நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 30, 2019

கீழ்வேளூர் 3

எம்மைப் பாடுக!..

அண்ணாமலைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழந்த
அருணகிரியைக் காப்பாற்றியருளிய எம்பெருமான்
தனது திருவாய் மலர்ந்து ஆணையிட்டான்...

எந்தையே!.. எங்ஙனம் பாடுவேன்?..
எப்படிப் பாடுவேன்?.. ஏதுமறியாத மூடன் நான்!..

அருணகிரி திகைத்து நின்றார்..
ஐயன் புன்னகையுடன் அனுக்கிரகித்தான்.. 

முத்து முத்தாகப் பாடுக!...


அப்போது பிறந்ததே -

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக் கொரு வித்துக் குருபர எனவோதும்... எனும் திருப்புகழ்...

முத்துக்களைப் போல புன்னகை திகழும்
தெய்வ யானையின் மணாளனே!...
சக்தி உமைபாலனே.. சரவணனே..
முத்திக்கொரு வித்தானவனே..
பரமனுக்குக் குரு என நிற்கும் குமரனே..
அயன் ஹரி எனும் இருவருடன்
முப்பத்து முக்கோடி தேவரும்
வணங்கிடத் திகழும் முருகனே!...

பத்துத் தலையிருந்தும் பதராகி நின்ற ராவணனை
ஒற்றைக் கணையால் வீழ்த்திய ராமனாகவும்
பாற்கடலைக் கடையும்போது கூர்மனாகவும்
பக்தனுக்காக ரதத்தை நடத்திய கிருஷ்ணனாகவும்
அவதாரம் கொண்ட ஸ்ரீ ஹரிபரந்தாமனின் மருகனே...
நீ என்னையும் காத்து அருள்கின்ற நாளாக இந்நாள் ஆனதே!..

வருமொரு கோடி அசுர பதாதி மடிய அநேக இசைபாடி
முருகா நீ வேல் விடுத்து போர் நடத்திய அவ்வேளையில் -

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதுகள் ஆடினவே!...

அது மட்டுமா!...
திக்குத் திசை காக்கும் பயிரவ மூர்த்தியும்

தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு - என ,
உடுக்கையை முழங்கியபடி திரி கடக எனும் தாளத்துடன்
பவுரி எனும் அழகிய கூத்தினை நிகழ்த்தினரே!...


இப்படி பயிரவரும் பயிரவியும் ஆனந்தக் கூத்தாடி 
மகிழும்படிக்கு போர் நடத்தி 

அசுரர்களின் குலகிரியாகிய
கிரவுஞ்ச மலையைத் தூளாக்கி 

வெற்றி கொண்ட வேலனே!...




- என்று வியந்து போற்றுகின்றார்...

தேவயானையை இந்திரன் வளர்த்தாலும்
அவளுடைய தாய் 
ஸ்ரீமஹாலக்ஷ்மி..

அதனால் அல்லவோ தன் மருமகனுக்காக
இலந்தை மரமாக நிழல் கொடுத்து நின்றாள்...

திவ்ய தேசமாகிய திருவதரி எனும் பத்ரிநாத்திலும்
இலந்தை மரமாக நிழல் கொடுத்து நிற்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியே!..

இப்படியான புகழுடன்
சிவபூஜைக்கென அமர்ந்த முருகனுக்கும் இடையூறுகள்..  

அசுர குலம் போரில் அழிந்துபட்டாலும் 
அவை செய்த தவத்தால் 
சூட்சும ரூபங்களாக அலைந்து கொண்டிருந்தன...


அவைதான் முருகப்பெருமானின்
சிவ வழிபாட்டுக்கு இன்னல் விளைத்தவை... 


ஒரு கணம் தவித்து நின்றான் கந்தப்பெருமான்...

கடைக் கண் விழித்து நோக்கினாலும் போதும்...

அந்த மாயைகள் அனைத்தும்
சருகுகளாகக் கருகிப் போய்விடக்கூடியவை தான்!...

ஆனாலும் சிந்தையை சிவபூஜையில் செலுத்திய பின்
வேறொன்றைக் கருத்தில் கொள்வதா?...

சற்றே, மனம் உருகியது..
அம்மையே... அப்பனே!... இதுவும் தகுமோ?...

அக்னி சேஷம், சத்ரு சேஷம், ரண சேஷம் , ருண சேஷம்..

தீ, பகை, காயம்,  கடன் -
இவற்றில் மிச்சம் வைக்கவே கூடாது...
முற்றாகத் தீர்த்து விடவேண்டும் - என்பர் ஆன்றோர்...

அன்றைக்கு இத்தோடு போகட்டும் என்று விட்டதனால்
ஆவியான நிலையிலும் ஆர்ப்பாட்டம் கொண்டு நின்றனர் அசுரர்கள்...

இனி ஒருக்கணமும் தாமதிக்கக் கூடாது...

பரமேஸ்வரன் மலர்ந்த புன்னகையுடன்
அருகிருந்த தேவியை நோக்கியருளினார்...

அந்த மட்டில் அம்பிகைக்கு உற்சாகம் பீறிட்டெழுந்தது...

அது தானே வேண்டும் அவளுக்கு!...

ஆங்கார ரூபங்கொண்ட அம்பிகை
மண்ணுக்கும் விண்ணுக்குமாக சதிராடி நின்றாள்...

நாற்றிசைகளும் நடுநடுங்க ஆகாயம் அதிர்ந்து நின்றது...

ஒரு குஞ்சு குளுவானைக் கூட விடாமல் 
வளைத்துப் பிடித்து

காலடியில் போட்டு மிதித்துச் சகதியாக்கினாள் சக்தி...


அஞ்சு வட்டம் ஆடி நிற்கும் காளி அல்லவோ - அவள்
அடங்காத ஆவியர்க்கும் சூலி அல்லவோ.. 
நெஞ்சு கொண்ட நீதியர்க்கு நீலி அல்லவோ - தமிழ்த்
தடங்கொண்டு வாழ்பவர்க்கு வேலி அல்லவோ!..


- என்று, பம்பையும் உடுக்கையும் முழங்கி நின்றன...

திருமுருகன் சிவபூஜையை இனிதே நடாத்தி
தீர்த்தமும் திருநீறும் வழங்கி அருள்பாலித்தனன்...

அறுமுகனின் அல்லல் அகற்றியவளாக
அஞ்சு வட்டத்து அம்மை - எனத் திருப்பெயர் கொண்டு
வடக்கு நோக்கி அமர்ந்து வாடி நிற்கும்
உயிர்களின் வாட்டம் தீர்த்து அருள்கின்றாள் அம்பிகை...



நான்கு திசைகளிலும் ஆகாயத்திலும்

நான்கொடு ஒன்று ஐந்தென அம்பிகை வட்டமிட்டு ஆடி
ஆவிகளின் ஆர்பாட்டத்தை அடக்கி ஒழித்ததால்
அஞ்சு வட்டத்து அம்மை என்று திருப்பெயர் கொண்டாள்...

திருக்கோயிலின் வடக்குப் பிரகாரத்தில்
தனி சந்நிதி கொண்டு அருள்கின்றாள் அஞ்சுவட்டத்து அம்மன்..



ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விசேஷம்..
பௌர்ணமி நாட்களில் சிறப்பு அலங்கார ஆராதனைகள்..


அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி  
அம்மையின் சந்நிதி - பின்புறத் தோற்றம்  
இன்றைய பதிவினில் காணப்படும்
அஞ்சு வட்டத்தம்மனின் படங்கள் FB ல் கிடைத்தவை...

மற்றபடி திருக்கோயிலில் நானெடுத்த படங்கள்
தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகின்றேன்...

மேலும் சில படங்களுடன்
அடுத்த பதிவினில் சந்திப்போம்.. 



பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினிசூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.. (077)
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ 

சனி, ஜூன் 29, 2019

கீழ்வேளூர் 2

ஏதோ ஒரு காலத்தில் - அரசன் ஒருவன்
தனது பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான்..

வழக்கம் போல வழி தவறிய மன்னன் தாகத்தால் தவித்து
ஆசிரமம் ஒன்றினை அடைந்தான்...

காட்டுக்குள் ஆங்காங்கே சிற்றோடைகளும் சுனைகளும்.. ஆனாலும்,
அவற்றில் எல்லாம் நீர் அருந்த மன்னனின் கௌரவம் தடுத்தது...

தலை தெறிக்கும் தாகத்துடன் தவித்த மன்னன் 
ஆசிரமத்தின் முன்னால் நின்று அழைத்தான்.. சப்தமிட்டான்..

ஆரொருவரும் குடிலின் உள்ளிருந்து வாராததால் கடுப்பாகி
பெரிதாகக் கத்திக்கொண்டே குடிலின் கதவைப் பிய்த்துக் கொண்டு
உள்ளே நுழைந்தான்..

குடிலினுள் தியானத்திலிருந்த முனிவர் திடுக்கிட்டு விழித்து
அவரும் வழக்கம் போலவே கோபாவேசமானார்...

கடுங்குரலெடுத்துக் கத்தியதால் கழுதையாகப் போவாய்!...

சற்றும் குறையாத கோபத்துடன் சாபம் கொடுத்துவிட்டு
மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்..

அடுத்த சில விநாடிகளில் கழுதையாக மாறி விட்ட அரசன்
மறுபடியும் கத்திக் கொண்டே காட்டை விட்டு ஊருக்குள் நுழைந்தான்..

எதிர்ப்பட்ட ஒருவன் அந்தக் கழுதையைப் பிடித்து
வணிகன் ஒருவனுக்கு இரண்டு பணத்துக்கு விற்று விட்டான்..

வாட்ட சாட்டமான இந்தக் கழுதையின் மீது மூட்டைகளை ஏற்றி
மற்ற கழுதைகளுடன் வழி நடத்தினான் வணிகன்..

காலங்கள் கடந்தன... கழுதைக்கும் விடிவு காலம் வந்தது...

சோழ வளநாட்டில் காவிரியின் தெற்காக விளங்கும் இலந்தை வனத்துக்குக் கழுதைகளுடன் வந்தான் வணிகன்..

உச்சிப் பொழுது..  திருக்குளத்துத் தண்ணீரைக் காட்டினான் -
தாகங்கொண்ட கழுதைகளுக்கு...

தாகந்தீர்ந்த மற்ற கழுதைகள் சும்மா இருக்க
ஒரு கழுதை மட்டும் கத்தியது...

நாந்தான் ராஜா... நாந்தான் ராஜா!...  - என்று..

கழுதையிடம் மனிதக் குரலைக் கேட்டு பயந்து போன வணிகன்
அதை மட்டும் தனியாக விரட்டி விட்டு தன் போக்கில் போனான்...

குரல் மாறியது.. கொண்ட உருவம் மாறவில்லையே!..
- என்று வருந்தியது கழுதை..

அந்த நிலையில் அந்தக் குளக்கரையில் இலந்தை மரத்தினடியில் சிவலிங்கத்தைக் கண்டது..

முன் நினைவுகள் மூண்டெழவே
சிவலிங்கத்தைச் சுற்றிவந்து வணங்கியது...

அடுத்த சில தினங்களில் கழுதையின் சாபமும் தீர்ந்தது...

தன்னுரு மீளப் பெற்ற மன்னன் தன் கதையை ஆங்கிருந்த மக்களிடம் சொல்லிவிட்டு தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்...

இதனால் இங்கு வழிபடுவோர்க்கு - விதியிருப்பின்
அவரவர் மேலைத் தவத்தின்படி பிறப்பின் ரகசியம்
உணர்த்தப்படுகின்றது என்பது ஐதீகம்...

முப்பதாண்டுகளுக்கு முன்
இங்கே வணங்கி நின்றபோது தான்
தேவாரத் திருப்பதிகங்களில் நாட்டம் ஏற்பட்டது..

சந்தியாகால பூஜையின் போது 
ஓதுவா மூர்த்திகள் இருவர் திருப்பதிகம் ஒன்றின்
முதற்பாடலை ஒருவரும் அடுத்த பாடலை மற்றொருவருமாக
ஓதியதைக் கேட்டு மெய் சிலிர்த்து நின்றேன்..

அந்தத் திருப்பதிகம் யாரால் அருளப் பெற்றது என,
நூலகத்தில் திருமுறைகளைத் தேடியபோது தான்
தேவாரம் எனும் திருவிளக்கு கைக்குக் கிடைத்தது...

சில ரகசியங்கள் உணர்த்தப் பெற்றதால்
நானும் பேறு பெற்றவனானேன்....

இப்படியான இத்தலத்தில் மீண்டும்
புதியவனாக தங்களுடன்!...

ஸ்ரீ அட்சயலிங்கேஸ்வரர் 
ஸ்ரீ வாருலாவிய வனமுலையாள் 
நீருலாவிய சடையினர் அரவொடு மதிசிர நிரைமாலை
வாருலாவிய வனமுலை அவளொடு மணிசிலம்பு அவைஆர்க்க
ஏருலாவிய இறைவனது உறைவிடம் எழில்திகழ் கீழ்வேளூர்
சீருலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினைபோமே..(2/105)
-: திருஞானசம்பந்தர் :-

மேற்கண்ட இருபடங்களும் FB ல் இருந்து 
பெறப்பட்டவை.. 



திருமூலஸ்தானம் 
அகத்தியருக்குக் காட்டியருளிய திருநடனம் 
விநாயகர் சந்நிதி 

நாயன்மார்கள் 

படங்கள் தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகிறேன்..
மேலும் சில படங்கள் அடுத்த பதிவினில்!..


தலவிருட்சம் - இலந்தை 
சுழித்தானைக் கங்கை மலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடினானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனை முன் வேனலானை
கிழித்தானைக் கீழ் வேளூர் ஆளுங்கோவைக்
கேடிலியை நாடும் அவர் கேடிலாரே..(6/67)
-: அப்பர் பெருமான் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஜூன் 28, 2019

கீழ்வேளூர் 1

வெற்றி வேல்!.. வீர வேல்!..

செந்திற் கடற்கரையில் எழுந்த ஜயகோஷம்
அண்ட பகிரண்டம் எங்கும் எதிரொலித்தது.!..

மூம்மூர்த்திகளும் கூடி நின்று  பூமாரி பொழிந்தனர்!..

சூரபத்மன் வீழ்ந்தான்..
ஆணவம் அழிந்த நிலையில் அடங்கி ஒடுங்கி, 

''..முருகா சரணம்!. முதல்வா சரணம்!.'' - என - 

 கந்தனின் காலடியில் கிடந்தான்.. 

அவனைப் பரிவுடன் நோக்கிய கந்தப் பெருமான், - 
''..இனி எமது மயில் வாகனத்துள் இன்புற்றிருப்பாயாக!..'' 
- என, இன்தமிழால் மொழிந்தான்... 

அவ்வண்ணமே - ஆகி - பெருவாழ்வு பெற்ற சூரன்,
இப்படியும் அப்படியுமாக நடை பழகி - தன் பசுந்தோகையை விரித்து
ஆடியபடி - ஆறுமுகப்பெருமானை வலம் வந்து வணங்கினான்...

மயில் வாகனனாகத் திருக்காட்சி நல்கிய எம்பெருமானின்
திருவடிகளில் விழுந்து வணங்கினர் - மறுவாழ்வு பெற்ற தேவர்கள்...


சர்வம் சுப மங்கலம்  - என்றிருந்தது பிரபஞ்சம் முழுதும்... 

அந்த வேளையில், ஏகாந்தமாக இருந்த கந்தவேள் - தனக்குள் சிந்தித்தான்.

சிவபக்தனாகத் தவமிருந்த சூரபத்மன் - சிந்தை கெட்டதால் சீரழிந்தான்!..

தந்தையின் ஆணைப்படி - அவன் கொண்ட ஆணவத்தை அழித்தாயிற்று!.. 

ஆயினும் ... ஆயினும் ...

மயிலோனின் மனம் அமைதி கொள்ளவில்லை... 

அம்மையப்பனைத் தரிசித்து, வலம் வந்து வணங்கி நின்றான்..

செல்வமுத்துக் குமரனின் உள்ளக் கிடக்கையைப்
புரிந்து கொண்ட சிவப்பரம் பொருள் - புன்னகை பூத்தது.

இது நிகழ்ந்தது - திருக்கயிலை மாமலையில் என்றால் - 
அங்கே திருப்பாற் கடலில் தூங்காமல் தூங்கிக் கிடக்கும்
திருத்துழாய் மார்பன் - தானும் புன்னகை பூத்தான்!..

தம்பியர் எண்மருடன் வீரபாகு உடன் வர -  பூதப்படையும் சூழ்ந்து வர  , 

பூவுலகம் வந்தடைந்த முருகனை - வரவேற்பது போல
பிரம்மாண்டமாகத் தழைத்து நின்றது - இலந்தை மரம்...

முருகன் தன் வேலினைக் கொண்டு
ஆங்கொரு ஒரு தடாகத்தை உருவாக்கினான்...

சரவணப்பொய்கை எனப்பட்ட தீர்த்தத்தில் அனைவரும் நீராடினார்கள்...

நவ வீரர்களும் சூழ்ந்து நின்றனர்...
பூதப்படை அவர்களுக்கு அரணாக நின்றது..

ஒன்றிய மனத்துடன் கரங்குவித்து நின்ற செல்வக்குமரனின்
முன்பாக சுயம்பு லிங்கம் ஒன்று மூண்டெழுந்தது...

தாழ்ந்து பணிந்து வணங்கிய வள்ளல் பெருமான்  -
தான் எண்ணி வந்த காரியத்தைத் தொடங்கினான்...

அந்த நொடியிலேயே பேரிரைச்சல்... பெருஞ்சத்தம்...

சூரபத்மனுடன் நடாத்திய போரில் மாண்டு விழுந்த
அசுரக் கூட்டம் ஆவி ரூபமாகியும் வெறி அடங்காமல்
அந்தப் பகுதியை கலக்கியடிக்க முனைந்தன...

காம வசப்பட்ட மாயை - காசியப முனிவருடன் கூடிக்
கணக்கின்றிப் பெற்றெடுத்த மாயைகள் அல்லவா!..

ஒரு கணம் தவித்து நின்றான் கந்தப்பெருமான்...

கடைக் கண் விழித்து நோக்கினாலும் போதும்...

அந்த மாயைகள் அனைத்தும்
சருகுகளாகக் கருகிப் போய்விடக்கூடியவை தான்!...

ஆனாலும் சிந்தையை சிவபூஜையில் செலுத்திய பின்
வேறொன்றைக் கருத்தில் கொள்வதா?...

சற்றே, மனம் உருகியது.. இதுவும் தகுமோ?...

பரமேஸ்வரன் மலர்ந்த புன்னகையுடன்
அருகிருந்த தேவியை நோக்கியருளினார்...

அந்த மட்டில் அம்பிகைக்கு உற்சாகம் பீறிட்டெழுந்தது...

ஆக வேண்டியதனைத்தும் இம்மி பிசகாமல் நடந்தேறின...


ஆனந்தப் புன்னகையுடன் முருகன் தனது வழிபாட்டினை நடத்தி முடித்தான்..

இப்படியாக முருகப் பெருமான்
சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம் தான் கீழ்வேளூர்...

இன்றைக்கு கீவளூர் என வழங்கப்படுகின்றது...

இத்திருத்தலத்தைத் தரிசனம் செய்வதற்கு
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்...



திருமுருகன் வழிபட்ட திருத்தலம் எனினும்
ஈசன் எம்பெருமானே மூல மூர்த்தி...

கீழ்வேளூர் - தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகும்..





திருத்தலம் - கீழ்வேளூர் (கீவளூர்)

இறைவன் - கேடிலியப்பர், அட்சயலிங்கேஸ்வரர்..
அம்பிகை - வனமுலை நாயகி, சுந்தரகுஜாம்பிகை..


தலவிருட்சம் - இலந்தை
 தீர்த்தம் - சரவணப்பொய்கை, பிரம்மதீர்த்தம்

பிரம்மாண்டமான சுதை நந்தி
திருக்கோயில் கட்டுமலை..
கோசெங்கட்சோழரால் அமைக்கப்பட்ட மாடக்கோயில்..

மூலஸ்தானத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள்  
மாடக் கோயிலின் படிக்கட்டுகளுக்குத் தென்புறம் முருகனின் சந்நிதி...
முருகன் வடக்கு முகமாகத் திகழ்கின்றனன்...

சிக்கல் தலத்தில் மாடக்கோயிலில் சிவ சந்நிதிக்கு அருகில்
தெற்கு முகமாக முருகனின் சந்நிதி..

கீழ்வேளூரில் மாடக்கோயிலின் கீழ் வடக்கு முகமாக முருகனின் சந்நிதி..

முருகன் சிவபூஜை நிகழ்த்திய தலம் ஆதலின்
ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் கூடிய சந்நிதி கிடையாது...

முருகன் சந்நிதி அருகேயே மேஜை போட்டு அர்ச்சனை சீட்டு விற்பனை...
கேட்பதற்குத் தயக்கம்.. எனவே அங்கே படம் ஏதும் எடுக்கவில்லை...

மாடக்கோயிலில் இருந்து கோபுர தரிசனம்  
மூலஸ்தானமும் வீதி விடங்கர் விமானமும் 
விநாயகர் சந்நிதியில் இருந்து இரட்டை விமானங்கள் 
ஞானசம்பந்தப்பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
திருப்பதிகம் பாடிப்பரவிய திருத்தலம் கீழ்வேளூர்...

ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பார் இல்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானைக் கீழ்வேளூர் ஆளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடிலாரே!.. (6/67)
-: அப்பர் பெருமான் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

புதன், ஜூன் 26, 2019

பரிதியப்பர் தரிசனம் 3

தஞ்சையை அடுத்துள்ள
ஸ்ரீ பரிதியப்பர் திருக்கோயிலைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றோம்...

மிகப் பழைமையான கிழக்கு நோக்கிய கோயில்...

திருக்கோயிலின் எதிரில் மூன்று ஆலமரங்கள்...
அவற்றைக் கடந்து தேரடி.. அருகில் அழகான தேரடிப் பிள்ளையார்..






ஐந்து நிலைகளையுடையது முதல் ராஜகோபுரம்..

ராஜகோபுரம் 
திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம். வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி.



உள்பிரகாரம் வெளிப் பிரகாரம் என இரண்டு உள்ளன...

மூன்று நிலைகளையுடைய இரண்டாம் ராஜகோபுர வாயிலை அடுத்து -
உள் பிரகாரத்தில் வழக்கமான சந்நிதிகள்...

கோட்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, நான்முகப் பிரம்மன்...



சந்நிதிகளில் விநாயகர், முருகன், கஜலட்சுமி திருமேனிகளைத் தரிசிக்கலாம்..


பிரகாரத்தில் சண்டிகேசருக்கு மூன்று திருமேனிகள் உள்ளன..


அம்பாள் மூலஸ்தானம் 
சிவகாமசுந்தரி அம்பிகையுடன் நடராஜ சபை உள்ளது...
அருகில் ஸ்ரீபைரவர், சூரியன், சந்திரன்..

நவக்கிரக மண்டலமும் உண்டு..

ஸ்வாமி மூலஸ்தானம் 
துவார விநாயகரையும் துவார பாலகர்களையும் தொழுது உட்சென்றால் கருணையே வடிவான மூலவரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்..

ஸ்ரீ பரிதியப்பருக்கு முன்னால் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ சூர்ய மூர்த்தி...

ஞாயிற்றுக் கிழமைகளில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து,
அருள்தரும் பரிதியப்பரை வணங்கினால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பர்..

நூற்றெட்டு தாமரை மலர்கள் என்றால் இன்னும் சிறப்பு..

வருடம் தோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் சுயம்பு லிங்கமாகிய பரிதியப்பருக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்களுடன் சூரிய பூஜை நிகழும்..

காலை 6.30 மணியளவில் உதித்தெழுகின்ற

சூரியனின் கதிர்கள் கருவறையில் படர்கின்றன..

இத்திருக்காட்சியினைக் காண்பதற்குத் தவம் செய்திருக்கவேண்டும்..
வரும் பங்குனியில் வாய்ப்புள்ளோர் அவசியம் தரிசனம் செய்க.. 

சிவலிங்கத்திற்கு எதிரில் சூரியன் 
சிவபெருமானின் எதிரில் - சூரியன் நின்ற வண்ணம் வணங்கும் திருக்கோலத்தினை வேறு எங்கும் காண இயலாது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறந்து விளங்கும் இத்தலம் -
பிதுர் தோஷத்தினை நீக்கும்  பரிகார தலமாகவும்  
குறைவற்ற கண்ணொளி வழங்கும் தலமாகவும்  சிறந்து விளங்குகிறது. 

எந்தத் துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான தொல்லைகளும் தீர்வதற்காக,
இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்...


ஸ்ரீ பிடாரியம்மன் கோயில் 
ஸ்ரீ இடும்பன் கோயில் 
திருக்கோயிலுக்குத் தென்புறம் பிடாரியம்மனுக்கும்,
திருக்கோயிலருகில் இடும்பனும் சந்நிதி கொண்டுள்ளனர்...

திருக்கோயிலின் முன்புறத்தில் சூரிய தீர்த்தம்,  பின்புறத்தில் சந்திர தீர்த்தம் ..

சென்ற பதிவில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற இருந்த அறிவிப்பைச் சொல்லியிருந்தேன்..

உள்பிரகாரம் சுற்றி வரும் போது சந்நிதி விமானங்களுடன்
ராஜகோபுரமும் சேர்ந்து விளங்கிய காட்சியைத் தவிர வேறெதுவும் எடுக்கவில்லை...

பதிவிலுள்ள படங்கள் அனைத்தும் வெளிப்பிரகாரத்தில் எடுக்கப்பட்டவை... 

நண்பர்கள் பலரும் இதைப் பற்றி சொல்லியிருந்தார்கள்...

படம் எடுக்கக்கூடாது - என்றால், கொடிமரத்தைக் கடந்து மூலஸ்தானத்தை எடுக்கக் கூடாது என்பதாகத் தான் அர்த்தம்...

எவருக்கும் அனுமதி இல்லையென்றால்
மேலே காணும் சூரியனின் படம் Fb ல் வந்தது எப்படி?...

கோயில் பணியாளர்கள் எவர் துணையும் இல்லாமல்
சிவலிங்கத்தையும் மூலஸ்தானத்துக்கு முன்னாலும் படம் எடுக்க இயலுமா!...

சில வினாக்களுக்கு விடை காண்பது கடினம்...


கோயிலின் எதிலுள்ள ஆலமரங்கள் 
இந்தத் திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையிலுள்ள  உழூர் கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பரிதியப்பர் கோயில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன..

இருந்தாலும் கோயில் வழியாகச் செல்லும் பேருந்துகள்
மணிக்கு ஒருதரம் தான்...

பழைய பேருந்து நிலையத்திலிருந்து
ஒரத்தநாடு செல்லும் நகரப் பேருந்துகளும்


புதிய பேருந்து நிலையத்திலிருந்து
பட்டுக்கோட்டை செல்லும் புறநகர்ப் பேருந்துகளும்
உழூர் வழியாகத் தான் செல்கின்றன...

ஆனாலும் -

உழூரில் இருந்து பரிதியப்பர் கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் அரிது...



ராஜகோபுரத்தின் தென்புற நாசித்தலை 
ஏதோ காரணத்தால் சிதைந்துள்ளது..

நுணுக்கமான வேலைப்பாடுகள் சுதை சிற்பங்களில் காணப்படுகின்றது...
திருக்கோயில் திருப்பணியை நோக்கியுள்ளது - நிதர்சனம்...

கூடிய விரைவில் -  திருப்பணிகள் தொடங்குவதற்குப்
பிரார்த்தனை செய்து கொள்வோம்...

கூடுதலாக ஒரு செய்தி - இத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் உருவான சிறுகதை தான் - மறுபடியும் அம்மா.. (டீச்சர் - கல்பனா)



நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண்மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் நீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பார்புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதிந் நியமமே.. (3/104)
-: திருஞானசம்பந்தர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ