நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தேவாரத் திருப்பதிகங்கள்
ஞானக் கடல் எனும் சிறப்பினை உடையவை..
திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர்,
சுந்தரர் ஆகிய
அருளாளர்களால் அருளப் பெற்றவை..
இவற்றுள் பொதிந்திருக்கும்
முத்துகள் அநேகம்..
ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
திருப்பதிகம் ஒன்றில் விளங்கும்
அருட்பாடல் ஒன்று இன்றைய பதிவில்..
*
நீதியும் நேர்மையும்
நிலைத்து விளங்கிட
நிலமகள் கேள்வனும்
நீர்மலி வேணியனும்
வந்தருள் செய்திட
வேண்டிக் கொள்வோம்..
*
திருத்தலம் - சிவபுரம்
முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 21
ஏழாவது திருப்பாடல்
கதமிகு கருஉரு வொடுஉகிர்
இடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுகன் அமர்வளை
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
எழில் அரி வழிபட அருள்செய்த
பதமுடை யவன்அமர் சிவபுர
நினைபவர் நிலவுவர் படியிலே.1.021.7
-: திருஞானசம்பந்தர் :-
மேற்கண்ட திருப் பாடலுக்கு தருமபுர ஆதீனத்தின் பதிப்பில் உள்ள உரை:
திருமால் வராக அவதாரத்தில் சினம் மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.
***
மேற்கண்ட கருத்தினை எளியேன் என்னளவில் இங்கே தந்திருக்கின்றேன்..
கரிய உருவத்துடன்
மிகுந்த சினமும் மதமும் கொண்ட - வராக மூர்த்தியாக திருமால் தோன்றிய போது (வராகத்தின்) நீண்ட முகத்தில் விளங்கிய வளைந்த பிறை போன்ற எயிறுகளின் முனையில் நிலமகள் இதமாக அமர்ந்து விளங்கினாள்..
கணகண - எனும் ஒலியுடன் வட திசையில் விளங்கும் மேருமலையை தன்னகத்தே உடைய நிலமகளை -
கூரிய நகங்கள் விளங்கும் தனது கரங்களினால் காத்தருளி - அண்டத்தின் கண் நிலை நிறுத்தினார்..
அத்தகைய அழகிய திருமால் வழிபட்ட போது, அவர்க்கு அருள் புரிந்த வண்ணம் சிவபுரத்தில் அமர்ந்து விளங்கும் சிவபெருமானின் திருவடிகளை நினைவில் கொண்டு வணங்குபவர் உலகிற் புகழோடு விளங்குவர்..
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***