோது ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடியிருந்து எட்டு பல்லக்குகளையும் வரவேற்று மகிழ்ந்தனர்..

ரத வீதிகளில் பல்லக்குகள் எழுந்தருளிய பின் -
ஐயாறப்பர் பல்லக்குக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது..

மகாதீப ஆராதனைக்குப் பின் -

ஐயாறப்பரின் திருப்பல்லக்கு பாண்டரங்கம் எனும் ஆட்டத்துடன் திருக்கோயிலுக்குள் ஏகியது..


உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக் கணக்கான பக்தர்களும் கண் கொள்ளாக் காட்சியாக தரிசித்து மகிழ்ந்தனர்..

மாமன்னன் ராஜராஜ சோழனின் மனைவியருள் -
பட்டத்தரசியார் மகாராணி ஒலக மாதேவி..

இவரே - ஐயாறப்பர் திருக்கோயிலுக்குள் வட கயிலாயத்தை எழுப்பியவர்..

திருக்கோயிலுக்கு பொன்னும் பொருளுமாக நிறைந்த செல்வத்தை வழங்கிய மாதரசி..

ராஜராஜசோழனின் பெருந்தேவியாகிய ஒலக மாதேவியார் தான் -
சப்த ஸ்தானப் பெருவிழாவுக்குக் காரணம் - எனக் கூறுகின்றனர்...

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் நடைபெற்று வரும் சீர்மிகு திருவிழா தான் - சப்தஸ்தானப் பெருவிழா..

சிறப்புறும் ஏழூர் திருவிழாவினை அருணகிரிநாத ஸ்வாமிகள் தரிசித்து திருப்புகழ் அருளியுள்ளார்..

திருஐயாறு சப்த ஸ்தானத் திருவிழாவினைப் போலவே -
குடந்தை மற்றும் சக்கராப்பள்ளி ஆகிய தலங்களிலும் வேறு சில தலங்களிலும் நிகழ்கின்றது..

தஞ்சாவூர் - கரந்தையில் நிகழ்ந்த சப்தஸ்தானம் நின்று போய் ஆண்டுகள் பலவாகி விட்டன..

குடந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் சப்தஸ்தானம் நடைபெற்றது..

வெகு காலமாக நின்று போயிருந்த சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் மீண்டும் சில வருடங்களாக சில பிரச்னைகளால் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகின்றது..


திருவிழாவின் நிகழ்வுகளை வழங்கிய தம்பிரான் ஸ்வாமிகளுக்கு நன்றி..

இணைய இணைப்பு தடைபட்டிருந்ததால் 
இந்தப் பதிவு - சில தினங்கள் தாமதமாகி விட்டது..
***

வழிவழியாக வரும் பெருமைக்குரிய 
கலாச்சார நிகழ்வுகள் காக்கப்பட வேண்டும் - 
என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது..

இனிவரும் ஆண்டுகளிலும் 
ஏழூர் பெருவிழா மேலும் சிறப்புடன் நிகழ்வதற்கு
எல்லாம் வல்ல எம்பெருமான் நல்லருள் புரிவானாக..

இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கைதன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும்வைத்தார் ஐயன் ஐயாறனாரே!.. (4/38)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

திங்கள், ஏப்ரல் 25, 2016

உன்னோடு என்மனம்..

மச்சான்!..

என்ன புள்ளே?..

மனசு என்னமோ மாதிரி இருக்கு மச்சான்!...

எனக்கும் தான்டி ராசாத்தி!..



நாம... சம்சாரிங்க!.. நமக்கே மனசு கேக்குதில்லை.. எந் நேரமும் சாமிய நெனச்சுக்கிட்டு இருக்குற சன்னியாசி... சாமியாருங்க இவங்களுக்கு எல்லாம் எப்படியிருக்கும்?..,

இந்த காலத்துல எந்த சந்நியாசி..  சாமிய நெனச்சுக்கிட்டு இருக்கா?... இப்படி எல்லாம் நெனைச்சாத் தான் ஊரு உலகம் எப்பவோ உருப்பட்டு இருக்குமே!... அதெயெல்லாம் பேசப் போனா... சரி.. சரி.. நமக்கெதுக்கு அதெல்லாம்.. விடு!...

நீ சொல்றதும் சரிதான் மச்சான்... இந்தக் காலத்துல சாமியாரு...ன்னு சொல்லிக்கிட்டு அலையறவங்கள விட சம்சாரிங்க நாம எவ்வளவோ மேலு!..

சரி.. நாம ஆக வேண்டியதைப் பார்ப்போம்!..  மருதைக்கு வந்து பதினஞ்சு நாளாவுது.. அழகரு மலைக்குக் கெளம்பிட்டாரு!... ஜனங்க முகத்தில பாத்தியா... சாமி நம்ம கூடவே இருக்காதா.. ந்னு எவ்வளவு ஏக்கம்.. கண்ணுல தண்ணியா நின்னுச்சு புள்ள...

ஆமா.. மச்சான்.. வெள்ளந்தியா ஜனங்க... விடிய விடிய மறு பேச்சில்லாம.. பெருமாளே.. பெருமாளே!.. கோவிந்தா.. கோவிந்தா!.. ந்னு தன்னால மனசு கெறங்கிக் கெடந்ததுங்க... ஆனாலும் அழகரு.. மனசைக் கல்லாக்கிக் கிட்டு கெளம்பிட்டாரு!...

ராசாத்தி... அழகர் மனசு கல்லுன்னா... நெனைக்கிறே... அது ஒரு பூ மாதிரி.. பச்சைப் புள்ள மாதிரி.. ஒன்னுஞ்சொல்ல முடியாம அழகரு கோயிலுக்கு திரும்பிப் போறாரு!.. பாவம்... அவரு மனசுக்குள்ள என்னென்ன ஆசை கெடந்து அடிச்சுக்குதோ.. ஆரு கண்டா?...





வாசலைத் தெளிச்சு கோலம் போட்டு நல்ல வெளக்கேத்தி வெச்சி.. பழத் தட்டு பணியாரத் தட்டு..ன்னு படையல் வெச்சி... அழகரு.. அழகரு..ன்னு வாய் நெறைய மனசு நெறைய சொல்லிச் சொல்லி கும்புட்டாக.. 

சக்கரை சொம்புல சூடம் ஏத்தி... என்னா ஒரு சந்தோஷம்... யாருமே அது வேணும் இது வேணும்.. ன்னு கேக்கலை பாத்தியா!.. அழகரே நம்ம கூட இருக்குறப்ப - அதுக்கு மேல என்னா வேணும்?...

அன்னைக்கு அழகரு ஆத்துல இறங்குனப்ப.. அம்புட்டு கிட்டக்க பார்ப்பேன்னு... கனவுல கூட நெனைக்க இல்ல.. பச்சைப் பட்டு கட்டிக்கிட்டு... மணக்க மணக்க மல்லியப்பூ வெட்டி வேரு சம்பங்கி ரோஜா மாலைகளப் போட்டுக்கிட்டு.. ஏ.. ஆத்தாடி... இந்த பொறப்புக்கு இது போதும் மச்சான்!..

சரி.. மூட்டை முடிச்செல்லாம் சரியா இருக்கா...ன்னு ஒருதரம் பார்த்துக்க!.. அண்ண வர்றேன்..னாக!.. இன்னும் காணலையே!.. 

பெரிய மச்சானுக்கு என்ன சோளியோ.. எங்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காகளோ?..

அந்தாக்கில.. பாரு.. ஆயுசு நூறு.. வாங்கண்ணே.. இப்பத்தான் பேசுனோம்...

கனகு கெளம்பிட்டியா!... கூட இருந்து இன்னும் நாலு இடம் சுத்திக்காட்ட முடியலே!.... 

திருவுலா சோளி..ன்னா அப்படித்தான் இருக்கும்!.. நீங்க எதுக்கும் யோசிக்க வேணாம்!..

ஏ.. புள்ள ராசாத்தி கழுத்துல காதுல எல்லாம் பத்திரம்!...

ஆகட்டும் ... மச்சான்... நீங்க ஒருவட்டம் வீட்டுக்கு வந்துட்டு வரலாம் தானே...

வர்றேன்.. வர்றேன்!.. குழந்தை குட்டி..ன்னு குடும்பம் வெளங்கட்டும்.. எல்லாரையும் பார்க்க வர்றேன்!..

எலே.. ராசாமணி.. நம்ம தமுக்கு இந்தா நிக்கிறான் பாரு..லே!... நல்லா.. ருக்கியா ராசா?.. உன்னைய எங்கெல்லாம் தேடுனோம்.. காணக் கிடைக்கலையே!..

வாங்க.. வாங்க.. ஐயா.. வாங்க... நா... சப்பரம்.. பல்லாக்கு இதுகளோடா போவேன்.. வருவேன்... அத விட பெரிய சோலி வேறன்ன இருக்கு?.. சொல்லுங்களேங்!...

ஆமாமா!.. ஆனாலும் அந்த போலீசுகாரவுக வளையங் கட்டில்ல வந்தாங்க.. கிட்ட நெருங்க முடியலையே!.. இவுங்கள்ளாம் யாரு?..

தம்பியும் அவன் சம்சாரமும்!.. வடக்கே கயிலாசம் பட்டி!..

ஆகா!... நல்லாருங்க நல்லாருங்க!... மருதைக்கு வந்து திருவுலா.. எல்லாம் பாத்துட்டு கெளம்பிட்டியளாக்கும்!...

சரி.. நாங்களும் கெளம்புறோம்.. வெல்ல மண்டியில வேலை கெடக்கு.. ஆமா.. ஒரு சேதி கேக்க மறந்துட்டேங்.. உன்ன தமுக்கு தமுக்கு.. ந்னே கூப்புடுறேன்... நெசத்துல ஒம்பேரு என்ன ராசா!...

மாடசாமி!...

அடி.. ஆத்தீ!.. எங்க சாமி பேரு ஆச்சே!..

நமக்குத் தெற்கே தானே பூர்வீகம்... வையை தாண்டுனா.. தாமிரவருணி.. திருநெவேலி!... அதான எங்க முப்பாட்டன் பூமி!..

அப்படியா.. ரொம்ப சந்தோசம்.. எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு..ன்னு ஆகிட்டோம்... எல்லாம் அந்த ஆயி மீனாச்சி செஞ்ச வேலை.. வா.. ஐயா.. மாடசாமி.. வா... தாயி.. நீயும் வா... ஒரு வாய் காபி குடிச்சிட்டு ஊரப் பாக்க கெளம்புவோம்.. அங்கால ஆவணி..  இன்னும் மூணு மாசந்தேன்... தாயி புள்ளையா வந்து பார்த்துக்க வேண்டியது தான்!.. என்ன நாஞ்சொல்றது?..

ஐயா.. சொன்னா சரிதானுங்க!..

எலே.. ராசாமணி!... உடுக்கை அடிக்காதே...ன்னு எத்தனை தரம் சொல்லுறது?.. 

அது எங்க பங்காளி உலகம்பட்டி உலக நாத பூசாரிகிட்ட கத்துக்கிட்டதுங்கோ!..

அனைவரும் சிரிக்கின்றனர்...



கடந்த புதனன்று (20/4) அழகர் மலையிலிருந்து புறப்பட்ட அழகர்

கோலாகலமாக வெள்ளியன்று வைகையாற்றில் இறங்கினார்..

சனிக்கிழமை மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளினார்..
அன்றிரவு ராமராயர் மண்டகப்படியில் முத்தங்கியில் சேவை சாதித்தார்..




அத்துடன் விடிய விடிய தசாவதாரத் திருக்காட்சியும் நிகழ்ந்தது..

ஞாயிறு காலை ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்கத் திருக்கோலங்கொண்டு வைகை ஆற்றின் திருக்கண் மண்டகப் படியில் மாலை 4.00 மணியளவில் எழுந்தருளினார்..

அங்கிருந்து கோரிப்பாளையம் வழியாக தல்லாகுளம் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் வையாழி நிகழ்ந்தது..

அதன்பின் - சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்..

அங்கு பூப்பல்லக்கில் கள்ளழகராக எழுந்தருளி -
இன்று காலை அழகர் மலைக்கு புறப்பட்டார்..

வந்த வழியிலேயே பயணித்து மூன்று மாவடிக்கு எழுந்தருளினார்..


மக்கள் விடை கொடுக்கும் வண்ணமாக சிறப்பு பூஜைகளை நிகழ்த்தினர்...
மக்களின் அன்பினை ஏற்றுக் கொண்டு அழகர் மலைக்குப் புறப்பாடாகினார்..

வழி நெடுக திருக்கண்களில் எழுந்தருளியவாறு - 
நாளை (26/4) மதியத்திற்குள் திருமாலிருஞ்சோலையை அடைகின்றார்..

நாளை மறுநாள் (27/4) கள்ளழகருக்கு கண்ணேறு கழிக்கப்படும்..

மாபெரும் திருவிழா - உற்சவ சாந்தி மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் மங்கலகரமாக நிகழ்வுறும்..
***

வழக்கம் போலவே - திருவிழாவின் நிகழ்வுகளை
அழகிய படங்களாக வழங்கிய
திரு.குணா அமுதன் மற்றும் திரு. ஸ்டாலின் 
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.. 

இந்த அளவில் மாமதுரையின் சித்திரைத் திருவிழா பற்றிய பதிவுகள் நிறைவு பெற்றாலும் - 

வண்ணமயமான படங்களுடன் - இன்னும் சில பதிவுகள் தொடரக்கூடும்...


உவகையும் நிறையப் பெற்றேன்
ஊழ்வினை அகலப் பெற்றேன்..
உணர்வதும் உணரப் பெற்றேன்
ஊரெலாம் புகழப் பெற்றேன்..

உனதருள் நலமும் பெற்றேன்
உளமெலாம் மகிழப் பெற்றேன்..
உந்தனோடு அன்பில் உற்றேன்
உயிரினில் ஒளியைப் பெற்றேன்..

கள்ளழகர் திருவடிகள் போற்றி.. போற்றி!..  
சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

வெள்ளி, ஏப்ரல் 22, 2016

வைகையில் அழகர்

நேற்று முன் தினம் முன்னிரவுப் பொழுதில் அழகர் மலையில்
தங்கப்பல்லக்கில் ஆரோகணித்து ஸ்ரீ பதினெட்டாம் கருப்பஸ்வாமியிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்ட அழகர் -

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன் பட்டி, கடச்சனேந்தல் வழியாக - பற்பல திருக்கண்களிலும் ( மண்டகப்படி ) எழுந்தருளிய வண்ணம் -

நேற்று காலை 6.00 மணியளவில் மதுரையின் எல்லையான மூன்று மாவடியை வந்தடைந்தார்..


அங்கே சிறப்பாக எதிர் சேவை நிகழ்ந்தது..

பக்தர்களின் வழிபாடுகளை ஏற்றுக் கொண்ட அழகர் - தொடர்ந்து,

சர்வேயர் காலனி, புதூர், ரிசர்வ்லைன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வழியாக எழுந்தருளி மக்களின் அன்பினை ஏற்றுக் கொண்டார்..

தல்லாகுளம் பகுதியிலுள்ள திருக்கண்களில் சேவை சாதித்த அழகர் - இரவில்
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருளினார்..

அங்கே நள்ளிரவுப் பொழுதில் திருமஞ்சனம் ஆகியதும் - பச்சைப் பட்டுடுத்தி ஆண்டாள் மாலையை அணிந்தவராக தங்கக்குதிரை வாகனத்தில் ஆரோகணித்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்..

இன்று அதிகாலை 2.00 மணியளவில் தல்லாகுளம் ஸ்ரீ கருப்ப ஸ்வாமி திருக்கோயிலின் முன் தங்கக்குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் -
கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார் புரம் வந்து -

காலை 6.20 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார்..

அவரை வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர் கொண்டு அழைத்தார்..

கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நீரைப் பீய்ச்சியடித்து ஆனந்தமடைந்தனர் - பக்தர்கள்..

கோவிந்தா.. கோவிந்தா!.. - என முழங்கியவாறு -
சர்க்கரைச் செம்பில் கற்பூரம் ஏற்றி - கண் குளிர வழிபட்டனர் மக்கள்..












புவி நாளன்று புதுப் புனலுடன் வைகை
காலை 7.30 மணியளவில் - அழகர் வைகையிலிருந்து புறப்பட்டு
10.00 மணியளவில் ராமராயர் மண்டபத்திற்குச் சென்றார்..

இன்றிரவு வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருள்கின்றார்..


நாளை (23/4) காலை சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் மதியப் பொழுதில் கருட வாகனத்தில் ஆரோகணித்து மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருள்கின்றார்..

பற்பல திருக்கண்களில் எழுந்தருளிய வண்ணம் -
இரவு மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்..

அங்கே இரவு முழுதும் தசாவதாரத் திருக்காட்சி நிகழ்கின்றது..
***

இன்றைய நிகழ்வினை அழகிய படங்களாக வழங்கியோர்
திரு.குணா அமுதன். திரு ஸ்டாலின், திரு அருண்.,
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
***

வைகை ஆற்று நீரும்
அழகர் என ஆவலுடன் வந்தது..
வள்ளல் தன் கோலங்கண்டு
வளநகரும் மகிழ்ந்தது..

கள்ளழகர் திருவடிகள் போற்றி!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***