நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 31, 2024

தீபாவளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 14
வியாழக்கிழமை

தீபாவளிப் பண்டிகை

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள


இதோ தீபாவளி!.. 

பல வழிகளிலும் நாம் துயரருற்று 
உடலளவிலோ மனதளவிலோ 
 கஷ்டப்பட்டிருக்கின்றோம்..

எல்லாவற்றையும்
இந்நாளில் புறந்தள்ளி வைப்போம்..




நமது சந்தோஷம் நம்மோடு - என்றில்லாமல் நலிந்தோர்க்கும் மெலிந்தோர்க்கும் சற்றேனும் ஆதரவு காட்டி பண்டிகையைக் கொண்டாடுவோமாக!..

எல்லா வழிகளிலும் கவனமாக இருந்து தீபாவளி நாளை சிறப்பிப்போம்... 




தீபாவளி என்ற மகத்தான பண்டிகையை தீப ஒளித் திருநாள்  என்று - சிலர் அவர்களாகவே மாற்றி வைத்துக் கொண்டு -

டிவாலி,   டீ வாளி,  தீ வாளி என்றெல்லாம் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர் - ஊடக விளம்பரங்களில்.. 

அதிலே ஒரு அற்ப
மகிழ்ச்சி..  


1980  களில்  தீபாவளி நாளன்று    விடியற் காலையிலேயே திருச்சிராப்பள்ளி வானொலி -  மங்கல இசை முழக்கத்துடன் ஆன்றோர்களது அருளுரைகளை ஒலிபரப்பு செய்யும்..

அப்படியொரு நிகழ்வில்  வாரியார் ஸ்வாமிகளின் அருளுரையில் இருந்து தான் -

சிவபெருமானுக்குரிய எட்டு விரத நாட்களில் தீபாவளியும் ஒன்று.
 
தீபாவளி.. தீப 
ஆவளி எனில்  - தீபங்களின் வரிசை என்ற பெயர்க் காரணத்தையும் தெரிந்து கொண்டேன்.. 

ஆனால், சமீப காலங்களில்  - மக்களின் அதீத ஆர்வத்தினால்
மாமிச உணவுகளில் புரள்வதும் மதுப் புட்டிகளுடன் உருள்வதும் தான் தீபாவளி என்று பதிவாகிக் கொண்டு இருக்கின்ற்து..

தீபாவளி என்கின்ற இந்த வார்த்தை தீபமாலை என்று 
தேவாரத்தில் வருகின்றது..

அந்நாளில்  தீபமாலை எனும் தீபாவளி  - பெரும் திருநாளாக இல்லாமல் சாதாரண நிகழ்வாகக் கூட இருந்திருக்கலாம்..

யார் கண்டது!?.. 

ஆயினும்,
தீபமாலை என்ற சொல் தீபாவளியைக் குறிப்பதாக சான்றோர் சொல்கின்றனர் ..

எண் திசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலானோர் மகிழ்ச்சியுடன் எங்கும் சூழ்ந்து    விளக்குகளை மகிழ்ச்சியுடன் ஏற்றி வைத்து தூபம் இட்டு வழிபடுகின்ற திருவடிகளை உடைய சிவ பெருமான்  உறைகின்ற கொச்சை வயம் எனப்படுகின்ற சீர்காழி..








எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
  முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை இடுதூப மோடு
  பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வருநீர பொன்னி
  வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
  வளர்கின்ற கொச்சை வயமே.  2/83/4
திருஞானசம்பந்தர் 
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், அக்டோபர் 30, 2024

நினைவெல்லாம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 13
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க


நினைவெல்லாம் பகுதி தொடர்கின்றது..

எப்போதும் கலகலப்பாக இருக்கின்ற பத்தாம் வகுப்பு நிசப்தமாக இருந்த விந்தை..

வழக்குரை காதை:

சிலப்பதிகாரத்தின் இந்தப் பகுதி 
திரு. பால சுந்தரம் ஐயா அவர்களால்
நடத்தப்பட்ட போது வகுப்பறை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...


தேரா மன்னா!  செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோ னன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்து 
ஈங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே... 

ஆராய்வதற்கு அறியாத மன்னனே!
சொல்கின்றேன் கேள்.

எங்கள் நாட்டின் சக்கரவர்த்தி சிபி பறவை ஒன்றின் துன்பம் தீர்ப்பதற்காக தன் தசையையே அரிந்து
துலாக்கோலில் இட்டவன்.. 

எங்கள் நாட்டின் மாமன்னன்  மனுநீதிச் சோழன் பசுவின் துயரத்தைத் தீர்ப்பதற்காகத்  தனது மகனையே தேர்ச் சக்கரத்தில் இட்டு நசுக்கியவன்.

அப்படி - நீதி வழங்கிய மன்னர்கள் ஆட்சி செய்த சோழ  நாட்டில்  - புகார் நகரம் எனது ஊர்..

அவ்வூர் வணிகர்களுள் ஒருவர் மாசாத்துவான். அவர் பெரும்  சிறப்பினை உடையவர். அவருடைய மகன் தான் என் கணவர். 

என் கணவரும் நானும் இனிது வாழ்வதற்காக உனது ஊருக்குள் - ஊழ்வினை துரத்தியதால்
வந்தோம். 

எனது சிலம்பினை விற்பதற்காக அங்காடித் தெருவிற்கு வந்த - அவர் உன்னால் கொலைக் களத்தில் மாண்டு போனார். அவர் பெயர் கோவலன். கண்ணகி என்பது என்  பெயர்..  -

கொந்தளிக்கின்ற கோபத்திலும் கொதிக்கின்ற சோகத்திலும் கூட எத்தனை எத்தனை தெளிவான செய்திகள்... 

எனில்.
அவள் தான் கண்ணகி..

தனக்கான சாட்சியாக மாணிக்க சிலம்பினைக் கொணர்ந்தவள் ஆயிற்றே!..

இதே போல ஒன்றை நிரூபிக்கத் தேவையான தரவுகளுடன் தான் வழக்கு மன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான குறிப்பு சுந்தரர் சரிதத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
***
துணைப் பாடத்தின்  பல்சுவைப் பகுதியில் இருந்து :


முக்காலுக்கு  ஏகாமுன்  முன் நரையில் வீழாமுன்
அக்காலரைக்  கால் கண்டு அஞ்சாமுன்  -  விக்கி
இருமா முன்  மாகாணிக்கு ஏகா முன்  கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது.
-: காளமேகப்புலவர் :-

வாழ்வின் நிதர்சனம் ஆனாலும் பாடலின் முழு விளக்கத்தைத் தருவதற்கு மனம் இல்லை.. 

பாடல் காட்டுகின்ற நெறி : 
இளமை இருக்கின்ற போதே ஈசனை  - கச்சி ஏகம்பனை - வணங்குக.. என்பதாகும்..

வாழ்வின் நிதர்சனத்தைக காட்டுகின்ற இப்பாடலில் குறிக்கப்படுகின்ற பின்ன அளவுகள்..

முக்கால் = ¾ (மூன்றின் கீழ் நான்கு)
அரை = ½ 
(ஒன்றின் கீழ் இரண்டு)
காலரைக் கால் = 3⁄8
(மூன்றின் கீழ் எட்டு)
இரு மா =1⁄10 
(ஒன்றின் 3⁄8 பத்து)
மாகாணி = 1⁄16 வீசம் 
(ஒன்றின் கீழ் பதினாறு)
ஒரு மா = 1⁄20
(ஒன்றின் கீழ் இருபது)

(இதில் மா காணி எனப்படுவது  மயானம்)

இவையே பழந்தமிழ் நில அளவின் கணக்குகள்.. 

இதைச் சொல்லிக் கொடுக்கத் தான்  அரேபியனும் ஐரோப்பியனும் இந்நாட்டுக்குள் நுழைந்ததாக ஊருக்குள் ஒரு பேச்சு இன்னும் உலவிக் கொண்டு இருக்கின்றது..
***
நினைவெல்லாம் தொடரும்

அழகே உந்தன் புகழ் வாழ்க 

ஓம் 
நம சிவாய நம ஓம்
***

செவ்வாய், அக்டோபர் 29, 2024

கடைத் தெரு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 12 
 செவ்வாய்க்கிழமை

இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி..

சம்பந்தம் இல்லாமல்
எல்லா தரப்பினருக்கும் கொண்டாட்டம்
மகிழ்ச்சி.. ..


தஞ்சை - நகர பேருந்து நிலையத்திற்கும் புது ஆற்றுப் பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்று அந்தப் பகுதியில் தீபாவளிக்கு என
அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் அதற்றப்பட்டுள்ளன.



இதனால்   பேருந்து நிலைய சாலையில் கீழராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, தெற்கு அலங்கம் இங்கெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளை நாடிச் செல்கின்றனர் மக்கள்..


தரைக்கடை அமைப்பபர்கள் பெரும்பாலும் எளிய வியாபாரிகளே..

இவர்களுள் தமிழ் மக்களுடன் வட புலத்து மக்களும் கடை விரித்து இருப்பர்..
 
முதல் போட்டு பொருட்களை வாங்கியிருப்பவர்கள் நஷ்டப்படாமல் இருக்க வேண்டும்..



அடித்தட்டு மக்களின்  சந்தோஷம் இந்த மாதிரியான கடைகளில் தான்..
சாதாரண மக்களால்
கைக்கு எட்டிய விலையில்
 பெரிய கடைகளில் வாங்கவே முடியாது.என்பது எல்லாருக்கும் தெரியும்..

பல ஆண்டுகளாகவே தஞ்சை காந்திஜி  சாலையில 
தீபாவளிக்காக தற்காலிக கடைகள் அமைத்திருப்பார்கள்.  தீபாவளி வரையில் தான்..
 

இந்த வருடம் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தரைக் கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றன. 

இத்தனை வருடங்களாக தீபாவளி நேரத்தில் இப்படித் தான் நெரிசல்..


மாநகரின் ஏனைய சாலைகள் மாற்றுச் சாலகளாகி விடுவது இயல்பு.
  
பேருந்துகள் இதர வாகனங்கள்
சுற்றிக் கொண்டு செல்வதால் மக்கள எவ்வித சிரமத்தையும் உணர்ந்ததில்லை. 


போக்குவரத்து நெரிசல் காரணமாகக் காட்டப்பட்டாலும் உண்மை எது என்று தெரியவில்லை. 


தீபாவளி சமயத்தில் நகரில் உள்ள பெரிய துணிக் கடைகளை விட  இந்தத் தரைக் கடைகளில் தான் மக்கள் கூட்டம் அலை மோதும்...



50,100 என்றெல்லாம் வசதிக்கேற்றபடி கிடைக்கின்ற புதுத் துணிகள் முதற்கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்திலும் 
மனம் மகிழ்ச்சி கொள்ளும் அடித் தட்டு மக்களும் இருக்கிறார்கள்..



தீபாவளி முதல் நாள் இரவு வரை  இந்தத் தரைக் கடைகளில் தான் அதிக பொருட்களை வாங்கி மகிழ்வர்..

தீபாவளி நேரத்தில் வாரம் முழுதும் பகல் இரவு - என, காவல் துறையினரின் எச்சரிக்கை அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கின்ற நிலையில்  - பெருத்த அசம்பாவிதங்கள் ஏதும் நடந்ததில்லை..


காந்திஜி சாலையின்  நெரிசலில்  மகிழ்ச்சியுடன்
நடந்து சென்ற நாட்கள் நெஞ்சில்  அலை மோதுகின்றன..

வருகின்ற ஆண்டுகளில் தரைக் கடை வியாபாரத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கட்டும்..

படங்களுக்கு நன்றி
நம்ம தஞ்சாவூர
ஃஃ

வாழ்க தஞ்சை
வளர்க தஞ்சை

முருகா முருகா
முருகா முருகா
***

திங்கள், அக்டோபர் 28, 2024

பஜ்ஜி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 ஐப்பசி 11
திங்கட்கிழமை


வாழைக்காய் பஜ்ஜி 

அந்த காலத்தில்
இதனை தஞ்சாவூர் கைப்பக்குவம் என்பார்கள்..

தேவையான பொருட்கள் :

முற்றிய மொந்தன்
வாழைக்காய் ஒன்று
கடலை மாவு 200 கி
அரிசி மாவு 100 கி
மிளகுத் தூள் 1 tsp
மஞ்சள் தூள் சிறிதளவு
பெருங்காயத் தூள்  சிட்டிகை
கல் உப்பு தேவைக்கு
கடலெண்ணெய் தேவையான அளவு

செய்முறை :
மொந்தன்
வாழைக் காய்கள் தனித்துவமானவை..
முற்றிய காய்களை சுட்டு விரலால் தட்டினால் நங் நங் என்று சத்தம் வரும்..

முற்றிய மொந்தன்
வாழைக்காய்களின் தோலை நீக்கி விட்டு குறுக்காகவோ நெடுக்காகவோ ஓரளவுக்கு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் தனித்தனியே  இளஞ்சூட்டில் சற்றே புரட்டி எடுத்துக் கொள்ளவும்..

மாவு ஆறியதும் அத்துடன் நுணுக்கி வைத்துள்ள கல் உப்பு,  மிளகாய்த் தூள் பெருங்காயத் தூள் மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசறிக்   கொள்ளவும்.

இந்த மாவில் ஒரு டீ ஸ்பூன் கடலை எண்ணெயுடன்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து பதமாக கரைத்துக் கொள்ள வேண்டும்.. 

வாணலியில் எண்ணெயை மிதமான சூட்டில் காய வைக்கவும்..

கரைத்த மாவில் வாழைக்காய் வில்லைகளைத் தோய்த்து எடுத்து எண்ணெயில் இட்டு பக்குவமாகப் பொரித்தெடுக்கவும்.

வாழைக்காய் பஜ்ஜி தயார்..

 நன்றி இணையம்

இப்படியான சூழ்நிலையில் இளங்குளிர் காற்று 
வீசினால்...

ஆகா!..

இளங்காற்று 
வீசுவதோடு இருக்க வேண்டும்..
பெருமழையாகி வீட்டுக்குள் சாலைத் தண்ணீர் வந்து விட்டால் -

என்னத்த சொல்றது!?..

வாழைக்காய் பஜ்ஜி.. இதற்கு தேங்காய்ச் சட்னி நல்ல துணை..

சோடா உப்பு, நிறமி போன்றவை சேர்க்கப்படவில்லை. இவற்றைச் சேர்க்கவும் வேண்டாம்..

தரமான
உணவுகளை
ஆதரித்தல் நல்லது..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
***

ஞாயிறு, அக்டோபர் 27, 2024

உணவு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 10
 ஞாயிற்றுக்கிழமை

கண்டதும் கேட்டதும்
இப்பதிவில்..


வழிச்செல்வோர் தங்கி இளைப்பாறுதற்கு இடமும், உண்டு பசியாறுதற்கு அறுசுவை உணவும் எவ்வித பிரதிபலனும்  எதிர்பாராது நமது மக்கள் வழங்கி இருக்கின்றனர்..

இப்படியான இடங்களே அன்ன சத்திரங்கள் எனப்பட்டன.. 

தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை இப்படியான சத்திரங்களைக் கட்டி பெருமளவில் நிதி வழங்கி தர்ம பரிபாலனம்  செய்திருக்கின்றனர் மராட்டிய மன்னர்கள்..

 நன்றி இந்துதமிழ்
தஞ்சை  - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் சத்திரம் என்ற் பெயருடன் பல ஊர்கள் இன்றும் இருக்கிறன..

இதெல்லாம் அந்தக் காலத்தில்...

இப்படிப்பட்ட தர்மம்  பூமியில் இன்றைக்கு உணவு வர்த்தகப் பொருள் ஆகி விட்டது..

ஆக்கப்பட்டு விட்டது..

விளக்கு வைத்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்பது நமது சம்பிரதாயம்..

ஆனால்,நாகரீக மனிதர்கள் அரை இருட்டில் சிற்றுண்டி அருந்தி மகிழ்கின்றனர்..

இதில் - நட்ட நடு ராத்திரியிலும் விருந்து கேளிக்கை.

விழித்திருக்கின்ற நேரம் எல்லாம்  எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று மக்களும் நினைக்கின்றனர் ..

ஒட்டுமொத்த தமிழகத்தின் இயல்பும் இப்படி மாறிக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகின்றது...‌

அல்லது 
ஒட்டுமொத்த தமிழகத்தின் இயல்பையும் இப்படி மாற்றிக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகின்றது...‌


ஆனால்
சாப்பிடும் உணவுகளில் எதுவுமே வழக்கமான ஆரோக்கியமான உணவு  கிடையாது. 




இட்லி, தோசை, பொங்கல், உப்புமா என்பன எல்லாம் ஏளனத்துக்கு உரியதாகி விட்டன..




பல உணவகங்களில் இவற்றை முறையாகத் தயாரிப்பதும் இல்லை.

ரொட்டி, பரோட்டா - (எல்லாமே மைதா மாவு) மற்றும் இறைச்சி - இவை  மட்டுமே இரவு உணவு என்று மக்களுக்குப் பரிமாறப்படுகிறது. 
மக்களும் விருப்பத்துடன் சாப்பிடுகின்றனர்..

மதிய வேளையில் கூட சாம்பார் சோற்றை விடப் பிரியாணி , பரோட்டா ஆகியவற்றுக்கு ஆலாய்ப் பறக்கின்றனர் மக்கள்.. 

இதனால் 
இங்கே  சாக்கடைகளின் ஓரத்தில் கூட அவசர பிரியாணிக் கடைகள் அதிகமாகி விட்டன..

Corn Flakes  போன்ற லொட்டு லொசுக்குகள் வந்து விட்டாலும் தற்போதைக்கு காலை உணவு மட்டுமே பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தோன்றுகின்றது..

விரைவில் இதனையும் உணவு வணிகத்தினர் மாற்றி விடுவர்..




குதிரையும் இன்ன பிற வர்க்கமும்  தின்று தீர்த்துக் கொண்டிருந்த Oates,
மலச்சிக்கலை ஏற்படுத்துகின்ற Bun, Bread,
Burger, Sandwich ..
என்னவென்றே புரியாத Noodles, Pasta - போன்ற உணவு வகைகளால் உண்பவர் வயிறு நிறைகின்றது... அத்துடன் ஆரோக்கியம் குறைகின்றது..

தொ. கா. நிகழ்ச்சிகளின் ஊடாகத் தொடர் விளம்பரங்கள் அதனைத் தான் செய்து  கொண்டிருக்கின்றன..

கிடைத்த  உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு நிறைந்த ஆரோக்கியத்துட.ன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த நடுத்தர குடும்பங்கள் 
கூட இன்றைக்கு  இரண்டு  மூன்று வகை உணவுகளை ஒன்றாகச் சேர்த்து சாப்பிட ஆரம்பித்து விட்டனர். 

இந்த மாற்றத்திற்கான காரணம் அதீதமான பணப்புழக்கமா.. உணவின் மீதான பெருவிருப்பமா..
தெரியவில்லை. 

ஆனால், இவையெல்லாம் கடந்த சில வருடங்களில் நடந்தேறியிருக்கிறது என்பது மட்டும் தெளிவு.. . 

இந்த விஷயத்தில்
ஏனைய ஊடகங்களின்  - ரைஸ் செய்வது எப்படி?.. - என்பது மாதிரியான உணவுப் பதிவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அனைத்து அரேபிய  உணவுகளும் தமிழகத்தில் விற்பனை ஆகின்றன..

அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் ஷவர்மா..

ஷவர்மா கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகின்றன..

இன்னொன்று பேக்கரி..


நகரின் புறவழிச் சாலை எங்கிலும்  
Bakery & Snacks.. 

அங்கு விற்கப்படும் பொருட்கள் அங்கேயே செய்யப்பட்டதற்கான உத்தரவாதம் இல்லை, 

எங்கிருந்தோ வருகின்றன... எப்படியோ விற்றுத் தீர்கின்றன.. 

உணவின் தரம்  அவ்வப்பொழுது  மாறுபட்டு வாந்தி பேதி ஏற்பட்டாலும் யாரும் அதைப் பொருட்படுத்தவது இல்லை..


இதே போல இனிப்பு வகை விற்கப்படும் கடைகளின் எண்ணிக்கையும்  பெருகிவிட்டது..


வீடுகளில் முறுக் முறுக் என்றிருந்த முறுக்கு - இன்றைக்கு மாறி விட்டது.. 

சில முறுக்குகளைத் தின்றதும் நாக்கிலும் உதடுகளிலும் நம நம என்று ஏதோ ஒரு உணர்வு..

முறுக்கு - வணிகச் சந்தைக்கு வந்த பிறகு - பல மாதங்களுக்கு நறுக் முறுக் என்று  இருக்க வேண்டும் என்பதற்காக அத்துடன் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக பேசிக் கொள்கின்றனர்..


மேலும்
இப்படியான தயாரிப்புகளில்
தரமான நெய் அல்லது வனஸ்பதி  சமைப்பதற்கான நல்ல எண்ணெய் ஆகியவை சந்தேகத்திற்கிடம் என்றால்!?.. 


சந்தையில் வண்ணமயமான
 உணவுகள்.. அவற்றின் பல நிலைகளிலும் 
ரசாயனக் கலப்பு மிகுந்து விட்டதாக மருத்துவர்கள் 
சொல்கின்றனர்..

மாநிலத்தில்  மருத்துவ மனைகளும் நோயாளிகளும்
பெருகி இருக்கிறனர்..

சமீப காலங்களில் ஷவர்மா எனும் அரேபிய உணவு சரியில்லாததாக இருக்கின்றது..

அரேபிய நாட்டிற்கு அந்த உணவு சரி தான்.. அங்கே தரக் கட்டுப்பாடுகள் மிக அதிகம்..

இங்கே அதைத் தயாரிக்கின்ற முறையில் தான் குறைபாடு..

இதைத் தின்று விட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுவது குறிப்பிடத் தக்கது..

தமிழ் மரபின் பாரம்பரிய சிறு தீனிகளை வீட்டில் செய்வது குறைந்து விட்டது.. 

கடைகளில் வாங்கித் தின்பது என்பதே வழக்கமாகி விட்டது..

தரமான சிறு தீனிகளைத் தயாரித்து விற்பனை செய்த குடும்பங்கள்  நசிந்தே விட்டன... 


அந்நிய உணவு வகைகளாலும்
 மரபை மீறிய தின் பண்டங்களினாலும்
 நமது பாரம்பரிய உணவுகளும் நமது ஆரோக்கியமும் அழிந்து கொண்டு இருக்கின்றன..

மருத்துவ மனைகளுக்கு அருகிலேயே அதீத சுவையுடைய இனிப்புப் பண்டங்கள்  ரசாயனக் கலப்புடைய நொறுக்குத் தீனிகள் மற்றும்  Bakery & Snacks.. விற்கின்ற கடைகள் இயங்குகின்றன என்றால் யாரை நொந்து கொள்வது??..

இந்த உளைச்சலுக்கு நாமே காரணம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

முருகா முருகா
முருகா முருகா
***