வேண்டும்..
நிறைய வேண்டும்...
செல்வம் நிறைய வேண்டும்...
அதுவும் நீங்காத செல்வமாய் நிறைய வேண்டும்...
அதற்கு பசுக்களும் காளைகளும் வேண்டும்!...
பெருந்திறலுடைய காளைகள் .. இவற்றோடு,
பெருந்திருவுடைய பசுக்கள்...
பெருந்திருவுடைய பசுக்கள் என்றால் - வடிவத்திலா!...
வடிவத்தில் அல்ல... வள்ளல் தன்மையில்!..
தன்னைப் புரப்பவன்
தனது பருத்த மடியின் காம்பினைப் பற்றிய அந்த நொடியில் -
கன்றுக்கென ஒரு துளியும் தான் வைத்துக் கொள்ளாமல்
அவன் பற்றியிருக்கும் குடத்தினை நிறைத்துத் தரும்
வள்ளல் தன்மையில் வழுவாத பெரும் பசுக்கள்!...
ஆகா.. அவ்வளவு தானா!...
இன்னும் இருக்கின்றதே...
பூங்குவளையின் இதழ்களினூடாகப் புகுந்த வண்டு
அதனுள் துளிர்த்திருக்கும் தேனை மாந்தித் திளைத்து
எழுந்து பறந்திட மனமின்றி தூங்கிக் கிடக்கின்றதே -
அத்தன்மையான வன வளம்!...
ஆகா!...
இன்னும் கேள்...
ஓங்குபெருஞ் செந்நெற் கழனி!...
அக்கழனிக்குள் காலளவுக்குத் தெள்ளிய நீர்...
அதற்குள் இரை தேடி உழக்கித் திரியும் கயற் கூட்டம்!...
இத்தன்மையான வயல் வளம்!...
ஓ!...
இத்தனைக்கும் மாரி வளம் வேண்டுமல்லவா!..
ஆமாம்...
ஒரு மாரி அல்ல..
இரு மாரி அல்ல!..
திங்கள் தோறும் தீங்கில்லாத மும்மாரி!...
அத்தகைய மழைக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?...
மரங்களை வெட்ட மாட்டோம்..
காடு கரைகளை அழிக்க மாட்டோம்.. - என,
விரதம் மேற்கொள்ள வேண்டும்!...
அது பாவை நோன்பு எனப்படும் காத்யாயனி விரதம்...
காத்யாயனி ஆனவள் ஸ்ரீதுர்காபரமேஸ்வரி...
அவளை ஆன்றோர் நந்தினி என்றும் போற்றுவர்..
ஏனெனில் அவள் நந்தகோபனின் இல்லத்தில் உதித்ததனால்!..
இந்த நந்தினியை - துர்காபரமேஸ்வரி - எனும் காத்யாயனியை நந்தகோபன் தன் குமாரனின் பேர் பாடிப் பரவ வேண்டும்!...
அவன் உத்தமன்...
உலகளந்த உத்தமன்.. அதுவும் ஓங்கி உலகளந்த உத்தமன்!...
ஓங்கி உலகளந்த உத்தமனாகிய, அவன் தான் -
வாமனனாக வந்து மாவலியின் யாகசாலையில்
மூன்றடி மண் கேட்டு இரந்து நின்றவன்!...
ஓங்கி உலகளந்த உத்தமன் வாமனனாகத் தோன்றிய நாள் இன்று!...
ஆவணி மாதத்தின் திரு ஓணம்!...
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!...
ஆண்டாளும் ஆழ்வார்களும் பாடியருளிய
திருப்பாசுரங்களில் மட்டுமல்லாது
தேவாரத்திலும் திருவாசகத்திலும் திருப்புகழிலும் கூட,
மாவலியிடம் மண் கேட்டு - ஓங்கி உலகளந்த புகழ் பரவிக் கிடக்கின்றது....
ஸ்ரீஹரிபரந்தாமன் மாவலியிடம் வந்து மண் கேட்கும் அளவுக்கு அவன் செய்த புண்ணியம் தான் என்ன!...
இதோ - அதனை அப்பர் பெருமான் குறித்தருள்கின்றார்...
நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே.. (4/49)
சிவாலயத்தின் தீபத்தைத் தூண்டி விட்ட புண்ணியம்!...
அந்த புண்ணியத்தைச் செய்தது ஒரு எலி!...
அதுவும் பக்தியால் அல்ல... பசியால்!...
பசிக்கு இரை தேடி வந்த எலி -
நெய்யினைத் தீண்டுவதாக அங்கிருந்த தீபத்தைத் தூண்டி விட்டது...
அதனால் தீபம் கனிந்து சுடர் விளங்கியது..
அதன் பொருட்டு மகிழ்வெய்திய எம்பெருமான்
மாவலி எனும் மன்னனாகப் பிறக்க வரமளித்தான்...
இந்த மாவலியிடம் மூன்றடி கேட்டு
வாமனனாக வந்த ஸ்ரீஹரிபரந்தாமன்
மாவலியின் புண்ணியத்தால்
அவனது தலையில் திருவடியை வைத்து
பாதாள லோகத்துக்கு அதிபதியாக ஆக்கி வைத்தான்..
வைகுந்தத்தின் திருக்காவலர்களாகிய
ஜய, விஜயர் - சனகாதி முனிவர்கள் இட்ட சாபம் தீர்வதற்கு
ஹிரண்யன், ஹிரண்யாட்சன் - என, பிறப்பெடுத்ததுவும்
ஹிரண்யனின் மகனாக ஸ்ரீ ப்ரகலாதன் தோன்றியதுவும்
இந்த மாவலியின் குலத்தில் தான்!...
இப்படி - மாவலியை ஆட்கொண்டருளிய
வாமனப் பெருமான் திரு அவதாரமுற்ற நாள்
ஆவணித் திருவோணம்..
***
இன்றைய பதிவில்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
திருமங்கையாழ்வார்
அருளிச் செய்த திருப்பாசுரங்கள்...
ஒருகுறளாய் இருநிலம் மூவடிமண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவையாறும் இசைகளேழும்
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும்
காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே.. (1178)
கண்டவர்தம் மனம்மகிழ மாவைதன் வேள்விக்
களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளும் எல்லாம்
அளந்தபிரான் அமருமிடம் வளங்கொள் பொழிலயலே
அண்டமுறும் முழவொலியும் வண்டினங்கள் ஒலியும்
அருமறையின் ஒலியும்மட வார்சிலம்பின் ஒலியும்
அண்டமுறு மலைகடலின் ஒலிதிகழு நாங்கூர் அரிமேய
விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே.. (1242)
வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடியினை வணங்க அலைகடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கைநன் நடுவுள் செம்பொன் செய்கோயிலினுள்ளே
உயர்மணி மகுடம் சூடிநின்றானைக் கண்டு உய்ந்தொழிந்தேனே.. (1271)
பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப்பொல்லாத
குறளுருவாய்ப் பொருந்தா வாணன்
மங்கலம்சேர் மறைவேள்வி அதனுள் புக்கு மண்ணகலம்
குறையிரந்த மைந்தன் கண்டீர்
கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்
செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த்
திருத்தெற்றி அம்பலத்தென் செங்கண்மாலே.. (1184)
மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலிதொ லைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையிரந்தாய்
துண்ணெண மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களைகணீயே.. (1299)
ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வாய் இருந்துவாழ் குயில்கள் அரியரி என்றவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே.. (1344)
தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்துதோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன்கொண்ட மூவாவுருவினன் அம்மானை
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே.. (1722)
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடுங் கொண்டு
பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அன்னமென் கமலத்து அணிமலர்ப் பீடத்து அலைபுனல் இலைக்குடை நீழல்
செந்நெலொண் கவரியசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே.. (1752)
-: திருமங்கையாழ்வார் :-
***
குருநாதராகிய
திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
திருத்தோற்றமுள்ள நன்னாள் - இன்று...
|
25 ஆகஸ்ட் 1906 |
குருநாதர் மலரடிகள் போற்றி.. போற்றி..
***
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய:
ஃஃஃ