சனி, ஏப்ரல் 30, 2022

வருக.. வருக..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தேவாரத் திருப்பதிகங்கள்
ஞானக் கடல் எனும் சிறப்பினை உடையவை..
திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர்,
சுந்தரர் ஆகிய
அருளாளர்களால் அருளப் பெற்றவை..

இவற்றுள் பொதிந்திருக்கும்
முத்துகள் அநேகம்..

ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
திருப்பதிகம் ஒன்றில் விளங்கும்
அருட்பாடல் ஒன்று இன்றைய பதிவில்..
*
இப்பாடலில்
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின்
வராக அவதாரத்தினை
கண்முன் நிறுத்துகின்றார்
ஞானசம்பந்தர்..


நீதியும் நேர்மையும்
நிலைத்து விளங்கிட
 நிலமகள் கேள்வனும்
நீர்மலி வேணியனும்
வந்தருள் செய்திட
வேண்டிக் கொள்வோம்..
*

திருத்தலம் - சிவபுரம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 21
ஏழாவது திருப்பாடல்

கதமிகு கருஉரு வொடுஉகிர்
இடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுகன் அமர்வளை
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
எழில் அரி வழிபட அருள்செய்த
பதமுடை யவன்அமர் சிவபுர
நினைபவர் நிலவுவர் படியிலே.1.021.7
-: திருஞானசம்பந்தர் :-

மேற்கண்ட திருப் பாடலுக்கு தருமபுர ஆதீனத்தின் பதிப்பில் உள்ள உரை:
திருமால் வராக அவதாரத்தில் சினம் மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.
***
மேற்கண்ட கருத்தினை எளியேன் என்னளவில் இங்கே தந்திருக்கின்றேன்..


கரிய உருவத்துடன்
மிகுந்த சினமும் மதமும் கொண்ட - வராக மூர்த்தியாக திருமால் தோன்றிய போது (வராகத்தின்) நீண்ட முகத்தில் விளங்கிய வளைந்த பிறை போன்ற எயிறுகளின் முனையில் நிலமகள் இதமாக அமர்ந்து விளங்கினாள்..

கணகண - எனும் ஒலியுடன் வட திசையில் விளங்கும் மேருமலையை தன்னகத்தே உடைய நிலமகளை -

கூரிய நகங்கள் விளங்கும் தனது கரங்களினால் காத்தருளி - அண்டத்தின் கண் நிலை நிறுத்தினார்..

அத்தகைய அழகிய திருமால் வழிபட்ட போது, அவர்க்கு அருள் புரிந்த வண்ணம் சிவபுரத்தில் அமர்ந்து விளங்கும்  சிவபெருமானின் திருவடிகளை நினைவில் கொண்டு வணங்குபவர் உலகிற் புகழோடு விளங்குவர்..
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஏப்ரல் 29, 2022

வெற்றி வேல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இரண்டு நாட்களாக Fb ல் ஆவேசப் பதிவுகள் சில..

அறிவிலியாகிய ஒருவன் தில்லை நடராஜப் பெருமானின் தாண்டவத் திருக்கோலத்தை கீழ்த்தரமாகப் பேசியிருக்கின்றான் என்று.. 

அந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை.. ஆயினும் புரிகின்றது.. அங்கே அவன் பேசி இருப்பவை பலராலும் பலமுறை அவரவர் பங்கிற்கு பகிரப்படுகின்றது..

இதெல்லாம் 40 வருடங்களுக்கு முன்பு பகுத்தறிவு மேடைகளில் பேசப் பட்டவையே.. இவற்றை ஏனையோர்கள் கைதட்டி ரசிப்பதில்
இழிமனத்தார்க்கு
 ஏகத்துக்கும் மகிழ்ச்சி..


இன்றைய சூழ்நிலையில் ஹிந்து தர்மத்தைக்  கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு முகவரியற்ற சில பிறவிகள சமீப காலமாக சமூக ஊடகங்களில்
பலவகையிலும் ஊளையிட்டுத் திரிகின்றன..

தன்னைத் தானே கடித்துக் கொண்டு இன்புறும் அவ்விலங்குகள் அல்லல்பட்டு  அவதியுற்று அழிதல் வேண்டி இன்றைய பதிவில்
ஸ்ரீ அருணகிரி நாதர் அருளிச் செய்த மயில் விருத்தத்தில் இருந்து திருப்பாடல் ஒன்று..

வைதாரையும் வாழ வைக்கும் வள்ளல் பெருமான் தான் வடிவேலவன்.. என்றாலும் அவன் சத்ரு சங்கார மூர்த்தி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

அவனே வருவான்
அரக்கரை அழிப்பான்!..
*

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
   அநந்தமா யினுமேவினால்

அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
   அறியாது சூரனுடலைக்

கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
   கடியகொலை புரியு மதுசெங்

கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
   கடுக்கின்ற துங்க நெடுவேல்


தண்டந் தநுத்திகிரி சங்கு கட்கங் கொண்ட
  தானவாந் தகன்மாயவன்

தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
   தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
   மங்கையும் பதம்வருடவே

மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
   வாகைத் திருக்கை வேலே..
-: ஸ்ரீ அருணகிரி நாதர் :-

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு அரோஹரா!..
***
நேற்று 
திருக்கண்டியூர்
ஸ்ரீ பிரம்ம சிரக்கண்டீசர்
திருக்கோயிலில்
பிரதோஷ தரிசனம்..




அச்சமயத்தில் அப்பர் ஸ்வாமிகள் குருபூஜையன்று
ஏற்பட்ட தீ விபத்தில் 
சிக்கிக் கொண்ட  பதினொருவரின் ஆன்மாக்களும் ஈசனுடன் ஐக்கியமாவதற்கு சிவனடியார்கள் கூடி பிரார்த்தித்துக் கொண்டோம்..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், ஏப்ரல் 28, 2022

திருத்தொண்டர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தஞ்சையை அடுத்துள்ள களிமேடு கிராமத்தில் சித்திரைச் சதயத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்தப்படும் அப்பர் ஸ்வாமி திருவிழாவில் நேற்று இரவு  அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஊர்வலமாக வந்து கொண்டிருந்த பொழுதில் விடியற்காலை 3:15 மணியளவில் எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீப் பற்றிக் கொண்டது.. இவ் விபத்தில் பதினொருவர் உயிரிழந்திருக்கின்றனர்.. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.. பெரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இளையோர்கள் பலர் பங்கேற்ற விழாவில் பெரும் துயரம் நேர்ந்து விட்டது.. 

நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களும் பிரதமர் அவர்களும்
தமிழக ஆளுநர் அவர்களும் இரங்கல் செய்தியுடன் ஆறுதல் கூறியுள்ளனர்..

தமிழகத்தின் முதல்வர் அவர்கள் வருகை தந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கின்றார்..  

விபத்தில் பலியானவர்களது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் பக்க துணையாக இருந்து ஆறுதலும் தேறுதலும் தந்து காத்திட வேண்டும் என இவ்வேளையில் வேண்டிக் கொள்வோம்..

சிவத்தொண்டருக்கு அருந்தொண்டு புரிந்த
திருத்தொண்டர்கள் பெருந்தொண்டருள் ஒன்றி உடனாகி விட்டனர்..
அவர்தம் நினைவை என்றும் நெஞ்சில் கொள்வோம்.

புனைந்தார் பிறப்பறுக்கும்
புனிதனின் திருத்தாள் மலர்களை அடைந்து விட்ட அவர்களின் நினைவினை நெஞ்சில் வைத்து வேண்டிக்  கொள்வோம்..
*

மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக் கொல் புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந் தார்க்கு எளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.. 6/94
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், ஏப்ரல் 27, 2022

என் கடன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று திருப்பூந்துருத்தி அப்பர் ஸ்வாமி திருமடத்தில் குருபூஜை தரிசனம்..


இந்தத் திருமடம் அப்பர் பெருமானால் அமைக்கப் பெற்றது..

திருமறைக்காட்டில் இருந்து மதுரைக்கு ஏகிய ஞானசம்பந்தப் பெருமான் அப்பர் ஸ்வாமிகளால் வரவேற்கப் பெற்று அளவளாவி இருந்தது இந்தத் திரு மடத்தில் தான்..






முற்பகல் 10:30 மணியளவில் திருமடத்தில் உள்ள திருமேனிக்கும் உற்சவ விக்ரகத்திற்கும்
பலவகையான திரவியங்களால் திருமுழுக்கு நடைபெற்றது.. தொடர்ந்து அலங்காரமும் மலர் வழிபாடும் தீப ஆராதனையும் நடைபெற்றது..





திரளான அன்பர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் நிறைவாக
தஞ்சாவூர் அருட்பெருஞ் ஜோதி அறக்கட்டளையின் சார்பாக அன்ன பிரசாதம் வழங்கப் பெற்றது..



தேவாரத் திருப்பண் இசையும் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் அருளாளரின் ஞான உரையும் நிகழ்ந்தன..



மாலையில் தேவார விரிவுரையும் அப்பர் பெருமான் திருமேனி திருவீதி உலாவும் குறிக்கப்பட்டிருந்தன..
இரவு வரை அங்கிருப்பதற்கு எங்களுக்கு இயலாத நிலை.. வரும் நாட்கள் நலமாக அமைவதற்கு இறைவன் அருள் புரிவானாக..
*
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை உற்றுப் பற்றி
உமை அதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே..6.043.7

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே..5.019.9

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஏப்ரல் 26, 2022

சித்திரைச் சதயம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று  செவ்வாய்க் கிழமை.. சித்திரை -13
சதய நட்சத்திரம்..

அப்பர் ஸ்வாமிகள் சிவ ஜோதியுள் கலந்த நாள்..

" என் கடன் பணி செய்து கிடப்பதே!. " - என்று நாளெல்லாம் ஊருக்கு வாழ்ந்த உத்தமர்..

ஊருக்கு உழைத்த
" உழவாரத் தொண்டர் " எனும் புகழினை உடைய உத்தமர்..

யாதும் சுவடு படாமல்!.. வாழ்ந்து இன்றும் நம்முடன் புகழுடம்புடன் வாழ்கின்ற புண்ணியர்..


மக்களின் பசிப்பிணி தீர்த்து ஞானசம்பந்தப் பெருமானுடன் நாளும் அறம் செய்த திருத் தொண்டர்..

வேறொரு சமயம் செய்த விரிவிலா அறிவினார்கள் 
 - அடைத்து வைத்த சிவாலயத்தைத் திறந்து விடும்படிக்கு மன்னனுக்கு எதிராக உண்ணாநோன்பு இருந்த புரட்சியாளர்..

" கோத்திரமும் குலமும் கொண்டு என்ன செய்வீர்?.. " என்று சாடிய பெருந் தகையாளர்..

இன்றைய பதிவில் ஸ்வாமிகளுடைய திருவடிகளை வணங்கி அவர் அருளிச் செய்த திரு ஐயாற்றுத் திருப்பதிகம்..


திருத்தலம் திருஐயாறு

இறைவன்
ஸ்ரீ ஐயாறப்பர்
அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 38


கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 1

பொடிதனைப் பூச வைத்தார்
பொங்கு வெண்ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணைத் தொழவும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 2

உடைதரு கீளும் வைத்தார்
உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 3

தொண்டர்கள் தொழவும் வைத்தார்
தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்
எமக்கென்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலினாளை
மருவியோர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும்
ஐயன் ஐயாறனாரே.. 4

வானவர் வணங்க வைத்தார்
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்
ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 5

சங்கணி குழையும் வைத்தார்
சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்
விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கடுவினை களைய வைத்தார்
அங்கமது ஓத வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 6

பத்தர்கட் கருளும் வைத்தார்
பாய்விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 7

ஏறுகந் தேற வைத்தார்
இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார்
கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 8

பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 9

இரப்பவர்க்கு ஈய வைத்தார்
ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 10

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய  நம ஓம்
 திருச்சிற்றம்பலம்
***

திங்கள், ஏப்ரல் 25, 2022

வாழ்க நலம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில் நலந்தரும் நவக்ரஹ காயத்ரி மந்திரங்கள்.
இவை அனைவருக்கும்
தெரிந்தவை தான் எனினும் மீண்டும் ஒருமுறை நினைவில் கொண்டு பிரார்த்தித்துக் கொள்வோம்..
*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்:

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்:

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்:

ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்:

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்:

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ  மந்தப் ப்ரசோதயாத்:

ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹூ ப்ரசோதயாத்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்:
*

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய  அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலிஎம் பெருமானே.. 1/62
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

சூர்யோதயம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஓம்
பாஸ்கராய வித்மஹே
தினகராய தீமஹி தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்
*

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி - ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். இந்த காலத்தில் சூரியனின் நகர்வு தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய பயணமாகும்.. இது தேவர்களுக்கு பகல் பொழுது..

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி - ஆகிய ஆறு மாதங்களும் தட்சிணாயண காலமாகும். இந்த காலத்தில் சூரியனின் நகர்வு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணமாகும்.. இது தேவர்களுக்கு இரவுப் பொழுது..
ஆக, நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்..

இதற்கிடையில் எல்லா நாட்களிலும் சூரியன் ஒரே நேரத்தில் உதிப்பதில்லை..
நிமிடங்கள் வேறுபடுகின்றன.. அதெல்லாம் பெருங்கணக்கு..

மேலைத் திசையனின் நடைமுறைக்குள் நமது நாடு வீழ்ந்த பின் நம்மிடம் நிறைய மாற்றங்கள்.. அதிலொன்று தான் நேர்க் கணக்கு..

00:00:01 விநாடி என்று பேய் பிசாசுகள் உலவுகின்ற நட்ட நடு ராத்திரியில் நாள் தொடங்குவது அந்தக் கணக்கு..

ஆனால் நமக்கு ரிஷி, தேவ, பிரம்மம் என சுப முகூர்த்தத்தில் சூரிய உதயம்.. அதுவே உதயாதி நாழிகை என்ற கணக்கீடு..

இந்நிலையில் நேற்றும் முன் தினமும் ஆறு மணிக்கு (சித்திரை 9,10/ Apr 22, 23)
சூர்யோதயம்  நிகழ்ந்துள்ளது.. இன்று ஒருநாள் மட்டும் 
(சித்திரை 11/ Apr 24) 
ஆறு மணிக்கு   சூர்யோதயம்..

இதை அடுத்து
சுபகிருது ஆகிய இவ்வருடத்தின் ஆனி 30, 31, 32 மற்றும் ஆடி முதல் நாள் என நான்கு நாட்களில் மிகச் சரியாக ஆறு மணிக்கு சூர்யோதயம் நிகழ இருக்கின்றது..

சூர்யோதயத்தினைத் தரிசிப்பதற்கு வயல்வெளி, கடற்கரைகளே ஏற்றவை..

நாளும் சூர்ய உதயத்தினைக் கண்டு அதன்படி நல்ல வழியை உணர்ந்து வாழ்க்கையில் பயணிக்க பிரார்த்தனைகள்..






மேலேயுள்ள படங்கள் சென்ற மாதத்தில் (11 Mar 6:36 to 6:40) எடுக்கப்பட்டவை..

இனி கீழ் வரும் படங்கள் நேற்றைக்கு முன் தினம் வெள்ளியன்று (6:09 to 6:15) எடுக்கப்பட்டவை..










ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!..
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!..

தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!..
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!..

தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி!..
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!..

ஞாயிறே நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி!..
நானிலம் உள நாள்
மட்டும் போற்றுவோம்
போற்றி போற்றி!..
-: கவியரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, ஏப்ரல் 23, 2022

ராம தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று சனிக்கிழமை..
சித்திரையின் பத்தாம் நாள்..

இன்றைய பதிவில் திருமழிசை ஆழ்வார்
அருளிச் செய்த திருப்பாசுரங்களுடன்
ஸ்ரீ ராம ஆஞ்சநேய தரிசனம்..


அழகிய படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
Fb ல் வழங்கியோர்
ஸ்ரீ வடுவூர் கோதண்டராமன்..



மின்னிறத்தெ யிற்றரக்கன்
வீழவெஞ்ச ரம்துரந்து
பின்னவற்க ருள்புரிந்த
ரசளித்த பெற்றியோய்
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை
பின்னைகேள்வ மன்னுசீர்
பொன்னிறத்த வண்ணானாய
புண்டரீக னல்லையே?.. 784


ஊனின்மேய ஆவிநீஉ
றக்கமோடு ணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீஅ
வற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீவ
ளங்கடற்ப யனும்நீ,
யானும்நீய தன்றியெம்பி
ரானும்நீயி ராமனே.. 845


ராமாய ராம பத்ராய
ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய
ஸீதாயா: பதயே: நம


ஸ்ரீராம் ஜெய ராம்
ஜெய ஜெய ராம்..


ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***