நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 31, 2025

தக்காளி சூப்

 

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17 
திங்கட்கிழமை


தக்காளி மிளகு சூப்..

தக்காளிப்பழங்கள் இரண்டு
சின்ன வெங்காயம் 3
பூண்டு 3 பல்
மிளகுப் பொடி 1⁄2   tsp  
சீரகப் பொடி 1⁄2   tsp  
சோள மாவு  1⁄2   tsp  
வெண்ணெய் தேவைக்கு 
மல்லித் தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு

செய்முறை

தனியானதொரு பாத்திரத்தில் தக்காளிப் பழங்களை  போட்டு மூழ்கும் அளவுக்கு கொதி நீரை ஊற்றி
சில நிமிடங்கள் கழித்து -

தோலை உரித்துக் கொள்ளவும்..

வெங்காயம் பூண்டு சுத்தம் செய்து தோல் நீக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி  - தோலுரித்த தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை கிண்ணம் ஒன்றில்  தனியாக வைக்கவும்.. 

50 ml தண்ணீரில் சோளமாவைக் கரைத்துக் கொள்ளவும்..

உத்தேசமாக 500 ml 
நீரை அடுப்பில் ஏற்றி அரைத்து வைத்திருக்கின்ற
 தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க  விடவும்.

சோள மாவு கரைத்த
கலவையைக்  கொதிக்கின்ற விழுதுடன் கலக்கவும்.

உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும்.  வெண்ணெயையும்
சேர்க்கவும்.

நன்கு கொதித்ததும் மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைக்கவும்..

மூன்று பேருக்கானது இது..

வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
மழை குளிருக்கு இதமான தக்காளி  சூப் என்றாலும் எல்லா நாளும் 
உடலுக்கு நலமளிப்பது..

நமது நலம்
நமது கையில்

ஓம் நம சிவாய
**

ஞாயிறு, மார்ச் 30, 2025

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 16
ஞாயிற்றுக்கிழமை

திருவையாறு பூலோக கயிலாயம்  ஸ்ரீ அறம் வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப் பெருவிழா  கடந்த திங்களன்று வெகு சிறப்பாக   நடைபெற்றது..

அதனை முன்னிட்டு மாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்..

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி, ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தனித்தனி விமானத்திலும் 

ஸ்ரீ ஸ்வாமி, ஸ்ரீ அம்பிகை  புஷ்ப பல்லக்கிலும் ஆக - மங்கல வாத்தியங்கள், சிவகண வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன்  மிக பிரமாண்டமாக நான்கு இராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.. 

நன்றி
தருமபுர ஆதீனத்தார்



















கந்தமர வுந்துபுகை
  யுந்தலில் விளக்கேர்
இந்திர னுணர்ந்துபணி
  யெந்தையிட மெங்கும்
சந்தமலி யுந்தரு
  மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு
  வண்திருவை யாறே.  2/32/2
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, மார்ச் 29, 2025

சிந்தனை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 15 
சனிக்கிழமை


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை..


ஏர்க்கால் எனும் உழவின் ஆதாரத்தைக் கொண்டு தான் அதனை முன்னாக வைத்து அதன் பின்னால் சுழன்று கொண்டிருக்கின்றது உலகம் -

என்று, திருவள்ளுவர் வடித்திருக்கின்றார்..

இதையே
புவி தனது அச்சில் சுழல்கின்றது என்பதைக் கணக்கியலுடன் கூறியவர் ஆர்ய பட்டர்..  


ஆர்ய பட்டர் - 
நமது நாட்டின் ஞானி.. இவரது காலம்  கிபி 476 – 550  என்று அறியப்பட்டுள்ளது..

ஆர்ய பட்டர் - 
 வானியலில் தள முக்கோண இயலைப் பயன்படுத்தி 
சூரிய, நிலவு மறைப்புகளைக் கணக்கிட்டார். விண்மீன்கள் மேற்கே நகர்வது போலத் தோன்றுவதற்கு - புவி தனது அச்சில் சுழல்வது தான் காரணம் என்பதையும் நிலவும் பிற கோள்களும் ஒளிர்வதற்கு சூரிய ஒளியின் எதிரொளிப்பு தான் காரணம் என்பதையும் விவரித்துள்ளார் - என விக்கி கூறுகின்றது..  


பாரத நாட்டின் வானியலாளர் ஆரிய பட்டரின் நினைவாக ஆரிய பட்டா எனும் - நமது முதல் செயற்கைக் கோள்  1975  ஏப்ரல்  19 அன்று ரஷ்யாவின் ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட்டது..
படங்கள் நன்றி விக்கி..

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மாணிக்கவாசகர் -


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரைய

என்று 
இன்றைய நவீன விஞ்ஞானம் சொல்கின்ற விண்ணியல்
நுட்பங்களைத் திரு அண்டப் பகுதியில் கூறுகின்றார்..

ஆரிய பட்டா எனும் - நமது  செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்ட பிறகே அவரைப் பற்றி சாதாரண மக்கள் அனைவருக்கும் தெரிய வந்தது.. காரணம் நமது கல்விமுறை...

ஆனாலும் எல்லா தொழில் நுட்ப சாதனங்களும் வெளி நாட்டில் கண்டுபிடித்திருக்க -
இங்கே கண்டுபிடிக்கப்பட்டவை இட்லி தோசை சட்னி சாம்பார் தான்.. என்ற  ஏளன காணொளி ஒன்றை சமீபத்தில் கண்டேன்.. அதை இங்கே பதிவிட விருப்பம் இல்லை.. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்..

உலகம் சுழல்கின்றது என்று திருவள்ளுவர் உரைத்திருக்க அவரைத் தொடந்து ஆரியபட்டரும் மாணிக்கவாசகரும்  வருகின்றனர்..

நிலைமை இப்படி இருக்க - 
மேலை நாட்டு கலிலியோவின் சூரிய மைய ஆய்வின் படி சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகின்றன என்பதை அங்கே இருந்த  சமய நம்பிக்கையாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை..
சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக வீட்டுக் காவலில் 
வைக்கப்பட்டு 1642 ல் இறந்தார் எனவும் விக்கி சொல்கின்றது..

அங்கே சமய நம்பிக்கையாளர்கள்
ஒத்துக் கொள்ள வில்லை...
இங்கே உலகம் சுழல்கின்றது என்றவர்களே
சமய நம்பிக்கையாளர்கள் தான்!..

இப்படி இருக்க,
எனக்குள் ஒரு சந்தேகம் - 

இட்லி தோசை சட்னி மட்டுமே கண்டு பிடித்த சாம்பார் தேசத்துக்கு வெள்ளையர்கள் ஏன் விழுந்தடித்துக் கொண்டு கப்பல் கப்பலாக வந்தார்கள்?..

இட்லி தோசை சட்னி சாம்பார் மட்டுமே கொண்டிருந்த  தேசத்திலிருந்து  மூட்டை மூட்டையாய் பொன்னையும் மணியையும் ஏன் அள்ளி மூட்டை கட்டிக் கொண்டு சென்றார்கள்?..


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வெள்ளி, மார்ச் 28, 2025

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 14
வெள்ளிக்கிழமை


தானா தானா தானா தானா 
தானா தானத் ... தனதானா

ஊனே தானா யோயா நோயா
     லூசா டூசற் ... குடில்பேணா

ஓதா மோதா வாதா காதே
     லோகா சாரத் ... துளம்வேறாய்

நானே நீயாய் நீயே நானாய்
     நானா வேதப் ... பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே
     நாயேன் மாயக் ... கடவேனோ

வானே காலே தீயே நீரே
     பாரே பாருக் ... குரியோனே

மாயா மானே கோனே மானார்
     வாழ்வே கோழிக் ...
கொடியோனே

தேனே தேனீள் கானா றாய்வீழ்
     தேசார் சாரற் ... கிரியோனே

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...
பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து, 
முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப் போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி,

நூல்களைப் படித்தும் வம்பு  செய்கின்ற சமய வாதச் செயல்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம் வேறுபட்டு

நானே நீயாக நீயே நானாக உன்னிடம் ஒன்றுபட்டு 
பலவகையான வேதப் பொருள் கொண்டு 
உன்னை விரும்பி வீடுபேற்றை
அடையாதவனாக நாயேன் முடியக் கடவேனோ?..

விண், காற்று, தீ, நீர், பூமி எனும் ஐந்து பூதங்களாக விளங்கி,
இவ்வுலகுக்கு உரியவனாகத் திகழ்பவனே..

என்றும் நிலைத்திருக்கின்ற பெரியவனே எமையாளுகின்ற அரசனே
மான் போலும் அழகிய வள்ளிக்கும் 
தேவயானைக்கும் கணவனே
கோழிக் கொடியை உடையவனே..

தேனாக இனிப்பவனே தேனாறு எனும் நீண்ட காட்டாறு பாய்கின்ற
ஒளி நிறைந்த குன்றக்குடி மலையில் அமர்ந்தவனே..
ஈசன் மகனே செவ்வேள் முருகனே அழகனே தலைவனே..

 தேவனே தேவர்களின் பெருமாளே...

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், மார்ச் 27, 2025

ஆனந்தம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 13 
 வியாழக்கிழமை


 நீர்...

அனைத்திற்கும் ஆதாரமான ஒன்று..

சுத்தமான நீர்..  

உடலுக்கு இன்றியமையாத ஒன்று..

ஒவ்வொரு நாளும் விழித்ததில் இருந்து
உறங்கச் செல்வது வரை சீரான இடைவெளியில் சுத்தமான நீர் அருந்துவது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

பலருக்கும் உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு  ஒரு நாளில் போதிய அளவு சுத்தமான நீர் அருந்தாததே முக்கிய காரணம்..

உடலுக்கு ஏற்ற -  தேவையான சமச் சீர் உணவை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்பதும் அவசியம்..

காலையில் ஒரு முறையும்  மாலையில் ஒரு முறையும் பால் கலக்காமல் தேநீர் அருந்தலாம்.. வெள்ளை சீனிக்குப் பதிலாக கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்வது நல்லது..

கருப்பட்டி தற்போது விலை அதிகம்.. எளிய குடும்பங்கள் யோசித்துக் கொள்ள வேண்டும்..
நாட்டுச் சர்க்கரையில் கலப்பு அதிகம் என்றொரு தகவலும் தற்பொழுது கிடைக்கின்றது.. எனவே ஆய்ந்து அறிந்து தேர்ந்து கொள்வது அவரவர் கடமை..

ஓரளவிற்காவது பாரம்பரிய உணவு வகைகளின் பக்கம் திரும்ப வேண்டியது 
காலம் இடுகின்ற கட்டளை.. தற்கால 
சூழ்நிலையில் மிகவும் அவசியம்.. 

உலர்ந்த மிளகாயில் புற்று நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டுள்ளதால் உலர்ந்த மிளகாயைத்
 தவிர்ப்பது நல்லது ..

உலர்ந்த மிளகாயைக் குறைத்துக் கொண்டு தக்க அளவில் மிளகைப் பயன்படுத்த வேண்டும்..

இதேபோல புளியையும் குறைத்துக் கொள்வது அவசியம்...

வாரத்தில் ஒரு நாள் கசப்புடைய பாகற்காய் இரண்டு நாட்கள் துவர்ப்புடைய வாழைப் பூ, வாழைத் தண்டு எனச் சேர்த்துக் கொள்வது சிறப்பு..

செரிப்பதற்குக் கடினமான இறைச்சி வகைகளை விட்டொழிப்பது சாலச் சிறந்தது..

எனினும், இது அவரவர் விருப்பம்..

அன்றாட உணவில் 
கொழுப்பு மிகுந்து விடாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்..


நாற்பது வயதுக்கு மேல் - கொழுப்பு மிக்க உணவுகளையும் எண்ணெய் வகைகளையும் மருத்துவர் ஆலோசனையின்படி
குறைத்துக் கொண்டால் 
ஆனந்தம் ஆனந்தமே..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், மார்ச் 26, 2025

ஐயாறு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 12
 புதன் கிழமை



திருக்குடமுழுக்கு நடந்து
ஒரு மண்டலம் ஆகி விட்டது.. 

கடந்த ஞாயிறன்று ஐயாறு ஸ்ரீ பஞ்ச நதீஸ்வரத்தில் நிகழ்ந்த மண்டலாபிஷேகக் காட்சிகள்..











 நீரோடு கூவிளமும் நிலாமதியும் 
  வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த 
  தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
  பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 
  நடம்பயிலும் திரு ஐயாறே.. 1/130/5 
-: திருஞானசம்பந்தர் :-

நன்றி ஆதீனத்தார்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், மார்ச் 25, 2025

கோ மாதா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 11
செவ்வாய்க்கிழமை


நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்  -  மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை..  

தமிழ் வளர்த்த ஔவை மூதாட்டியின் அமுத வாக்கு அது....

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக...
- என்று ஆழ்வார் உருகும் போது -


விறகில் தீயினன் பாலில்  படு நெய் போல மறைய நின்றுளான்... - என்று அப்பர் போற்றுகின்றார்...

பக்தனைப் பசு  என்கின்றது சைவ சித்தாந்தம்..

பசுவின் உடலில் சகல தேவர்களும் -  என்று சொல்கின்ற வேதம்,
காளையை தர்மத்தின் வடிவம் எனப் புகழ்கின்றது..

திருநெய்த்தானம் என்று தஞ்சைக்கு அருகில் சிவ ஸ்தலமே உள்ளது..

ஆண்டாள் நாச்சியார் பாடியபடி  - வாங்கக் குடம் நிறைத்த வள்ளல் பெரும் பசுக்களின் வம்சம் அழிந்து போயிற்று...

இன்றைக்கு எல்லாமே கலப்பினங்கள் தான்..

கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோயில் கோசாலையில் மட்டுமே பாரம்பரிய பசுக்களும் காளைகளும் காணக் கிடைக்கின்றன..


இன்றைக்கு
சுத்தமான நெய் ஆபத்தான உணவுப் பட்டியலில்!..

அன்றைக்கு உடல் உழைப்பும் அதற்கான வலுவான புறக் கூறுகளும் காரணிகளும் இருந்தன... இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை..

இன்றைக்கு இருக்கின்ற கலப்பின பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல் தான்..
காளைகளுடன் இயற்கையான கூடல் கிடையாது...

கலப்பின பசு என்றாலும் செயற்கைக் கருவூட்டல் என்றாலும் இரத்தமும் சதையும் எலும்புமாய் 
அதுவும்  ஒரு ஜீவன் தானே...

வணக்கத்துடன் ஏற்றுக் கொள்வோம்...

அன்றைக்கு மந்தை என்கிற
மேய்ச்சல் நிலமும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் காலாற மேய்தல் 
எனும் வழக்கம் இருந்தது.. 

ஆநிரை மேய்த்தல் எனும் வழக்கமும் இருந்தது.. 

இன்றைக்கு ஊர்ப் பசுக்களில் ஒன்றிரண்டு குப்பை மேட்டில் மேய்கின்றன என்றால் காலக் கொடுமை என்பது இதைத் தான்...

இதற்கிடையில்,
மயானத்தில் மேய்வதும்
கன்றை இழந்ததும் நோயுற்றதும்  முடமானதும் ஆன பசுக்களிடம் இருந்து பால் கறக்கவோ அந்தப் பாலை அருந்துவதோ கூடாது என்பார்கள் பழைய காலத்தில்..

இறைச்சி - 
பிரியாணிப் பிரியர்கள் அதிகமாகி விட்ட
இக்காலத்தில் அத்தகைய நடைமுறைகள் எதுவும் கிடையாது..

எங்கள் பிளாக்கில் வெளியாகின்ற சமையல் குறிப்புகளில் அடிக்கடி பசு நெய் குறிப்பிடப்படுவதால் அன்புக்குரிய நெல்லை அவர்கள் பெங்களூரில் பசுக்கள் குப்பையில் மேய்வதாக சொல்லியிருந்தார்.. அதை முன்னிட்டுத் தான் இந்தப் பதிவு..

பெங்களூருவைப் போலவே எங்களூரிலும் இப்படியான காட்சிகள் காணக் கிடைக்கின்றன..

நிதர்சனமாக கறந்த பாலுடன் ஏனைய பொருட்கள் வருங்காலத்தில் கிடைப்பது அரிது என்றே தோன்றுகின்றது..

இதற்கெல்லாம் யார் காரணம்?..


ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், மார்ச் 24, 2025

சுழியன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 10
திங்கட்கிழமை


தஞ்சாவூர் சுழியன் 

தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு 200 கிராம்
அரிசி மாவு 200 கிராம்
கோதுமை மாவு 50 கி
பழுப்பு வெல்லம் 200 கிராம்
ஏலக்காய் 2
தேங்காய் அரை மூடி
கடலெண்ணெய் தேவைக்கு


செய்முறை:

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.. ஏலக்காயைத் தட்டிக் கொள்ளவும்..
பழுப்பு வெல்லத்தை சின்னச் சின்ன துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும்.. இதுவே இந்தச் சுழியனுக்குச் சுவை கூட்டுவது..

கடலைப் பருப்பை நன்றாக வேக வைத்து நீரை வடித்து விட்டு ஆறியதும் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்..

இதனுடன்  தேங்காய்த் துருவல், உடைத்த பழுப்பு வெல்லம் ஏலக்காய்த் தூள்  சேர்த்து கிளறிக் கொள்ளவும்... 

இதை அப்படியே சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.. 
இதைப் பூரணம் என்பது வழக்கம்..

அரிசி மாவுடன்
கோதுமை மாவு சிட்டிகை உப்பு மஞ்சள் தூளும் கலந்து,  நீர் விட்டு தளர கரைத்துக் கொள்ளவும். 

இரும்பு வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும்..
எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள  உருண்டைகளை  ஒவ்வொன்றாக கரைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து கவனத்துடன் எண்ணெயில் இட்டு வெந்ததும் எடுக்கவும்..

பாரம்பரிய சுழியனுக்கு - சுழியம், சுகியன் என்ற பெயர்களும் 
சற்றே மாறுபட்ட  செய்முறைகளும் இருக்கின்றன.. 

பூரணம் பிடித்த பின் அதை பழைய தோசை மாவில் தோய்த்து எடுப்பதும் உண்டு..

வழிபாட்டிற்கெனில் தனியாக கரைத்துக் கொள்வது நல்லது..

பாசிப்பருப்பைக் கொண்டு செய்வதும் வழக்கம்..

விநாயக வழிபாட்டில் இது முக்கியத்துவம் பெறுகிறது..

இது எங்களது கைப்பக்குவம்..

நமது நலம் நமது கையில்
**
ஓம்
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, மார்ச் 23, 2025

கோடை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 9
ஞாயிற்றுக்கிழமை


கோடை மலர்ந்து கொண்டிருக்கின்றது.. இன்முகத்துடன்  எதிர் கொள்வோம்....

(இருக்குற பிரச்னைல இவன் வேற!..)


இந்நாட்டின் மெய்ஞானிகள் - 
இந்நாட்டிற்குள் கொள்ளையர்கள்
நுழைவதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே - கார் காலம், குளிர் காலம், இள வேனில் காலம், முது வேனில் காலம், முன் பனிக் காலம், பின் பனிக் காலம் - என, பருவ காலங்களை வகுத்துத் தந்த வகையில் வேனில் என்ற கோடை வந்து கொண்டிருக்கின்றது... 

வரவேற்போம்...

கோடை வெயிலில் தேவையின்றி அலைவது நல்லதல்ல.. சற்றே ஒதுங்கி  இருப்பது சாலச் சிறந்தது..


இருப்பினும்,
பகல் பொழுதின் தேவைக்கு ஏற்ப குளிர்ந்த நீர் அருந்தவும்.. அதே சமயத்தில் பொது இடங்களில் அருந்துகின்ற தண்ணீரின் தரத்தை உறுதி செய்து கொள்வது அவசியம்..

தண்ணீர் பாட்டில் வகையறாக்களிடமும் கவனம் தேவை..

கோடை முடியும் வரை டீ காஃபி இவற்றை குறைத்துக் கொள்வதும் நல்லது..

கையில் பண இருப்பைப் பொறுத்து - 





இளநீர், தர்பூசணி, முலாம்பழம்ஆரஞ்சு சாத்துக்குடி பழச் சாறுகள், நன்னாரி வெட்டி வேர் போன்றவை ஊறிய மூலிகை நீர் இவற்றையும் அருந்தலாம்..

ஷர்பத் போன்ற பானங்களை கண்ட இடங்களிலும் குடிக்க வேண்டாம்...

தண்ணீர் நிறைந்த பழங்கள்  காய்களை சற்று அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது..

தயிரில் தண்ணீர் விட்டு உப்பு போட்டு தளர்வாகக் கரைத்து அருந்துவது சிறப்பு. 

இரசாயன பழச்சாறுகள்
வண்ணமிகு செயற்கை பானங்களை முடிந்தவரை தவிர்த்து விடவும்..

காரம் மிகுந்த உணவுகளில் இருந்து ஒதுங்கி இருத்தல் நல்லது..

அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களையும் ஊசி மூலமாக இரசாயன வண்ணம்  ஏற்றப்பட்ட தர்பூசணிப் பழங்களையும் உணவு பாதுகாப்பு துறையினர் கைப்பற்றிய காட்சிகள் வியாழன்று தொ. கா. செய்தியில் காட்டப்பட்டது...

இப்படியான தண்ணீர் பாட்டில்கள்  இரசாயன வண்ணம்  ஏற்றப்பட்ட தர்பூசணிப் பழங்கள் இவற்றில் ஆகாதனவற்றைச் செய்து விற்பனை செய்கின்ற விஷமிகளுக்கு காலகதியில் என்ன தண்டனையோ...

நண்பர்கள் கவனமாக இருந்து இப்படியானவற்றைப் புறக்கணிக்க வேண்டியது அவசியம் அவசியம் அவசியம்!..

உஷ்ணத்தால்  பாதிப்பு ஏற்பட்டால் தக்க மருத்துவரை அணுகி  ஆலோசனை பெறவும்...

கோடையில் வாய்த்த குளிர் நிழல் என்பார்கள்.. 
இன்றைய சாலைகளில் குளிர் நிழல் எத்தனை பேருக்கு வாய்க்கக் கூடும்?..

ஆயினும்,

கோடையே வருக குளிர்
ஓடையாய் நிறைக..
**

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**