நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 19, 2021

தீபத் திருநாள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
திருக்கார்த்திகை
தீபத் திருநாள்..


ஈசனுக்கும்
எம்பெருமான்
முருகவேளுக்கும்
உரிய பொன்னாள்

ஞானசம்பந்த மூர்த்தி
தமது திருவாக்கினால்
குறித்தருளும்
நன்னாள்..

அடியும் முடியும் காண்பதற்கு
இயலாதபடி
அக்னிப் பிழம்பாக
அண்ணா மலையில்
ஈசன் விளங்கி நின்ற நாள்
இதுவே..

அண்ணா மலை எனில்
அணுக இயலாத மலை
என்பர் ஆன்றோர்..

அண்ணாமலையைத் தரிசித்து
திருஞானசம்பந்தப் பெருமானும்
திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
அருளிச் செய்த
திருப்பதிகங்களின்
திருப் பாடல்கள்
இன்றைய பதிவில்!..


உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள்
மழலைம் முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை
வழுவா வண்ணம் அறுமே..(1/10)
-: திருஞானசம்பந்தர் :-

பூவார்மலர் கொண்டு அடியார் தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க் கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித்
தொறுவின் நிரை ஓடும்
ஆமாம்பிணை வந்து அணையுஞ் சாரல்
அண்ணா மலையாரே..(1/69)
-: திருஞானசம்பந்தர் :-


உருவமும் உயிரும் ஆகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்ற எம்பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும்
அண்ணாமலை யுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால்
மற்றொருமாடி லேனே..
(4/63)
-: திருநாவுக்கரசர் :-

வானனை மதிசூடிய மைந்தனைத்
தேனனைத் திரு அண்ணா மலையனை
ஏனனை இகழ்ந்தார் புர மூன்றெய்த
ஆனனை அடியேன் மறந் துய்வனோ.. (5/04)
-: திருநாவுக்கரசர் :-

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே..(5/05)
-: திருநாவுக்கரசர் :-
***
சில தினங்களுக்கு முன்பு
நான் உடல் நலம் குன்றியிருந்தபோது
அன்புடன் நலம் கேட்ட
வலைத்தள அன்பர்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

பாசமும் நேசமும்
மகிழ்வும் நெகிழ்வுமாக
அன்பெனும் தீபங்கள்
இல்லங்கள்தோறும்
ஒளிர்வதற்கு வேண்டிக் கொள்வோம்..

அனைவருக்கும்
கார்த்திகைத் திருநாள்
நல்வாழ்த்துகள்..
-:-

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும்
காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், நவம்பர் 18, 2021

வாராது வந்த மா மணி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

" ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மா மணியைத் தோற்போமோ?.. "

- என்று மகாகவி
மனம் வருந்தி உருகிய
மா மனிதர்
கப்பலோட்டிய தமிழர்
ஸ்ரீ வ.உ. சி. அவர்களது
நினைவு நாள்..


இம்மண்ணுக்காக
நமது சுதந்திரத்துக்காக
கற்பனைக்கெட்டாதபடி
துன்பங்களைச் சுமந்த
பெருமகன்..

ஆங்கிலேயரை எதிர்த்து
கப்பல் நிறுவனத்தை
நடத்தியதற்காக
சிறைக் கொட்டடியில்
கருங்கல் உடைக்கவும்
கடுஞ்செக்கு இழுக்கவும்
என்று - சொல்லொணாத
துயரங்களை அனுபவித்து
மறைந்தார்..


மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள்
செக்கடியில் நோவதுவும்
காண்கிலையோ..
-: மகாகவி :-


இன்று நாம் சுவாசிக்கும்
சுதந்திரக் காற்றில்
தீயாய்க் கனன்ற
தியாக தீபங்களின்
உயிர் மூச்சும் கலந்திருக்கின்றது
என்பதை மறவாது
தாய் நாட்டின் நலனுக்கு
இயன்றதைச் செய்வதே
அன்னவர் தமக்கு
நாம்  செலுத்தும் மரியாதை..

வாழ்க
கப்பலோட்டிய தமிழர் புகழ்!..

வந்தேமாதரம்..
வந்தேமாதரம்!..
***

புதன், நவம்பர் 17, 2021

சரணம் ஐயப்பா..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை முதல் நாள்


கலியுக வரதனாகிய
ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியை
தரிசிப்பதற்காக
விரதம் மேற்கொள்வோர்
மாலையணியும்
நன்னாள்..

இவ்வேளையில்
தமிழ் மாலை ஒன்றினை
எம்பெருமானின்
திருவடித் தாமரைகளில்
சமர்ப்பிக்கின்றேன்..

ஸ்ரீ ஐயப்பனின்
அடியார் குழாத்தினுள்
எளியனும் ஒருவன்..

இப்பாடல் 1980 ல்
திரு K. வீரமணி
அவர்கள் பாடியளித்த
" மார்கழி மாதம் ஊர்வலம்
போகும் மக்கள்
கோடி ஐயப்பா!.. "
எனும் பாடலின்
இசை வடிவினை
அடிப்படையாகக் கொண்டது..


தென்கடல் நாடி தீர்த்தங்கள் ஆடி
திருநடை வந்தோம் ஐயப்பா..
திருமுகம் காட்டு தீவினை ஓட்டு..
திருவடி தொழுதோம் ஐயப்பா!..

சரணம் ஐயப்ப சரணம்..
சரணம் ஸ்வாமி சரணம்...

உன் பெயர் பாடி உனதருள் நாடி
நடைவழி வந்தோம் ஐயப்பா!...
வன்புலி ஆனை உலவிடும் வனத்தில்
வழித்துணை நீயே ஐயப்பா..
வழித்துணை நீயே ஐயப்பா!..

சரணம் ஐயப்ப சரணம்..
சரணம் ஸ்வாமி சரணம்..

அழுதை எனும்நதி ஆடிடும் முன்னே
பேட்டைகள் துள்ளிய எரிமேலி
ஆனந்தம் பாடி அகமகிழ்ந் தாடி
அருள் நிலை கண்டோம் ஐயப்பா..
அருள் நிலை கண்டோம் ஐயப்பா!..

சரணம் ஐயப்ப சரணம்..
சரணம் ஸ்வாமி சரணம்...


கரிவலந் தோட்டில் கால் நனைத்து
அந்தக் கரிமலை ஏற்றம் கண்டோமே..
கைகொடு சாமி என்றுனை வேண்டி
நின்னருள் கொண்டு நடந்தோமே..
நின்னருள் கொண்டு நடந்தோமே!..

சரணம் ஐயப்ப சரணம்..
சரணம் ஸ்வாமி சரணம்..

கரிமலை ஏற்றம் இறக்கம் கண்டு
பம்பா தீர்த்தம் வந்தோமே..
நெடுமலை என்னும் நீலிதனை கடந்து
சபரி பீடத்தில் நின்றோமே..
சபரி பீடத்தில் நின்றோமே!..

சரணம் ஐயப்ப சரணம்
சரணம் ஸ்வாமி சரணம்..

பதினெட்டுப் படியும் பனிமலர் முகமும்
காணக் காணக் கண் வழிந்தோட
காலங்கள் தோறும் காத்திடும் ஸ்வாமி
கருணையில் நனைந்து நின்றோமே..
கருணையில் மகிழ்ந்து நின்றோமே!..

சரணம் ஐயப்ப சரணம்
சரணம் ஸ்வாமி சரணம்..
***

தர்மங்கள் வாழ்ந்திடவும்
அதர்மங்கள் அழிந்திடவும்
ஐயன் ஐயப்பனை வேண்டி நிற்போம்!..

ஓம் ஸ்வாமியே
சரணம் ஐயப்பா!..
***

செவ்வாய், நவம்பர் 16, 2021

நலமே வாழ்க..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
முதற்கண்
வலைத்தள உறவுகள்
அனைவருக்கும்
நன்றி..


பதினைந்து நாட்களுக்கு முன்..

" தலைவலி மாத்திரை இருக்கின்றதா?.. " - எனக் கேட்டுக் கொண்டு சமையல் களப் பணியாளர்..

" இருக்கின்றதே!.. "
-  என்றபடி இரண்டு மாத்திரைகளைக் கொடுத்தேன்...

அவை சாதாரணமாக தலைவலி காய்ச்சல் இவற்றுக்குக்கானவை..

அவருக்கு மிகவும் சந்தோஷம்..

அவர் அங்கிருந்து சென்றதும் பின்னாலேயே இன்னும் சிலர்..
" எனக்கும் கொடுங்க! .. " - என்று..

கைப்பையில் வைத்திருந்த அனைத்தையும் கொடுத்து விட்டேன்..
இந்த மாத்திரைகள் நான் வாங்கியவை..

ஓராண்டுக்கு முன் பணி செய்த இடத்தில் முதலுதவிப் பெட்டி இருக்கும்.. அதில் மாத்திரைகள் பிளாஸ்டர்கள்
எல்லாமும் இருக்கும்..

 இருந்தாலும் யாருக்கும் கொடுக்கக் கூடாது... என்றொரு வறட்டு வாதம்..

ஊழியர்களுக்கு மாத்திரைகளைக் கொடுத்தால் அதே வேலையாக இருப்பார்கள்..
வேலை நடக்காது.. என்பது நடைமுறை..


மனம் பொறுக்கவில்லை.. சொந்த செலவில் தலைவலி மாத்திரைகளையும் தைலங்களையும் பிளாஸ்டர்களையும் தருவது எனக்கு வழக்கமாகிப் போனது..
இதனால் அங்கு பெரிதாக பிரச்னை ஏதும் ஏற்படவில்லை..

இப்படியாக  
சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மாத்திரை கொடுத்த சந்தர்ப்பத்தில் தான் எவரிடமிருந்தோ எனக்குத் தொற்றி இருக்கின்றது..

இதனை மிகவும் சிரமப்பட்டு காய்ச்சல் சளித் தொல்லையைக் கட்டுக்குள் கொண்டு வந்தேன்..

இந்நிலையில் உடல் நிலை சரியாக இருக்கின்றது என நினைத்துக் கொண்டு சென்ற வியாழனும் வெள்ளியும் மதிய உணவில் மோர் சேர்த்துக் கொண்டேன்..
வந்தது வினை..

உள்ளே ஒளிந்திருந்த கிருமிகள் விழித்துக் கொண்டன..
அதன் பிறகு உபத்திரவம் தான்..

தற்போது
நெஞ்சில் சளி கரையாமல் உறைந்து கிடக்கின்றது.. அது தான் பிரச்னை.. 
மூக்கினுள் ரணமாகி இருப்பது போல் உணர்வு..

மூன்று நான்கு நாட்களாக வெது வெதுப்பான குடிநீர் தான்..

நேற்று மதியத்திலிருந்து காய்ச்சல் சற்று குறைந்திருக்கின்றது.... இப்படியே நலமாகி விட்டால் நல்லது..

மற்றபடி உடல் நலனில் மிகுந்த கவனம் கொண்டிருப்பவன்.. காய்ச்சல் இருந்த போதிலும் தினசரி அதிகாலை மூன்றரைக்கு எழுந்து குளித்து விட்டு வேலைக்குச் செல்வதில் தவறவில்லை..

ஏதோ கெரகம்..

இவ்வேளையில், 
பதிவின் வழியாக நலம் கேட்டு ஆறுதல் கூறிய அனைவரது பிரார்த்தனைக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மீண்டும்.. மீண்டும்!..


நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும்என் நெஞ்சுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே..(4/76)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, நவம்பர் 14, 2021

திருக்காட்சி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று தஞ்சை ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில் நிகழ்ந்த ஐப்பசி சதய விழாவின் திருக்காட்சிகள்..

ஸ்வாமி அம்பாள் தரிசனத்துடன்
ஸ்ரீ ராஜ ராஜ சோழர்,
லோக மாதேவி மற்றும் பழைய திருமேனி அலங்காரக் காட்சிகள் இன்றைய பதிவில்..

காட்சிகளைப் பகிர்ந்த  தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..





உடையாளூரில்
ஸ்ரீ ராஜராஜ சோழரின்
நினைவாலயம்
எனப்படும் இடத்திலும்
வழிபாடுகள்
நடைபெற்றுள்ளன..


நம சிவாயவே ஞானமுங் 
கல்வியும்
நம சிவாயவே நானறி விச்சையும்
நம சிவாயவே நாநவின் றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே.. (5/90)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ ராஜராஜ சோழர்
திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
-:-

சனி, நவம்பர் 13, 2021

சதயத் திருநாள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி சதய நட்சத்திரம்..


ஸ்ரீ ராஜ ராஜ சோழ
மா மன்னரின்
பிறந்த நாள்..


வழக்கமான கோலாகலங்கள் இல்லாமல்
திருக்கோயிலுக்குள்ளேயே
திருவீதி எழுந்தருளல்
நிகழ்கின்றது..


முற்பகலில் 
ஸ்ரீ பெருவுடையார், ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சந்நிதிகளில் பேரபிஷேகமும் திரு அலங்காரமும்
மதியப் பொழுதில் பெருந்தீப வழிபாடும் நிகழ்கின்றன..
மாலையில் பஞ்சமூர்த்தி எழுந்தருளல்..



இவ்வேளையில்
நாமும் நமது வணக்கத்தையும் மரியாதையையும் மாமன்னருக்குத் தெரிவித்துக் கொள்வோம்..


நீர் மற்றும் நில மேலாண்மைகளில் தலை சிறந்து விளங்கியது ராஜ ராஜ சோழரின் மும்முடிச் சோழ மண்டலம் என்பது சரித்திரம் காட்டுகின்ற உண்மை..


இன்று நான்காக விளங்குகின்ற
சோழ மண்டல
நெற்களஞ்சியத்தின்
நீர் ஆதாரங்களின் அடிப்படை கட்டமைப்புக்கு சோழ மன்னர்களே காரணம்..

அவர்கள் அனைவரையும் ஒருசேர வணங்கிக் கொள்வோம்..


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு..


ஸ்ரீ ராஜ ராஜ சோழர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

வெள்ளி, நவம்பர் 12, 2021

வேண்டும்.. வேண்டும்..


நாடும் வீடும் 
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வேண்டும் வேண்டும்
நலம் தர வேண்டும்..
வேண்டும் வேண்டும்
துயர் அற வேண்டும்..

பொழியும் மழையும்
குறைந்திட வேண்டும்..
பொழுதும் இனிதாய்
புலர்ந்திட வேண்டும்..

அல்லலின் வெள்ளம்
வடிந்திட வேண்டும்..
ஆனந்தக் கண்ணீர்
வழிந்திட வேண்டும்..

துயரெனச் சூழ்ந்த
துன்பங்கள் யாவும்
தொலைவாய் சென்று
தொலைந்திட வேண்டும்..


வீடும் வாசலும்
விளங்கிட வேண்டும்..
விளங்கிடும் உயிர்கள்
மகிழ்ந்திட வேண்டும்..

வினைதரு பிணிகள்
உதிர்ந்திட வேண்டும்..
உறுதுயர் எல்லாம்
உலர்ந்திட வேண்டும்..

மண்ணும் மகிழ்வுடன்
பொலிந்திட வேண்டும்..
மனைதனில் மங்கலம்
மலிந்திட வேண்டும்..

நீதியும் நேர்மையும்
தழைத்திட வேண்டும்..
நீதி அல்லாதவை
அழிந்திட வேண்டும்..

மக்கட் பணியும்
மகிழ்ந்திட வேண்டும்..
செவ்விய நெறியில்
சிறந்திட வேண்டும்..

அறவோர் அரசில்
அணிபெற வேண்டும்..
குறையுறு கொடியோர்
குலைந்திட வேண்டும்..


உரைதரு பொய்யர்
ஒழிந்திட வேண்டும்..
ஊர்நிதி உண்டோர்
புதைந்திட வேண்டும்..

நீர்வழி அடைத்தோர்
அழிந்திட வேண்டும்..
சீர்வழி கெடுத்தோர்
சிதறிட வேண்டும்..

நல்லவர் கைகளில்
நாடுற வேண்டும்..
நாடுறும் நலந்தனில்
பீடுற வேண்டும்..

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..

வேண்டும் வேண்டுதல்
விளங்கிட வேண்டும்..
வேண்டுதல் யாவும்
வழங்கிட வேண்டும்..

வேண்டும் நலங்கள்
நல்கிட வேண்டும்..
நலிவுகள் நீங்கிட
நல்லருள் வேண்டும்..
***
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், நவம்பர் 11, 2021

மீண்டும் 2015

 நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் நீங்கிட வேண்டும்..

***


2015 நவம்பர் கடைசி நாட்கள்..

சென்னையில் அன்று வான் பொழிந்த நீர் சாக்கடை நீராகி தேங்கி நின்றதற்கும்

இன்று (2021 நவம்பர்) அதே மாதிரி தேங்கி நிற்பதற்கும்  ஒரே காரணம் -

மழை.. மழை.. மழை மட்டுமே!.. வேறெதுவும் இல்லை!..

இந்தப் பதிவு 2015 டிசம்பர் முதல் தேதி வெளியிடப்பட்டதாகும்..

ஃஃஃ

ஆடுமாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா..

புள்ளகுட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா!..

இது, தஞ்சை மண்ணில் வழங்கி வரும் சொல்வழக்கு!..

கடந்த ஐப்பசி மாதத்தின் கடைசி நாட்களில் -
தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தபோது -
தஞ்சை திருச்சி மாவட்டங்களில் பரவலான மழைதான்!..

தென் மாவட்டங்கள் மழையினால் திக்குமுக்காடிய போது கூட - தஞ்சை வட்டாரங்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன..

ஸ்ரீ வருணன் - தஞ்சை பெரியகோயில்
இந்நிலையில் - நேற்று முன் தினம் ஞாயிறு அன்று வருணபகவான் தஞ்சையை நோக்கிக் கண் மலர்ந்தார்..

விடியற்காலையில் மழை பெய்யத் தொடங்கிற்று.. சற்று நேரத்தில் கனமழையாகி - இரவு வரை பெய்து கொண்டிருந்தது..

திங்களன்றும் - விடாதே.. பிடி!.. - என்று விரட்டிக் கொண்டு வந்ததால் - நேற்று இரவும் நல்ல மழை..

இதனால், வேளாண் நிலங்கள் - மழைநீரில் மூழ்கியுள்ளன..

துரத்திக் கொண்டுவரும் கருமேகங்களைக் கண்டு மக்கள் திகைத்து நிற்கின்றனர்..

இவ்வேளையில்,

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்து வருகின்றது.. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் - அடுத்த ஐந்து தினங்களுக்கு கனமழை பெய்யும்!..

- என, வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது..

வங்கக்கடலின் தென்மேற்காக - உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளதாம்..

தமிழகத்தில் இயல்பு நிலைக்கு மேலாக, அதிக மழை பெய்துள்ள நிலையில் - மேலும், ஐந்து நாட்களுக்கு கனமழை - என, எதிர்பார்க்கப்படுவதால் -

கல்வி நிலையங்களுக்கு - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே பெய்த தொடர்மழை - நமக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்துள்ளது..

(கீழுள்ள படங்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை)








இதுவும் போதாதென்று, சென்னையின் சாலைகளில் - திடீரென பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளதாக செய்திகள்..


அதிக மழையின்போது - மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து - இறுக்கம் குறைவான பகுதிகளில் - சற்றே மண் உள்வாங்குவது இயல்பு..

இதுமாதிரியான மண் உள்வாங்குதலை பல இடங்களில் பார்த்திருக்கின்றேன்..

கிராமங்களில் - கார்காலத்துக்கு முன்னால் - மழையை எதிர்பார்த்து, மாந்தோப்பு தென்னந்தோப்புகளை ஆழமாக உழுது வைப்பார்கள்..

அடுத்து பெய்யும் மழை - உழப்பட்டிருந்த மண்ணை ஊடுருவிக் கொண்டு பூமிக்குள் சென்று சேரும்..

அப்போது மண் உள்வாங்கி விளங்கும்..

புதிதாகக் கட்டப்பட்ட வீடு  - முதல் மழைக்காலத்தைச் சந்திக்கும் போது - வீட்டைச் சுற்றிலும் மண் உள்வாங்குவதைக் காணலாம்..

நன்றி - தின்மலர்
நிலைமை இப்படியிருக்க - 

சென்னையின் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு காரணம் என்ன?.. - என்ற கேள்விக்கு -

பெருமழை பெய்யும் நேரங்களில் மண் அடுக்கில் ஏற்படும் வெற்றிடங்களால் இது போன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன..

பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது பெய்த பெரும் மழை, அதிக அளவு நீர்த்தேக்கம் மற்றும் மண் அரிப்பு காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

குடிநீர், கழிவு நீர் குழாய்கள் பதிப்பு, மெட்ரோ ரயில் பணி தான் - இதற்குக் காரணம் எனக் கூற முடியாது..

சாலையில் அவ்வப்போது தோண்டப்படும் பள்ளங்கள் சீரமைக்கப்படுகின்றன.. இதில் - எல்லா இடங்களிலும் 100%  அழுத்தம் கிடைக்காது..

தளர்வான மண்ணில் மழையினால் ஈரப்பதம் அதிகரிப்பதால் இந்தப் பள்ளங்கள் ஏற்படுவது சகஜம் தான்!.. இது இயற்கையாக நடப்பதுதான்!..

- என்று சொல்லியிருக்கின்றார்கள்..


மக்கள் நல்வாழ்வுக்கென லட்சோப லட்சங்களைக் கொட்டியது ஒரு காலம்..

அவை மக்களுக்கு நன்மையளித்தனவா இல்லையா என்பதை - யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் - காலம் கண்முன்னே சொல்லிவிட்டது..

செல்லும் வழியின்றித் தவித்த கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து கொள்ள -

சென்னையின் சிலபகுதிகளில் மக்கள் அடைந்த இன்னலை காலத்துக்கும் மறக்க இயலாது..

ஆனாலும்,

முன்பு - 1978ல் வேடசந்தூரில் குடகனாறு உடைந்ததால் ஏற்பட்ட பெருத்த சேதங்கள் மறந்து போயின..

1985ல் மதுராந்தகம் ஏரி உடைந்து -  பயணிகளுடன் பேருந்து வெள்ளத்தில் மூழ்கிப் போனதும் - ரயில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதும் மறந்து போயிற்று..

மதுராந்தகம் ஏரி உடைப்பில் பயணிகளுடன் மூழ்கிய பேருந்திற்கு சற்று முன் சென்ற பேருந்தில் தான் - 

நான் சென்னைக்குப் பயணித்தேன் என்பது கூடுதல் செய்தி!..

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட, இயற்கைப் பேரிடராக ஆழிப்பேரலை..

சில வருடங்களுக்கு முன், கடலூரைத் தாக்கிய - ''தானே'' புயல்..

பின்னும் கால சூழ்நிலைகளால் - மழை வெள்ளம்..

இப்படிப் பல அவலங்களை - சேதங்களைச் சந்தித்திருக்கின்றது - தமிழகம்..

அவற்றிலிருந்து - பயனுள்ள பாடம் பயிலப்பட்டிருக்கின்றதா?..

இல்லை.. இல்லவே இல்லை!..

அகற்றப்படாத குப்பை மேடுகள்..
வெளியேற்றப்படாத கழிவுநீர்த் தேக்கங்கள்..

மழையினூடாக திருப்பதி சென்று விட்டு ரயிலில் திரும்பியபோது - காலை வேளை..

ஆவடி - திருமுல்லைவாயில் - அம்பத்தூர் - வில்லிவாக்கம் - பெரம்பூர் - வியாசர்பாடி - என, கடந்து வரும்போது ரயில்பாதையின் இருமருங்கிலும் சொல்லொணாத அவலங்கள்..

இவற்றுக்கெல்லாம் - எத்தனை எத்தனையோ காரணிகள்..

ஆனாலும், அதிகபட்ச கொடுமையாக -

தேங்கிக் கிடக்கும் கழிவு நீர் - துர்நாற்றம் வீசும் குப்பை மேடு - இவைகளுக்கு இடையே மறைவிடம் தேடும் மக்கள்..

இதெற்கெல்லாம் விடிவு காலமே இல்லையா!..



இதற்கிடையில், இப்போது - மழை வெள்ளத்தால் சீரழிந்த கட்டமைப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கென -

கோடானுகோடிகள் கொட்டப்படுகின்றன..

இதனால் எல்லாம் - எதிர்கால வாழ்வு நலமாக அமையுமா?..

சொல்லத் தெரியவில்லை..

நம்மைக் காப்பதற்கு இயற்கையைத் தவிர 
வேறெதுவும் இல்லை என்பதே உண்மை..

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.. (015)

வாழ்க நலம்
* * *

செவ்வாய், நவம்பர் 09, 2021

கந்தா சரணம் 3

 

நாடும் வீடும்
நலம் பெநாடும் ற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஸ்ரீ கந்த சஷ்டி..


கன்ம மாயா ஆணவம்
ஆகிய அசுர குணங்கள்
ஞானம் எனும் வேலினால்
வீழ்த்தப்பட்ட நாள்..

காம, குரோத,
லோப, மோக, மத,
மாச்சர்யம் எனப்படும்
இவையே மனிதன்
வீழ்வதற்கான
காரணிகள்..

இவற்றிலிருந்து
விடுபடுதலே பிறவியின்
வெற்றியாகும்..

இந்த வெற்றிக்கு
உறுதுணையாய் இருப்பதுவே
இறை வழிபாடு..
இதனை உணர்த்துவது
ஸ்ரீ கந்த புராணம்..

கெடுதலான குணங்களே
ஆன்மாவிற்கு எதிரிகள்..
இவற்றை வெற்றி கொண்டு
செல்வதே நமது
வாழ்வின் நோக்கம்..


அத்தகைய பயணத்தில்
உறுதுணையாய்
வழித்துணையாய்
வருவதே வேல்..

" பயந்த தனி வழிக்குத் துணை வடிவேல்!.. "
என்பது அருணகிரியார்
திருவாக்கு..


நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோ நம
          ஞான பண்டித ஸாமீ நமோ நம .. வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோ நம
     போக அந்தரி பாலா நமோ நம
          நாக பந்தம யூரா நமோநம .. பரசூரர்

சேத தண்டவி நோதா நமோ நம
     கீத கிண்கிணி பாதா நமோ நம
          தீர சம்ப்ரம வீரா நமோ நம .. கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோ நம
          தேவ குஞ்சரி பாகா நமோ நம .. அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு .. மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக .. வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி .. லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் .. பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-


வே
லுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
***