கண்ணே... கனியமுதே.. கட்டிக் கரும்பே!..
ஏன்?.. என்ன ஆச்சு இப்போ?..
காலையிலயே புராணம் பாடுறீங்க!?..
கவலை ஏன்?.. கலக்கம் ஏன்?..
கறுத்திருக்கின்றதே உன் முகம்!..
கலங்குகின்றதே என் மனம்!..
ஏன்?.. ஏன்?.. ஏன்?..
பொறந்ததுல இருந்து எம் மூஞ்சி கறுப்பாத்தானே இருக்கு!..
இன்னைக்கு என்ன புதுசா ஆராய்ச்சி!...
இல்லே... நாளைக்கு மகாளய பட்சம் ஆரம்பமாகுது...
முனியாண்டி விலாஸ் ஐட்டத்துக்கெல்லாம் பஞ்சம் வந்துடுமே.. ந்னு...
என்னைக்காவது முனீஸ்வரன் இறங்கி வந்து
எனக்கு ஆடு கொடு... கோழி கொடு...ன்னு கேட்டுருக்காரா!...
தெரியாது!?..
அப்புறம் எதுக்கு அவரு பேரைச் சொல்லிக்கிட்டு அலையிறீங்க!..
சும்மா.. நாக்கு ருசி!...
இந்த மனுசப் பதர்களைப் போலவே நீங்களும் ஆயிட்டீங்க!...
என்னது?... மனுசப் பதர்களா!...
அவங்க நமக்கு அன்னம் பாலிக்கிறவங்க!...
ஆகா... அன்னம் பாலிக்கிறவங்க!..
சும்மாவா பாலிக்கிறாங்க அன்னம்?...
அவங்க பாவ மூட்டை கரையணும்..ன்னு பாலிக்கிறாங்க!...
இருந்தாலும் பாலிக்கிறாங்க இல்லே!...
அவங்க பாலிக்கிறதைத் தின்னுட்டு
நமக்குத் தான் பாவத்துக்கு மேல பாவம் ஏறிப் போச்சு...
என்ன செல்லம் இப்படிச் சொல்றே!...
ஜிலேபி, வடை, பாயாசம், அப்பளம் -
இதெல்லாம் இந்த சென்மத்தில நமக்குக் கெடைக்குமா?..
ம்ம்... நம்ம மேல பிரியப்பட்டு வெக்கிறாங்க...ன்னா
நாம குடியிருக்கிற மரத்தை எல்லாம் ஏன் வெட்டுறாங்களாம்!...
கூட்டை இழந்து குஞ்சு எல்லாம் இழந்து
நாம பட்ட கஷ்டம் உங்களுக்கு மறந்துடுச்சா?...
மறக்கலை தான்!... இருந்தாலும்...
இருந்தாலும்.. ந்னு ஏன் இழுக்கிறீங்க?...
அடுத்த ஒரு ஜீவனோட கூட்டை அழிச்சுட்டு
நாம மட்டும் எப்படி நல்லா குடுத்தனம் பண்ணமுடியும்... ந்னு
நெனைச்சுப் பார்க்காத மனுசன் ஒரு மனுசனா!...
இவனுங்களால அழிஞ்ச
ஆலமரம் எத்தனை?.. அரச மரம் எத்தனை?..
வேல மரம் எத்தனை?.. வேங்கை மரம் எத்தனை?..
புங்க மரம் எத்தனை?.. புளிய மரம் எத்தனை?..
மா மரம் எத்தனை?.. மருத மரம் எத்தனை?..
ஆகா.. கவிதை எல்லாம் பாடுறீயே!..
சும்மா இருங்க... வயத்தெரிச்சலைக் கெளப்பாம!...
நாம பாட்டுக்கு ஒளிவு மறைவா கூட்டைக் கட்டிக்கிட்டோம்..
கொஞ்சிக்கிட்டோம்!.. குலாவிக்கிட்டோம்!..
எல்லாத்தையும் கெடுத்துப் போட்டது இந்த மனுசனுங்க தானே!...
எவனோ வெட்டித் தள்ளினான்.. எவனோ அள்ளிக் கட்டினான்!..
அதுக்காக எல்லாரையும் திட்டுறதா?...
இதுல ஒவ்வொருத்தனுக்கும் பங்கு இருக்கா இல்லையா?..
மரத்தை வெட்டிட்டுப் போட்ட ரோட்டுல இவனும் போறானா இல்லையா?..
அதுக்காக ரோடு போடக்கூடாது... ங்கிறயா?...
ரோடு போடு!.. யாரும் வேணாம்...ன்னு சொல்லலை!..
வாய்க்கால் வரப்பை அழிக்காதே.. வயக்காட்டை ஒழிக்காதே...
மண்ணுக்கு வரம் - மரம்... ன்னாங்க...
அந்த மரத்தை எல்லாம் அழிக்காதே...
மனுசனுக்கு மட்டும் தான் மரம் சொந்தமா?..
மத்த ஜீவராசிக்கெல்லாம் மரம் சொந்தம் இல்லையா?..
தங்கம்... நமக்கெதுக்கு இந்த அரசியல்?..
வா... அந்தப் பக்கமா போய் வேற ஏதாவது பேசுவோம்!...
அரசியல் இல்லை.. இதான் வாழ்க்கை முறை...
முறையோ.. நுரையோ.. நமக்கு எதுக்கு அதெல்லாம்?..
உங்க அப்பன் பாட்டன் வெச்ச மரத்தை என்ன வேணாலும் செஞ்சுக்க..
ஊர் பொது மரத்தை ஏன் வீணா வெட்டிச் சாய்க்கிறே!.. கேட்கிறது தப்பா!...
செல்லம்... நமக்கு எதுக்கு ஊர் வம்பு?..
இந்த மரம்... இல்லேன்னா... அந்த மரம்!..
இன்னுங் கொஞ்ச நேரத்தில கா..கா.. ந்னு
யாராவது சோத்தை வெச்சுக்கிட்டு கத்துவாங்க...
எறங்கிப் போனோமா.. ரெண்டு வாய் தின்னோமா..
நாலு முட்டையப் போட்டோமா.. குஞ்சு பொரிச்சோமா!.. ந்னு இருக்கணும்...
அந்த முட்டையும் தான் திருடித் திங்க வந்துடுறானுங்க!..
சரி.. விடு... முட்டைங்க தானே!.. போனாப் போகுது!..
வேற எங்கேயும் திருடுனா கையக் காலை ஒடைச்சுடுவாங்க!..
இவனுங்களுக்கு மட்டும் பிதுர் சாபம் எல்லாம் தீரணும்..
இவனுங்க புள்ளை குட்டிங்க எல்லாம் நல்லா இருக்கணும்!..
ஆனா -
நாம மட்டும் கூடு இல்லாம குஞ்சு இல்லாம சாவணும்!..
நல்லா பேசுறீங்களே நீங்களும் ஞாயம்!...
குஞ்சு குளுவான் எல்லாத்தையும் இழந்துட்டு
நான் படுற பாடு எனக்குத் தானே தெரியும்!..
சரி.. சரி.. விடு.. மனசைத் தேத்திக்க!...
எனக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா!...
எவனோ சொன்னானாம்.. காக்கா எல்லாம் பித்ருக்கள்..
தாத்தா பாட்டி, அப்பன் ஆத்தா..வோட மறு உருவம்...ன்னு...
அப்படியே அது உண்மை...ன்னா
தாத்தா பாட்டி, அப்பன் ஆத்தா..வோட
குடும்பத்தை அழிக்கலாமா?..
அப்படியே எல்லாத்தையும் அழிச்சிப் போட்டுட்டு
அவங்க கிட்டயே கையேந்தி நிக்கலாமா..
எங்கள நல்லா வையிங்க... ன்னு!?..
கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டாங்களா?..
நல்ல நாளும் அதுவுமா -
ஏதோ ஒரு ஜீவனுக்கு ஒரு கை சோறு!.. ன்னா சரி...
பாவம் தீரணுமா!.. காக்காய்க்கு வை...
பணம் காசு சேரணுமா.. காக்காய்க்கு வை...
அப்புறம் காக்கா கூட்டுக்கே வேட்டு வை!..
ஸ்ரீராம்.... ன்னு ஒரு அண்ணாச்சி காக்கா பாட்டு வெளியிட்டாரே...
பரிகாரம்.... ன்னா என்ன வேணாலும் செய்வானுங்க.... ன்னு!...
அப்படி... ன்னு...
அது.. தஞ்சாவூரு அண்ணாச்சி எழுதுனது ஆச்சே!..
ஆரு எழுதுனா.. என்னா?..
அந்தப் பாட்டு வெளியிட்டது ஸ்ரீராம்... அண்ணாச்சி தானே!...
சரி... அதுக்கு என்னா....ன்றே இப்போ!?...
அந்த மாதிரி -
இவங்களுக்கு வேணும்..ன்னா கூப்புடுவாங்களாம்!..
இல்லேன்னா.. வெரட்டுவாங்களாம்!...
அன்னைக்கு டீக்கடை பந்தல்ல உட்கார்ந்திருந்தப்ப பேசிக்கிட்டாங்க...
என்னா.... ன்னு!?...
இருக்கிற பரிகாரம் எல்லாம் செஞ்சு செஞ்சு அலுத்துப் போச்சாம்...
அதனால வர்ற வருசத்தில இருந்து - ஒரு காக்கா ஜோடிக்கு
வேட்டி சேலை எடுத்துக் கொடுக்கப் போறாங்களாம்!...
செஞ்சாலும் செய்வானுங்க!...
இருந்தாலும் அதெல்லாம் எதுக்குங்கறேன்?...
இருக்கிற மரம் மட்டைகளைக் காப்பாத்துனா
அது புண்ணியம் இல்லையா!...
ஆறு குளத்தை அழிக்காம இருந்தா
அது புண்ணியம் இல்லையா!...
பரிகாரச் சோறு யாரு கேட்டா!?...
இந்த வருசம் மாளய பட்சத்துக்கு கீழே இறங்கவே மாட்டேன்!..
தங்கம்... அப்படியெல்லாம் சொல்லக்கக்கூடாது...
அன்னத்தில பின்னம் இல்லை...
அன்னம் அது சொர்ணம்...
அன்னம் சிவலிங்க ஸ்வரூபம்!.. -
அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க!...
மனுசங்க என்ன பாவம் செஞ்சாலும் என்ன பழி சொன்னாலும்
அதெல்லாம் தீர்றதுக்கு நம்ம கிட்ட கையேந்தி நிக்கிறாங்க...
அதுவே நமக்குப் பெருமை தானே!...
இவங்க நமக்கு சோறு வைக்கலே...ன்னா
நாம என்ன வருத்தப்படவா போறோம்!?...
அவங்க வைக்கிற சோற்றை -
நாம திங்கலேன்னா தான்
மனங்கலங்கி மதி மயங்கி தடுமாறுறாங்க!...
கன்னங்கரேல்...ன்னு பொறந்தாலும்
நாம என்னைக்குமே மேல தான்!...
பளபள.... ன்னு இருந்தாலும்
நம்ம கிட்டே கையேந்தி நிக்கிற
மனுசனுங்க என்னைக்குமே கீழ தான்!..
அங்கே பாரு... இலையில சோற்றை வெச்சுக்கிட்டு
குடும்பமே - கா... கா... ன்னு கத்திக்கிட்டு நிக்குது!...
நாம கீழே இறங்கி ஒரு வாய் எடுத்தா
அவங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா!..
நாமளும் அவங்களை மாதிரி வக்கிரமா இருக்கக் கூடாது...
வா... கீழே போய் ரெண்டு வாய் சாப்பிடுவோம்!..
அப்பளம் எல்லாம் வெச்சிருக்காங்கடா!...
வா.... செல்லம்... எம் பேச்சைக் கேளு..
பாவம் தீருதோ.. புண்ணியம் சேருதோ!..
படைச்சவனுக்குத் தான் அதெல்லாம் தெரியும்!..
நீ.. வா... நாமளும் சந்தோசமா இருப்போம்..
பிறத்தியாருக்கும் சந்தோசத்தைக் கொடுப்போம்!...
ஏதோ நீங்க இவ்வளவு தூரம் சொல்றிங்களே...ன்னு தான்!..
சரி... வாங்க... போய் ஒரு வாய் சாப்பிட்டுட்டு
நல்லா இருங்க மக்களா... ன்னு வாழ்த்திட்டு வருவோம்!..
***
அந்தக் காக்கைகள்
கீழ் நோக்கிப் பறந்து இறங்கியதும்
அங்கே காத்துக் கிடந்தவர்களின்
முகமெல்லாம் மலர்ச்சி... மகிழ்ச்சி...
அந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியும்
உலகின் எல்லா உயிர்களுக்கும் ஆகட்டும்..
மகாளய பட்சம் - நாளை முதல்..
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்...
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ