நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 31, 2022

கணபதி 2

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 15
புதன்கிழமை


நாடெங்கிலும்
ஸ்ரீ விநாயக சதுர்த்தி
*

பழந்தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இல்லை.. 

விநாயகர் சிலையே வாதாபியில் இருந்து நரசிம்ம பல்லவரின் (AD 630 - 668) தளபதி பரஞ்சோதி என்பவரால் கொண்டு வரப்பட்டது தான்.. 

அதற்கு முன் விநாயகரை இங்கு யாருக்கும் தெரியாது..

இப்படியெல்லாம் இங்கே சொல்லி உருட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்..

காஞ்சி மாநகர்..

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு
மகேந்திர பல்லவர் (AD 600 - 630) ஆட்சி நடத்துகின்றார்..

இவரது மகனே மாமல்லன் எனப்பட்ட  நரசிம்ம வர்மன்..

மகேந்திர பல்லவரின் காலத்தில் சமண சமயத் துறவி ஒருவர் மனம் மாறி மீண்டும் சிவநெறியினைச் சார்ந்து விட்டார்.. பெயரும் திருநாவுக்கரசர் என்றாகி விட்டது..

கொல்லாமை வழியில் நிற்கின்ற ஏனைய சமணத் துறவிகள் கொதிக்கின்றனர்..

நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பம் இல்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்கொய்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே .. 6/98/1

- என்றபடி அங்கே திருநாவுக்கரசர்..

" ஓடிப் போனதும் இல்லாமல் பாட்டு வேறயா!.. " 

- என்று பொங்கி எழுந்த சமணர்கள் - மனம் மாறிப் போன திருநாவுக்கரசர் மீது அடக்கு முறையை ஏவி விட்டு அவரைக் கொன்று விடுவதற்கு முயற்சி செய்கின்றனர்.. 

வழக்கம் போல் சிவசமய அன்பர்களின் கூக்குரல் மகேந்திரனின் காதுகளில் விழாததால் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கின்றனர்..

மகேந்திர பல்லவரும் சமணத் துறவிகளுக்கு உடன் நிற்க - அரசனது ஆணையினை எதிர்க்கின்றார் திருநாவுக்கரசர்.. 

அவரைக் கட்டி இழுத்துச் செல்வதற்காக வந்திருக்கும் தளபதி அவரது கால்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறான்.. 

" தாங்கள் இப்போது வரவில்லை எனில் எனது உயிருக்கு ஆபத்து.. "  - என்று..

அந்த வார்த்தைகளால் மனம் இரங்கிய திருநாவுக்கரசர் திரும்பவும் காஞ்சிக்குச் சொல்கின்றார்.. மன்னன் விதித்த தண்டனைகள் நிறைவேற்றப்படுன்றன..

ஆனால்,
அத்தனையும் தோல்வியில் முடிகின்றன.. 

இறுதியாக கல்லுடன் பிணைக்கப்பட்டு  கடலுக்குள் தள்ளப்படுகின்றார் திருநாவுக்கரசர்.. 

இறைவன் அருளால் கருங்கல்லானது தெப்பமாகி மிதக்கின்றது.. திருப்பாதிரிப் புலியூருக்கு அருகில்
திருநாவுக்கரசரும்
கரையேறுகின்றார்..

விவரம் அறிந்த மகேந்திர பல்லவர் மனம் வருந்தி திருநாவுக்கரசரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தானும் சைவ சமயத்திற்குத் திரும்புகின்றார்..

அடைக்கப்பட்ட சிவாலயங்கள் திறக்கப்படுகின்றன.. இடித்துத் தள்ளப்பட்ட கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன..

தான் சைவ சமயத்துக்குத் திரும்பியதை -  கல்வெட்டாகப் பதிவு செய்து வைக்கின்றார்
மகேந்திர பல்லவர்.. அந்தக் கல்வெட்டு திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் இருக்கின்றது..


திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களே தேவாரம் எனப்பட்டவை.. அவற்றில் ஈசனின் திருமகனாகிய
கணபதியைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார்..

மகேந்திர பல்லவரின் மகன் நரசிம்ம வர்மன்  சாளுக்கிய நாட்டுடன் 642 ல் போர் தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்றுகின்றான்.. வெற்றியின் சின்னமாக தலைநகர் வாதாபியில் இருந்த கணபதி விக்ரகத்தைப் பெயர்த்துக் கொண்டு வருகிறார் படைத் தளபதியான பரஞ்சோதி..

பரஞ்சோதி விநாயகர் சிலையைக் கொண்டு வந்த பிறகு தான் தமிழகத்துக்குக் கணபதியைத் தெரியும் என்றால் -

நரசிம்மனின் தந்தை மகேந்திர பல்லவர்
காலத்திலேயே திருநாவுக்கரசரால் கணபதி சொல்லப்பட்டது எப்படி?..

642 ல் நரசிம்ம பல்லவன் வாதாபியை வெற்றி கொண்ட பிறகு அங்கிருந்த கணபதி விக்ரகத்தைப் பெயர்த்துக் கொண்டு வந்தாரே தளபதி பரஞ்சோதி இவரே பின்னாளில் சிறுதொண்டர் என, நாயன்மார்களுள் ஒருவராக வைக்கப்பட்டார்.. 

இவர் - தான் கொணர்ந்த கணபதி விக்ரகத்தை தனது சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியின் சிவ ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார்..

அந்த கணபதியைக் கீழுள்ள படங்களில் காணலாம்..


இந்த  சிவ ஆலயத்துக்குப் பெயர் கணபதீஸ்வரம்..
கணபதி விக்ரஹம்  இவ்வூருக்கு வருவதற்கு முன்னரே  கணபதீஸ்வரம் என்ற பெயர் வந்தது எப்படி ?..

ஸ்ரீ வாதாபி கணபதி
திருச்செங்காட்டங்குடி
கஜமுகன் என்ற அசுரனுடன் கணபதி போரிட்ட போது சிந்திய ரத்தத்தால் மண் சிவந்து போனது.. அதனால் செங்காட்டங்குடி.. அசுரனை  வெற்றி கொண்டு அழித்த பிறகு, 


கணபதி இங்கே இருந்து சிவபூஜை நிகழ்த்தினார்.. அதனால் உண்டான கோயில் 
கணபதீஸ்வரம் என்றானது..
ஊர் - செங்காட்டங்குடி
கோயில் - கணபதீஸ்வரம்..

ஞானசம்பந்தப் பெருமான் இங்கே திருப்பதிகம் பாடியபோது கணபதீஸ்வரம் என்றே பாடுகின்றார்..


வாரேற்ற பறையொலியுஞ்
சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோடு
ஓங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய
செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான்
கணபதீச் சரத்தானே..1/61/2

கணபதீஸ்வரம் 
மேவி விளங்குகின்ற கணபதி
நம்மை என்றென்றும்
காத்து அருள் புரிவாராக!..

ஓம் கம் கணபதயே நம

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2022

கணபதி 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நாளை
புதன்கிழமை
ஆவணி வளர்பிறை
நான்காம் நாள்

ஸ்ரீ விநாயக சதுர்த்தி


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு ..


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா..
-: ஒளவையார் :-

மேற்கொண்ட இரு பாடல் களையும் செய்தருளியவர் தமிழ் மூதாட்டியான ஔவையார்..

நா வண்மை படைத்த நற்றமிழ்ப் புலமை ஔவையாருடையது..

பதிவின் இரண்டாவது பாடலை அரைகுறையாய்க் காதில் வாங்கி விட்டு -

அந்தக் காலத்தில்
ஔவையாரே பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுத்திருக்கின்றார் - என்று பலர் கதறுகின்றனர்..

வீரத் தமிழச்சி ஔவையார்..
எவரிடத்தும் இரந்து நின்றவரில்லை..

சங்கத் தமிழ் எனும் விலை மதிப்பற்ற அமுதத்தைப் பெறுவதற்காகத் தான் விலை மதிப்புறும் நான்கு பொருட்களைக் கொடுத்திருக்கின்றார்..

எதையும் விலையின்றிப் பெறுவது பெருந்தவறு என்பது அவருக்குத் தெரியும்..

சரி.. 

ஔவையார் கொடுத்த பொருட்கள் நான்கு.. பிள்ளையாரிடம் கேட்டது மூன்று..

நான்கினைத் தந்த ஔவையாருக்கு ஐந்தினைத் தந்திருக்கின்றார் பிள்ளையார்..

அவை என்னென்ன?..

கருத்துரையில் சொல்லுங்க!..

ஔவையார் திரைப்படத்தில் அப்போது வெகுவாகப் புகழ்ந்து பேசப்பட்ட காட்சி!..


ஓம் கம் கணபதயே நம

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், ஆகஸ்ட் 29, 2022

ஓரானைக் கன்று


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
பேரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதருஞ் சித்திதருந் தான்..
-: பழந் தமிழ்ப் பாடல் :-
*
நாளை மறுநாள்
ஸ்ரீ விநாயக சதுர்த்தி..

எளியேன் எழுதிய
போற்றி மாலை
இன்றைய பதிவில்..
*

ஓரானைக் கன்று என 
வந்தானை போற்றி
சிவசக்தி வலம் செய்து 
நின்றானை போற்றி..

மாமேரு மலைதனில்
மலர்ந்தானை போற்றி
மா பாரதம் தன்னை 
வரைந்தானை போற்றி..

அன்றமரர் துயரங்கள்
தீர்த்தானை போற்றி
ஔவைக்கு அருந்தமிழ்
கொடுத்தானை போற்றி..


காவேரி கடுஞ்சிறை
விடுத்தானை போற்றி
கைதொழ எல்லாமும்
ஆனானை போற்றி..

அரங்க மாநகர் தன்னைத்
தந்தானை போற்றி
ஆங்கொரு குன்றிலே
அமர்ந்தானை போற்றி..

தேவாதி தேவர் தொழ
நின்றானை போற்றி
தேவாரம் தனை மீட்டுத்
தந்தானை போற்றி..

அச்சிறுத்தருள் செய்த
அழகானை போற்றி
ஆயிரத்தெழுவருடன்
வந்தானை போற்றி..


புன்கூரில் குளமொன்று
புரிந்தானை போற்றி
புறம்பயத்தில் தேனோடு
பொலிந்தானை போற்றி..

மருதீசர் மலைக் குன்றில்
மிளிர்ந்தானை போற்றி
உப்பூரில் வெயில் தனில்
அமர்ந்தானை போற்றி..

அமரர்க்கு அமுதென்று
ஆனானைப் போற்றி
கந்தனுக்கு வள்ளிதனைத்
தந்தானை போற்றி..

கும்பமுனி கும்பிடக்  
குளிர்ந்தானை போற்றி
குறை தீர்த்து குலங்காத்து
நிறைந்தானை போற்றி..

வாதாபி தனை வென்று
வந்தானை போற்றி
வளர்பிறை அதனுடன்
நின்றானை போற்றி..


கலங்காமல் உயிர்களைக்
காத்தானை போற்றி
கருதியே வந்தார்க்கு
கதியானை போற்றி..

ஓங்கார ரூபமாய்
ஒளிர்ந்தானை போற்றி
ஓலமிட்டொரு குரல்
விளித்தானை போற்றி..

செவிகேட்டு செந்தமிழ்
மகிழ்ந்தானை போற்றி
விதிமாற்றி விளக்கேற்றி
வைத்தானை போற்றி..

ஞானமே வடிவாக
வந்தானை போற்றி
தானமே தவமாக
இருந்தானை போற்றி..


கோள்வினை எல்லாமும்
தீர்த்தானைப் போற்றி
நாளெலாம் நல்வினை
சேர்த்தானை போற்றி..

கல்லானைக் கவியென்று
வளர்த்தானை போற்றி
பொல்லானை பொறுத்தருள்
புரிந்தானை போற்றி..18

போற்றியே போற்றி எனப்
போற்றிடு மனமே..
போற்றியே போற்றி என
வாழ்த்திடு மனமே..
**

ஓம் கம் கணபதயே நம
***

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2022

பூக்கோலம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 12
ஞாயிற்றுக்கிழமை

தஞ்சை ஸ்ரீ முத்து மாரியம்மன்
அன்னையே உனைப்பாட
ஆயிரமாய் சொல்லிருக்க
எந்த ஒன்றை நானெடுப்பேன்
என்னவென்று பாடிவைப்பேன்..

முத்தென்று பாடுவதோ
மணியென்று பாடுவதோ
முன்நிற்கும் தமிழென்று
முந்திவந்து பாடுவதோ..

தாயேநீ தன்மகனைத்
தாங்கியே காத்தருள்வாய்
வினையென்னைச் சூழாமல்
வேலியெனக் காத்தருள்வாய்..

பொய் சூது களவு என்று
புறவழியில் போனதில்லை
மெய் வழிந்த வாழ்வதனில் 
உனையன்றி யாருமில்லை..

காமத்தை மோகத்தை
கண்டறியும் மாரியே
கரையேற வேண்டுமே
நானும் தடுமாறியே..

அத்தன் திரு மேனியிலே
ஆங்கு ஒரு திருக்கோலம்
அடியார்தம் நெஞ்சகத்தில்
நீங்காத பூக்கோலம்..


பூக்கோலம் மாக்கோலம்
நானறிந்த தில்லையே
புகழ்க் கோலம் பாடுவார்
வழிமறந்த தில்லையே..

தில்லை தனில் காளியாய்
தீவளர்த்து ஆடினாய்
தீயதெலாம் ஓடிடவே
திங்களைத் தான் சூடினாய்..

ஆயிரமாங் கண்களும்
அன்பினையே பாலிக்கும்
அடியவர்தம் இல்லத்தில்
ஆனந்தமே பூரிக்கும்..

பிழையான பிழை தன்னில்
மீண்டு வர வேணுமே
சூலினியின் சந்நிதியை
சூழ்ந்து வர வேணுமே..

கூடிவரும் அடியாருள்
அடியனையும் கண்டு கொள்வாய்
பாடிவரும் தமிழ்கேட்டு
பாலனையும் ஆண்டுகொள்வாய்..

நின்வாசல் வழிநின்று
நித்தமுமே யாசிக்க
பிழையேது குறையேது
நான் இன்னும் யோசிக்க..
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

சனி, ஆகஸ்ட் 27, 2022

உலக நீதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ இயமன் தானே..
-: உலக நீதி :-


உலகநீதி என்பது பழந்தமிழர் நூல்களுள் ஒன்றாகும்.. 

ஈற்றடிகளில் முருகப் பெருமானின் திருவடிகளைச் சிந்திக்கும் விருத்தப் பாடல்களை உடையது.. 

உலகநீதியில் பதினொன்றாவது விருத்தமாக இப்பதிவிலுள்ள பாடல் வருகின்றது..

அந்நூலில் 
இப்பாடலை இடைச் செருகலாக அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.. ஏனெனில் முருகனைச் சிந்திக்கும் ஈற்றடிகள் இல்லாதது தான்..

நூலின் ஆறாவது விருத்தத்திலேயே
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்..
எனக் கூறுகின்றார் உலகநாதப் புலவர்..

இந்த விருத்தத்திலும்
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் - என்று  மறுபடியும் வற்புறுத்த ப்படுகின்றது..

இந்த விருத்தத்தில் சொல்லப்படும் நீதிகளாவன:

வாழ்க்கையில் ஐந்து பேருக்குக் கொடுத்தாக வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது என்று வரிசைப் படுத்தும் போது 

அழுக்கை நீக்கித் துணிகளை வெளுத்துத் தருகின்ற ஏகாலியார், 

முகம் மழித்து முடி திருத்துகின்ற நாவிதர், 

கலைகளைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர், 

பேறு காலம் பார்த்த மருத்துவச்சி, 

பெருநோயைக் குணப்படுத்திய மருத்துவர்..

இவர்களுக்கான தட்சணையைக் காலத்தில்
கொடுக்காதவர்களை - எப்படியெல்லாம் தண்டிக்கக் காத்திருக்கின்றானோ யமதர்மன்!..

இங்கே செய்வது போல -
அங்கே வழக்கை இழுத்தடிக்க முடியாது.. வாய்தா கேட்க முடியாது.. 

உடனுக்குடன் தீர்ப்புகள் நிறைவேற்றப்படும் என்பதை நினைவில் கொள்வார்களா - அறம் பிழைத்தோர்!..

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்...

என்று, திரு ஐயாற்றுத் திருப்பதிகத்தில் உரைக்கின்றார் அப்பர் ஸ்வாமிகள்..

இரப்பவர் எனில் யாசகம் கேட்பவர்.. கரப்பவர் எனில் மறைப்பவர் - என்று பொருள்..

கொடுப்பதற்குப் பொருள் இருந்தும் மனம் இல்லாதவர் என்று கொள்ளலாம்..

இதில் இன்னொரு செய்தியும் இருக்கின்றது..

நேர்மையாக வேலை செய்வதற்கு வழி இருந்தும் 
அதை மறைத்து அரசுப் பணியில் லஞ்சம் வாங்கிப் பிழைப்பதும்



உணவகங்களில் கெட்டுப் போனவற்றை அதை உண்பவர் அறிய முடியாதபடிக்கு தில்லாலங்கடி வேலைகளுடன் விற்பனை செய்து
சில்லறை பார்ப்பதும் -

இதற்கு மேலும் பல விதமான குற்றங்கள்
எதற்கும் எவர்க்கும் அஞ்சாமல் இன்றைய நாட்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன..

எல்லாவற்றையும் கடுநரகங்கள் எனும் ஒற்றை வரிக்குள் வைத்து விடலாம்..

மக்கள் சொல்வதையே கேட்காத நிலையில் இருப்பவர்கள் மகான்கள் சொல்லியிருக்கும் நீதியையா கேட்கப் போகின்றார்கள்?..

அவரவர் தலைவிதிப்படி நடக்கட்டும்!..


இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!..
-: அப்பர் ஸ்வாமிகள் :-
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2022

திருப்புகழ்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 10
வெள்ளிக்கிழமை

இன்றைய பதிவில்
அருணகிரி நாதர்
அருளிச் செய்த
திருப்புகழ்..


திருத்தலம்
அவிநாசி
*
தனதானத் தனதான 
தனதானத் ... தனதான

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ... தருவாயே..
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ... பெருமாளே!..
(நன்றி: கௌமாரம்)

இறவாமலும், மீண்டும் பிறவாமலும் ஆகிய வரங்களைத் தருபவனே

என்னை ஆண்டருளும் ஞான குருவாக விளங்குபவனே

மற்றுள்ள எல்லாத் துணைகளும் ஆனவனே

நிலையான முக்தி எனும் பெரு வாழ்வினை எனக்கு
அருள்வாயாக..

குறவர் குலத்தின் வள்ளி நாயகியை மணந்தவனே

குகனே, சொல்லில் சிறந்த சொல் எனும் தமிழ்க் குமரேசனே

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கினையும் 
தந்தருள் புரிபவனே

அவிநாசியில் வீற்றிருந்தருளும் பெருமாளே..


சக்தி வேல் முருகனுக்கு அரோகரா..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
  ஃஃஃ

வியாழன், ஆகஸ்ட் 25, 2022

கிச்சா..

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இப்படித்தான்,
ஜூலை இருபதாம் தேதி மதிப்புக்குரிய கமலாஹரிஹரன்  அவர்களது சிரிப்பு டாக்டர் பதிவைப் படித்த பிறகு -

நம்ம கிச்சாவும் கிளம்பி விட்டான்..

" அதுசரி.. கிச்சா.. ன்னா யாரு?.. "

" கிச்சா தெரியாது?.. அதான்.. விஷ்ணு கேட்டரிங்.. ன்னு.. இந்தப் பக்கத்து கல்யாண வீட்ல எல்லாம் - இட்லி  பொங்கல் வெங்காயச் சட்னி  ரவாகேசரி அசோகா.. அவனோட ஸ்பெஷல் ஐட்டமே தஞ்சாவூர் தயிர் வடை தான்.. காலை டிபன்.. ல யே அசந்துடுவீங்க..  இதுக்கு மேல என்ன சொல்றது!.. இப்போ புரியுதா.. அவனே தான்!.. "


இதைக் கேள்விப்பட்ட பிறகு -

" எதைக் கேள்விப்பட்ட பிறகு?.."

" அதாங்.. கூட்டமா கூடி நின்னு சிரிக்கறது!.. "

" ஓ!.."

 " நாமும் கொஞ்சம் சிரித்து வைப்போமே.. வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாமே!.. நோய் இல்லை என்றால் அவஸ்தை இல்லை..
அவஸ்தை இல்லை என்றால் செலவு இல்லை.. செலவு இல்லை என்றால் பணம் மிச்சம்.. பைசா மிச்சம்!.. "

அகம் மகிழ்ந்து போனான் கிச்சா.. 

பூங்கா என்ற பெயரில் பூப்பதற்கு வக்கில்லாத ஏதேதோ வறட்டுச் செடிகள் சுற்றிலும் இருக்க நடுவில் கிழவர்களும் இளம் பெண்களுமாக பத்துப் பதினைந்து பேர்.. 

விலை உயர்ந்த காலணி, காலுறைகளுடன் யோகா வகுப்புக்கு வந்திருப்பது  மாதிரி படு இறுக்கமான உடுப்புகளுமாக இருந்தனர்..

இளம் பெண்கள் எல்லாருமே - டைட்ஸ், ஒற்றை T Shirt - என, நின்றிருந்தார்கள்.. 

துப்பட்டாக்கள் காணாமல் போயிருந்தன.. 

" அவ்வளவு தானா?.. " -  கிச்சா வியப்படைந்த வேளையில்,


 " பாஹ்.. பாஹ் " என்று எல்லாரும் சிரிக்கத் தொடங்கினர்.. வித்தியாசமான சத்தங்களால் நிறைந்தது அந்தப் பகுதி..

" எதற்கு வீண் வம்பு!..நாமும் சிரித்து வைப்போம்!.." - என, நினைத்துக் கொண்ட கிச்சாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்..

அவனுக்கு சிரிப்பு வரவில்லை.. கர்ர்ர்ர்.. புர்ர்ர்ர்.. - என்று சத்தங்கள் வந்தன..  சிரிப்பு மட்டும் வரவேயில்லை.. 

சிரிப்பில் 
உண்டாகும் ராகத்திலே..
பிறக்கும் சங்கீதமே!..

" சௌந்தர்ராஜன் அன்னைக்கு பாடி 
வெச்சதெல்லாம் பொய்யா.. கோப்பால்!.. "

அவனுக்கு அவன் மீதே சந்தேகம் வந்து விட்டது.. 

இடுப்பைப் பிடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்து - " ஆஹ்.. ஆ.. " - என்று சத்தமிட்ட அந்த விநாடியில் அப்படியே மல்லாக்க விழுந்தான் கிச்சா.. 

வானத்தில் பறப்பது மாதிரியும் கடலுக்குள் தலை கீழாகப் போவது மாதிரியும் இருந்தது.. 
ஒன்றும் புலனாகவில்லை..

கண் விழித்தபோது எதிரே
நரசிங்கம் மாதிரி மாமனார்.. அருகில் சாரதா - அழுத கண்களோடு.. அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டபடி பெரியவளும் சின்னவளும்..

ஏன் இப்படி என்று தன்னைத் தானே மெல்ல கவனித்தான்..

உடலெங்கும் அங்கே இங்கே என்று மெல்லிய குழாய்கள்.. எதற்கென்று தெரியவில்லை.. 

இந்தப் பக்கம் மேலேயிருந்து குளுகோஸ் சொட்டு சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது..

வேகமாக வந்த நர்ஸ் கையைப் பிடித்து நாடித் துடிப்பைக் கவனித்தாள்.. அட்டையில் எதையோ எழுதி வைத்து விட்டுப் போனாள்..

" ஏதோ.. பகவான் அனுக்ரஹம்.. நல்ல மனுஷங்க நாலு பேர் இருந்ததால.. இங்கே கொண்டு வந்து சேர்த்து இந்த மட்டுக்கு ஆச்சு.. இல்லே..ந்னா.. என்னென்னவோ ஆகியிருக்கும்!..  இந்தப் பெண் குழந்தைகளுக்கு யார் பதில் சொல்றது?.. உமக்கு வருத்தப்படற மாதிரி ஒரு கஷ்டமும் இல்லை.. அப்றம் எதுக்குங்காணும் சிரியோதெரபிக்குப் போகணும்?.. தூக்கத்துல சிரிக்கிறவங்களை பார்த்திருக்கேன்.. துக்கத்துல 
சிரிக்கிறவங்களையும் பார்த்திருக்கேன்.. மயக்கத்தில கிடக்கறப்போ சிரிக்கிற ஆளை இன்னிக்குத் தான் பார்க்கிறேன்..  "

" நான் சிரிச்சேனா.. மாமா!.. " - ஈனஸ்வரத்தில் கேட்டான் கிச்சா..

அவனுக்கு ஆச்சர்யம்.. 

" பின்னே வேற யாரு.. நானா?.. " - மாமனார் முகத்தில் புன்னகை..


டாக்டர் வந்தார்..

" மிஸ்டர்.. க்ருஷ்ண ஸ்வாமி.. உங்க உடம்புக்கு ஒன்னும் இல்லை.. எவ்ரி திங் ஈஸ் நார்மல்.. இன்னிக்கே வீட்டுக்குப் போய்டலாம்.. ரெண்டு நாள் ரெஸ்ட்ல இருங்க.. அது போதும்.. ஓக்கே!.. " 

சாரதா புன்னகையுடன் கைகூப்பினாள்..

" இனிமே அந்தப் பக்கம் போக மாட்டீங்களே!.. "

கிச்சாவும் புன்னகைத்தான்..

அதற்குப் பின்னால் வங்கிக் கணக்கில் இருந்து இருபத்து இரண்டாயிரம் ரூபாய் குறைந்திருந்தது..
*

வாழ்க நலம்
***

புதன், ஆகஸ்ட் 24, 2022

கருப்பறியலூர்

      

உலகம்
சிவமயம்

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ளது தற்காலத்தில்
தலைஞாயிறு என்று  வழங்கப்படும்
திருக்கருப்பறியலூர் திருத்தலம்.. 

இத்தலத்தில் ஸ்வாமியை வணங்குபவர்க்கு மீண்டும் கரு அடையச் செய்யும் வினைகள்  பறிக்கப் படுகின்றன என்பதாக ஐதீகம் (கர்ம நாசன புரி)..


இறைவன்
குற்றம் பொறுத்த நாதர்..
அபராதஷமேஸ்வரர்


அம்பிகை 
கோல்வளை நாயகி..
விசித்ர வாலாம்பிகா

தலவிருட்சம் 
பிஞ்சிலம்
தீர்த்தம் 
சூர்ய புஷ்கரணி

பிஞ்சிலம் என்றும் கொகுடி முல்லை என்றும் கூறப்படும் முல்லைக் கொடியின் கீழ் இறைவன் தோன்றியருளிய தலம்..

ஞானசம்பந்தப் பெருமானும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் திருப்பதிகம் பாடியுள்ளனர்.. திருநாவுக்கரசர் தம் திருவாக்கில் தலம் இடம் பெற்றுள்ளது..

திருக்கோயிலுக்கு கடந்த (22/8) திங்களன்று காலையில் திருக்குட முழுக்கு சிறப்புடன் நடைபெற்றது..

இக்கோயிலில் சீர்காழியைப் போல கட்டு மலைக் கோயிலில்,  ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரரும் ஸ்ரீ திருநிலை நாயகியும் மலைக் கோயிலில் ஸ்ரீ சட்டைநாத ஸ்வாமியும் விளங்குகின்றனர்..

எனவே, இத்தலத்திற்கு மேலைக்காழி எனவும் பெயர்..


ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
ஒரு சமயம் திருக்கயிலாய மாமலையைத் தரிசனம் செய்வதற்கு விரும்பிய தேவேந்திரன் ஐராவதத்தின் மீதேறிச் சென்றான்.. 

கூடவே ஜெய கோஷங்களும் வாத்தியங்களின் முழக்கமும் சுற்றுப்புரத்தை அதிர அடித்தன.. 

மாமலையை நெருங்கிய போது வழக்கத்துக்கு மாறாக புதிதாக ஒரு காவல் பூதம் வழியை அடைத்துக் கொண்டு நின்றிருந்தது..

" வழி விடு!.. " - என்றான் கோபத்துடன்..

அந்தப் பூதம் அலட்சியமாக இருந்தது..

" நான் யார் தெரியுமா!.. " - ஆத்திரத்துடன் கையில் இருந்த வஜ்ராயுதத்தை பூதத்தின் மீது வீசினான்..

வெற்றியைத் தவிர வேறொன்றையும் தந்தறியாத 
வஜ்ராயுதம் புகையாகிப் போனது...

அத்துடன் காவல் பூதமும் தன்னுருவம் கரந்தது..

அதிர்ச்சியடைந்த இந்திரன் ஐராவதத்தில் இருந்து இறங்கித் தேடினான்..

எதிரில் வந்த நந்தியம்பெருமான் சிரித்தார்..

" கயிலாயம் வருவதற்கு ஐராவதமா?.. இன்னும் உனது ஆணவம் அழியவில்லையே!..  காவல் பூதமாக வந்தவர் எம்பெருமான்!..  - என்றார்..

சப்தநாடிகளும் ஒடுங்கிப் போயின.. 

இறைவனையா எதிர்த்தோம்!..

தன்னுடைய குற்றத்தினைப் பொறுத்தருளும்படி
அங்கேயே விழுந்து அழுதான்.. தொழுதான்..

இறைவன் அவனை மன்னித்து அருளினார் - என்பதாகத் தலவரலாறு..

ஸ்ரீ சட்டநாத ஸ்வாமி
குற்றம் பொறுத்த ஈஸ்வரர்  என்றால் எல்லாக் குற்றங்களையும் செய்து விட்டு இங்கே வரலாம் என்று இல்லை..

ஊர் மக்களைக் கொள்ளையிட்டவனும் அவனுக்குத் துணை நின்றவனும்

கல்வியின் பெயரால் காமவலை விரித்தவனும் 

வணிகத்தின் பெயரால் பாழ்பட்ட உணவு களைக் கொடுத்தவனும் 

இன்ன பிற கொடுங் குற்றங்களைச் செய்தவனும் இங்கே வருதற்கு ஆமோ!..

அவர்கள் சென்று சேரவேண்டிய இடமே வேறு..

திரிகரணங்களும் ஐம்புலன்களும் ஆறு வகைக் குண பேதங்களுக்கு ஆட்பட்டு நாள்தோறும் எத்தனையோ குற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன..

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிழை செய்து விட்டு மனம் வருந்தி திருந்துகின்றவர்களது குற்றங்கள் மட்டுமே இத்தலத்தில் பொறுத்தருளப்படும் என்று கொள்க..
 
மயிலாடுதுறை மணல்மேடு வழித் தடத்தில் 12 கி.மீ. தொலைவிலுள்ள பட்டவர்த்தி எனும் கிராமத்தில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ.  தூரத்தில் தலைஞாயிறு கோயில்...

திருக்குட முழுக்கு வைபவத்தின் படங்கள் கிடைக்கவில்லை.. ஆயினும் அதைத் தொடர்ந்த சந்நிதி தரிசனம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வின் படங்கள் இந்தப் பதிவில்.

படங்களை வழங்கிய சிவமதி, அகில் - ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி..












ஸ்ரீ சண்டேசர் தேவியுடன்



நீற்றாரு மேனியராய் நினைவார்தம் 
உள்ளத்தே நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை 
மதியானைக் கருப்ப றியலூர்க்
கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது 
அவர்நமக்கு இனிய வாறே.. 7/30/2
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

வண்ணம் 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த ஞாயிறன்று (21/8) எபி யில் சகோதரி கீதாரங்கன் அவர்கள் வழங்கியிருந்த பதிவைக் கண்டதும் எனக்குள் உற்சாகம்..  

அந்த உற்சாகத்தைக் கொண்டு வண்ண மயமான வாழ்வின் ஒரு பகுதியை எளியதொரு கவிதையாகக் காட்டுவதற்கு முயன்றிருக்கின்றேன்.. 

நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்.. 
இந்தக் கவிதையின் வெற்றி அவர்களுக்கே!..


வண்ணம் வண்ண மயம்
***
பாலொரு வண்ணம்
அமுதொரு வண்ணம்
தாய்மடி வண்ணம்
தாங்கிய வண்ணம்

நாளொரு வண்ணம்
பொழுதொரு வண்ணம்
கல்வியின் வண்ணம்
கலையா வண்ணம்

சிந்தையின் வண்ணம்
சீர்தரும் வண்ணம்
நாட்களின் வண்ணம்
நழுவா வண்ணம்

நலந்தரு வண்ணம்
நங்கையின் வண்ணம்
பரவிடும் வண்ணம் 
பார்த்திடும் வண்ணம்


பாவையின் வண்ணம்
பல்சுவை வண்ணம்
பாரினில் வண்ணம்
படைத்தவன் வண்ணம்

கையொரு வண்ணம்
காந்தளின் வண்ணம்
காலொரு வண்ணம்
கமலத்தின் வண்ணம்

கண்ணொரு வண்ணம்
கலையொரு வண்ணம்
கவிதையில் வண்ணம்
கனவினில் வண்ணம்

கருங்குழல் வண்ணம்
கார்முகில் வண்ணம்
கனியிதழ் வண்ணம்
கதைதரும் வண்ணம்

நடையொரு வண்ணம்
இடையொரு வண்ணம்
அவளொரு வண்ணம்
இவனொரு வண்ணம்

அழகினில் வண்ணம்
அன்பினில் வண்ணம்
காதலின் வண்ணம்
கருதிடும் வண்ணம்

மஞ்சளின் வண்ணம்
மங்கல வண்ணம்
குங்கும வண்ணம்
கொடிமலர் வண்ணம்


கலந்திடும் வண்ணம்
காலத்தின் வண்ணம்
மலர்களின் வண்ணம்
மாலையின் வண்ணம்

மாலையின் வண்ணம்
மலர்ந்திடும் வண்ணம்
மனதினில் வண்ணம்
மகிழ்ந்திடும் வண்ணம்

வனங்களின் வண்ணம்
வாழ்ந்திடும் வண்ணம்
தமிழ்தரும் வண்ணம்
தழைத்திடும் வண்ணம்

நலந்தரும் வண்ணம்
வளந்தரும் வண்ணம்
வழியினில் வண்ணம்
வாழ்வினில் வண்ணம்..
ஃஃஃ

வாழ்வே வண்ணம்
வாழ்கவே வண்ணம்!..
***