நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 28, 2014

ஆலய தரிசனம் - 2

நாளைக்கு வைத்தீஸ்வரன் கோயில். அப்படியே திருக்கடவூருக்கும்!..

- என்று என் மனைவி சொன்னபோது -  இரவு மணி பத்தரை.

விடிந்த பொழுது நவம்பர் பதினொன்றாம் நாள் - செவ்வாய்க்கிழமை.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து  முடித்து - வீட்டில் விளக்கேற்றி வணங்கி விட்டு வாசலுக்கு வந்தால் - எதிரில் கும்பகோணம் செல்லும் பேருந்து!..


பேருந்தில் கூட்டம் அதிகமில்லை. அது ஏழரை மணியளவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் முன்பாகவே - மோதிலால் தெரு முனையிலேயே - எங்களுக்காக நின்று கொண்டிருந்தாற்போல மாயூரம் செல்லும் பேருந்து!..

அந்த பேருந்திற்கு மாறி பயணம் தொடர்ந்தது.


காலை ஒன்பது மணிக்கெல்லாம் - மயிலாடுதுறை!..

பேருந்து உள்ளே நுழைந்ததும் வலப்புறம் ஒரு பழைமையான உணவகம்.

நல்ல சுவையான இட்லி, சட்னி, சாம்பார் - காபி. காலைச் சிற்றுண்டி ஆயிற்று.

அந்தப் பக்கம் போனால் சீர்காழி பஸ் நிற்கும். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு டிக்கெட் எடுத்து விடலாம்!..

இவ்வளவு தூரம் வந்தாயிற்று. முதலில் மயூர நாதர் கோயிலுக்குபோகலாம். அப்புறமாக வைத்தீஸ்வரன் கோயில்!..

மயூர நாதர் கோயிலா!?.. நேரம் ஆகி விடுமே!..

அதெல்லாம் ஆகாது. செவ்வாய்க் கிழமை அதுவுமாக வைத்தீஸ்வரன் கோயிலில் கூட்டமாக இருக்கும். கோயில் கதவு அடைக்க ஒரு மணி ஆகிவிடும். இன்னும் நேரம் இருக்கின்றது.

மாயூரத்தில கோயில் எங்கே இருக்கு என்று தெரியுமா?..

தெரியுமாவா!.. நான் ஏற்கனவே வந்திருக்கின்றேன். அதோ தெரிகிறதே மணிக்கூண்டு அதுக்கு  தெற்காலே கொஞ்ச தூரம் நடந்தா அங்கே ஒரு பிள்ளையார் கோயில். அதிலேயிருந்து நேரா கிழக்கே போனா - மயூரநாதர் கோயில்!.. அவ்வளவு தான்!..

இப்படிச் சொல்லிவிட்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து -

இடப்புறம் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ பிரசன்ன மாரியம்மனை கண்ணாரக் கண்டு தொழுதோம்.  பேசும் தெய்வம் அவள்!..

சந்நிதியை வலம் வந்து வணங்கினோம்.

அப்போது தான் திருக்கோயிலைக் கழுவி விட்டிருந்தனர். வேப்ப மரத்தின் அருகில் விழுந்து வணங்க முடியவில்லை.

அம்பாளின் குங்குமத்துடன் நடந்த நான் - வழியில் எதிர்ப்பட்ட சிலரிடம்,

மயூரநாதர் கோயிலுக்குப் போற ரோடு இது தானே!.. - என்று கேட்டதும் என் மனைவியிடம் இருந்து சிரிப்பு!..

பெரிய கோயிலுக்குத் தானே!.. இப்படியே போயி - கிழக்கால திரும்புங்க.. கோயிலுதான்!.. - என்று வழி கூறினார் ஒருவர்.

கொஞ்சம் யோசித்தால் அவரே அழைத்துக் கொண்டு போய் விடுவார் போலிருந்தது. அவ்வளவு அன்பு வார்த்தைகளில்!..

கோயிலுக்கு வழி தெரியும் - ந்னு சொல்லிட்டு எதுக்கு விசாரிப்பு எல்லாம்!..

அதுவா?.. இருபத்தைந்து வருஷத்துக்கு அப்புறம் நான் இங்கே வருகிறேன்.. அன்றைக்கு வீதியெல்லாம் ஓட்டு வீடும் திண்ணையுமா இருந்தது. இன்னைக்கு எங்கே பார்த்தாலும் முகத்திலடிக்கிற மாதிரி கண்ணாடி வைத்த கட்டிடமா போச்சு. அதுதான் கொஞ்சம் குழப்பம். அப்போ மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் தான் அதிகம். இப்போ தலை தெறிக்கிற வேகத்தில காரும் பைக்கும் தான் சாலையில்!.. ஓரத்தில் கூட ஒதுங்கி நடக்க முடியவில்லை.

மயிலாடுதுறையின் மாற்றத்தைப் பேசிக் கொண்டே  - மயூரநாதர் திருக் கோயிலின் வடக்கு வாசலுக்கு வந்து விட்டோம்.

இப்படியே போகலாம் தானே!..

போகலாம் தான்!.. ஆனாலும் கிழக்கு வாசல் வழியாகப் போறது தான் நல்லது.

மேலும் சிறிது தூரம் நடந்து  - வலப்புறம் திரும்பியதும் மதிலை ஒட்டியவாறு யானை மண்டபம்.

முகத்தைத் திருப்பியபடி ஏதோ யோசனையில் இருந்தது யானை!..


திருக்கோயிலின் வாசலில் பெரிதாக பந்தல். அலங்கார தோரணங்கள்..

என்ன திருவிழா நடக்கின்றதா!..

பின்னே!.. ஐப்பசி மாதம் அல்லவா!.. துலாஸ்நானம். முடவன் முழுக்கு வரை ஜே.. ஜே-ன்னு நடக்கும். இங்கே அது தானே விசேஷம். அம்பாள் மயிலாக வந்து தவம் பண்ணின இடம். ஈஸ்வரன் தானும் மயிலாக வந்து அம்பாளுடன் நடனம் ஆடினதால் மயூரநாதர் அப்படின்னு பேர் - தெரியுமா!..

அதுதான் எனக்குத் தெரியுமே!..  - உற்சாகமாக பதில் வந்தது.

இதோ.. திருக்கோயிலின் கிழக்கு வாசல். பிரம்மாண்டமான ராஜகோபுரம்.


ராஜகோபுரத்தின் காவல் நாயகன் - ஸ்ரீ தங்க முனீஸ்வரர்.

இஷ்ட தெய்வத்தின் முகம் கண்டதும் கஷ்டங்கள் கரைந்தது போலிருந்தது.

ராஜகோபுரத்தின் மாடத்தில் கண் காணும்படிக்கு -
ஸ்ரீநந்திகேஸ்வரரும் அவர்தம் தேவி ஸ்ரீசுயம்பிரகாஷினியும் ஸ்ரீ பைரவரும் புடைப்புச் சிற்பமாகத் திகழ்ந்தனர்.

திருப்படியைத் தொட்டு வணங்கி விட்டு திருக்கோயிலினுள் நுழைந்தோம். 



இரு வரிசையாக பச்சைப் பசேலென நீண்டு உயர்ந்த மரங்கள். மேக மூட்டமான  சூழ்நிலையில் குளுமையாக  இருந்தது.

இடப்புறமாக திருக்குளம். நீரின் நடுவில் நந்தி மண்டபம். இறங்கி தீர்த்தத்தினைத் தலையில் தெளித்துக் கொண்டு சந்நிதி நோக்கி நடந்தோம். 

காதுகளில் தேன் பாய்ந்ததைப் போல - ஓதுவார்களின் தேவார பாராயணம்.

இரண்டாவது திருவாசலைக் கடந்தால் நந்தி மண்டபம். கொடிமரம்.

திரளான பக்தர்கள்.. நந்தியின் அருகில் வயது முதிர்ந்த சிவனடியார்கள் வரிசையாக அமர்ந்திருக்க - அவர்களை வணங்கி அன்பர்கள் ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர். 

அந்தப் பெரியோர்களும் மனங்குளிர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவாறு திருநீறு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.. 

நானும் என் மனைவியும்  - நந்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த பெரியோர்களை வணங்கினோம். பழுத்த சிவனடியார்களுடன் அம்மையார் ஒருவரும் இருந்தார். மங்கலகரமாக ஆசி கூறி விபூதி அணிவித்தார்கள். 

அப்போது தான் கவனித்தேன் - சிவனடியார்கள் அங்கே கூட்டு வழிபாடாக, சின்னஞ்சிறிய லிங்கங்களை வைத்து  சிவபூஜை செய்திருந்ததை.

அந்த வேளையில் அன்பர்கள் சிலர் - சிவனடியார்கள் அனைவருக்கும்  துண்டு அணிவித்து சிறப்பு செய்தனர்.

என்ன விசேஷம்?.. -  என்று வினவினேன்.

இன்னிக்கு அஞ்சாம் திருவிழா. மயிலம்மா பூஜை செஞ்ச நாள்!..

எங்களுக்கு மேனி சிலிர்த்தது. என்னே ஒரு பேறு!.. 

மகிழ்ச்சியில் திக்கு தெரியாமல் போனது மனதிற்கு!.. கண்கள் கசிந்துருகின. ஆனந்தப் பரவசத்தில் ஓரிரு நிமிடங்கள் சிலையாகி விட்டேன்.

மீண்டு வந்த பொழுதில் - சிவனடியார்கள் - பூஜை செய்த நிர்மால்யங்களை விசர்ஜனம் செய்து கொண்டிருந்தனர்.

எனக்கு சற்றே வருத்தம். ஒரு இனிய நிகழ்வினைப் படம் எடுக்கத் தவறி விட்டோமே என்று!..

மனைவியிடம் சொன்னேன். 

ஆமாம்.. நீங்கள் கண்ணில் கண்டதற்கெல்லாம் இங்கும் அங்கும் ஓடுவீர்கள்.. முக்கியமானதை கோட்டை விட்டு விடுவீர்கள்!..

அதிகார நந்தி - அமைதியாக இருந்தார்.

அவரை வணங்கியபடி சந்நிதிக்குள் நுழைந்தோம்.


அம்பிகை மயிலாக வழிபட்டதிருத்தலம். அம்பிகையின் அன்பினைக் கண்டு மகிழ்ந்த ஐயன் அவளுடன் தானும் மயிலாக மாறி ஆடிக் களித்த திருத்தலம்.

ஐயனின் திருத்தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படுகின்றது.

அது கண்டு நான்முகன் இந்திரன் ஆகியோருடன் தேவகுரு பிரகஸ்பதியும் அகத்திய மகரிஷியும் கங்கையும் காவிரியும் வணங்கி வழிபட்ட திருத்தலம்.

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே!..(1/38)

- என்று ஞானசம்பந்தப் பெருமானும்,

நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.!..(5/39)

- என்று திருநாவுக்கரசு சுவாமிகளும் - பாடிப்பரவிய திருத்தலம்.

காசிக்குச் சமமான ஆறு திருத்தலங்களுள் இதுவும் ஒன்று.

மற்ற ஐந்து  - திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, சாயாவனம்,  ஸ்ரீவாஞ்சியம் - என்பன.

காவிரித் தென் கரையில் முப்பத்தொன்பதாவது திருத்தலம் - மாயூரம்.
திருமூலஸ்தானத்தினுள் அருட்பெருஞ்சோதியாக ஐயன் மயூரநாதன்!..

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..
இமைப் பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!..

- என்று போற்றித் துதித்து வணங்கி நின்றோம். 

தீப ஆராதனை. ஆனந்த தரிசனம். திருநீறு தரித்துக் கொண்டு சந்நிதியை வலம் செய்தோம். 

திருச்சுற்றின் வடபுறம் தக்ஷிணாமூர்த்தியின் திருக்கோட்டத்துக்கு முன்பாக விநாயகர் எழுந்தருளியிருக்க - அருகில் குதம்பை சித்தர். 

சித்தர் பெருமான் இங்கே ஐக்கியமாகியிருக்கின்றார். பணிந்து வணங்கியபின் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தரிசனம்.

மேல் திருச்சுற்றில் லிங்கோத்பவருக்கு எதிரில் - ஸ்ரீ குமரகோட்டம்.

மூலஸ்தானத்திற்கு இணையாக கருவறையின் பின்னால் விளங்குகின்றது.

வயலூர் முருகன் சந்நிதியும் இப்படித்தான் திகழ்கின்றது.

எழில்வளை மிக்கத் தவழ்ந் துலாவிய 
பொன்னிநதி தெற்கில் திகழ்ந்து மேவிய 
இணையிலி ரத்னச் சிகண்டியூருறை பெருமாளே!..

- என்று அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி மகிழ்ந்த சந்நிதி..

ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் - திருமுருகனின் திவ்ய தரிசனம்.

மேலைத் திருச்சுற்றில் ஸ்ரீமஹாவிஷ்ணு
திருமுருகனின் சந்நிதிக்குப் பின்னால் - மேல் நடையில் ஸ்ரீ மஹாவிஷ்ணு திகழ்கின்றார். அவருக்கு அருகில் பஞ்சபூத சிவலிங்கங்கள் விளங்குகின்றன.

தென்புற திருக்கோட்டத்தில் ஆலிங்கன மூர்த்தி. 

கருணையுடன் மகிஷமர்த்தனி ஸ்ரீ துர்க்காம்பிகை. சண்டீசர் சந்நிதி.

அழகே உருவான நடராஜர் சந்நிதி. ஈசான்யத்தில் ஸ்ரீபைரவர். மற்றும் நவக்கிரங்கள்.

ஆண்டாண்டு காலமாய் ஐயனின் அடி தொழுத புண்ணியம் - ஆனந்தம் மனதில் ஊற்றெடுக்கின்றது.

மீண்டும் சந்நிதி கண்டு மயூர நாதனை மனங்குளிர வணங்கியபடி வெளித் திருச்சுற்றுக்கு வந்தோம்.




விசாலமான திருச்சுற்று. மிகவும் சுத்தமாக இருக்கின்றது திருக்கோயில்.

கொடிமரத்தடியில் நமஸ்கரித்து விட்டு - அம்பிகையின் சந்நிதியை நோக்கி நடந்தோம்.

இங்கே கிழக்கு நோக்கியவளாக - ஐயனின் இடப்புறம் திருக்கோயில் கொண்டு விளங்குகின்றனள்.

திருவையாற்றிலும் இப்படியே!.. அறம்வளர்த்த நாயகி  கிழக்கு நோக்கியவள்.

கோபுர வாசலைக் கடந்து உள்ளே நடக்கையில் மனம் விம்முகின்றது - இளங்கன்றென!.. 

மயிலம்மாள் என்பது செல்லப்பெயர். 
அபயாம்பிகை என அன்புடன் வழங்கப்படுகின்றாள். ஆயினும்,

அஞ்சொல் உமை பங்கன் என்பது - அப்பர் ஸ்வாமிகளின் திருவாக்கு.

அதனால் - அஞ்சொல்லாள் - குளிர்ந்த சொற்களை உடையவள் என்பது திருக்குறிப்பு.

அம்பிகை வலக்கரத்தில் கிளியினைத் தாங்கியவளாகத் திகழ்கின்றனள்.

ஆடி வெள்ளிக் கிழமைகளில் அம்பிகை காவிரி கரைக்கு எழுந்தருள்கின்றாள்.

திருக்கயிலையில், ஈசன் அம்பிகைக்கு வேத உபதேசம் செய்கையில் ஊடாகப் புகுந்தது மயில் ஒன்று. அப்போது அம்பிகையின் கவனம் மயிலின் மீது சென்றது.

விளைவு - அம்பிகை மயிலாக உருமாறி , கங்கையினும் புனிதமாகிய காவிரிக் கரையில்  - சிவபூஜை புரிந்தனள்.


அம்பிகையைப் பிரிந்திருக்க இயலாத பெருமான் - பிரியமுடன் தானும் மயிலுரு கொண்டு அவளுடன் ஆடிக் களித்தனன். அன்புடன் கூடிக் களித்தனன் என்பது ஐதீகம். 

அன்னையின் அழகு தரிசனம் கண்டு நெஞ்சம் ஆனந்தக் கடலாக ஆர்ப்பரித்தது.

அவளுடைய கடைக்கண்கள் அனைத்தையும் அள்ளி வழங்கியதாக உணர்வு!..

அணி மயிலென வரும் அம்பிகை போற்றி!..
பிணி வினை தீர்க்கும் அஞ்சொல்லாள் போற்றி!..

- எனத் துதித்தவாறு வலஞ்செய்து வணங்கினோம்.

காமகோட்டத்தின் சுவர்களில், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய அபயாம்பிகை சதகம் பதிக்கப்பட்டுள்ளது.

திரும்பவும் நந்தி மண்டபம். கொடிமரம். அங்கே -

ஐந்தாம் நாளின் வீதியுலாவிற்காக - ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.

அங்கிருந்த சிவாச்சார்யார் ஒருவரிடம்  தயக்கத்துடன்,  புகைப்படம் எடுக்கலாமா?.. - என்று கேட்டேன்.

எடுத்துக் கொள்ளுங்கள்!.. - என்று புன்னகைத்தார்.

அந்தப் படங்கள் மூன்றும் இதோ!..




ஐயனுக்கு பூத வாகனமும் அம்பிகைக்கு பூதகி வாகனமும் தயாராக இருந்தன.

அங்கேயே - திருக்கோயிலில் - இன்னும் கொஞ்ச நேரம் இருக்க ஆசைதான்.
ஆனாலும், பத்து மணிக்கு மேலாகி விட்டது.

மீண்டும் நெஞ்சார வணங்கி விட்டு புறப்பட்டோம்.

சாலைக்கு வந்ததுமே - புதிய பேருந்து நிலையம் வரைக்கும் செல்லும் அருகில் வந்து நின்றது பேருந்து.

புதிய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து அந்த சிறிய கடைத்தெரு வழியே நடந்தால் - வழி நெடுக பச்சைப் பசுங்காய்கறிகள்!.. பழங்கள்!..

மறக்க இயலாத நகரம் மயிலாடுதுறை.

மண் மணம் மாறாத வண்ணம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் இந்நகரைச் சுற்றிலும் பல திருக்கோயில்கள் விளங்குகின்றன!..


திருமதி பக்கங்கள் எனும் இனிய தளம்..

அதில் நல்ல பல விஷயங்களைப் பதிவிடும் - அன்புக்குரிய கோமதி அரசு அவர்கள் மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் வேறு ஏதோ ஒரு ஊர் என்று தான் எண்ணியிருந்தேன்.

ஆனால் - அவர்கள் மயிலாடுதுறையில் தான் இருக்கின்றார்கள் என்பது சில தினங்களுக்கு முன் தான் தெரிய வந்தது.

முன்பே அறிந்திராமையால் அவர்களைச் சந்திக்க இயலவில்லை..

வேறொரு இனிய வேளையில் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை எல்லாம் வல்ல எம்பெருமான் அருள்வாராக!..

பேருந்து நிலையத்தில் மீண்டும் ஒரு அருமையான காபி!..

வைத்தீஸ்வரன் கோயில் செல்லும் பேருந்து -  வா.. வா!.. - என்றது.

வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் திருக்கடவூர் தலங்களைத் தரிசனம் செய்து விட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்த போது மாலை - 6.30.

ரயில்வே ஸ்டேஷனுக்கு சற்று முன்பாக எப்போதும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தேநீர் கடையில் வடையும் டீயும் அருமையாக இருந்தன.

அங்கிருந்து தஞ்சாவூர் பாசஞ்சர் புறப்பட்ட போது இரவு - 7.45.

இரவு பத்து மணியளவில் வீட்டை அடைந்து கணிணியைத் திறந்தால் - Facebook - ல், அன்றைய தினம் மயிலாடுதுறையில் ஸ்வாமி எழுந்தருளிய திருக்காட்சி.

அத்துடன் முந்தைய  நாள் எழுந்தருளிய திருக்கோலங்களும்!..

அந்த நான்கு படங்களும் இதோ!..





எங்கோ - எவரோ விரும்பி தேர்வு செய்திட  - எனக்கு படங்கள் வந்திருந்தன.

அனுப்பியவர் யாரென்று தேடினேன். கடல் கடந்த முகவரியைக் காட்டியது.  

திருவிழாக்களை முழுமையாகத் தரிசனம் செய்ய இயலவில்லையே என்ற ஏக்கம் எங்கள் மனதிற்குள் இருந்தது.

எல்லாம் அறிந்த எம்பெருமான் - ஏதோ ஒருவழியில் இனிதே திருக்காட்சி நல்கினன்.

என் மகனையும் மனைவியையும் அழைத்துக் காட்டினேன்.

எம்மைத் தொடர்ந்து வரும் ஈசனின் செயலன்றி வேறொன்றால் ஆவது ஏதுமில்லை!.. - என்று இறைவனின் கருணைக்குள் ஆழ்ந்தோம்.

அந்த அளவில் மனம் மகிழ்வாக இருக்கின்றது.
அதற்கு மேல் வேறெதுவும் தேவையாய் இருக்கவில்லை.

துலா ஸ்நானம் - பழைய படம்
வைத்தீஸ்வரன் கோயில் - திருக்கடவூர்  தலங்களின் தரிசனம் விரைவில்!..

ஐயனும் அம்பிகையும் அருள்மழை பொழிய
மீண்டும் வணங்குகின்றேன்..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

புதன், நவம்பர் 26, 2014

அண்ணாமலை

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!..
கண்ணார் அமுதக் கடலே போற்றி!..


திரு அண்ணாமலையில் தீபக் கார்த்திகைத் திருவிழா..

நம்முடைய தொன்மையான திருவிழாக்களுள்  தீபத்திருவிழாவும் ஒன்று!..

இந்த கார்த்திகை தீபத் திருநாளே தமிழகத்தின் தீபாவளி!..

தீபாவளி எனில் - நரகாசுரனை வீழ்த்திய நாள் என்ற அர்த்தத்தில் அல்ல!..

தீபாவளி என்பது வடமொழிச் சொல் .

தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை எனப் பொருள்.

நாமாவளி எனும் போது இறைவனின் திருப்பெயர்களின் வரிசை எனப் பொருள் கொள்கின்றோம் அல்லவா!..

அதைப் போல -
தீபாவளி எனில் தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுதல் என்பதாகும்.

இந்த தீபாவளி எனும்  தீப வரிசைக்குள் -  காலத்தின் கோலத்தால் பின்னாளில் நரகாசுரன் வந்து புகுந்து கொண்டான்.  

ஆயினும் - விளக்கீடு எனும் இத் திருநாள் - 
சங்கத் தமிழ்ப்பாடல்களில் காணப்படும் தொன்மையினை உடையது.
 
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
(2/47)

திருமயிலையில் - சிவநேசன் செட்டியாரின் மகள் பூம்பாவையை அஸ்திக் குடத்திலிருந்து எழுப்புதற்கு இசைத்த திருப்பதிகத்தில் கார்த்திகை விளக்கீடு எனக் குறிக்கின்றார் - ஞானசம்பந்தப் பெருமான்.

இந்த கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நன்னாள்.


கார்த்திகை நாளின் மாலைப் பொழுதில் -  
தம் இல்லத்திலும் திருக்கோயில்களிலும் அகல் விளக்குகளை  அழகுற ஏற்றி வைத்து ஆராதனை செய்வதைப் பெரும் பேறெனக் கொள்வர்.  

அணிதிகழ் அகல் விளக்கொளியில் அகமும் புறமும் மகிழ்வுறும் அற்புதத் திருநாள்.

இந்த நன்னாள், எதிர்வரும் 05-12-2014. வெள்ளிக்கிழமை கூடி வருகின்றது. 

திருக்கார்த்திகைத் திருநாள் -  பூவுலகில் அக்னி மலையாகத் திகழும் அண்ணாமலைக்கே உரித்தானது.

திருக்கார்த்திகை நாளினை பத்தாம் திருவிழாவாகக் கொண்டு அருணாசலம் எனப்படும் அண்ணாமலையில் இன்று கோலாகலமாகக் கொடியேற்றம் நிகழ்கின்றது.


எண்ணற்ற பெருமைகளுடன் திகழும் திருத்தலம்  - திரு அண்ணாமலை.

ஈசன் மலை வடிவாகத் திகழ்கின்றனன் என்பர் பெரியோர்.

அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப்பெருமானும் பாடிப் பரவிய திருத்தலம்.

மாணிக்கவாசகப் பெருமான்  போற்றித் துதித்த திருத்தலம்.

எத்தனை எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்த திருத்தலம்.

இன்னும்  - வாழ்ந்து கொண்டிருக்கும் திருத்தலம்.

வாழ்வில் - தடம் மாறிச் சென்றதால் தடுமாறித் தவித்த அருணகிரி - தமிழ்க் குமரனின் திருவருளால் மீண்டும் தலை நிமிர்ந்து துலங்கி நின்ற திருத்தலம்.

அருணகிரி நாதர் என - அமுதத் தமிழில் திருப்புகழ் மொழிந்த திருத்தலம்.

இன்னும் அறியப்படாத எண்ணற்ற ரகசியங்களுடன்  - 2668 அடி உயரத்துடன் திகழும் அண்ணாமலையைச் சுற்றிலும் பல்வேறு தீர்த்தங்களும் சந்நிதிகளும் விளங்குகின்றன.

அவற்றுள் அஷ்ட லிங்க சந்நிதிகளும் அடி அண்ணாமலை திருக்கோயிலும் வெகு சிறப்பானவை.

அண்ணாமலையின் கிரிவலப் பாதை 14 கி.மீ. சுற்றளவினை உடையது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதை லட்சக் கணக்கான பக்தர் பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். 

திருஅண்ணாமலையை வலம் வருவது பெரும் புண்ணியம் எனப்படுகின்றது.


இத்திருத்தலத்தில் - திருக்கார்த்திகைத் திருவிழாவின் தொடக்கமாக -

23/11 அன்று அண்ணாமலையின் காவல் நாயகி ஆகிய ஸ்ரீதுர்காம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன. அன்றிரவு - ஸ்ரீ துர்காம்பிகை காமதேனு வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள். 

24/11 அன்று திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் உற்சவ வழிபாடுகள் நிகழ்ந்தன. அன்றிரவு ஸ்ரீபிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள்.

அதன் பின் 25/11 அன்று விநாயகப்பெருமானுக்கு உற்சவ வழிபாடு நடத்தப் பெற்று ஸ்வாமி மூஷிக வாகனத்தில் திருவீதி எழுந்தருளினார். 

இன்று (26/11) கார்த்திகைத் திருவிழாவின் முதல் நாளாக காலை 6.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் திருக் கொடியேற்றம். 

அண்ணாமலையாரின் திருக்கோயிலின் 72 அடி உயர கொடிமரத்தில் ரிஷபக் கொடியேற்றப்படுகின்றது. 


முதல் திருநாள் - 26/11 - புதன் கிழமை
காலை - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் - வெள்ளி விமானங்கள்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்.
ஸ்வாமி - வெள்ளி அதிகார நந்தி வாகனம். அம்பாள் - ஹம்ஸ வாகனம்.

இரண்டாம் திருநாள் - 27/11 - வியாழக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - சூர்ய பிரபை.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி இந்திர விமானங்கள்.

மூன்றாம் திருநாள் - 28/11 - வெள்ளிக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - பூத வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி அன்ன வாகனம்.

நான்காம் திருநாள் - 29/11 - சனிக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - நாக வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம்.

ஐந்தாம் திருநாள் - 30/11 - ஞாயிற்றுக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி ரிஷப வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரிஷப வாகனம்.

ஆறாம் திருநாள் - 01/12 - திங்கட்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி யானை வாகனம்.
அறுபத்து மூவர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரதம், வெள்ளி விமானம். 

ஏழாம் திருநாள் - 02/12 - செவ்வாய்க்கிழமை
காலை ஆறு மணிக்கு மேல் ஏழு மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல்.
பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். மகா ரதம். திருத்தேரோட்டம்.

எட்டாம் திருநாள் - 03/12 - புதன் கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி விமானம்.
மாலை நான்கு மணிக்கு பிக்ஷாடனர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். குதிரை வாகனம்.

ஒன்பதாம் திருநாள் - 04/12 - வியாழக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி விமானம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். 
கையிலாய திருக்கோலம். காமதேனு வாகனம்.


பத்தாம் திருநாள் - 05/12 - வெள்ளிக்கிழமை
அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்.
மாலை அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி திருநடனம்.
மாலை ஆறு மணிக்கு திருக்கார்த்திகை - ஜோதி தரிசனம்.
இரவு - தங்க ரிஷப வாகனம்.

06/12 - சனிக்கிழமை
அதிகாலை சந்திரசேகரர் கிரிவலம் எழுந்தருளல்
இரவு - தெப்ப உற்சவம்.

07/12 - ஞாயிற்றுக்கிழமை
இரவு - அம்பாள் தெப்ப உற்சவம்.

08/12 - திங்கட்கிழமை
இரவு - சுப்ரமணியர் தெப்ப உற்சவம்.

09/12 - செவ்வாய்க்கிழமை
இரவு - விநாயகர் - வெள்ளி மூஷிகம். சண்டிகேஸ்வரர் -  வெள்ளி ரிஷபம்.  

தீபத் திருவிழாவினை முன்னிட்டு - நகர் முழுதும் விழாக் கோலம் கொண்டுள்ளது. அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம் ஒளிமயமாக விளங்குகின்றது. 

ஒன்பது திருக்கோபுரங்களும் தங்கக் கொடிமரமும் சந்நிதிகளும் தல விருட்சமான மகிழ மரமும் பல வண்ண மின் விளக்குகளால் ஒளிர்கின்றன. 


தேடி நின்ற நான்முகனும் திருமாலும் அறியும் வண்ணம்  - லிங்கோத்பவராக அடிமுடி அறிய இயலாதபடி ஜோதி வடிவாக ஈசன் வெளிப்பட்ட திருத்தலம். 

நினைக்க முக்தி தரும் திருத்தலம்.
பஞ்ச பூதத் திருத்தலங்களுள் அக்னி ஸ்வரூபம்.

தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் சிற்றம்பலத்தில்  ஸ்ரீநடராஜர் விளங்குவது போல - 

திருக்கோஷ்டத்தில் லிங்கோத்பவராக அண்ணாமலையார் விளங்குகின்றார்.

தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற நடுநாட்டுத் திருத்தலங்கள் இருபத்து இரண்டனுள் தலையாயது  - திருஅண்ணாமலை.

ஐயன் - அருணாசலேஸ்வரர், அண்ணாமலையான்
அம்பிகை - அபிதகுஜாம்பாள், உண்ணாமுலையாள்
தலவிருட்சம் - மகிழ மரம்.
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்.
திருத்தலப் பெருமை - கணக்கற்றவை.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே!.. (1/10)
ஞானசம்பந்தப் பெருமான்.

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கை தொழ
ஓடிப் போகும் நமது உள்ள வினைகளே!.. (5/5)
அப்பர் ஸ்வாமிகள்.
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

திங்கள், நவம்பர் 24, 2014

நல்வாழ்த்துக்கள்

நேற்று இரவு, தகவல் அறிந்ததுமே - பரவசம்!..

அன்பு சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு விருது!..

தனித்தன்மையான படைப்பாற்றலுடன் - வலைத்தளத்தில் வலம் வரும் அன்பின் ஜெயக்குமார் அவர்கள் -

கடந்த 14/11 முதல் 23/11 வரை தஞ்சையில் நடைபெற்ற ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ் சார்பில் நடைபெற்ற ஆறாவது புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாளில் நடைபெற்ற படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா எனும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டுள்ளார். 


தமிழக முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் திருமிகு S.N.M. உபயதுல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில்,

முன்னாள் மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர் திருமிகு S. S. பழனி மாணிக்கம் அவர்கள், 

''மண்ணின் சிறந்த படைப்பாளி''

- எனும் விருதினை வழங்கி சிறப்பித்துள்ளார்.

தஞ்சை மண்ணின் சிறந்த படைப்பாளி!.. - என சிறப்பிக்கப்பட்டுள்ள அன்பின் சகோதரர் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!..


பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால் உருவாக்கப்பட்டது - கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

சங்கத்தின் கல்வி நிலையங்களுள் ஒன்றாக விளங்குவது உமாமகேசுவரனார் மேல்நிலைப் பள்ளி!..

பெருமைக்குரிய அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர் -

அன்பின் ஜெயக்குமார் அவர்கள்!.. 

கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள், விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன் எனும் நூல்களுடன் தனது வலைப் பூக்களைப் பற்றியும் எழுதி வெளியிட்டுள்ள  - ஜெயக்குமார் அவர்கள், 

கடந்த 26/10 அன்று மதுரையில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பு விழாவின் போது கரந்தை மாமனிதர்கள் எனும் நூலையும் வெளியிட்டு மகிழ்ந்தார்.

மறக்கக் கூடாத மாமனிதர்களைத் தேடி - 
அவர்களைப் பற்றிய அரிய விஷயங்களை -  
இளம் தலைமுறையினருக்காகப் பதிவு செய்து அளித்திருக்கும் நூல் - 

கரந்தை மாமனிதர்கள்!..
 

அன்புச் சகோதரர் அவர்களே!.

அன்பினால் என்னைக் கட்டிப் போட்டவர்களுள்  - தாங்களும் ஒருவர்.

புன்னகை!..
அது ஒன்றைத் தவிர வேறொன்றையும் தங்கள் முகத்தில் நான் கண்டதே இல்லை!..

புத்தகத் திருவிழா - 2013
தங்களுடைய தேடல் - மிகவும் வியப்புக்கு உரியது.

தங்களுடைய வலைத் தளத்தில் தனித்துவமான கைவண்ணத்தில் -
படிப்பவர் கண்முன்னே, உலகின் சாதனையாளர்கள் பலரையும் -
நிறுத்திய பெருமைக்கு உரியவர் - தாங்கள்!.

கண்ணகியின் அடிச்சுவடுகளைத் தேடி நடந்த -


கண் பார்வையை இழந்து சாதனையாளராக விளங்கும் திரு. வெற்றிவேல்..

நாளைய கணிதத்தை நேற்றே கண்ட -

பாவேந்தரின் நினைவினைப் போற்றிய -


ஆயுதமேந்திய இயக்கத்தினரின் கொடூரத்தால் கைகளை இழந்த -

வரலாறு என்னை விடுவிக்கும் நாடுதான் பெரிது என வாழ்ந்து வரும் -


மணிப்பூரின் வீரப்பெண்மணி -

வெள்ளிப் பனி மலையின் மீது நடந்தே சர்வே செய்த நயின் சிங் ராவத் -

செய்யும் தொழிலே தெய்வம் என ஓடோடி வந்து உதவும் -

பார்வையற்றவர்களுக்கென உதித்த பகலவன் -

 படிக்காத மேதை -

தேவதாசி எனும் கொடுமையிலிருந்து பெண்களை மீட்க வந்த -

தமிழுக்காக வாழ்ந்து தமிழ் மண்ணிலேயே தலை சாய்த்த -

பகுத்தறிவுப் பகலவனுக்கு - பெரியார் எனும் பட்டத்தை வழங்கிய -

மடமையைக் கொளுத்துவோம் எனப் பொங்கியெழுந்த - 

காந்திஜி மேலாடையைத்  துறந்த போது -
மேலாடையை மட்டுமல்லாமல் பொறியாளர் பணியையும் துறந்த  -


முதல் ஜனாதிபதி  மற்றும் செக்கிழுத்த செம்மல் ஆகியோரைப் போற்றிய -

பதினாறாவது வயதில் விடுதலைக்காக இன்னுயிர் துறந்த வீரத்தமிழச்சி -

எங்களைப் புத்தகத்தையும் பேனாவையும் எடுக்க விடுங்கள் என முழங்கிய

விண்ணில் கரைந்த - 

தனக்குக் கல்வி பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களைப் புகழ்ந்துரைத்த -

- எனும் தங்களுடைய பதிவுகள் - என்றும் நினைவில் நிற்பவை.

இவையெல்லாம் - ஒரு முதற்குறிப்புக்காகத் தான்!.. 

தங்களுடைய வலைத் தளத்தில் - 
மாதுளை முத்துக்களாய் இன்னும் அருமையான பல பதிவுகள்!..


மாவீரன் சே குவாராவின் தியாக வரலாறு கருங்கல்லையும் கரைய வைக்கக் கூடியது.

அப்படியிருக்க - நான் எம்மாத்திரம்?.. 


- என, தாங்கள் வழங்கிய பதிவினைப் படிக்கும்போதே - மனம் கலங்கிக் கண்ணீர் வடித்தேன். அந்த நாளை என்னால் மறக்கவும் கூடுமோ!?..


குடும்பத்துடன் இராமானுஜன் திரைப்படத்தினைப் பாருங்கள். திரைப்படம் முடிவதற்குள், ஒரு சொட்டு - ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர் உங்களுடைய விழிகளில் இருந்து, எட்டிப் பார்க்குமேயானால், 

அதுவே அந்த மாமேதைக்கு நீங்கள் செலுத்தும் உண்மை அஞ்சலியாகும்.

இது -

கணிதமேதை இராமானுஜன் அவர்களைப் பற்றி வெளிவந்த திரைப்படத்திற்கு தாங்கள் வழங்கிய நற்சான்றிதழ்.

கணிதமேதை சீனிவாச ராமானுஜனைப் பற்றி தாங்கள் தேடித் தேடி எடுத்த பொக்கிஷங்களையும் அதற்கான பெருமுயற்சியையும் - 

இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கின்றது. 

தாங்கள்  கணிதமேதையைப் பற்றிய அரிய தகவல்களைத் தொகுத்த போது எளியேனும் ஒரு சிறு அணில் போன்று தங்களருகில் இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

நான் சில தினங்கள் தஞ்சையில் இருந்தும் - தங்களுக்கு விருது வழங்கிய விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போனது.

கடந்த (20/11) வியாழன்று தஞ்சையிலிருந்து புறப்படும் முன் - தங்களைச் சந்திக்க வந்தேன்.


பணிச்சுமைகளுக்கு இடையேயும் இன்முகம் காட்டி வரவேற்று அளவளாவி - தங்களது கரந்தை மாமனிதர்கள் எனும் நூலைப் பரிசளித்த அன்பு நெஞ்சத்தை, என்னால் எந்நாளும் மறக்க இயலாது.

இந்த அன்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிலைக்க 
அபிராமவல்லி அருள்வாளாக!..

தாங்கள் விருது பெற்ற செய்தி அறிந்து மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

இதோ  - அன்புக்குரிய Dr. B.ஜம்புலிங்கம் அவர்கள் கூறுகின்றார்.


தங்களின் பணிக்காக இத்தகைய விருது கிடைத்துள்ளது. பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. வலைப்பூவில் தாங்கள் தடம் பதிக்க நானும் துணையாக இருந்தேன் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது. தங்களின் முயற்சியும் அயராத உழைப்பும் நண்பர்களை அரவணைக்கும் பாங்கும் வாசிப்பின் மீதான ஆர்வமும் தங்களை இவ்வாறான பெருமைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இது ஓர் ஆரம்பமே. இன்னும் பல விருதுகளைப் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவ்வண்ணம் போல - இது ஓர் ஆரம்பமே!..


தாங்கள் - 
மேலும் பல விருதுகள் பெறுவதற்கு அன்புடன் வாழ்த்துகிறேன்.

தங்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தவர்களுக்கும் 
தங்களுக்கு வாழ்த்துரைக்கும் அன்பின் பதிவர்கள் 
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

வாழ்க நலம்!..
* * *

செவ்வாய், நவம்பர் 18, 2014

அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர் ஜங்ஷனில் அறிவியல் கண்காட்சி.

இந்தியாவை வலம் வரும் அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் தஞ்சை ஜங்ஷனில் நிறுத்தப்பட்டுள்ளது.


இன்றும் நாளையும் (18/11 மற்றும் 19/11)  நிறுத்தப்பட்டிருக்கும் இந்த சிறப்பு ரயிலில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியைக் கண்டு மகிழ மாணவ மாணவிகளும் பொதுமக்களும் இன்று காலை பத்து மணி முதல் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சை ஜங்ஷனில் அறிவியல் கண்காட்சி என அறிந்து - நானும் சென்றேன்..


இந்த அறிவியல் கண்காட்சி ரயில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையால் இயக்கப்படுகின்றது. 

இந்த அறிவியல் கண்காட்சி ரயிலின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் நீர் நில வாழ்விகளைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் விரிவான விளக்கப் படங்கள் நிறைந்திருக்கின்றன.

அவை மட்டுமல்லாமல் - ஒளி ஒலி காட்சிகளும் தொடுதிரைகளும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அரங்கிலும் வழிகாட்டுதலாக - ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் தெளிவான விளக்கங்களையும் வழங்குகின்றனர்.




இந்தியாவில் நீரிலும் நிலத்திலும் வாழும் புழு பூச்சிகளின் வகைகளும் அவற்றின் வாழ்வியலும் தனித்தனி அரங்குகளில் வண்ணமயமாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஊர்வன பறப்பன மற்றும் பலவகையான விலங்குகளின் அழகான படங்களும் அவற்றின் வடிவமைப்புகளும்  இடம் பெற்றிருக்கின்றன.

இமய மலை சார்ந்த பகுதிகள், கங்கைச் சமவெளி, தக்காண பீடபூமி பற்றியும்,

அற்புதங்கள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியும் மற்றும் சதுப்பு நிலங்கள் இவைகளைப் பற்றியும்  

ராஜஸ்தான் பாலைவனத்திலும்  அஸ்ஸாம் நாகாலாந்து காடுகளிலும், 

அந்தமான் நிக்கோபார் - தீவுகளைச் சூழ்ந்துள்ள கடல்பகுதிகளிலும் - 

காணக் கூடிய உயிரினங்களைப் பற்றியும் கூட அறிந்து கொள்ள முடிகின்றது. 

அரிய வகை உயிரினங்கள் இந்தியாவில் காணப்படும் இடங்களும் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளும் விவரிக்கப்படுகின்றன.




பிளாஸ்டிக் பொருட்களினால் நிலத்தடி நீர் மாசு படுவது கூறப்படுகின்றது.

நிலத்தடி நீர் சேகரிப்பது பற்றியும் அழகான வடிவமைப்புகளின் மூலமாக விளக்கப்படுகின்றது.  

சுற்றுச்சூழல் மாசுபடுவது பற்றியும் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவது பற்றியும் விளக்கங்கள் கிடைக்கின்றன.

பல்லுயிர் பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்.

பல்லுயிர் வாழ்க்கை முறையும் அதன் அவசியமும் அதனைப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியமும் மாணவர்களுக்கு விளக்கப்படுகின்றது.

மாணாக்கர்களுக்கான அறிவியல் செயல் முறைக் கல்வியாக - ஆய்வகமும் அறிவியல் பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளன.

தஞ்சை மாநகரின் பொதுமக்களும்  மாணவ மாணவிகளும் - ரயிலில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியினைக் கண்டு மகிழ்கின்றனர்.  

கடந்த 2007ல்  தனது பயணத்தைத் தொடங்கிய இந்த அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் இது வரை 1,15,000 கி.மீ தூரத்தையும் 364 நிலையங்களையும் கடந்திருக்கின்றது.


இதுவரையிலும் - நாடு முழுதுமான பயணத்தில் - பொதுமக்கள், மாணவ மாணவிகள் என ஒருகோடியே இருபது லட்சம் பார்வையாளர்கள் வருகையளித்துள்ளனர்.

இந்த சிறப்பு ரயிலில் பதினாறு பெட்டிகள். முழுமையாக குளிரூட்டப்பட்ட இணைப்புப் பெட்டிகள் காட்சி அரங்கங்களாக விளங்குகின்றன.

பலவித உயிரினங்களின் அழகிய படங்கள் ஒட்டப்பட்டு வெள்ளை நிறத்தில் பொலிகின்றன ரயில் பெட்டிகள்..








காட்சி அரங்கங்களில்  படம் எடுப்பதும் செல்போன் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சியினைக் காண்பதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

இன்றும் நாளையும் (18/11 மற்றும் 19/11) தஞ்சை ஜங்ஷனில் நிறுத்தப்பட்டுள்ள அறிவியல் கண்காட்சியினை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.



அறிவியல் கண்காட்சி மிகவும் சிறப்பான தகவல்களுடன்  மாணவ மாணவிகளுக்கும் மற்றோர்க்கும் பயனுள்ளதாக இருக்கின்றது.

நேற்று (17/11) சேலத்தில் இருந்து இன்று தஞ்சை ஜங்ஷனில் இருக்கும் அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில் அடுத்து 20/11 மற்றும் 21/11 தேதிகளில் ஈரோடு செல்ல இருக்கின்றது.

மேலதிக விவரங்களை -

http://www.sciencexpress.in/

- எனும் தளத்தில் கண்டு மகிழ்க..

உற்சாகம் பொங்க -  மாணவ மாணவிகளுடன் நானும் ஒரு மாணவனாக கண்காட்சியைக் காண நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்தூறும் அறிவு.

வாழ்க நலம்!..
***