நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி

சொல்லின் செல்வன். இது ஆஞ்சநேயருக்குக் கிடைத்த உயரிய விருது.

தன் பலம் எல்லாம் இன்னதென்று தெரிந்திருந்தும் தன்னடக்கத்துடன் இருந்த மாவீரன் - வாயு மைந்தன்!..


வைகுந்தத்தில்  - 

இராவணனனுக்கு ஒரு முடிவு கட்டுவதென்று முடிவானதும் - 

அந்த கைங்கர்யத்தில் யாரெல்லாம் எந்த மாதிரியெல்லாம் பங்கெடுத்துக் கொள்வது என்று மிகப் பெரிய மந்த்ராலோசனை நடை பெற்றிருக்கின்றது. 

கதை போகும் போக்கு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாததாலும் புரியாததாலும் ஸ்ரீமந்நாராணயனே - 

அவரவருக்குமான பாத்திரப் படைப்பினை வகுத்தருளினார்.

மிக மிக முக்யமானதும் ஆபத்தானதுமான - அந்த பாத்திரத்தைத் தாங்கக் கூடியவர் யாரென்று யோசித்து யோசித்துக் களைத்த வேளையில் -

எல்லாம் வல்ல சிவம் - ருத்ராம்சம் கொண்டு வெளிப்பட்டு நிற்க,

அதன் பின்  - எல்லாத் திட்டமிடலும், 

மங்களம் சுப மங்களம் என்று பூரணமாகியிருக்கின்றது.

இந்த அற்புதத்தினை அருணகிரிப் பெருமான் - திருப்பரங்குன்ற திருப்புகழில் பாடி மகிழ்கின்றார். 


இரவி இந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரசன் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கினக் கர்த்தனென்றும் - நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற் சிறந்த 
அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் 
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து  - புனமேவ

அரியதன் படைக் கர்த்தர் என்று
அசுரர் தங்கிளைக்கட்டை வென்ற 
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின்  - மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து 
உலகமும் படைத்துப் பரிந்து 
அருள்பரங் கிரிக்குட் சிறந்த  - பெருமாளே!.. 

வெற்றி கொள்ளும் வானர அரசர்கள் எனும் - 
சுக்ரீவனாக - சூரியன் ,  வாலியாக  - இந்திரன் 
ஜாம்பவான் ஆக - திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரமன்
நுட்மான திறன் கொண்ட நீலன் ஆக  - அக்னி ,

- என்று திட்டமிடப்பட்டபோது,

அஷ்டமா சித்திகளையும் தன்னகத்தே கொண்ட அனுமன் - என,

எல்லா வகையிலும் சிறந்த ருத்ரன் விளங்க - இப்படியாக, தேவர்கள் அனைவரும்  அரியதோர் படைக்கு நாயகர்களாக - பூமிக்கு வந்து தன்னுடன் இணைந்திட -

அந்தப் படையைக் கொண்டு - அசுரர் தம் சுற்றம் எனும் பெருங்கூட்டத்தைப் பூண்டோடு அழித்தவனாகிய  - ஸ்ரீராமன் எனும் ஹரிமுகுந்தன் மகிழ்ந்து, 

நற்பண்பில் விளங்கும் என் இனிய மருகனே!.. எனப் புகழும்  திருப்பரங் குன்றத்தின் முருகனே!..- என்று அருணகிரி நாதர் புகழ்கின்றார்.

இத்தகைய சிறப்புக்குரிய ஆஞ்சநேயர்,  

வானர வீரன்  கேசரி - அஞ்சனா தம்பதியினரின் அன்பு மகனாக  - மார்கழி மாதத்தில் -  மூல நட்சத்திரத்தன்று  தோன்றினார்.

சிவபூஜையில் சிறந்து விளங்கிய அந்த இளந்தம்பதியரை வாழ்த்தி  - ருத்ர அம்சத்தை மாங்கனியாக வழங்கியவன் - வாயு!.. எனவே - வாயு புத்ரன்!..


பிறந்ததுமே வானில் தெரிந்த இளஞ்சூர்யனைப் பழம் எனக் கருதி விண்ணில் தாவினார். 

ராகு கேது முதலான அசுரர்களின் தொல்லைகளினால் அஞ்சிக் கிடந்த இந்திரன் - பால ஆஞ்சநேயரின் அசாத்தியத்தைக் கண்டு அஞ்சினான். 

எப்போதும் எதையும் முன்னதாக யோசித்தறியாத இந்திரன் வழக்கம் போலவே - தவறாக முடிவெடுத்து - சூரியனைக் காப்பதற்காக நினைத்துக் கொண்டு குழந்தையின் மீது வஜ்ராயுதத்தை பிரயோகிக்க - 

அது பால ஆஞ்சநேயரின் தாடையில் தாக்கியது. பெருந்தாக்குதலினால் - நிலைகுலைந்த ஆஞ்சநேயரின் அபயக்குரல் கேட்டு ஆர்த்தெழுந்த வாயு - இந்திரனின் அடாத செயலைக் கண்டு மனம் பொறுக்காதவனாக - 

பால ஆஞ்சநேயரைத் தன் தோளில் சுமந்து கொண்டு ஒரு குகைக்குள் சென்று  மறைந்து  - தன்னைத் தானே  முடக்கிக் கொண்டான்.  தன் இயக்கத்தைத் தானே நிறுத்திக் கொண்டான்.  இதனால் - சர்வலோகமும் ஸ்தம்பித்தது.

அதன் பின்,  தேவர்களும் மூவர்களும் ஒன்று கூடி - அஞ்சனையின் மகனுக்கு  - வர ப்ரசாதங்களை வழங்கி - சிறப்பித்தனர்.


ஆஞ்சநேயருக்கு சூரியனே - ஓம் என வித்யாரம்பம் செய்து வைத்தான். 

அதன் பின்,  ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷியின் குருகுலத்தில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

அனைத்தையும் கற்று உணர்ந்திருந்தாலும்  - வேடிக்கைக் குறும்புகள் அவரை விட்டுப் போகவில்லை. இதனால் அவரது வலிமை குறைந்து விடக்கூடாது எனக் கருதிய மகரிஷிகள் - 

அனுமனின் பலம் தற்காலிகமாக அவருக்கு மறந்து போகட்டும். ஸ்ரீராம கைங்கர்யத்தின் போது ஜாம்பவான் நினைவு படுத்தும் போது மீண்டும் பொலிந்து விளங்கட்டும்!..   - என கட்டுப்படுத்தி வைத்தனர்.

காலச் சக்கரம் வேகமாகச் சுழல - வானரவேந்தன் சுக்ரீவனின் அமைச்சராக அமர்ந்தார்.

வாலியின் கோபத்திலிருந்து சுக்ரீவனைப் பாதுகாத்து, ரிஷ்ய சிருங்க மலையில் - தங்க வைத்தார்.

அண்ணலும் இளைய பெருமாளும் - ஜானகியைத் தேடி வந்த போது  - அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு - ராமபிரானுடன் சுக்ரீவன் நட்பு கொள்ள காரணமானார்.

இராம பாணத்தால் - வாலி வீழ்ந்த பிறகு -  பேச்சுப்படி படை திரட்டாமல் மயங்கிக் கிடந்தான் சுக்ரீவன். அந்நிலையில் வெகுண்டு வந்த இளைய பெருமாளின் கணைகளிடமிருந்து - மீண்டும் சுக்ரீவனின் உயிரைக் காப்பாற்றி அருளினார்.

சீதா தேவியைத் தேடிக் களைத்த வேளையில் - தோற்று விட்டோம் என அஞ்சிய வானர வீரர்கள் தற்கொலைக்கு முயன்றபோது - அவர்களைக் காத்தருளியவர்  - ஆஞ்சநேயர்.


பின்னும் இலங்கையில் - இராவணனின் கொடுமையால்  - தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சீதையையும் காத்தருளினார். 

யுத்தத்தின் போது  - இந்திரஜித் ஏவிய பாணங்களினால் மயங்கி விழுந்த லக்ஷ்மணனைக் காத்தருள வேண்டி - சஞ்சீவி மூலிகைக்காக  - மலையையே பெயர்த்தெடுத்து வந்தவர் ஆஞ்சநேயர்.


பின்னும்  - அண்ணன் சொன்ன நாள் கடந்து விட்டதெனக் கருதி  பெருந் தீக் குழியினுள் புகத் துணிந்த பரதன் உயிரையும் காத்து நின்றவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயரைக் குறித்த தகவல்களுக்கு அளவேயில்லை.

இத்தனை அசாத்தியங்களும் அவருக்கு எப்படிக் கிடைத்தது?.. 

அதிகார மூர்த்தியாகிய நந்தி தேவர் - இராவணனுக்கு அளித்த சாபத்தினால்!..

இராவணன் - தனது சகோதரன் - குபேரனிடமிருந்த புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டு - அதில் கர்வத்துடன் பயணித்தபோது , திருக்கயிலாய மாமலையைக் கடக்க வேண்டியிருந்தது. 

அந்த விமானத்தை இயக்கிய சாரதி சொன்னான். கயிலாயத்தை வலம் வர வேண்டும் - என்று!..

நானாவது!.. வலம் வருவதாவது?.. இங்கே இருப்பது தானே இடைஞ்சல்!.. எடுத்து விட்டால்!..

எடுக்க முயற்சித்தான். அதைக் கண்ட நந்தி தேவர் கூறினார்.

அடாத செயலைச் செய்யாதே!.. ஐயன் உறையும் மலை!.. அடங்கிச் செல்!..

நான் இராவணன்!.. இலங்காதிபதி!.. எட்டுத் திக்கும் என் காலடியில்!.. பத்துத் தலைகளுடன் பாராளுபவன்!.. கனங்கொண்டவன்!.. அரக்க மனங் கொண்டவன்!.. அப்படிப்பட்ட எனக்கா புத்தி சொல்கின்றாய்?.. அதுவும் குரங்கைப் போல முகம்  கொண்ட - நீயா சொல்வது!..

வெகுண்டெழுந்த நந்திதேவர் சாபமிட்டார்.

மூடனே.. முன்னைப் பழவினை மூண்டு வந்து உன்  - மூளையைச் சிதைக்கின்றது. கனம் கொண்டவன் எனக் கொடுவிடம் கொண்டிருப்பவனே - உன்னைக் களங்கண்டு வெல்ல வருவான் ஒருவன். வெற்றுத் தலைகொண்ட வீணனே!.. உன் பத்துத் தலைகளையும் கத்தரித்து எறிய கையில் கோதண்டம் ஏந்தி வருவான் ஒருவன்!.. குறுமதி கொண்ட நீயும் உன் நாடும் ஒரு குரங்கினாலே அழியக் கடவாய்!.. 

இந்த சாபமே - ஸ்ரீ ஆஞ்சநேயரின் திரு அவதாரத்திற்கு அடிப்படை. 


ஆஞ்சநேயர் தம்மை நாடித் தொழும் பக்தர்களுக்கு - புத்திக் கூர்மை, புகழ், நெஞ்சுறுதி, அஞ்சாநெஞ்சம், ஆரோக்யம், உற்சாகம், வாக்கு வன்மை - ஆகியனவற்றை நல்குவதாக -  த்யான ஸ்லோகம் மொழிகின்றது.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா 
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத்:

குருக்ஷேத்திரத்தில், பரந்தாமன் - பார்த்தசாரதியாக  - அர்ச்சுனனுக்குக் கீதை உரைத்தபோது, அதனைத் தேரின் கொடியில் இருந்தபடி -  தாமும் கேட்டவர் ஸ்ரீஆஞ்சநேயர்.


எங்கெல்லாம் - ஸ்ரீராம நாம பாராயணம் நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் அருவியாக வழிய - கேட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீஆஞ்சநேயர்.

நாளை - 01.01.2014 - ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி!..

தூய உள்ளத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியைப் 
பணிந்து அனைத்து நலன்களையும் பெறுவோமாக!..

கார்ய ஸித்தி மந்த்ரம் 
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் தவ கிம்வத 
ராமதூத க்ருபாசிந்தோ மத கார்யம் ஸாதய ப்ரபோ: 

நமஸ்கார மந்த்ரம் 
ராம தூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமுத்பவ 
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்ர நமோஸ்து தே;

காயத்ரி மந்த்ரம் 
ஓம் தத் புருஷாய வித்மஹே 
வாயு புத்ராய தீமஹி 
தந்நோ: மாருதி ப்ரசோதயாத்: 


அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப்புதல்வன் செல்வன் 
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராம தூதன் 
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பருக்கென்றும் 
அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே!..

ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜயராம்

மார்கழிப் பனியில் - 16

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 16. 
 

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய 
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண 
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை 
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் 
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ 
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

ஆலங்குடி 


இறைவன் - ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
அம்பிகை - ஏலவார்குழலி

தலவிருட்சம் - இரும்பூளை எனும் செடி.
தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி
திருத்தலம் - திருஇரும்பூளை (ஆலங்குடி)

காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்கள் :-
1. திருக்கருகாவூர் - முல்லைவனம், 
2. திருஅவளிவ நல்லூர் - பாதிரிவனம், 
3. திருஹரித்துவாரமங்கலம் - வன்னிவனம், 
4. திருஇரும்பூளை - பூளைவனம், 
5. திருக்கொள்ளம்புதூர் - வில்வவனம்.

ஐந்து திருத்தலங்களையும் ஒரே நாளில் முறையே - வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் தரிசித்து வழிபடும் பழக்கம் வழக்கில் உள்ளது.

இந்த வகையில் - ஆலங்குடி எனப்படும் திருஇரும்பூளை நான்காவதானது. மாலை வழிபாட்டுக்கு உரியது. 

பாற்கடலில் தொன்றிய ஆலகால விஷத்தை உண்டு தேவர்களைக் காத்தருளிய சிவபிரான் கனிவுடன் அமர்ந்த தலம்  - என்று ஐதீகம்.   

இதனால் ஆலங்குடி என்று வழங்கப்படுகின்றது என்பர் .

இத்தலத்தில் விஸ்வாமித்ர மகரிஷி வழிபட்டதாக ஸ்தல புராணம்.

திருஞான சம்பந்தப்பெருமான் - திருப்பதிகம் பாடிப் பரவிய திருத்தலம்.

காற்றில் அகப்பட்ட துரும்பாய் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படும் வாழ்வில் அல்லலுறும் நாம்  - திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததுமே, 


நம்மை வரவேற்று ஆறுதல் அளிப்பவர் - கலங்காமல் காத்த விநாயகர்.

ஐங்கரன் அழகிய திருமேனியுடன் விளங்குகின்றார். 

மூலஸ்தானத்தில் - சிவபெருமான் - ஆபத்சகாயேஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்.

மலை போல வரும் துன்பங்களில் - ஆபத்துக்களில்  - நம்மைக் காத்தருள்பவர் என்பது பொருள்.

சந்நிதியில் நின்று - எவ்வளவு நேரம் தரிசித்தாலும் - மனம் மீண்டும் தரிக்கவே ஏங்கும். சிவலிங்கத் திருமேனி அத்தனை பேரழகு!.. 


துன்பங்களினால் துவண்டு - சூழ்நிலைகளினால் வெகுண்டு ஆர்ப்பரிக்கும் மனமானது - 

அலை அடங்கிய  கடலாக  - அமைதி கொள்வதை உணரலாம்.

திருச்சுற்றில் கோஷ்ட மூர்த்திகளாக -  தக்ஷிணாமூர்த்தி,     லிங்கோத்பவர், நான்முகன் - விளங்குகின்றனர்.

திருச்சுற்றின் தென்புறம் - சப்த லிங்கங்களுடன் ஸ்ரீகாசிவிசுவநாதர், விசாலாட்சி, அகத்திய மகரிஷி -  எழுந்தருளியுள்ளனர்.

ஏனைய சந்நிதிகளில் - ஆக்ஞாகணபதி, சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டேஸ்வரர், துர்கை, நடராஜர், பைரவர், கல்யாண சாஸ்தா, சப்த கன்னியர் - விளங்குகின்றனர்.


எல்லாம் வல்ல எம்பெருமான் - 

ஐந்து திருமுகங்களுடன் - சதாசிவ மூர்த்தியாக விளங்கிய போது, அவர் தம் அகோர முகத்திலிருந்து ஒளி மயமாக வெளிப்பட்ட திருக்கோலமே  - தக்ஷிணாமூர்த்தி.

பிரம்ம தேவனின் மானஸ புத்ரர்களாகிய சனகர், சனத் குமாரர், சனாதனர், சனந்தனர் - ஆகியோருக்காக தென்திசை நோக்கி அமர்ந்த ஞானோபதேசத் திருக்கோலமே - தக்ஷிணாமூர்த்தி.

தென்திசைக்கு அதிபதியான யமதர்மராஜனின் பாசக் கயிற்றிலிருந்து ஆன்மாக்களைக் காத்து கரையேற்றி மரணமில்லாப் பெருவாழ்வு நல்கும் சிவபெருமானின் திருக்கோலமே - தக்ஷிணாமூர்த்தி எனும் திருக்கோலம். 

இந்தத் திருக்கோலத்தினை - தேவாரமும் திருவாசகமும் போற்றிப் புகழ்கின்றன. 


மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகமொழித்து
ஆலின்கீழ் அறமோர் நால்வருக்கு அருளி (1/41)
- என்று திருஞானசம்பந்தப் பெருமானும்

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிகள் அன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்(6/18)
- என்று திருநாவுக்கரசு சுவாமிகளும்

அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கருள் புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு(7/28) 
- என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும்

நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்கு அறமுரைத்தான் காணேடீ (8-திருச்சாழல்)
- என்று மாணிக்கவாசகப் பெருமானும்


போற்றி வணங்கித் துதித்த - ஞான குருமூர்த்தி என விளங்கும் திருக் கோலத்தினை - நவக்கிரங்களுள் ஒருவராக விளங்கும் -   தேவகுருவாகக் கொண்டு நம்மவர்கள் வணங்குகின்றனர். 

தேவகுரு  - வியாழன் எனவும் பிரகஸ்பதி எனவும் வழங்கப்படுபவர். இவருக்கு வேறு விதமான கதைகள் எல்லாம் உண்டு.

ஒருபடி மேலே போய் - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்கு உகந்ததான - தண்ணீரில் ஊறவைத்த கொண்டைக் கடலையை  நூலில் கோர்த்து, 

அதை ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்திக்கு - 

சரமாக சூட்டி மஞ்சள் வஸ்திரத்தை அணிவித்து வேண்டி நிற்கின்றனர். 

இத்தகைய  வழிபாடு - இந்தத் திருக்கோயிலில் விஸ்தாரமாக நிகழ்கின்றது. 

இத்தகைய வேண்டுதலும் வழிபாடும் தவறு  என - உணர்ந்தார்களில்லை.

இவ்வாறு வழிபடுவோர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் - மூலவரை வலம் செய்து வணங்குதற்கு பெரும் இடையூறாக இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு - 

தர்ம தரிசனம், விரைவு தரிசனம், அதி விரைவு தரிசனம் என பலவழிகளிலும் ஆதாயம் தேடப்படுகின்றது. 

இவற்றையும் விட - 

நான் இருக்க - உனக்கு ஏன் வீண் கவலை?..

- என, கருணையே உருவான அம்பிகை ஏலவார்குழலி எனும் இனிய திருப்பெயர் கொண்டு - தென் திசை நோக்கி விளங்குகின்றனள். 

சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக் கிழமைகளில் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நிகழ்கின்றன.

சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம், மஹாசிவராத்திரி, பங்குனி உத்திரம் - முதலிய திருவிழாக்கள் விசேஷமானவை.

ஆலங்குடி, கும்பகோணம் - மன்னார்குடி சாலை வழியில் உள்ளது. பிரதான சாலையிலிருந்து  - ஒரு கி.மீ. தூரம் உள்ளே நடந்து செல்லவேண்டும்.

சீரார் கழலே தொழுவீர் இதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் உடனாகி
ஏரார் இரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.(2/36)
திருஞானசம்பந்தர்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

திங்கள், டிசம்பர் 30, 2013

மார்கழிப் பனியில் - 15

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 15. 


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ 
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன் 
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் 
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை 
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் 
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

திருஆரூர்


எம்பெருமான் - புற்றிடங்கொண்டார், வன்மீக நாதர், தியாகராஜர்
அம்பிகை - கமலை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பிகை
திருக்கோயில் - பூங்கோயில்
தீர்த்தம்  - கமலாலயம், செங்கழுநீரோடை
தேர் - ஆழித்தேர்

கமலாலய திருக்குளக்கரையில் அம்பிகை தவம் இயற்றியதாக ஐதீகம்.

சப்த விடங்கத் திருத்தலங்களுள் முதலாவதானது. வீதி விடங்கர். அஜபா நடனம்.

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. (6/34)

''..ஐயா.. நீர் எப்போது இங்கே கோயில் கொண்டீர்!..'' - என்று - திருநாவுக்கரசர் ஆச்சர்யத்துடன் ஈசனைக் கேட்கும்படிக்கு -  தொன்மையான திருத்தலம்.

ஆதியில் - முசுகுந்த சக்ரவர்த்தி தொழுத திருத்தலம். இந்திரன் அழைத்ததன் பேரில் - தேவர் உலகு சென்று அசுரர்களை வெல்வதற்கு பேருதவி புரிந்தார். 

அவர் அங்கிருந்து பூவுலகு திரும்பும் முன் - அவருக்குத் தன் அன்பின் அடையாளமாக எதையாவது கொடுத்திருக்கலாம் தேவேந்திரன். அதை விடுத்து - 

''..நீர் வேண்டியதைக் கேட்பீராக!..'' -  என்றதும், 

''..நீ வணங்கும் வீதி விடங்கரைத் தருவாயாக!..'' -  என்றார், சக்ரவர்த்தி.

இந்த வீதி விடங்கத் திருமேனி - ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருமார்பினில் இருந்து வெளிப்பட்டதாகும்.

செய்வதறியாது தவித்தான் - இந்திரன்,

''..சரி.. நாளைக்குத் தருகிறேன்!..'' - என்று சொல்லி விட்டு - அதேபோல ஆறு வடிவங்களை உருவாக்கி - மூல விக்ரகத்துடன் சேர்த்து வைத்தான்.

''.. உண்மையானதை நீரே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்!..'' - என்றான். 

இறையருள் கூடி வர - மூல விக்ரகத்தில் - முசுகுந்தரின் தேடல் நிலைத்தது. அவருடைய தூய அன்பினில் வியந்த தேவேந்திரன் - மற்ற ஆறு வடிவங்களையும் அவருக்கே அளித்து விட்டான்.

அந்த ஏழு விடங்கத் திருமேனிகளுள் முதலாவதானதைத் தனது தலை நகராகிய திரு ஆரூரிலும் மற்ற ஆறினையும் இறைவன் அறிவித்தபடி மற்ற சிவாலயங்களிலும் ஸ்தாபித்தார்  முசுகுந்தர்.  

இருப்பினும், வீதிவிடங்கப் பெருமானை மறக்க இயலாத தேவேந்திரன் - ஏனைய வானவர்களுடன் - 

ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் வீதிடங்கப் பெருமானைத் தேடி வந்து வழிபடுவதாக  ஐதீகம். 

எனவே தான் - வீதி விடங்கரின் சந்நிதியில் - 

இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்யும் முகமாக - அதிகார மூர்த்தியாகிய நந்தியம் பெருமான் - இன்றளவும் நின்ற வண்ணமாக இருக்கின்றார்.




தேரா மன்னா செப்புவதுடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் 
புள்ளுறு புன்கண் 
தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் 
நெஞ்சு சுடத் தான் தன் 
அரும்பெறற் புதல்வனை 
ஆழியின் மடித்தோன்!..



- என்று பாண்டியன் அவையில் - நீதி கேட்டு நின்ற - கண்ணகியால்  சுட்டிக் காட்டப்படும் -

சிபி சக்ரவர்த்தியின் வழித் தோன்றலாகப் புகழப்படும் -

மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்த திருத்தலம்.

தேவார மூவரும் போற்றித் துதித்த திருத்தலம் திருஆரூர்.

மாணிக்கவாசகப் பெருமான் - ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!.. எனத் துதிக்கின்றார்.

கோயில் ஐவேலி, குளம் ஐவேலி - எனப் புகழப்படும் பெருமைக்கு உரியது திருஆரூர்.


தேவார மூவருள் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் அபிமானத் திருத்தலம். 

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் முதல் திருமணம்  - பரவை நாச்சியாருடன்  - இங்கே நிகழ்ந்தது. பின் திருஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணம் புரிந்து கொண்டதும் - ஏற்பட்ட ஊடலைத் தீர்க்க வேண்டி  -

வீதி விடங்கப் பெருமான் வீதியில் நடந்ததும் இங்கேதான்.

சங்கிலி நாச்சியாரைப் பிரிந்ததும் பார்வையிழந்த சுந்தரர் - முதற்கண்ணில் பார்வையைப் பெற்றது   - காஞ்சியில்!..

மறு கண்ணில் பார்வையைப் பெற்றது  - திருஆரூரில்!..

அடியார் புகழ் விளங்க - திருத்தொண்டத் தொகை எனும் நூலை - சுந்தரர் பாடியருளியது  - ஆரூர் திரு மூலத்தானத்தில்!..

ஈசன் வழங்கிய பொற்காசுகளை  - திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலத்தில் - அங்கே ஓடும் மணிமுத்தாற்றில் இட்ட  சுந்தரர் - 

அவற்றைத் திரும்ப எடுத்தது - இங்கே  கமலாலய திருக்குளத்தில்!.. 

அதுமட்டுமின்றி - பொன்னை மாற்றுரைத்து சரி பார்க்க அழைக்கப்பட்ட விநாயகர் அமர்ந்திருப்பது கமலாலயத் திருக்குளக்கரையில்!..

குண்டைக்கிழார் எனும் வள்ளல்  அளித்த நெல் மூட்டைகளை - இறைவனின் பூத கணங்களை - வேலையாட்களாகக் கொண்டு, 

நெல் மலையாகக் குவிக்கச் செய்து - அதை  மக்கள் அனைவருக்கும் சுந்தரர் வாரி வழங்கியதும் - திருஆரூரில் தான்!..


அல்லியங்கோதை தன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே!..(1/105) 
- என்று திருஞானசம்பந்தப் பெருமான் நமக்கு அடையாளங்காட்டுகின்றார்.

நிலைபெறுமாறு  எண்ணுதியேல் நெஞ்சே நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு (6/31)
நெஞ்சே!. நித்தமும் பெருமானின் திருக்கோயில் பணியேற்றால் - நீ, நிலைத்து வாழலாம்!.. என - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது இத்திருத்தலத்தில் தான்!..

திருஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்!..(7/39) 
- எனும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் திருவாக்கு ஒன்றே இத்திருத்தலத்தின் பெருமையை  விளக்கும்.

மூர்த்தி தலம் தீர்த்தம் திருவிழா தேர்  - என பெருஞ்சிறப்பினை உடைய தலம். 

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப் 
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் 
பிழையெலாம் தவிரப் பணிப்பானை 
இன்ன தன்மையன் என்று அறியொண்ணா 
எம்மானை எளிவந்த பிரானை 
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி 
ஆரூரனை மறக்கலுமாமே!..(7/59)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

மார்கழிப் பனியில் - 14

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 14. 


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் 
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..

ஆலய தரிசனம்

ஸ்ரீ வாஞ்சியம்.


இறைவன் - ஸ்ரீவாஞ்சிநாதர்.
அம்பிகை - மங்களாம்பிகை, வாழவந்த நாயகி.
தலவிருட்சம்  - சந்தனமரம்
தீர்த்தம் - குப்தகங்கை.

ஸ்ரீ எனும் திருமகளை அடைய விரும்பிய ஸ்ரீ மஹாவிஷ்ணு,
ஈசனை வேண்டித் தவமிருந்த தலம். 

ஆதலால் - ஸ்ரீ வாஞ்சியம் என்றானது. 

ஸ்ரீவாஞ்சியம் - காசிக்குச் சமமாகக் சொல்லப்படும் ஆறு தலங்களுள் ஒன்று. 

திருவையாறு, திருவிடைமருதூர்,  திருவெண்காடு, மயிலாடுதுறை, திருச்சாய்க்காடு - ஆகியவை மற்ற ஐந்து தலங்கள். 

திருக்கோயிலின் தீர்த்தமாகிய  - குப்த கங்கை எனும் திருக்குளம்  - கோயிலின் நுழைவாயிலின் வடபுறம் பரந்து காணப்படுகின்றது. இந்தக் குளத்தினுள் தான் கங்கை பூரணகலைகளுடன்  சூட்சுமமாகக் கலந்திருக்கின்றாள் என்கின்றது தலபுராணம்.

குப்த கங்கையில் கார்த்திகை - ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி - ஸ்ரீ வாஞ்சி நாதரை வணங்குதல்  சிறப்பு.

தென் புறம் யமதர்மராஜனின் தனிக்கோயில். தெற்கு நோக்கிய சன்னதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் சித்ரகுப்தன்.


எல்லா உயிர்களையும் ஈவு இரக்கமில்லாமல் எடுப்பதனால், பெரும் பழிச் சொல்லுக்கு ஆளாகின்றேனே!.. 

- என்று வருந்திய யம தர்மன் - தன் துயரம் தீர வேண்டி, தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய ஈசன் - 

நீ ஏற்று நடத்தும் பணி ஆன்மாக்களை அறச்செயலில் ஆற்றுப்படுத்துதல் அன்றோ!..மற்ற தேவர்களைக் காட்டிலும் சிறந்தவன் நீ!.. உயர்ந்ததும் உன்னதமானதும்  உனது பணியே!.. 

தர்மங்களைப் பரிபாலிப்பவன் நீ அல்லவோ.. இனி நீ தர்மராஜன் என அழைக்கப்படுவாய்!..

- என திருவருள் பொழிந்ததுடன் திருவாஞ்சியத்தின் க்ஷேத்ரபாலகன் என நியமித்தார்.

தனது பணியின் உன்னதத்தினை உணர்ந்த யம தர்மராஜன் மன வாட்டம் தீர்ந்து அமைதியுற்றார். 


பின்னும் இறைவனை வேண்டி  - ஐயனையும் அம்பிகையையும் சுமந்து சேவை புரியும் வாய்ப்பினை  விரும்பிப்  பெற்றார் யமதர்மன். 

இறைவன் யமதர்மராஜனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்த  திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது.

இத்தலத்தில் வந்து சேவித்தவர்க்கும் நினைத்தவர்க்கும் மரித்தவர்களுக்கும் மரண அவஸ்தை கிடையாது. 
 
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் விளங்குகின்றது.

முன் மண்டபத்தில்  விநாயகர், சுப்ரமணியர் சந்நிதிகள்.   உள்வாயிலைக் கடந்ததும்  மங்களாம்பிகை சந்நிதி . அன்னை நின்ற திருக் கோலத்தினள்..

அடுத்து கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, நர்த்தன விநாயகர் சந்நிதி.  அருகில்  அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கத் திருமேனி உயர்ந்த பாணம்.  தரிசித்து வணங்கும் போதே மனம் அமைதி அடைகின்றது . கவலைகள் எல்லாம் காற்றில் பறந்து எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தாற்போல இருக்கின்றது.

உள் திருச்சுற்றில்  விநாயகர், சுப்ரமணியர், பஞ்ச லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான்  - சந்நிதிகள் உள்ளன. 

ஆறுமுகப்பெருமான் இத்தலத்தில் பன்னிரு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.

இத்திருக்கோயிலில் நவக்ரஹங்கள் இல்லை. ஏனெனில் -

யம வாதனையே  இல்லை!.. என்றான பிறகு நமக்கு என்ன வேலை என்று நவக்கிரக அதிபதிகள் - இறையன்பர்களுக்கும் மெய்யடியார்களுக்கும் எவ்வித துன்பத்தையும் கொடுப்பதில்லை. 


அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவரும் பாடித் தொழுத திருத்தலம்.

ஈசனை - யமதர்மன் பணிந்த வரலாற்றை - அப்பர் சுவாமிகள்  அருள்கின்றார்.

மாணிக்க வாசகர்  - திருவாசகத்தில் -

திருவாஞ்சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 


- என்று போற்றுகின்றார். 

இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி இறைவனுக்கு அபிஷேகம் செய்து, ஆயுள் விருத்தி ஹோமம் அல்லது தில (எள்) ஹோமம் செய்து  அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும் என்பர்.

தஞ்சாவூர் - குடவாசல் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன. நன்னிலத்திற்கு அருகில் (10 கி.மீ) உள்ள திருவாஞ்சியத்திற்கு திருஆரூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான் திகழுந்நகர்
ஒருத்திபாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே!.(5/67) 
திருநாவுக்கரசர்.

சிவாய திருச்சிற்றம்பலம்

சனி, டிசம்பர் 28, 2013

மார்கழிப் பனியில் - 13

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை.
திருப்பாசுரம் - 13.


புள்ளின் வாய்க்கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானக் கீர்த்திமை பாடிப்போய்ப் 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று 
புள்ளும் சிலம்பின காண் பாதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே 
பள்ளிக் கிடத்தியோ.. பாவாய்.. நீ நன் நாளால் 
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!.. 

ஆலய தரிசனம்

திருக்கண்ணபுரம்


மூலவர் - ஸ்ரீநீலமேகப்பெருமாள்.
உற்சவர் - ஸ்ரீ செளரிராஜப்பெருமாள்.
தாயார் - கண்ணபுர நாயகி (ஸ்ரீ தேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி நாச்சியார்)
நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.

தீர்த்தம் - நித்ய புஷ்கரணி
விமானம் - உத்பலாவதகம்
ப்ரத்யக்ஷம் - கண்வ மஹரிஷி, கருடன், தண்டக மஹரிஷி.

மங்களாசாசனம் - பெரியாழ்வார், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள். திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார்.

ஸ்வாமி வரத திருக்கரத்துடன் - ப்ரயோக சக்ர திருக்கோலம்.

பெருமானின் இருபுறமும் ஸ்ரீ தேவி பூதேவியர். இவருடன் இடப் புறம் ஆண்டாள். வலப்புறம் மீனவ குல இளவரசி பத்மினி நாச்சியார் - என, விளங்குகின்றனர்.

உற்சவ மூர்த்தி  - கன்யாதானம் பெறும் நிலையில் திருக்கோலம். திருமங்கை ஆழ்வாருக்கு திருமந்த்ர உபதேசம் செய்யப்பட்ட திருத்தலம்.

ஒருமுறை ஆலய தரிசனம் செய்ய வந்த அரசனுக்கு அளிக்கப்பட்ட மலர் மாலையில் நீண்ட மயிரிழை.  அரசன் அதைக் கண்டு திடுக்கிட்டான்.

தவறு  - திருக்கோயில் அர்ச்சகருடையது.  பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்ட அர்ச்சகர் - தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு பகவானை மனதார வேண்டிக் கொண்டார்.

அரசனிடம் பெருமாளுக்குக் கேசம் வளர்ந்திருப்பதை  - நாளைக்குக் காட்டுவதாக வாக்களித்தார்.

தன் பிழையை உணர்ந்த அர்ச்சகரைக் காப்பாற்ற எண்ணிய பெருமாள் - நீண்டு வளர்ந்திருக்கும் தன் கேசத்தைக் காட்டியருளினார்.

அதனால் - செளரிராஜன் எனத் திருப்பெயர்.

ஸ்ரீ ரங்கத்தில் வேண்டிக் கொண்ட விபீஷணனுக்கு - பெருமாள் தனது நடையழகை இத்திருத்தலத்தில் காட்டியருளியதாக ஐதீகம்.

மகரிஷிகளின் பிரார்த்தனைப்படி - பெருமாள் தன் சக்ராயுதத்துடன் - பிரயோக திருக்கோலத்தில் காட்சி நல்கும் திருத்தலம்.

ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் - மாசிமகத்தன்று தீர்த்தவாரிக்கென - 20 கி.மீ. தொலைவிலுள்ள திருமலை ராயன் பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருள்வார்.

ஏன் அவ்வளவு தூரம்?..

மாசி மகம் கொண்டாட -  மாமனார் வீட்டுக்கு அல்லவா செல்கின்றார்!..


முன்னொரு சமயம், தன்மீது பேரன்பு கொண்டு விளங்கிய பத்மினி எனும் மீனவகுலத் திருமகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால்!..

திருமருகல் ஸ்ரீ வரதராஜன் உடன் வர -
பல்லக்கில் புறப்படும் ஸ்ரீ செளரிராஜனை -

திருமலைராயன் பட்டினம் -
ஸ்ரீ வீழிவரதராஜன்ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசன், ஸ்ரீரகுநாதன்,

நிரவி ஸ்ரீகரிய மாணிக்கம்,
காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணம் ,
கோவில்பத்து ஸ்ரீ கோதண்ட ராமன்

- ஆகிய அறுவரும் எதிர் கொண்டழைக்க,

Thanks - Dinamani
மீனவ கிராமமான பட்டினச்சேரி வழியே கடற்கரைக்குச் செல்கின்றனர்.

வழிநெடுக - மீனவ குல பெருமக்கள், மாப்பிள்ளை சாமி!.. மாப்பிள்ளை சாமி!.. என மகிழ்ந்து கொண்டாடி மகிழ்கின்றனர். பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி பட்டு வஸ்திரம் அணிவித்து தரிசனம் செய்கின்றனர்.

பின்னர் - அஷ்டாட்சரம் என - எட்டு பெருமாள் தரிசனத்துடன் கடற்கரையில் தீர்த்தவாரி கோலாகலமாக நிகழ்கின்றது.

மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!..


- என்று, குலசேகர ஆழ்வார் தாலாட்டு பாடி மகிழ்ந்தது  -
கண்ணபுரத்துக் கருமணியாகிய  - ஸ்ரீசெளரிராஜனுக்குத் தான்!..

ஸ்ரீசெளரிராஜனைத் தரிசிப்பதற்கு என்று - திருக்கண்ணபுரத்தைத் தேடி வரும் எவர்க்கும் வைகுந்தம் நிச்சயம் என்பதால் - இத் திருக்கோயிலில் சொர்க்க வாசல் கிடையாது.

திருக்கோயிலே சொர்க்கம்!..

அதனால் தானே - ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்,

டாக்டர் சீர்காழி S.கோவிந்தராஜன் அவர்கள் ஒரு பக்திப் பாடலை வழங்கினார்.


கண்ணபுரம் செல்வேன்.. கவலையெல்லாம் மறப்பேன்!.. 
கண்ணனின் சந்நிதியில் எந்நேரமும் இருப்பேன்!.. 

எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன்.. 
என்னைத் தெரிகின்றதா.. என்றே கேட்டிடுவேன்!.. 
கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன்.. 
கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்!.. 

கண்ணபுரம் செல்வேன்.. கவலையெல்லாம் மறப்பேன்!.. 
கண்ணனின் சந்நிதியில் எந்நேரமும் இருப்பேன்!..

கிருஷ்ணாரண்யம், கிருஷ்ணக்ஷேத்ரம் - எனப் பலவாறான திருப்பெயர்களை உடைய திருத்தலம்.

நாகப்பட்டினத்திலிருந்து  நன்னிலம் செல்லும் வழித்தடத்தில் - திருப்புகலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவு!..

ஒரே நாளில் திருப்புகலூர் ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமியையும் திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.

திருப்புகலூரும் திருக்கண்ணபுரமும் - இன்னும் எளிமை மாறாத, பசுமை நிறைந்த இனிய கிராமங்கள்.

ஆங்கே - வீற்றிருந்து அருள் புரியும் இறைவனும் அப்படியே!.. 
என்றும் - என்றென்றும் மாறாதவராக!.. 

ஓம் ஹரி ஓம்!..



வெள்ளி, டிசம்பர் 27, 2013

மார்கழிப் பனியில் - 12

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 12. 


கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர 
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச் 
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் 
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

திருப்புகலூர்


இறைவன்  - ஸ்ரீஅக்னீஸ்வரர்
அம்பாள் - ஸ்ரீகருந்தாழ்குழலி

தீர்த்தம் - அக்னி தீர்த்தம். கோயிலுக்கு அருகில் முடிகொண்டான் ஆறு.

தல விருட்சம் - புன்னை. ''புன்னாகவனம்'' எனவும் ''புன்னைப் பொழிற் புகலூர்'' - எனவும் திருமுறைகள் புகழ்கின்றன.

திருக்கோயில் நாற்புறமும் நீர் நிரம்பிய அகழியின்  - நடுவில் இருக்கிறது. 

அக்னி பகவான் மற்றும் பரத்வாஜர் பூஜித்த தலம்.

தேவார  - மூவராலும் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

திருநாவுக்கரசு ஸ்வாமிகள்  முக்தி பெற்ற திருத்தலம். 

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான முருக நாயனாருடைய அவதார ஸ்தலம். 


இவர் வாழ்நாள் முழுதும் இறைவற்கு பூத்தொடுத்து அளிக்கும் பெரும் பணியைச் செய்தனர்.
திருமடத்தில் திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞான சம்பந்தப் பெருமானும்  - எழுந்தருள - அவர்தமக்குப் பணிவிடை செய்யும் பேறு பெற்றவர் - முருக நாயனார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - இத்தலத்துக்கு வந்து சேர்ந்தபோது மாலை மயங்கி இரவாகி விட்டது. 

அந்நிலையில்  - ஈசனிடம் தமக்குப் பொருள் வேண்டும் என்பதைச் சொல்லி விட்டு திருக்கோயிலின் புறத்தே கிடந்த பழைய செங்கல்லைத் தலைக்கு அணையாகக் கொண்டு உறங்கினார். 

மறுநாள் காலையில் எழுந்தபோது -  செங்கல் பொன்னாகி இருந்ததைக் கண்டு வியந்து  - திருப்பதிகம் பாடிப் பரவினார்.

இராஜராஜ சோழன் காலத்தில் இத்திருக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றதையும், 

திருநாவுக்கரசு ஸ்வாமிகளின் திருமேனி எழுந்தருள்விக்கப்பட்டு நித்ய பூஜை நிகழ்த்தப்பட்டதையும் - கல்வெட்டுகள்  அறிவிக்கின்றன.


வாழ்ந்தநாளும் இனிவாழு நாளும்இவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை ஏத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்தன்புக லூரையே
சூழ்ந்தஉள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே!.. (2/115)
திருஞான சம்பந்தர்



பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே!.. (4/16)
திருநாவுக்கரசர்

மிடுக்கிலாதானை வீமனே விறல் 
விசயனே வில்லுக்கு இவனென்று 
கொடுக்கிலாதானைப் பாரியேஎன்று 
கூறினுங் கொடுப்பார் இலை 
பொடிக்கொள் மேனியன் புண்ணியன் 
புகலூரைப் பாடுமின் புலவீர்காள் 
அடுக்கு மேலமரர் உலகம் ஆள்வதற்கு 
யாதும் ஐயுறவில்லையே!.. (7/34)
சுந்தரர்

அப்பர் ஸ்வாமிகள் முக்தி எய்திய சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக் கொண்டு அப்பர் ஸ்வாமிகளின் வரலாற்றை ஒட்டிய ஐதீகத்துடன்  விழா நடைபெறுகின்றது.  வைகாசி மாதம்  பிரமோற்சவம் வெகு சிறப்புடன் நிகழ்கின்றது. 

மூர்த்தி தலம் தீர்த்தம் - எனும் மூன்றினாலும் சிறப்புடைய, திருப்புகலூர் -  நாகப்பட்டினம் - நன்னிலம் , சாலை வழியில் உள்ளது. 

சிவாய திருச்சிற்றம்பலம்!..