" அக்கா.. அக்கா!.. "
" வாம்மா தாமரை!.. உனக்குத் தான் சிரமம் கொடுத்துட்டேன்.. "
வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திய தாமரையை முக மலர்ச்சியுடன் வரவேற்றாள் செல்வி - தமிழ்ச் செல்வி..
கையெல்லாம் ஈரமான மாவு அப்பிக் கிடந்தது..
" என்னக்கா நீங்க.. இதுக்குப் போய்?.."
" இருக்கட்டும்மா.. தீவாளிக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.. அங்கே உங்க வீட்ல எல்லாத்தையும் முடிச்சுட்டு இங்க வந்து அந்த அடுப்பு வேலையையே திரும்பவும் செய்றதுன்னா.. அலுப்பு தானே!.. உனக்கு நல்ல மனசுடா தங்கம்!.. "
" உங்களுக்குத் தான் ரொம்ப ரொம்ப நல்ல மனசு.. பண்டிகை பலகாரம்... ன்னா சில பேர் வீட்டுக்குள்ள யாரையும் விடமாட்டாங்க.. கண்ணு பட்டுடும்.. ன்னு.. "
- கலகல என்று சிரித்த தாமரை தொடர்ந்தாள்..
" சரி.. சரி.. வாங்க அக்கா.. நம்ம வேலைய ஆரம்பிப்போம்.. கரண்டு கம்பிய அணில் குட்டி எப்போ கடிச்சு வைக்கும்.. ன்னு தெரியாது.. "
மறுபடியும் சிரித்தாள் தாமரை..
" நமக்கு ஏம்மா அந்தப் பேச்சு?.. கரண்டு வந்தா வரட்டும்.. போனா போகட்டும்..போன வாரம் தான் இன்வர்டர் வாங்கிட்டு வந்தாங்க அத்தான்.. அதோ.. அங்கே இருக்கே.. "
" ஓ... இதான்.. இப்போதைக்கு வேணும்!.. "
" காஃபி குடிச்சுட்டு வேலைய ஆரம்பிக்கலாமா.. இப்போதான தேங்காய்ப் பால் ஊற்றி மாவு பிசைஞ்சு வெச்சிருக்கேன்.. அஞ்சு நிமிஷம் ஆகட்டும்..."
" சரிக்கா.. ஆனா, காஃபி அப்புறம்.. இப்போதான் சாப்பிட்டுட்டு நேரே வர்றேன்... "
பேசிக் கொண்டே சமையலறைக்குள் வந்தனர் இருவரும்.. மேடையில் இருந்த ஸ்டவ் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது.. முறுக்கு பிழிவதற்கு முன்னேற்பாடுகள் எல்லாம் செம்மையாக இருந்தன..
திடீரென தாமரை ஆச்சர்யமானாள்...
" அக்கா... நீங்களும் கடலை எண்ணெய்க்கு மாறிட்டீங்களா!.. "
" அது ஆச்சு மூனு மாசம்.. பாமாயிலுக்கும் டாட்டா காட்டியாச்சு.. "
" இந்த எண்ணெய் கடையில வாங்குனதா அக்கா.. "
" இல்லேம்மா... நேரிடையா செக்குல ஆட்டி எடுத்தது.. பாரு அந்த வாசத்தை... "
" ஆகா!.. "
எண்ணெய்யை நுகர்ந்த தாமரையின் முகம் மலர்ந்தது..
" அக்கா இந்த தேங்காய்ப்பால் முறுக்குக்கு உங்க கைப் பக்குவத்தைச் சொல்லுங்களேன்.. "
" ஏம்மா.. உனக்குத் தெரியாதா?.. "
" தெரியும்... ஆனா இந்தக் குழாயடியில சொல்றாங்க கடல மாவு, மைதா மாவு, கல்லு மாவு, கண்ணாடி மாவு.. ன்னு என்னென்னமோ சொல்றான்.. களே... "
" அதெல்லாம் விட்டுத் தள்ளு.. அரைக்கிலோ பச்சரிசிக்கு நூத்தம்பது கிராம் வெள்ளை உளுத்தம் பருப்பு அரை மூடி தேங்காய், பசு வெண்ணெய் அம்பது கிராம்.. கறுப்பு எள், ஒமம், சீரகம் இது மூனுல ஏதாவது ஒன்னு கொஞ்சம் போல வறுத்து எடுத்துக்கணும்.. அதுக்கு மேல உப்பு.. அவ்வளவு தான்.. அரிசி உளுந்து வறுத்து அரைச்சு மாவுல வெண்ணெய் ஓமம் போட்டு தேங்காய்ப் பால் பிழிஞ்சு விட்டு பக்குவமா பிசைஞ்சு எடுத்துட்டா.. அதான் தேங்காய்ப் பால் முறுக்கு.. "
" அதான் எனக்குத் தெரியுமே.. இருந்தாலும் வேற ஏதாவது தொழில் நுட்பம் எதுவும் வெச்சி இருக்கீங்களோ.. ன்னு தான் கேட்டேன்... "
தாமரையிடம் மீண்டும் சிரிப்பு..
அக்காவும் சிரித்துக் கொள்ள - வெகு மும்முரமாக முறுக்கு சுடும் வைபவம் களை கட்டியது..
" அக்கா நான் பிழிஞ்சு தர்றேன்.. நீங்க திருப்பிப் போட்டு எடுங்க.. சரியா!.. "
அருகில் இருந்த அரிகரண்டிகளில் ஒத்தாற்போல - தாமரை பிழிந்து கொடுத்த முறுக்குகள் பதமான சூட்டில் இருந்த எண்ணெய்க்குள் இறங்கி சுறுசுறு என பூரித்து வட்டமிட்டன..
" அக்கா ஒரு முறுக்கு ஜோக் சொல்லவா!.. "
" முறுக்கு ஜோக்கா?.. "
" அதான் கடி ஜோக்!.. "
" சொல்லேன்.. "
" நானும் அத்தையும் அன்னைக்கு கடைத் தெருவுக்குப் போயிருந்தப்போ ஜவுளிக் கடைக்கு முன்னால கூட்டம்.. என்னான்னு எட்டிப் பார்த்தா சாக்கு மூட்டையை போட்டு ரெண்டு பேர் அடிச்சுக்கிட்டு இருந்தானுங்க.. என்னடா இது ன்னு கேட்டதும்... என்ன சொன்னானுங்க தெரியுமா!.. "
" என்ன சொன்னானுங்க?.. "
" விலையை அடிச்சி நொறுக்கிட்டானுங்களாம்!.."
அக்கா வாய் விட்டு சிரிக்க அருகில் இருந்த அடுக்கு முறுக்குகளால் நிறைந்து கொண்டிருந்தது..
" பசங்களுக்கு புதுத்துணி எடுத்துத் தரணுமே..ன்னு அப்பாவுக்குக் கவலை.. வாய்க்கு ருசியா பலகாரம் அமையணுமே..ன்னு அம்மாவுக்குக் கவலை.. பட்டாசு எல்லாம் வெடிக்கிறதுக்கு மழை இல்லாம இருக்கணுமே.. ன்னு பசங்களுக்குக் கவலை.. கையைக் கடிச்சிடாம முதல் எடுக்கணுமே.. ன்னு ஏவாரிகளுக்குக் கவலை.. விடியறதுக்குள்ளே சட்டையக் கொடுத்துடணுமே.. ன்னு துணி தைக்கிறவருக்குக் கவலை.. "
அக்கா சொல்லிக் கொண்டிருந்தாள்..
" விடியக்காலம் சுழியம் சுட்டு முடிச்சி ரெண்டு ஈடு இட்லி வைச்சிட்டு தலைக்கு எண்ணெய் வைச்சுக்கிற நேரத்தில மளிகைக் கடைய பூட்டிட்டு வருவாங்க தாத்தாவும் அப்பாவும் .. மூனு நாளா ஏவாரம் பார்த்த அலுப்பு அப்படியே தெரியும்.. ஒன்னுக்குப் போறதுக்குக் கூட நேரம் கிடைச்சிருக்காது.. "
அக்காவின் முகத்தில் முப்பதாண்டுகளுக்கு முந்தைய ரேகைகள்..
" ஐப்பசி அடமழை ஊத்திக்கிட்டு இருக்கும்.. ஓட்டு வீடு ஒழுகும்.. கரண்டு போனா எப்போ வரும்.. ன்னு தெரியாது.. ஈர விறகப் போட்டு ஊதி ஊதி அடுப்பு எரித்து எல்லாம் செய்வாங்க அம்மா.. துணைக்கு அப்பத்தா.. நாங்களும் கூடமாட ஒத்தாசை செய்வோம்.. "
" எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டு பாவாடை சட்டையப் போட்டுக்கிட்டு தீப தரிசனம் செஞ்சுட்டு திண்ணையில வைச்சி நம்ம வீட்லருந்து, டமார்.. ன்னு முதல் வெடியப் போட்டதும் அப்பத்தா முகத்திலயும் அம்மா முகத்திலயும் ஒரு சிரிப்பு வரும் பாரு... அந்த சிரிப்புக்காகவே தவங்கிடக்கலாம்.. "
அக்காவின் கண்கள் கடந்த கால நினைவுகளுடன் ததும்பியிருந்தன..
" என்னக்கா செய்றது.. எங்க வீட்லயும் ஒரு தடவை நூறு ரூபாயில தீவாளி கொண்டாடி இருக்கிறோம்.. "
" இவ்வளவு காலம் கஷ்டப்பட்டுட்டு நல்லா இருக்குற நேரத்தில நாம மட்டுந்தான்.. ங்கறது தான் வாழ்க்கை!.. "
விழியோரத்தைத் துடைத்துக் கொண்ட அக்கா முத்தாய்ப்பாகச் சொன்ன போது - முறுக்கு பிழியும் வைபவத்தை சுபமாக நிறைவேற்றியிருந்தாள் தாமரை..
" இந்த வருசம் வேற என்ன என்ன அக்கா?.. "
" ரவா லாடு, பாசிப் பருப்பு உருண்டை, பால்கோவா, சேவு, இதோ இந்த முறுக்கு, காலைல சுழியம், வடை, இட்லி, சட்னி அவ்வளவு தான் தீபாவளி!.. "
" எங்க வீட்ல கேரட் அல்வா, தேங்காய் பர்பி, ஓமப்பொடி, முறுக்கு.. காலைல சுழியன், பஜ்ஜி, இட்லி சாம்பார்.. இவ்ளோ தான்.. மூனு பேருக்கு இதுவே அதிகம்.. பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கலாம்.. ன்னா ஒரு பக்கம் இதெல்லாம் எங்களுக்கு ஆகாது.. ம்பாங்க... இன்னொரு பக்கம் நம்மள மாதிரியே எல்லாம் செஞ்சிக்கிட்டு நாங்கள்.. லாம் நீங்க.. இல்லே.. ம்பாங்க.."
" போங்க அக்கா மனசு விட்டுப் போச்சு.. நாம நம்ம வரைக்கும் இருந்துக்க வேண்டியது தான்!.. "
" அந்தக் காலத்து.. ல தெருவுக்கே செய்யணும்.. ன்னு சொல்லுவாங்க அப்பத்தா!... ஏழை பாழைங்க வாசலுக்கு வந்தா தட்டு நிறைய பலகாரமும் கையில ரெண்டு ரூபாயும் கொடுப்பாங்க.. அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.. இப்போ ஒவ்வொரு ஆளா வந்து நூறு கொடு.. எரநூறு கொடு.. ன்னு ஆர்ப்பாட்டம்.. எல்லாம் காலக் கொடுமை!.. "
சொல்லிக் கொண்டிருக்கும் போதே வானில், 'கடகட.. ' - என்று இடியோசை..
" தூத்தலும் விடாது.. தூவானமும் விடாது.. நான் கெளம்பறேன்.. அக்கா!.."
அப்போது,
அக்கா வாளி ஒன்றை நீட்டினாள்..
கையில் வாங்கிக் கொண்ட தாமரை கேட்டாள்..
" என்னக்கா இது!.. "
" தீபாவளி பலகாரம்.. மாமா அத்தைகிட்டே கொடு.. காலைல புதுசு கட்டிக்கிட்டு மாமா அத்தை.. ய விழுந்து கும்பிட்டுட்டு இங்கே கிளம்பி வா.. "
" சரிங்க அக்கா.. நான் போய்ட்டு வர்றேன்!.. "
"சரிம்மா... கவனம்!.. "
தாமரை சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சடசட.. - என்று மழைத்துளிகள் இறங்கின..
" நல்லவேளை.. தாமரை இந்நேரம் வீட்டிற்குச் சென்றிருப்பாள்!... "
அக்காவின் மனதில் நிம்மதி..
***
அனைவருக்கும்
அன்பின் இனிய
தீபாவளி
நல்வாழ்த்துகள்
***