நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 17
வியாழக்கிழமை
பத்து ஆண்டுகளுக்கு மேல் குவைத் நாட்டில் உணவகப் பொறுப்பாளராக இருந்திருக்கின்றேன்..
அந்த வகையில்
ஆலிவ் எண்ணெய் பழக்கப்பட்ட ஒன்று.. மிகவும் பிடித்தமான ஒன்று..
அந்த அளவில் தான் ஆலிவ் எண்ணெய் பற்றிய பதிவும்..
அங்கே பணி செய்த எனக்கு அங்குள்ள உணவுப் பொருள் பாதுகாப்பு விதிமுறைகள் தெரியும்...
சமையலுக்கான பொருட்களையும் சமைத்த உணவுகளையும் எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி நன்றாகத் தெரியும்..
ஆப்பிளில் இருந்து ஆட்டுக்கறி வரை எதுவானாலும் பலவித பரிசோதனைகளைக் கடந்தே சமையல் கூடத்திற்கு வந்து சேர வேண்டும்...
அவற்றைப் பற்றி வேறொரு சமயத்தில் பேசுவோம்..
அரபு நாட்டின் அளவுக்கு தரத்தை நிர்ணயிப்பதில் இங்கே - பற்பல நடைமுறை சிக்கல்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்..
பொய்யும் புளுகுமான இன்றைய பொது நடைமுறையில் நல்ல உணவுகளைப் பற்றி சிறு குறிப்புகள் - விழிப்புணர்வு. - என்ற அளவில் தான் எனது பதிவுகள்..
மற்றெந்த தயாரிப்புகளையும் பதிவின் வாயிலாக முன்னிலைப் படுத்துவது இல்லை..
நானறிந்தவற்றுடன் பொதுவான விவரங்களையும் சேகரித்துத் தொகுத்து பதிவில் வழங்கிக் கொண்டிருக்கின்றேன்..
உடல் நிலையில் சிற்சில பிரச்னைகள் என்றாலும் பொழுது நல்லபடியாக இருக்கின்றது.. காரணம் தங்களது அன்பும் ஆதரவும்..
காலம் முழுவும் அலுவலகப் பணி செய்து விட்டு இப்போது ஓய்ந்திருக்க இயலாது.. எனக்குத் தெரிந்தது எல்லாம் எழுதுவது ஒன்று தான்..
அதனாலேயே தமிழைப் பற்றிக் கொண்டிருக்கின்றேன்..
தருமபுர ஆதீனத்தின் தேவாரத் திருமுறைகளில் தேடுவதில் பொழுது செல்கின்றது..
இவ்வாறு தான்
விக்கியின் தகவல் தொகுப்புகளிலும்...
விரல்களில் சற்று வலி - தளர்வு என்பதால் தட்டச்சு செய்வதில் பிரச்னை.. இப்போது வருகின்ற பதிவுகள் எல்லாம் தட்டுத் தடுமாறி செய்யப்படுபவை தான்..
கணினியை விட்டு வெளியேறி ஐந்து வருடங்கள் ஆகின்றன.. எனது வேலைகள் எல்லாமே கைத்தலபேசியில் தான்..
பதிவுகளுக்கு வருகின்ற நண்பர்களது கருத்திற்கு பதிலளிக்க இயலாத குற்ற உணர்ச்சியும் என்னுள் இருக்கின்றது..
அந்தப் பிழைக்காக மன்னிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்..
இயற்கை உணவு என்ற வரிசையில் பொதுவான குறிப்புகளைத் தான் தருகின்றேன்..
இந்த நிறுவனத்தின் செக்கு எண்ணெய் தான் சிறந்தது என்கிற மாதிரி - நான் எதுவும் செல்வதில்லை.. எழுதுவதில்லை..
வீட்டின் அருகில் பசும் பால கிடைக்கின்றது.. அடைக்கப்பட்ட பால் வாங்குவதில்லை...
கீழவாசல் கடைத்தெருவில் ஊத்துக்குளி வெண்ணெய் தினசரி வருகை.. வாங்கி உருக்கிக் கொண்டால் கலப்படமற்ற - நெய்!..
பல ஆண்டுகள் பழக்கப்பட்ட எண்ணெய் மண்டி.. அங்கே தான் நல்லெண்ணெயும் பிறவும்..
தற்போது ஏற்பட்டுள்ள ஒவ்வாமையால் நான் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வதில்லை..
மஞ்சள் தூள், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி எல்லாமே எங்களது தயாரிப்பு தான்..
விளம்பரத்தில் ஆடல் பாடல்களைப் பார்த்து விட்டு - அந்த மயக்கத்துடன் கடைகளில் மசாலாப் பொடி எதுவுமே வாங்குவதில்லை...
நியாய விலைக் கடையில் கோதுமை கிடைக்காமல் போகும் போது வெளியில் வாங்கி அரைத்துக் கொள்கின்றோம்..
மைதாவின் சேர்க்கையில் லொட்டு லொசுக்கு என்று எதுவும் செய்வது கிடையாது..
புலால் உணவில் இருந்து விலகி ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன...
வெளியில் செல்கின்ற போது தேநீர் என்றால் சிவநெறி அல்லாத டீக்கடைக்குள் நுழைவதே இல்லை..
பெரு நகரங்களில் இதெல்லாம் மிகவும் சிரமம்..
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று..
- கவியரசரின் பொன்னான வரிகள்..
நமக்காக நம் கையால் செய்வது நன்று - என்று சொல்லப்பட்டாலும் -
வாய்ப்பும் வசதியும் கூடி வந்தால் தான் எல்லாமே!..
சமீபத்திய பதிவுகளில் குற்றம் குறைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்..
தஞ்சாவூர் பொடியன் |
இன்று போல்
என்றும் தங்களது அன்பினையும் ஆதரவினையும் நல்கிட வேண்டும் - என, கேட்டுக் கொள்கின்றேன்..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..
சிவாய திருச்சிற்றம்பலம்..
***