நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 30, 2020

ஏரல் ஸ்வாமிகள்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...
***

கடந்த செவ்வாய்க்கிழமை
எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும்
சிறுகதை வெளியானது...

அந்தக் கதையில்
விசாலம் எனும் தாய்
தன் மகன் அருணாசலத்திடம்
ஏரல் ஸ்ரீ சேர்மன் ஸ்வாமிகளிடம் வரம் வாங்கி அவனைப்
பெற்றதாகச் சொல்வதாக எழுதிருந்தேன்...


ஏரல் ஸ்ரீ சேர்மன்
அருணாசலம் ஸ்வாமிகள்..
அந்தக் கதையை வாசித்து விட்டு
மதிப்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள்
வழங்கிய கருத்துரைகளுள் ஒன்று இதோ கீழே!..



ஏதோ கதையை எழுதினோமா!..
பிறரது கருத்துரைகளைக் கண்டு மகிழ்ந்தோமா!..
என்றிருக்கும் நிலையில்
கதையில் வரும் சம்பவம் ஒன்று
எங்கோ ஒருவரது வாழ்வுக்குள்
நிகழ்ந்திருப்பதும் அதனை அவர்கள் நினைவு கூர்ந்து
சிறப்பிப்பதும் என்னை உலுக்கி விட்டன...

கண்கள் கலங்கி விட்டன...
நான் இன்னும் ஏரல் ஸ்வாமிகளைத் தரிசித்ததில்லை..
ச்வாமிகளைத் தரிசிக்க வேண்டிய நேர்ச்சை ஒன்று உண்டு..

விரைவில் கைகூடி வருவதற்கு
இவ்வேளையில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...


திருச்செந்தூர் அருகில் மேலப்புதுக்குடி எனும் கிராமத்தில்
ராமசாமி நாடார் சிவனணைந்தாள் அம்மாள் எனும் தம்பதியர்க்கு
இளைய மகனாக, 1880 - அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று - தோன்றியவர் அருணாசலம். 

வளரும் பருவத்திலேயே யோகம் தியானம் மந்திரம்  -
இவைகளை அறிந்து ஞானம் கூடிவரப் பெற்றார்.

ஞானம் வரப்பெற்றது முதற்கொண்டு ஏழை எளியோர் தம்
துயர் தீர்ப்பதிலேயே அருணாசலத்தின்  நாட்டம் சென்றது. 

அவரால் நலம் பெற்றவர்கள் அவரை
அருணாசலம் ஸ்வாமிகள் அன்புடன் என்றழைத்தனர்.

அவருடைய புகழ் அந்த வட்டாரம் எங்கும் பரவியது...
ஸ்வாமிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டிய -
அன்றைய ஆங்கிலேய அரசு,

1906  செப்டம்பர் ஐந்தாம் நாள் - 
ஏரல் நகரத்தின் சேர்மன் பதவியைத் தாமாகவே முன் வந்து வழங்கியது... 

அது முதற்கொண்டு -  அருணாசலம் ஸ்வாமிகள்
ஏரல் சேர்மன் ஸ்வாமிகள் என வழங்கப் பெற்றார்... 

மக்கள் பணியினை ஏற்றுக் கொண்டதும்
அதனை மகேசன் பணியாகச் செய்து வந்தார் ஸ்வாமிகள்..

தான் பெற்ற அற்புத சக்தியால் - அற்றார்க்கும் அலந்தார்க்கும் அளப்பரிய உதவிகளைச் செய்து வந்த ஸ்வாமிகள் இல்லறத்தில் நாட்டம் இன்றி பிரம்மசர்யம் கொண்டு விளங்கினார். 

தனது வாழ்வு பூரணமாக இருக்கும் நாளை உணர்ந்த ஸ்வாமிகள்
அதன்பிறகு செய்ய வேண்டியதை தனது சகோதரரிடம் முன்னதாகவே தெரிவித்தார். 

சேர்மன் பதவியினை   1908  ஜூலை  27 அன்று திரும்ப ஒப்படைத்தார்.

தான் முன்பே கூறியிருந்தபடி -  ஆடி அமாவாசை (28 ஜூலை 1908) அன்று நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு மகா பரிபூரணம் எய்தினார்..



ஸ்வாமிகள் கூறியபடியே ஏரல் நகரின்  தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நிற்கும் ஆலமரத்தின் அருகில் சமாதி கோயில் எழுப்பப்பட்டு -இஷ்ட மூர்த்தியான முருகன் பிரதிஷ்டை நிகழ்ந்தது..

ஸ்வாமிகள் சித்தியடைந்த பின்னும் இன்று வரை -
நம்பிவரும் ஆயிரமாயிரம் பக்தர்களுக்கு கலங்கரை விளக்கமாக நின்று
கை கொடுத்து காப்பாற்றி வருகின்றார்.. 






ஒவ்வொரு அமாவாசை தினமும் இங்கு
சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..



எனினும் ஆடி மற்றும் தை மாத அமாவாசை தினங்களை அனுசரித்து பன்னிரண்டு நாட்கள் விசேஷ வைபவங்கள் நிகழ்கின்றன. சாதி சமயபேதம் இல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர்..

ஏரல் ஸ்ரீ சேர்மன் ஸ்வாமிகளை
இன்றையப் பதிவில் தரிசனம் செய்விப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகின்றேன்..

ஓம் குரவே நம:

முருகா போற்றி.. அழகா போற்றி..
முன் வினை தீர்க்கும் முதல்வா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ  

புதன், மே 27, 2020

காளி வந்தாள் 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

கடந்த சனிக்கிழமை இரவு 8:45
கைப்பேசியில் அமைப்பு..

எடுத்து நோக்கினால் கனடாவில் இருந்து..

என் மனைவியின் அக்கா மகள்..
தான் சார்ந்துள்ள I.T.. நிறுவனத்திற்காக
தற்போது கனடாவில் இருந்து பணி செய்து கொண்டிருக்கின்றார்..

இதனை விவரமாகச் சொல்லாததனால்
அபுதாபியில் இருக்கும் என் மகள் என்று 
அர்த்தம் ஆகி விட்டது..

என்னம்மா!.. எப்படியிருக்கிறாய்?..
- என்றேன் சாதாரணமாக...

மண்டகப்படி நல்லா நடந்தது,..
எனக்கு ரொம்பவும் சந்தோஷம்...
எல்லாரும் எங்கிட்ட பேசணும்..ன்னு காத்திருக்காங்க..
நான் உங்களத் தேடி வந்திருக்கிறேன்!...

அந்த வார்த்தைகளின் தன்மையைப் புரிந்து கொண்டு 
விக்கித்துப் போனேன்.. பேசுவது என் மகள் தான்..
ஆனாலும் அவளல்ல!.. கண்களில் நீர் சுரந்து விட்டது...

என்னையே நினைச்சுக்கிட்டு இருக்குற
உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேணமா?...

யாரும் கூட இல்லையேன்னு நெனைச்சிட்டீங்களா?..
நான் கை விடுவேனா!... 

- என்றபடிக்கு அறையில் எலுமிச்சம்பழம் இருக்கிறதா
என்று வினவியதுடன் சில வழிமுறைகளைச் சொன்னாள்..

அன்பின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே
அல்லல்படுத்திக் கொண்டிருந்த காய்ச்சல்
தொலைந்தது தான் ஆச்சர்யம்...

ஆனாலும் சில நாட்களாக தலைவலி..
இது கூட அன்னையின் சித்தமாக இருக்கலாம்...

இன்றைய பதிவில்
ஸ்ரீ வீரமாகாளியின் திருக்கோயில் படங்களும்
அன்றைய அலங்கார தரிசன காட்சியும்...













யாதுமாகி நிற்கும் காளி
கனடாவில் இருந்து எனது கஷ்டத்தைத் தீர்க்கிறாள் எனில்
இதில் எனது விஷயம் என்று ஏதும் கிடையாது..
எல்லாம் எனது முன்னோர் செய்த தவப்பயன் தான்..

இத்தன்மையே இனிவரும் தலைமுறைக்கும் ஆகவேண்டும்..
எல்லாரது குறைகளும் கஷ்டங்களும் தீரவேண்டும்!..
என்ற பிரார்த்தனைகளுடன் இந்த அளவில்
இந்த ப் பதிவிவினை நிறைவு செய்கின்றேன்..

அன்னை நிகழ்த்திய அற்புதங்களுள் வேறொன்று
அடுத்து வரும் நல்லதொரு வேளையில்!..

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித் தன்சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

திங்கள், மே 25, 2020

காளி வந்தாள் 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

வருடந்தோறும் அக்னி நட்சத்திரத்தை அனுசரித்து
வைகாசியின் மத்தியில்
வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்களுக்கு
எங்கள் அன்னை ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்குத்
திருவிழா நடைபெறுவது வழக்கம்...

வெள்ளிக்கிழமை இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் பவனி..
ஞாயிறன்று காலையில் பால்குடம்.. மாலையில் சந்தனக்காப்பு..

இடையில் சனிக்கிழமையன்று
எங்களது மண்டகப்படி.. சிறப்புத் தளிகை...

கீழுள்ள படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை....






அம்பிகையின் முகத்தில் குறுநகை
பால்குடங்கள் புறப்படும் காட்சிகள்..









இந்தப் படங்கள் எல்லாம் ஆறாண்டுகளுக்கு முந்தையவை...

சரி... இப்போது என்ன விசேஷம்!?..

சூழ்நிலையின் காரணமாக தமிழகத்தில் கோயில் விசேஷங்கள்
தடைபட்டிருக்கும் வேளையில் நேற்று (23/5) சனிக்கிழமை
அன்று மாலை எங்கள் மண்டகப்படி நிகழ்ந்துள்ளது..

நிகழ்வுகளைப் படமெடுத்த என் மகன் அவற்றை
எனக்கும் கனடாவில் உள்ள அவனது அக்காவுக்கும்
அனுப்பி வைத்திருக்கிறான்...

அதற்குப் பிறகு நடந்தது தான் விசேஷம்..
அதை நாளைக்குக் காண்போம்... 

சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாக பாசாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங் கமாய் நின்ற மெல்லியலாளே!..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

ஞாயிறு, மே 24, 2020

திருப்புகழ் 10

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அருணகிரி நாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்..

ஸ்ரீ முருகப்பெருமான் - திருவிடைக்கழி 
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும்என்
பாவடி யேட்டிலும் பட்டதன்றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.. 15
-: கந்தர் அலங்காரம் :-

திருத்தலம் - திருவிடைக்கழி

ஸ்ரீ முருகப்பெருமான் தேவயானையுடன் 
திருச்செந்தூர் போல மூலஸ்தானத்தில்
முருகனுக்குப் பின்புறமாக
சிவலிங்க ப்ரதிஷ்டை...
முருகப்பெருமான் சிவவழிபாடு செய்த தலங்களுள்
இதுவும் ஒன்று...
திருக்கடவூருக்கு அருகிலுள்ள திருத்தலம்..


பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் - பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் - தருவாழ்வும்

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் - பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ் பலத்தினைத் - தரவேணும்...

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் - பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் - திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர் - குமரேசா
செழுமலர்ப் பொழிற் குரவ முற்றபொற்
றிருவிடைக்கழிப் - பெருமாளே..

இடைக்கழி மேவிய முருகா போற்றி..
இடுக்கண் நீங்கிட அருள்வாய் போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, மே 23, 2020

திருப்புகழ் 9

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்.. 
***
அனைவரது
அன்பினாலும் ஆறுதல் மொழிகளினாலும்
பிரார்த்தனைகளினாலும் நேற்றிரவு
பாரசிட்டமால் மாத்திரைகளுக்கு இணையாக இங்குள்ள Fludrex
என்னும் மாத்திரைகள் கிடைத்தன..

இரவு ஒரு மாத்திரையைப் போட்டுக் கொண்டு
உறங்கி எழுந்தேன்..
சற்று பரவாயில்லை.. மதியம் சிறிதளவு கஞ்சியுடன்
மீண்டும் ஒரு மாத்திரை..

பார்க்கலாம்.. இனி வரும் நாட்கள் எப்படி இருக்கின்றன என்று..
அனைவரது அன்பின் மொழிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

இன்றைய பதிவில்
அருணகிரிப் பெருமான் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்...


நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என்செயும் கொடுங் கூற்று என்செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38
- : கந்தர் அலங்காரம் :-

திருத்தலம் - சிறுவாபுரி


அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற 
அண்டர் மனமகிழ்மீற - அருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் - மகிழ்வாக

மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு
மஞ்சினனும் அயனாரும் - எதிர்காண
மங்கையுடனரி தானும் இன்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடன்ஆடி - வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள
புந்திநிறை யறிவாள - உயர்தோளா
பொங்குகடல் உடன்நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு - வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய - முருகேசா
சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு - பெருமாளே..

தேவ குஞ்சரி பாகா சரணம்..
குருவே குகனே சரணம் சரணம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

வெள்ளி, மே 22, 2020

திருப்புகழ் 8

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்.. 
***
நேற்று முன் தினம் மறுபடியும் காய்ச்சல் வந்துற்றது...
சில நாட்களாகவே சாப்பாடு சரியில்லை..
சாப்பிடவும் முடியவில்லை..

சென்ற வாரம் திறக்கப்பட்டிருந்த மருந்தகங்கள்
சில நாட்களாக மூடப்பட்டுக் கிடக்கின்றன..

பாரசிட்டமால் வகை மாத்திரைகள்
இரண்டு எடுத்துக் கொண்டால் சரியாகி விடும்..
ஆனால் அவை தான் கிடைக்க வில்லை..

இன்றைக்கு (21/5) கொஞ்சம் சரியாகி இருக்கின்றது..

நலம் விசாரித்த
அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்
மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

சில நாட்களாக எங்கள் ப்ளாக் கணிணியில் திறப்பதில்லை...
என்ன காரணம் என்று தெரியவில்லை...

மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியுடன்...  
***
இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் செய்தருளிய
திருப்புகழ் அமிர்தம்..



ஒருவரைப் பங்கிலுடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிங்கிணியோசை படத் திடுக்கிட்ட அரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட்டெட்டு வெற்புங் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே!.. 13 
***


திருத்தலம் - கதிர்காமம்

ஸ்ரீ கந்த வேலன் - கதிர்காமம் 
திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் - பெருமாள் காண்
செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் - பெருமாள் காண்..

மருவும் அடியார்கள் மனதில்விளை யாடு
மரகத மயூரப் - பெருமாள்காண்
மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் - பெருமாள் காண்..


அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் - பெருமாள் காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர் குருநாதப் - பெருமாள் காண்..

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் - பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் - பெருமாளே..

வடிவுடை அரசே சரணம்.. சரணம்
வள்ளி மணாளா சரணம்.. சரணம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 

வியாழன், மே 21, 2020

திருப்புகழ் 7

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அருணகிரி நாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்..


மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.. 90
-: கந்தர் அலங்காரம் :-

திருத்தலம் - தஞ்சாவூர்


அஞ்சன வேல்விழி மடமாதர்
அங்கவர் மாயையில் - அலைவேனோ
விஞ்சுறு மாவுன - தடிசேர
விம்பமதாய் அருள் - அருளாதோ

நஞ்சமுதா உணும் - அரனார்தம்
நன்குமரா உமை - அருள்பாலா
தஞ்செனவாம் அடி - யவர்வாழ
தஞ்சையில் மேவிய - பெருமாளே..

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கதிர்வேல் அழகா சரணம்.. சரணம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

புதன், மே 20, 2020

திருப்புகழ் 6

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்




சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர் வேல்
வேந்தனை செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.. 72

திருத்தலம் - குன்றுதோறாடல்

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடென
 வகுக்கப்பட்ட சோலைமலையானது குன்றுதோறாடல்
என்று சிறப்பிக்கப்படுவது வழக்கம்..



அதிருங் கழல்ப ணிந்து - அடியேனுன்
அபயம் புகுவ தென்று - நிலைகாண
இதயந் தனிலி ருந்து - க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க - அருள்வாயே..

எதிரங் கொருவ ரின்றி - நடமாடும்
இறைவன் தனது பங்கில் - உமைபாலா
பதியெங் கிலுமி ருந்து - விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த - பெருமாளே..


எளிமையும் இனிமையுமாக அருள் மணக்கும் 
திருப்பாடல்களுள் இப்பாடலும் ஒன்று..

அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி - அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி - அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி - வருவோனே
இருநிலமீதில் எளியனும் வாழஎனது முனோடி - வரவேணும்..

மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் - வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ்கதிர் காமம் - உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியெனெ ஆடும் - மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவு பெருமாளே..

கந்தனுக்கு வேல்.. வேல்..
முருகனுக்கு வேல்.. வேல்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், மே 19, 2020

திருப்புகழ் 5

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திடவேண்டும்.. 
***
இன்றைய பதிவில்
அருணகிரி நாதர் செய்தருளிய
திருப்புகழ் அமிர்தம்

திருத்தலம் - திருத்தணிகை

எம்பெருமானின் ஐந்தாவது படைவீடு..
வள்ளி நாச்சியாரின் திருக்கரம் பற்றியருளிய திருத்தலம்..

கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாளனே தென்தணிகைக் குமர நின் தண்டையந்தாள்
சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே.. 76
-: கந்தர் அலங்காரம் :-



இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி - விடமேநீ
ரிழிவு விடாத தலைவலி சோகை
யெழுகள மாலை - இவையோடே

பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறு - முள நோய்கள்
பிறவிகள் தோறு மெனை நலியாத
படியுன தாள்கள் - அருள்வாயே...

வருமொரு கோடி அசுர பாதாதி
மடியஅ நேக - இசை பாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை - விடுவோனே..

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் - மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு - பெருமாளே.. 
***

அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண - பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அனலென எழவிடு - மதிவீரா

பரிபுர கமலம தடியிணை அடியவர்
உளமதி லுறவருள் - முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி - களிகூர


ஸ்ரீ தணிகாசல மூர்த்தி 
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர - உயர்வாய
உலகம னலகில உயிர்களும் இமையவர்
அவர்களு முறுவர - முநிவோரும்

பரவிமு னநுதின மனமகிழ் உறவணி
பணிதிகழ் தணிகையில் - உறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
இருபுடை யுறவரு - பெருமாளே..
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ