நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 30, 2024

உப்பும் உணவும்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 14
திங்கட்கிழமை

உப்பும் உணவும் நம்முடன் இரண்டறக் கலந்தவை..

ஆனால்
இன்றைய சூழலில்


சமீபத்தில் கிடைத்த காணொளி..


தானமாகக் கொடுக்கத்தக்கது உப்பு..

காணிக்கையாகக் கொடுக்கத்தக்கது உப்பு..

அப்படிப்பட்ட உப்பைக் கொண்டு அநியாய்ம் செய்கின்றனர்

இதைப் போல இன்னும்
எத்தனை எத்தனையோ...

இப்படி இருக்கின்றது உனவு வணிகம் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்..

காணொளிக்கு நன்றி

இறைவா எங்களைக் காப்பாற்று..

நாமும் கவனமாக இருக்க வேண்டியது 
அவசியம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, செப்டம்பர் 29, 2024

திருநெடுங்களம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 13
 ஞாயிற்றுக்கிழமை


இறைவன்
ஸ்ரீ நித்யசுந்தரர்.
நெடுங்களநாதர்


அம்பிகை
ஸ்ரீ மங்கலநாயகி 
ஒப்பிலாநாயகி.

தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்..

நினைத்து எழுவார் தம் இடர்களைக் களைகின்ற
இறைவன் உறையும் தொன்மையான திருத்தலம் - திருநெடுங்களம்..

அம்பிகை தவம் செய்த திருத்தலங்களுள் திருநெடுங்களமும் ஒன்று..

 தவஞ்செய்த அம்பிகையின் எதிரே இறைவன் கள்ள உருவில் தோன்றி அம்பிகையின் - கைத்தலம் பற்றினன். 

ஆரென்று உணராத அம்பிகை அச்சமுற்று ஓடி ஒளிந்து கொண்டனள். 

பின்னர் ஐயன் அருள் வடிவங்காட்ட
 அம்பிகை ஐயனை ஆரத் தழுவிக் கொண்டனள்.. ஐயனும் ஆட்கொண்டருளினன் - என்பது தலவரலாறு..

மூலத்தானத்தில் சிவலிங்கத் திருமேனியுடன் அம்பிகையும் அருவமாக உறைவதாக ஐதீகம். எனவே மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து காட்சியளிக்கின்றன..    

இத்திருத்தலத்தில் -
சித்தாசனத்தில் அமர்ந்து, மானும் மழுவும் தாங்கி, 
சின்முத்திரையுடன்  திருநீற்றுப் பெட்டகம் ஏந்திய வண்ணம், 
இடக்காலைச் சுற்றி யோக பட்டம் அணிந்த திருக்கோலத்துடன் ஈசன் -  யோக தட்சிணாமூர்த்தி என விளங்குகின்றனர்.   

அருணகிரி நாதர் பாடிப் பரவிய திருமுருகன் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் திருச்சுற்றில் திகழ்கின்றனன். 

அகத்தியர் வணங்கிய திருத்தலம். 
வங்கிய சோழன் எனும் மன்னன் பூஜித்த தலம். 

திருஞானசம்பந்தர் தரிசித்த திருத்தலம்...

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகத்தின் திருப்பாடல் ஒவ்வொன்றிலும் இடர் களையாய்!.. -  என  விண்ணப்பித்துக் கொண்டிருப்பதால் - 
இடர் களையும் திருப்பதிகம் என்ற சிறப்புடையது..


திருநெடுங்களம் - சோழநாட்டின் காவிரியின் தென்கரையில் உள்ள திருத்தலம். திருஎறும்பூருக்குக் கிழக்கே உள்ளது. 

தஞ்சை - திருச்சி சாலை வழியில் துவாக்குடி வந்து 

அங்கிருந்து வடக்கே - மாங்காவனம் வழித்தடத்தில் செல்ல வேண்டும். 

திருச்சி மாநகரிலிருந்து பேருந்து வசதிகள்  உள்ளன.

அனைத்து விசேஷங்களும் பிரதோஷ வழிபாடுகளும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன.

வாழ்வில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும தரிசிக்க வேண்டிய திருத்தலம் - திருநெடுங்களம்.. 

திருக்கோயிலின் கோபுர வாசலில் ஸ்ரீ கருப்பஸ்வாமியைக் கண்டதுமே நம் கெட்ட வினைகள் ஓடிப்போகும்.

வரமருளும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் - ஸ்ரீதேவி, பூதேவியருடன்  திருச்சுற்றில் விளங்குகின்றார்.

தவிரவும் - திருச்சுற்றில்
நம் கஷ்டங்களைக் கரைத்தருள, அன்னை ஸ்ரீ ஜேஷ்டா தேவி தன் மக்களுடன் கனிவுடன் காத்திருக்கின்றாள். 


ஸ்ரீ ஜேஷ்டாதேவி நம் வணக்கத்துக்கு
உரியவள். 

தேவியின் வலப்புறம் மகன் விருஷபன்..
இடப்புறம் மகள் நமனை..

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பெருமையை நமக்கு உணர்த்துபவள்..

சோம்பல் இல்லாது சுறுசுறுப்பாக இயங்கும் வல்லமையைத் தருபவள்!.  

பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் மாதாந்திரப் பிரச்னைகளை - தாயைப் போல பரிவுடன் தீர்த்து வைப்பவள் ஸ்ரீ ஜேஷ்டா தேவியே!..

ஸ்ரீ ஜேஷ்டாதேவியின் அன்புக்கு நாம் பாத்திரராகி விட்டால் 

எதிர்பாராத விபத்துக்களில் இருந்து நம்மைக் காத்தருளும் பொறுப்பை ஸ்ரீ ஜேஷ்டா தேவியே ஏற்றுக் கொள்கின்றாள் என்பது .ஐதீகம்..

நெய்விளக்கேற்றி வைத்து - ஜேஷ்டாதேவி சந்நிதியின் முன் சற்று நேரம் அமர்ந்திருக்க 

காற்றின் கையில் அகப்பட்ட தூசியாக -
நம் தொல்லைகள் தொலைந்து போயிருப்பதை உணரலாம்..

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னை எதுவாயினும் சரி. 

திருநெடுங்களம் சென்று வந்தால், திரும்பிப் பார்க்கும் பொழுதுக்குள் 

அந்தப் பிரச்னை நம்மை விட்டு  - வெகு தூரத்தில் இருக்கும்!..

இயன்றவரை இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.. 

எம்பெருமானுக்கு விபூதிக் காப்பு செய்து வழிபட்டு -

அந்த விபூதியையே பிரசாதமாக பெற்றுக் கொள்வது நலம் பயக்கும்..

திருநெடுங்களம் - 

இத்தலத்திற்கு இரண்டு முறை சென்றிருக்கின்றேன்..
மீண்டும் மீண்டும் தரிசிக்கும்படியான உணர்வினை நல்கும் திருத்தலம்..

இந்தப் பதிவு 2016 ல் வெளியானதாகும்..
சூழ்நிலையக் கருதி
 மீண்டும் பதிவு செய்கின்றேன்..


நின் அடியார் 
இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!...

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, செப்டம்பர் 28, 2024

தரிசனம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 12
இரண்டாம் சனிக்கிழமை

தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்றைய தரிசனம்..

 நன்றி கூகிள்



இக்கோயில் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது. 

நேபாள மன்னரால் தஞ்சை மன்னருக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்ட சாளக் கிராமக் கல்லினால் ஆன கோதண்ட ராமர் சிலை கருவறையில்.. 
சௌந்தர்ய விமானம்...

கூடவே, சீதாதேவி, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் .. 











ஸ்ரீ கோயிலின் திருச்சுற்றில் ஸ்ரீ இராம காதை -அழகிய சித்திரங்களாகப் பொலிகின்றன..

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் திருச்சுற்றின் வடபுறத்தில் தெற்கு முகமாகத் தனிச் சந்நிதியில் விளங்குகின்றார்..

புன்னை  மரம் தலவிருட்சம்..





 திருக்கோயிலுக்கு மன்னர் செய்தளித்த தேர் எங்கேயோ போய் விட்டது.. 

இப்போது தேர்நிலை மட்டுமே... 


தேர்நிலையைக் காப்பாற்றுவதற்காக அங்கே ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பிரதிஷ்டை செய்ய ப்பட்டுள்ளார்..

அனைவரும் தரிசிக்க வேண்டிய கோயில் புன்னை நல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்..

இக்கோயில் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குப் பின் புறம் 250 மீ., தொலைவில் அமைந்துள்ளது..

ஸ்ரீ ராம ராம 
ஜெய ராம ராம

ஓம் ஹரி ஓம் 
***

வெள்ளி, செப்டம்பர் 27, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 11
வெள்ளிக்கிழமை

கச்சித் திருப்புகழ்

தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன ... தனதான


கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய 
மச்சக் கொடிமதன் ... மலராலுங்

கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை 
அச்சப் படவெழு ... மதனாலும்

பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது 
சொச்சத் தரமல ... இனிதான

பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய 
செச்சைத் தொடையது ... தரவேணும்

பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய 
கச்சிப் பதிதனி ... லுறைவோனே

பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட 
உற்றுப் பொரவல ... கதிர்வேலா

இச்சித் தழகிய கொச்சைக் குறமகள் 
மெச்சித் தழுவிய ... திருமார்பா

எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட வெட்டித் 
துணிசெய்த ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-


கச்சையுடன் கூடிய தனங்களைத் 
தைத்துக் கொண்டு ஊடுருவிய
மீன் கொடி மதனுடைய
பூங்கணைகளாலும், 

கறைகள் உடைய கலைகளுடன் கூடிய சந்திரன்
ஆலகால விஷத்தை உடைய கடலின் இடையே இவள் அச்சப்படும்படி எழுந்துள்ளதாலும்,

 இந்தத் தலைவி பித்துப் பிடித்து மனம் இளைத்துத் தளர்ச்சி அடைவது சாமானியமானது அல்ல..

ஆதலால், முருகா 
இனிமை தரும் ஜாதி மல்லிகையின் புது மலர்களை வைத்துத் தொடுக்கப்பட்ட வெட்சி மாலையை இவளுக்கு நீ தந்தருள வேண்டும்...

பச்சை நிற உமையம்பிகை  அன்புடன்  பூஜை செய்தருளிய காஞ்சி மா நகரத்தில் உறைபவனே,

உனைப் பற்றிப் பணிபவர்களது
 குற்றங்கள் ஒழியவும்
அவர்களது பகைவர்கள் அழிந்து போகவும் 
வந்தருளி போர் புரிகின்ற  கதிர் வேலனே,

இன் மொழி பேசுகின்ற  வள்ளி நாயகி காதலுடன் 
மெச்சித் தழுவுகின்ற அழகுத் திரு மார்பனே,

குலகிரி ஏழுடன் கிரெளஞ்ச மலையையும் சேர்த்து 
அதுவும் பொடியாகும்படிக்குச் செய்தவனே...
அசுரர்களை வெட்டித் துணித்த பெருமாளே..


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
**

வியாழன், செப்டம்பர் 26, 2024

சந்தனக்காப்பு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 10
வியாழக்கிழமை


எங்கள் குடியிருப்பிலுள்ள ஸ்ரீ கார்ய சித்தி விநாயகப் பெருமானுக்கு கடந்த விநாயக சதுர்த்தியை அடுத்த மூன்றாம் நாள் சந்தனக்காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது..

ஸ்வாமியின் அலங்கார தரிசனம் இன்று..

பதிவின் வழி 
தரிசனக் காட்சி


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா
-: ஒளவையார் :-

அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் - நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்..
-: விவேக சிந்தாமணி :-


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதரும் சித்திதரும் தான்..
-: பழந்தமிழ்ப் பாடல் :-

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம் 
தப்பாமற் சார்வார் தமக்கு..
-: ஔவையார் :-


கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே..
-: கபிலர் :-

ஓம் கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், செப்டம்பர் 25, 2024

சோயா 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 9 
புதன் கிழமை


சோயா சக்கை
Meal Maker

புலால் உணவுக்கு மாற்று  என்று சொல்லி விற்கப்படுகின்றது..

சிலர் இதனையும்
வக்கணையாக சமைத்துக் கொடுத்து கல்லா கட்டுகின்றனர்.. 

மக்களும் உமிழ் நீர் ஒழுக Veg Mutton  என்றும் Veg Chicken என்றும் சோயா சக்கையை உண்டு மகிழ்கின்றனர்..

சரி.. 

சோயாவின் சக்கை தான் Veg Mutton, Veg Chicken என்றால், 

Veg இரத்தம் எங்கே.
Veg குடல் எங்கே..

Veg எலும்பு எங்கே டா..
Veg எலும்பு எங்கே?..

விரைவில் இப்படி எல்லாம் கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் பிறக்கின்றது..

ஆனால் எந்த உணவும் எதற்கும் ஈடு கிடையாது,

இது இது தான்..
அது அது தான்!..

சோயா சக்கை (Meal Maker) மனிதருக்கு நல்லதா... கெட்டதா?..

நலம் தருமா?.. நலிவைத் தருமா?..

இன்று வரை உறுதி செய்யப்படவில்லை.. என்றாலும்,


Meal Maker என்று அறியப்படுகின்ற சோயாவின் சக்கை -
குறிப்பாக புரோட்டீன் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு உகந்தது என்றொரு பொதுவான கருத்து..

Meal Maker ல் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியன ஓரளவுக்கு எச்சமாக உள்ளன. 

இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு  நல்லது தான்.. 

இவை  உடலில் உள்ள
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொழுப்பினை  அதிகரிக்கின்றன..


(புரதமும் அதன் விளைவாக) புலால்
ருசியும் அதிகமாகக் காணப்படுவதால், தினமும் இதனை  உண்பவர்கள் இருக்கின்றார்கள்.. 

தினமும் Meal Maker உண்பதால் அதாவது அளவுக்கு மிஞ்சியதாக அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன் சமநிலை மாறிவிடும்.

இதனால் இளம் பெண்களுக்கான ஒழுங்கமைவு சீர் கெடுகின்றது.. ஆண்களுக்கு ஹார்மோன்  தடுமாற்றம்
 ஏற்படுகின்றது... 

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்ற அபாயமும் ஏற்படலாம்..

Meal Maker ல் புரதம் மட்டுமே அதிக அளவில் காணப்படுவதால்  உடலில் மற்ற ஊட்டச் சத்துகளின் குறைபாடு நிச்சயம் ஏற்படும்
என்றும் சொல்லப்படுகின்றது

எந்த வகையான உணவு ஆனாலும் அளவுடன் உண்பதே   சிறப்பு.  

நாக்கு ருசியின் 
காரணமாக ஒரே வகையான உணவை  நாள்தோறும் அதிக அளவில் தின்று தீர்ப்பது நல்லதல்ல ... 

ஒரு நாளில் 25 முதல் 50 கிராம் மட்டுமே Meal Maker உண்ணலாம் என்கின்றனர் ஊட்டச் சத்து வல்லுநர்கள்... 

தொகுப்பில் துணை -
இணையம்.. நன்றி..


இந்த அளவில் -  
ஏதோ ஒரு நினைப்புடன்
வாரத்தில் இரண்டு நாட்கள் ...

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து..

சொல்றது எல்லாம் நல்லாத் தான் இருக்கு.. 

ஆனா, மனக் குரங்கு கேட்கணுமே!..

கேட்கவா போகின்றது?..

நான் ஆரோக்கியமாக இருந்த நாளிலேயே இதிலிருந்து ஒதுங்கி விட்டேன்.. ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது..  

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்..

 படங்களுக்கு  நன்றி
கூகிள்

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
***

செவ்வாய், செப்டம்பர் 24, 2024

மேலவெளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 8
செவ்வாய்க்கிழமை

மேலவெளி

தஞ்சை மாநகரின் மேற்கு எல்லையில் மாநகராட்சிக்கு உள்ளேயே பூதலூர் சாலையில்  அமைந்துள்ள சிறு கிராமம் தான் மேலவெளி..

பூதலூர் சாலை வளைவில்  நேர் வடக்காக ஒரு கிமீ தொலைவில் வடவாறு. ஆற்றின் கரையில்   பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்ததாக வரலாறு.. இங்கு ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது..

இந்த மேலவெளி கிராமத்தில் வடக்கு முகமாக இருக்கின்ற தொன்மையான அம்மன் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில்  திருக்குடமுழுக்கு நடை பெற்றுள்ளது..
 
21/8 அன்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனையை முன்னிட்டு சென்றிருந்த போது இக்கோயிலைக் கண்டு மெய் சிலிர்த்தேன்... 

உச்சிப் போது ஆகி விட்டபடியால் நடை சாத்தப்பட்டிருந்தது.. 

அம்மன் கோடியம்மன்.. சிலா ரூபமாக அருள்கின்றாள்.. விநாயகர் கருப்பசாமி நாகர் - என, பரிவார மூர்த்திகள்..  

கூடவே தழைத்திருக்கின்ற அரசு வேம்பு... அருகில் பிரம்மாண்டமான முனீஸ்வரர்..

மனதுக்கு  இதமாக இருந்தது.. பத்து நிமிடம் அங்கு இருந்து மகிழ்ந்தோம்..

21/8 அன்று எடுக்கப்பட்ட காட்சிகள் தங்களுக்காக..














மேலவெளி எல்லையிலே
மேன்மை கொண்டு இருப்பவளே
மேலான நினைவுகளை
நெஞ்சந்தனில் வைப்பவளே..

கோடியம்மன் என்று இங்கே
கோயில் கொண்டு இருப்பவளே..
குற்றங்குறை பொறுத்தருளி
கோடி நலம் தந்திடம்மா..

தேடி வந்த அடியனுக்கு
தேக பலம் தந்திடம்மா
நாடி வந்த பாலனுக்கு
பாத பலம் தந்திடம்மா

திக்கு திசை அறியாமல்
திகைத்திருக்கும் எளியனுக்கு
தீப ஒளியாக வந்து
திருவருள் கூட்டிடம்மா..

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
**
ஓம்  சிவாய நம ஓம்
***

திங்கள், செப்டம்பர் 23, 2024

தக்ஷிணமேரு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 7 
  திங்கட்கிழமை

(பதிவிலுள்ள படங்கள் 
சென்ற ஆண்டில் கிடைத்தவை)


அதுவரைக்கும் வரலாற்றில் இல்லாதபடிக்கு தஞ்சை மாநகரில் -  விண்ணுயரத்துக்கு பெருங்கோயில் ஒன்றினை தட்சிணமேரு என்று மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழர் எழுப்பியபோது, அந்த ஸ்ரீ விமானத்தில் கயிலாயத் திருக்காட்சியைப் பதித்து வைத்தார்..



கயிலை  என்று இன்றைக்கு நாம் காணும் காட்சி கயிலாயத்தின் தென்முக தரிசனம் ஆகும்..

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் - 
மாமன்னர் உருவாக்கித் தந்த  கயிலாயத் திருக்காட்சி - இன்று நாம் காணும் தென்முக தரிசனத்தை ஒத்து இருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்..

திருக் கயிலாயம்

மாமன்னர் ராஜராஜ சோழர்  கயிலையங்கிரிக்குச் சென்று தரிசித்ததாக எந்தச் சான்றும் கிடையாது.. ஆயினும் இப்படி கயிலாயக் காட்சி அமைக்கப்பட்டது எப்படி?..


கயிலாயத்தின் தென் முகத்தை மன்னனுக்கும் சிற்பிகளுக்கும் உணர்த்தி இன்று நாம் தரிசிக்கும்படிக்கு செய்வித்த சக்தி எது!?..


 நேற்று
தக்ஷிணமேரு எனப்பட்டதன் விளக்கம் 
இப்போது தெரிந்திருக்கும்!..

தஞ்சை சிவாலயக் கோட்டை வலம் 
மூன்று கிமீ., என்கின்றனர்..

நெரிசலில் அதிக பட்சம் 
ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கலாம்..


உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக் காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா
வேதிச்சுரம் விவீச்சுரம் ஒற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங்
கயிலாய நாதனையே காண லாமே.  6/70/8
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***