சிவாய திருச்சிற்றம்பலம்!...
ஆனி மாதத்தின் நண்பகல் வேளை...
கோடை கழிந்தும் வெயிலின் உக்ரம் தணியாமல் இருந்ததால்
உள்நடையில் அமர்ந்து பனை ஓலை விசிறி கொண்டிருந்தார் - புனிதவதி..
சற்றே இளைப்பாறிக் கொண்டிருந்த புனிதவதியின்
செவிகளில் தேனாகப் பாய்ந்தது - அந்தக் குரல்!..
புண்ணியமே வடிவான புனிதவதி - பிறப்பிலேயே கோடீஸ்வரி...
சோழ வளநாட்டின் வளமார்ந்த துறைமுக நகராகிய
காரைக்காலின் மிகப் பெரிய செல்வந்தர் தனதத்தரின் செல்வ மகள்!..
நாகப்பட்டினத்து இளம் வணிகனாகிய பரமதத்தனின் அன்பு மனையாள்!..
புனிதவதி - பரமதத்தன் இருவரது திருமண நாளன்று
காரைக்கால் நகரில் சிற்றுயிர் முதற்கொண்டு பேருயிர் வரை
எல்லா உயிர்களும் பசியாறி இன்புற்றிருந்தனவாம்!.....
கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க - வீடு முழுதும் பணியாட்கள்...
ஆனாலும், தானே முன்னெழுந்தார்..
தாய்ப் பசுவின் குரல் கேட்ட கன்றாக - வாசலுக்கு ஓடினார்..
அங்கே -
மேனி முழுதும் வெண்ணீறு பூசிய துறவி ஒருவர் - பழுத்த பழமாக!..
அவரைக் கண்ட மாத்திரத்தில்
அவரது அடிக்கமலம் பணிந்து வரவேற்றார்..
வாருங்கள்.. ஐயா!.. அமுது செய்தருள்க!..
திருவடி துலக்க நீரளித்து
திருமேனி விளக்க நீறளித்து -
பெரியவரை வீட்டுக்குள் அழைத்தார் - புனிதவதி...
பனை ஓலை விரிப்பில் அமர்ந்தார் பெரியவர் ..
தலைவாழை இலை விரித்து - அதில்,
பலவகையான உணவுகளைப் பரிமாறினார் புனிதவதியார்...
மகிழ்ச்சியுடன் உண்டார் - பெரியவர்...
தழைக்கத் தழைக்க தயிர் அன்னத்தைப் படைத்து
- அதனுடன் மாம்பழத்தையும் பரிமாறினார்.. .
சற்று முன் - அங்காடித் தெருவிலிருந்து
கணவர் அனுப்பியிருந்த மாம்பழங்களில் ஒன்றுதான் அது..
உண்ணீர்... உண்ணீர்.. - என்று உவந்து அமுதளித்ததால்
ஒரு கையளவு அதிகமாகவே உண்டு மகிழ்ந்தார் பெரியவர்...
பசியாறிய அவரும்,
மனை வாழ்க!.. - என்று, மனதார வாழ்த்தி விட்டுச் சென்றார்...
சற்றைக்கெல்லாம் கடைத்தெருவிலிருந்து வீட்டுக்கு வந்தார் பரம தத்தன்...
அன்புடன் புருஷனை வரவேற்க -
அவரும் - கைகால் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தார்.
புனிதவதியும் அருகிருந்து பரிமாறினார்கள்... மீதமிருந்த மற்றொரு பழத்தையும் துண்டுகளாய் அறுத்து வைத்தார்கள்.
மாம்பழத்தைச் சாப்பிட்ட பரமதத்தனுக்கு மகிழ்ச்சி..
புனிதா.. அந்த இன்னொன்றையும் கொண்டு வருக!.. - என்றார்..
புனிதவதிக்கு திடுக்கென்றிருந்தது..
அதைத்தான் சிவனடியார்க்கு அமுது படைத்தாயிற்றே!.. என்ன செய்வது!..
பூஜையறைக்குள் போய் - சிக்கல் தீர வேண்டும்!.. - என, வேண்டி நின்றார்கள்..
அவ்வேளையில் - ஈசனின் திருவிளையாடலாக -
புனிதவதியின் கையில் ஒரு மாம்பழம் கிடைத்தது..
ஏன் .. எப்படி..என்று யோசிக்காமல்
உடனே - பழத்தை நறுக்கி கணவனிடம் கொடுத்தார்கள்..
அதையும் தின்று தீர்த்த பரமதத்தனுக்கு அதிர்ச்சி..
புனிதா!.. ஒருகிளையின் இருகனிகளில் வெவ்வேறு சுவை இருக்குமா?..
அப்படியெல்லாம் இருக்காதே!..
இருக்கிறதே.. முதலில் உண்ட கனிக்கும் இப்போது உண்ட கனிக்கும் சுவையில் வேறுபாடு இருக்கிறதே!..
இதற்குமேல் மறைக்கக் கூடாது என்று - நடந்ததை விவரித்தார் புனிதவதி.
இந்தக் காலத்தில் இப்படியும் நடக்குமா!.. அப்படியானால் -
இன்னும் ஒரு பழத்தை நான் பார்க்கும்படியாக வரவழைத்துக் காட்டு..
- என்றார் பரமதத்தன்..
அதைக் கேட்டதும்
அங்கேயே - ஈசனை வேண்டி நின்றார் புனிதவதி.
நொடிப் பொழுதில் அவர் கையில் மற்றொரு மாம்பழம்..
அதைக் கண்ட பரமதத்தன் பயந்து விட்டார்.
தான் பெற்ற பழத்தைக் கணவரின் கையில் கொடுத்தார் - புனிதவதி.
பரமதத்தன் - நடுங்கிக் கொண்டே அந்தப் பழத்தை வாங்கினார்.
அவ்வளவு தான் அந்தப் பழம் அவரது கையில் இருந்து மறைந்து போயிற்று.. சப்த நாடியும் ஒடுங்கிப் போனது பரமதத்தனுக்கு..
அஞ்சி நடுங்கிய பரமதத்தன் -
தெய்வாம்சம் பொருந்திய புனிதவதியுடன் வாழ்தல் இனி தகாது!..
- என, தனக்குள் தானாக முடிவு செய்து கொண்டார்...
அடுத்த சிலநாட்களில் வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்வதாகப் பொய்யுரைத்து தனக்கு வேண்டிய பொருளுடன் மதுரைக்குப் போய்விட்டார்.
நாட்கள் கழிந்தன - மாதங்கள் , வருடங்கள் - என...
வெளியூர் சென்ற கணவனைப் பற்றிய விவரம் ஏதும் அறிய முடியாமல் - சித்தம் எல்லாம் சிவமயம்!.. - என அறவழியில் நின்றார் புனிதவதியார்.
அங்கும் இங்கும் சென்று வாணிகம் செய்வோர் வந்து சொன்னார்கள் -
பரமதத்தன் மதுரையில் பெரும் வணிகனாக இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழும் செய்தியை!...
அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உற்றாரும் உறவினரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு - மதுரைக்கே போனார்கள்.
ஊர் எல்லையில் தங்கிக் கொண்டு தகவல் அனுப்பினார்கள்.
செய்தி அறிந்த பரமதத்தன், தன் மனைவியுடனும் மகளுடனும் ஓடோடி வந்து எதிர்கொண்டு வரவேற்றார்.
தம்முடைய கருணையால் நலமுடன் வாழ்கின்றேன்...
என் மகளுக்கும் தங்கள் திருப்பெயரையே சூட்டியுள்ளேன்!...
- புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினார் - பரமதத்தன்...
இதனைக் கண்ட அத்தனை பேரும் அதிர்ந்து நின்றனர்!...
மனைவியின் கால்களில் கணவன் விழுந்து வணங்குவதாவது?....
அதிர்ச்சி அடைந்த அவர்கள் மனம் தெளியும்படி,
அன்றைக்கு நடந்த மாங்கனி அதிசயத்தை விவரித்தார் - பரமதத்தன்...
மானுடம் தாங்கி, பெண் என வந்த பெருந்தெய்வம்...
ஆதலின் பணிந்தேன் அவர் பொற்பாதம்!.. - என்றார்.
இதைக் கேட்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக் கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு..(65)
: அற்புதத் திருஅந்தாதி :-
கணவனின் செயல் கண்டு -
மிகுந்த வேதனையடைந்து மனம் கலங்கித் தவித்த புனிதவதியார் -
என் கணவனுக்கு ஆகாத அழகும் இளமையும் இனி எனக்கு எதற்கு?..
அழகும் இளமையும் என்னை விட்டு நீங்குக!...
- என்று சொல்லியபடியே - தன் பேரழகை தானாகவே நீத்தார்.
எவரும் விரும்பாத - பேய் உருவினை வேண்டிப் பெற்றார்.
திருமகளைப் போல பேரழகுடன் திகழ்ந்த புனிதவதியார் -
எலும்பும் தோலுமான கோர வடிவத்தை விரும்பிப் பெற்றார்.
காண்பதெல்லாம் என்ன!.. - என வியந்து நின்றார்கள் அனைவரும்...
அனைத்தையும் துறந்த அம்மையார் திருக்கயிலை நோக்கிச் சென்றார்...
திருக்கயிலை மாமலையில் கால் வைக்க அஞ்சிய
அம்மையார் தலையாலே ஊர்ந்து சென்றார்...
இவரைக் கண்ணுற்ற ஈசன்,
அம்மையே வருக!.. - என்றழைத்து மகிழ்ந்தனன்...
அம்மையப்பனை வலம் வந்து வணங்கினார் காரைக்காலம்மையார்...
அம்மையே...
திருஆலங்காட்டினில் உங்களது எண்ணம் ஈடேறும்!.. - என்றருளினன்...
காரைக்காலம்மையார்
திருஆலங்காட்டு மயானத்தில் அருளிய திருப்பாடல்கள் -
மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத்திருஅந்தாதி - என்பன..
இவை பதினொன்றாம் திருமுறையில் இலங்குகின்றன..
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆஆஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
-: திரு இரட்டை மணிமாலை :-
அவ்வண்ணமே ஆலங்காட்டு மயானத்தில்
பங்குனி மாதத்தின் சுவாதி நட்சத்திரத்தன்று
ஈசனின் திருநடனங்கண்டு - இன்புற்று,
சிவகதியடைந்தார் - காரைக்கால் அம்மையார் ..
இன்று ஆனி மாதத்தின் முழுநிலவு..
புனிதவதியார் - ஐயனுக்கு அமுது படைத்த திருநாள்...
காரைக்காலில் பெருந்திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது...
இன்று காலை ஐயனுக்கு அமுதளித்தல்.. மாங்கனிதிருவிழா..
நாளை விடியற்காலையில் பேயுறு பெற்ற வைபவம்...
வெட்டிவேர் அலங்காரத்தில் திருக்கயிலை மாமலைக்கு ஏகுதல்...
|
திருஆலங்காடு ரத்ன சபையில் ஈசனுடன் காரைக்காலம்மையார் |
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையானும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
-: அற்புதத் திருஅந்தாதி :-
|
காரைக்காலம்மையார் |
அறுபத்து மூன்று நாயன்மார்களுள்
காரைக்கால் அம்மையார் ஒருவரே
அமர்ந்த கோலத்தில் விளங்குபவர்...
தாயும் தந்தையும் இல்லாதவன்!..
இப்பெருமைக்குரிய ஈசனே,
புனிதவதியார் திருக்கரத்தினால்
அமுதூட்டிக் கொள்ள விரும்பி வருகின்றான்.
பாருக்கெல்லாம் படியளக்கும் பரமசிவம்
தானும் ஒரு பாத்திரம் ஏற்று
புனிதவதியாரைத் தேடி வருகின்றது
என்றால்
அம்மையாருடைய பெருமையை
என்னவென்று போற்றுவது!..
அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுறித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறாஅனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ..(14)
-: திரு இரட்டை மணிமாலை :-
***
அன்னமிடும் கைகளைத் தேடி
ஆனந்தக் கூத்தனே வருகின்றான்!..
காரைக்காலம்மையார்
திருவடிகள் போற்றி!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ