நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 16
புதன் கிழமை
இன்று
தஞ்சை மாநகரில்
மகோன்னத கருடசேவை..
சந்தனம்..
சந்தனம் நமது பாரதத்திற்கே உரியதாகும்..
இயற்கையாகவே நறுமணம் கொண்டது..
வெப்பமும் குளிர்ச்சியும் உடையது..
உவர் நிலம் தவிர்த்து ஏனைய நிலங்களில் வளரக்கூடியது..
வறண்ட நிலமாக இருந்தாலும் சந்தனக் காட்டில் அடிக்கடி மழை பெய்யும்..
உடல் சூட்டை தணிக்கும் சித்த வைத்திய முறைகளில் சந்தனமும் ஒன்று..
சந்தனக்கட்டையைத் தேய்த்து நீரில் கரைத்து அருந்தினால் வந்தால் இரத்தம் தூய்மையடையும்.. உடலுக்குக் குளிர்ச்சி உண்டாகும்..
அறுபது ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் சந்தனச்சுள்ளி, வெட்டிவேர், நன்னாரி வேர் இடப்பட்ட நீரைக் குடிக்கின்ற வழக்கம் இருந்தது..
சந்தனத்தின் நறுமணம் -
மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது..
இறை வழிபாட்டிற்கு உகந்தப் பொருட்களுள் ஒன்று சந்தனம்.. அபிஷேக அலங்கார ஆராதனை - என, அனைத்திலும் சிறப்பிடம்..
கோயில்களில் எவ்வித அலங்காரத்திலும் சந்தனக்காப்பு உயர்வானது..
சந்தனக் கட்டையைக் கல்லில் தேய்த்தால் திரள்கின்ற சாந்தினை உடம்பில் - குறிப்பாக மார்பில் பூசிக் கொள்வது பாரத மக்களின் கலாச்சாரம் ஆகும்..
சந்தனத் திலகம் மங்கலகரமானது..
லக்ஷ்மி விளங்குகின்ற மங்கலங்களுள் சந்தனமும் ஒன்று..
இயற்கையாகவே செந்நிறம் கலந்திருந்தால் செஞ்சந்தனம். மிகவும் உயர்வானது.. செஞ்சந்தனம் ஸ்ரீ வைரவர், ஸ்ரீ வீரபத்ரர் வழிபாட்டிற்கு உரியது..
சற்றே வெளுத்த மஞ்சள் நிறத்தை உடைய சந்தனம் இயல்பானது.. மாநுட மங்கலங்களுக்கு உரியது..
வெளுத்த நிறத்தை உடையது வெண் சந்தனம்.. இதுவும் இயற்கையானதே..
முறையான ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகளில் சந்தனத்திற்கு தனியிடம் உண்டு.
சந்தன மரத்தில் இருந்து சந்தனத் தூள் எண்ணெய் தைலம் சந்தன மெழுகு (அகர்)
போன்ற உப பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன..
சிந்தனை நரம்புகள் ஒன்று கூடும் இடம் எனக் குறிப்பிடப்படுவது
இரு புருவங்களுக்கு நடுவில் - ஆக்ஞா சக்கரம்..
புருவ மத்தியில் பெருவிரல் அல்லது சுட்டு விரலை
வைத்தால், மனதில் ஒரு விதமான உணர்வலை தோன்றி உள்ளார்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்..
ஆக்ஞா சக்ரமாகிய
இந்தப் புள்ளி உயர் படிநிலைகளுக்கு அடிப்படை..
இந்தப்புள்ளியை அபிசார மாந்திரீகர்கள் வேறு விதமாகக் கையாள்வர்..
இதைப் பற்றி பொது வெளியில் பேசக் கூடாது..
புருவ மத்தியில் திலகம் வைப்பது
அபிசாரங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே..
சந்தனத்தை முறையாகப் பயன்படுத்தினால் நல்ல விவேகமும் மனமகிழ்ச்சியும் அதனால் நேர்மறை விளைவுகளும் ஏற்படும் என்பது ஆன்றோர் வாக்கு..
சந்தனம் சேர்ந்த பெயரை -
சந்தனலிங்கம், சந்தன பாண்டியன், சந்தனத்தேவன்,
சந்தனவீரன், சந்தனமாரி, சந்தனவல்லி - என்று, தாமும் வைத்துக் கொள்பதில் பெருமை கொண்டவர்கள் தமிழர்கள்..
பழங்காலத்தில் அழகின் அழகு என, பெரிதும் பயன்படுத்தப்பட்டது சந்தனமே..
இப்போதும் அழகூட்டுகின்ற பொருட்களில்
சந்தனத்தின் பெயரைக் கேட்டு தான் மக்கள் ஏமாறுகின்றனர்..
இன்று சாலையோரக் கடைகளில் சந்தனம் என்று விற்கப்படுவது - சந்தனமே அல்ல!..
இன்றுள்ள புதிய விதிகளின்படி நல்ல சந்தனக் கட்டையை வனத்துறையின் மூலமாக (விலை கொடுத்து) வாங்கி முறையான அத்தாட்சியுடன் வீட்டில் வைத்திருக்கலாம்...
வைத்தீஸ்வரன் கோயிலில் கார்த்திகை தோறும் ஸ்ரீ செல்வ முத்துக்குமரனுக்கு நிகழ்த்தப்படுகின்ற சந்தனாபிஷேக தீர்த்தம் வெகு சிறப்புடையது..
அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில்
கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது
வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரி யுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர்
சிந்துமயி லாடுதுறையே..3/70/2
-: திருஞானசம்பந்தர் :-
தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
எரிவீசி இரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே. 6/93/9
-: திருநாவுக்கரசர் :-
அரைவிரி கோவணத்தோ
டரவார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத்தன்
றுகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணியும்
வரைச் சந்தகி லோடும் உந்தித்
திரைபொரு தண்பழனத்
திருநாகேச் சரத்தானே.. 7/99/5
-: சுந்தரர் :-
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***