திருவையாற்றில் தேர் என்று - வண்டி கட்டிக் கொண்டு செல்வதையும்
கும்பகோணத்தில திருவிழா.. என்றும் திருவாரூர்ல தேர்.. என்றும் ஆரவாரமாக மக்கள் புறப்பட்டுச் செல்வதையும் கண்டிருக்கின்றேன்..
அப்போதெல்லாம் மனம் கிடந்து அடித்துக் கொள்ளும் -
நம்ம ஊர்ல ஏன் தேர் ஓடலை.. - என்று.
வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டபோது கிடைத்த விடை -
அதெல்லாம் இத்துப் போய் வெகு நாளாச்சு!..
நான் முதல்முதலாக சின்ன வயதில் தரிசித்த தேரோட்டம் - திருச்சுழியில்.
தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம் - திருச்சுழி.
அருப்புக் கோட்டைக்கு அருகில் உள்ளது.
அதன் பிறகு விவரம் அறிந்த வயதில் - திருஆரூர், கும்பகோணம், திருஐயாறு, மதுரை, பந்தநல்லூர், திருப்பனந்தாள், பட்டுக்கோட்டை, மன்னார்குடி - எனும் திருத்தலங்களில்..
அங்கெல்லாம் தரிசனம் செய்யும் போது ஆழ் மனதில் அலையடித்துக் கொண்டிருக்கும்..
நம் ஊரில் தேர் ஓடுவது எப்போது!..
இந்த எண்ண அலைகள் பலரது நெஞ்சக் கடலிலும் புரண்டிருக்கும் போல!..
2010-ஆம் ஆண்டுகளில் - தஞ்சை தினத்தந்தியிலும் தினமணியிலும் சிறப்புச் செய்தியாக தஞ்சை பெரியகோயில் தேரினைப் பற்றி வெளியிட்டிருந்தார்கள்..
அதன் பிறகு - தஞ்சை பெரிய கோயில் திருவிழாவில் தேரோட்டம் நிகழ வேண்டும் என்ற எண்ணங்கள் வலுப்பெற்றன.
அதன் விளைவு - 2013ல் தமிழக அரசு - தஞ்சை பெரியகோயிலுக்குப் புதிய தேர் செய்ய ஆதரவளித்து 50 லட்ச ரூபாயினை ஒதுக்கியது.
மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய மக்களுள் நானும் ஒருவன்.
ஸ்ரீகொங்கணேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் புதிய தேர் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஸ்தபதி திரு வரதராஜன் தலைமையில் தொடங்கப்பட்டன.
அதன்பின் - ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலின் எதிரில் திருப்பணி நடைபெற்று - தேர் வடிவம் பெற்று நின்றது.
புதிதாக உருவாக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் ஏப்ரல்/20 அன்று - சிறப்பாக நடைபெற்றது.
|
நன்றி - Baskie Photography. |
|
தேர் வெள்ளோட்டம் |
தேர் வெள்ளோட்டப் படங்கள் - Baskie Photography.
அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!..
பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேலையில் - நாளை (29/4) பதினைந்தாம் திருநாளன்று தேரோட்டம் நிகழ இருக்கின்றது.
வெள்ளோட்டத்திற்குப் பிறகு - தேரினை அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
பல்வேறு வண்ணங்களில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச் சீலைகளால் தேர் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உச்சி சிகரத்தில் கலசம் வைக்கப்பட்டு, பிரம்மாண்டமாக பெரிய கோயிலைப் போலவே காட்சி அளிக்கின்றது.
அலங்காரங்கள் பூர்த்தியானதிலிருந்து - நாளும் நாளும் மக்கள் திரண்டு வந்து தேரினைக் கண்டு மகிழ்வதாக செய்திகள் கூறுகின்றன.
நாளை காலை 5.30 மணியளவில் யதாஸ்தான பூஜைகளுக்குப் பின் -
ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர்,
ஸ்ரீ நீலோத்பலாம்பிகை உடன் ஸ்ரீதியாகராஜர் ஸ்ரீபெரியநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் - ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தேர் மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றனர்.
புதிய தேரில் எழுந்தருளும் பெருமான் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி.
நீலோத்பலாம்பிகையுடன் உறைபவர். ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தி.
தஞ்சை அழகர் என்றும் தஞ்சை விடங்கர் என புகழப்படுபவர் - இவரே!..
ஆதி மூர்த்தியாகிய - வீதி விடங்கப் பெருமானின் திருமேனியை - தேவலோகத்திலிருந்து கொணர்ந்தவர் - முசுகுந்தச் சக்ரவர்த்தி.
வீதி விடங்கப் பெருமான் ஆரூரில் ஸ்தாபிக்கப்பட்டதோடு கூட இருந்த ஆறு திருமேனிகளையும் மேலும் ஆறு திருத்தலங்களில் நிறுவினார்.
ஆரூர் வீதிவிடங்கப் பெருமானே சோழர்களின் ஆத்மார்த்த மூர்த்தி..
எனவேதான் - ஆரூர் வீதி விடங்கரின் சாயலாக - தஞ்சையிலும் வீதி விடங்கப் பெருமானை மாமன்னன் ராஜராஜ சோழன் வடிவமைத்து வணங்கி நின்றான்.
அர்த்த மண்டபத்தின் வலப்புறமாக விளங்கும் ஸ்ரீதியாகராஜ சந்நிதியின் எதிர்ப் புறம் கூப்பிய கரங்களுடன் - மாமன்னன் ராஜராஜ சோழனின் திருமேனி திகழ்கின்றது.
இங்கே - தினமும் அந்திக் காப்பு எனும் சாயரட்சை வழிபாடு மிகச் சிறப்பாக நிகழும்.
இத்தகைய பெருமையுடைய -
ஸ்ரீதியாகராஜ மூர்த்தி நீலோத்பலாம்பிகையுடன் திருத்தேரில் எழுந்தருளி பவனி வருகின்றார்.
மங்கள வாத்தியத்துடன் சிவகண வாத்திய முழக்கம் மற்றும் பறையொலி கூத்தொலியுடன் விநாயகப் பெருமான் முன் செல்ல , காலை 6.45 மணிக்குள் புதிய திருத்தேரின் வடம் பிடிக்கப்படும்.
நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வரும் திருத்தேர் - ஸ்வாமி தரிசனம் மற்றும் பக்தர்களின் அர்ச்சனைக்காக - ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றது.
திருத்தேர் நிறுத்தப்படும் இடங்கள்:-
மேல ராஜவீதியில் -
1) ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் அருகிலும்
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயில் ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயில்
ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோயில்களைக் கடந்து
2) ஸ்ரீமூலை ஆஞ்சநேயர் திருக்கோயில் அருகில் தேர் நின்று செல்லும்.
தொடர்ந்து - வடக்கு ராஜவீதியில் -
3) ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயில் அருகிலும்
4) ஸ்ரீ ரத்னபுரீஸ்வரர் திருக்கோயில் அருகிலும் தேர் நின்று செல்லும்.
தொடர்ந்து - கீழ ராஜவீதியில் -
5) கொடிமரத்து மூலை ஸ்ரீமாரியம்மன் கோயில் அருகிலும்
6) ஸ்ரீ விட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் (அரண்மனை எதிரில்) அருகிலும்
7) ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில் அருகிலும்
8) ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அருகிலும் தேர் நின்று செல்லும்.
தொடர்ந்து - தெற்கு ராஜவீதியில் -
9) ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அருகிலும்
10) ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் அருகிலும்
11) ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோயில் அருகிலும் தேர் நின்று செல்லும்.
தேரோட்டத்தின் நிறைவில் - மேலராஜவீதியில் - தேர் நிலை நிறுத்தப்படும்.
நூறாண்டுகளுக்கும் மேலாக நின்று போயிருந்த தேரோட்டம் நாளை புதன் கிழமை மங்கலகரமாக நடைபெற இருக்கின்றது.
திருக்கோயிலும் பிரம்மாண்டம். திருத்தேரும் பிரம்மாண்டம்.
தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள மராட்டியர்களின் மோடி ஆவணங்களில் நூறாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்த் திருவிழாவினைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1813-ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த திருவிழாவின் போது -
திருவையாறு (1900) பாபநாசம் (2800) கும்பகோணம் (3494) கீவளூர் (4500)
மயிலாடுதுறை (3480) திருஆரூர் (2920) மன்னார்குடி (4200) நன்னிலம் (3200) - ஆகிய ஊர்களில் இருந்து தேரிழுக்க 26,494 ஆட்கள் திரண்டு வந்ததாகவும் -
கோயில் வாகனங்களைத் தூக்குவதற்கு திருவையாற்றிலிருந்து 900 ஆட்கள் வந்ததாகவும் அறியமுடிகின்றது.
மேற்குறித்த மோடி ஆவணக் குறிப்புகள் திரு Dr. B. ஜம்புலிங்கம் அவர்களின் பதிவில் இருந்து பெற்றவை.
இத்தகவல்களில் இருந்து - அன்றைய திருவிழாவின் பிரம்மாண்டத்தினை உணர முடிகின்றது.
|
நன்றி - Baskie Photography |
தேர்த் திருவிழாவினைக் காண்பதற்காக - தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் - என வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
நாளை தேரோட்டத்தை முன்னிட்டு - தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை - என, மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
|
நன்றி -முகம்மது ஜாவீத் |
அழகிய படங்களை வழங்கியவர் - திரு H. முகம்மது ஜாவீத்.
காணொளிகளை வழங்கியோர் - தஞ்சாவூர் FB.
அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி - என்றும் உரியது.
* * *
ஊர் கூடித் தேர் இழுப்பது!.. - என்ற சொல்வழக்கு சிறப்புடையது.
தஞ்சையில் நிகழும் தேர்த் திருவிழாவினைக் காண
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்..
மகிழ்ச்சியும் பக்திப் பெருக்கும் ததும்பும் தருணம் - இது..
என் இருகண்ணிலும் நிறுத்தி எப்போதும் நினைத்திருப்பது தஞ்சையம்பதியைத்தான்!.. பெரியகோயிலைத் தான்!..
எங்கிருந்த போதும் - அம்மையப்பனின் அருகிருப்பதாக உணர்வு!..
ஆடிவரும் அழகுத் தேரினை அருகிருந்து காணும் நாள் எந்நாளோ!..
அன்புமிகும் அம்மையப்பன் அருள்புரிவர் - அந்நாளை!..
சிந்தை எல்லாம் சிவமாகி செழிக்க
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.