நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 30, 2013

மஹாளய பட்சம்

சூரியன் கன்யா ராசியில் - புரட்டாசி மாதம் - சஞ்சரிக்கும் போது நிகழும் தேய்பிறை காலம்  '' மஹாளய பட்சம்'' என்று குறிக்கப்பட்டு,


பித்ருக்களை ஆராதிப்பதற்கும் அவர்களுக்குச் செய்யவேண்டிய சிரார்த்தம் தர்ப்பணம் ஆகியவற்றை சிரத்தையுடன் முறையாக நிகழ்த்துவதற்கும் உகந்த நாட்கள் என  சொல்லப்படுகின்றது.

இதன் நிறைவாக புரட்டாசி மாதத்தின் அமாவாசை மஹாளய பட்ச அமாவாசை என சிறப்பிக்கப்படுகின்றது. 

ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் முறையாக இறைவழிபாடும் குலதெய்வ வழிபாடும் செய்யக் கடமைப்பட்டவன். 

அதனைத் தொடர்ந்து ஞான நூல்களைப் பயின்று அவற்றின் வழி நடக்கவும் அதன் சாரமாக  - சக மனிதர் முதல் தாவர மற்றும் விலங்குகள் எனும் உயிர்த் திரளை நேசிக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் விதியுடையவன் ஆகின்றான். 

தன்னை ஈன்றெடுத்து பாலூட்டி சீராட்டி பலவகையிலும் முன்னேற்றிய தாய் தந்தையர் முதல் - குலத்தின் முன்னோர்களுக்கும் தக்க மரியாதையினைச் செலுத்த வேண்டியவனாகின்றான்.

தன்னுடன் வாழ்ந்து மறைந்த பெற்றோர்களுக்கும் தன் குலத்தின் முன்னோர்களுக்கும் - அவர்கள் மண்ணுலக வாழ்வை நீத்த நாளை நினைவில் கொண்டு வருடந்தோறும் அந்த நாட்களில் சிரார்த்தம் தர்ப்பணம் ஆகியவற்றை முறையாக செய்ய வேண்டும் என வைதீகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 

இவ்வாறு செய்வதால் பித்ருக்கள்  திருப்தி அடைந்து  நல்லாசிகளை வழங்கி நல்வாழ்வுக்குத் துணையிருப்பர் எனவும் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு செய்யாவிடில்  -  பித்ருக்களின் சாபம் - நம்மைப் பீடிக்கும் என்றும், நம் வாழ்வில் நமக்கு நேரும் பலவித இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் பித்ருக்களின் சாபமும் ஒரு காரணம் என்றும் நம்பப்படுகின்றது.

ஸ்தூல உடலை நீத்து சூட்சுமமாக விளங்கும் ஆத்மாவானது  - பசியினாலும் தாகத்தினாலும் தவிக்கின்றன. அந்த ஆத்மாவுக்குத் தொடர்புடைய ஒருவன் தர்ப்பணமாக அளிக்கும் எள்ளும் நீரும்  - அந்த ஆத்மாவுக்கு ப்ரீதியை உண்டு பண்ணுகின்றன - என்று சொல்லப்படுகின்றது.

எனவே - வைதீக குறிப்புகளில் நம்பிக்கை கொண்டு ,

அவரவர் குல வழக்கப்படி - அவரவர் வசதிக்கேற்றவாறு  - அந்தணர்களைக் கொண்டு முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். இவ்வாறு செய்வதற்கேற்ற புண்ணியத் தலங்கள் பாரதம் எங்கும் விளங்கித் திகழ்கின்றன.


தமிழகத்தில் - இராமேஸ்வரம், வேதாரண்யம், நெல்லை - பாபநாசம், உவரி, திருவையாறு - எனும் தலங்கள் குறிப்பிடத்தக்கன.

ஸ்ரீராமேஸ்வரம்
புண்ணிய தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் - அருகிலுள்ள நதி, குளக்கரைகளில் வைதீக காரியங்களை நிகழ்த்தலாம். 

அதிலெல்லாம் விருப்பமில்லை!.. நம்பிக்கை இல்லை!.. என்பவர்கள் -

அதிகாலையில் சூர்யோதய வேளையில்  - நீர்நிலைகளில் மூழ்கி எழுந்து, இரு கைகளில் நீரை அள்ளி எடுத்து சூரியனை நோக்கி அர்க்யமாக வழங்கலாம். 


முன்னோர்களை நினைவில் இருத்தி, சிறிது எள்ளை நீருடன் கலந்து - மூன்று முறை - நீரில் இறைக்கலாம். இது மனதுக்கு நிம்மதியை அளிக்கக்கூடும். 

பகல் பொழுதில் - காக்கைகளுக்கும் பசுக்களுக்கும் உணவளித்து, இயன்ற வகையில் ஏழையர் சிலருக்கு வயிறார உணவு வழங்கி மகிழலாம். 

இதனால் - பித்ருக்கள்  சத்தியமாக மகிழ்வர். இயன்றால் மஹாளய பட்சத்தின் நாட்களில் இது போல செய்யலாம். அல்லது மஹாளய பட்ச அமாவாசை அன்று கண்டிப்பாக  செய்யவேண்டும்.


மாதந்தோறும் அமாவாசையன்று அல்லது பெற்றோர்களின் திதி அன்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் - இயலாதவர்கள்  - மஹாளய பட்ச அமாவாசை தினத்திலாவது சிலருக்கு உணவிட வேண்டும்!.. இதெல்லாம் -

பித்ரு சாபத்திலிருந்து விடுபடுவதற்காகவோ,
பித்ரு சாபம் நம்மைச் சேராமல் இருக்க வேண்டும் - என்பதற்காகவோ அல்ல!..

நம் சந்ததியினர் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக!.. 

மானுடம் தழைக்க வேண்டும் என்பதற்காக!..

நம்மைப் பெற்றவர்கள் - நாம் நாசமாக வேண்டும் என எண்ணுவார்களா?..

எங்காவது - யாராவது - அப்படி இருக்கலாம். அது விதிவிலக்கு!..

ஆன்மா - பூவுலக வாழ்வினின்று நீங்கும் போதே  சாதாரண மானுட இயல்புகள் அற்றுப் போகின்றன. முரண்பட்ட குணங்கள் இற்றுப் போகின்றன. 

அந்த நிலையில் - ஆன்மா இறைநிழலில் கலந்ததா!.. வேறு பிறவி அடைந்ததா!.. அல்லது அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றதா!.. - என்பதை எல்லாம் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. 

எனில், அந்த ஆன்மாவுக்காக செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம், தான தர்மங்கள் - என்பனவற்றின் பலன்கள் எல்லாம் என்ன ஆகின்றன?..

சிரார்த்தம், தர்ப்பணம், தான தர்மங்கள் - என்பனவற்றின் புண்ணிய பலன்கள் எல்லாம் -

அந்த ஆன்மா  - இறைநிழலில் கலந்திருந்தால்  -

யாருக்காக செய்யப்பட்டதோ அவர் கணக்கிலும் யாரால் செய்யப்பட்டதோ அவர் கணக்கிலும் வரவு வைக்கப்படுகின்றன. மீண்டும் ஒருநாளில் - பிறவி வாய்க்கும் போது அந்த புண்ணிய பலன்களுடன் அந்த ஆன்மா பூமிக்கு வந்து செழித்த வாழ்க்கையில் இன்புறுகின்றது.

சிரார்த்தம், தர்ப்பணம், தான தர்மங்கள் - என்பனவற்றின் புண்ணிய பலன்கள் எல்லாம் -

அந்த ஆன்மா வேறு பிறவியில் கலந்திருந்தால்  -

சஞ்சித பிராரப்த - வினைகளுக்கு உட்பட்டு,  வாழும் வாழ்க்கையில் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்ற நிலையில்  - கைக்குக் கிட்டியது வாய்க்கும் கிட்டும் என்ற அளவிலாவது நிம்மதியில் வாழ்ந்திருக்கும்.

சிரார்த்தம், தர்ப்பணம், தான தர்மங்கள் - என்பனவற்றின் புண்ணிய பலன்கள் எல்லாம் -

அந்த ஆன்மா வேறு பிறவியின்றி களைத்திருந்தால்  - இளைத்திருந்தால்,

மீண்டும் - கருவடைய ஒரு நற்குலத்தைத் தேர்ந்தெடுக்கும் வல்லமையை உருவாக்கிக் கொடுக்கும்.

அதனால் தான் இயல்பாகவே - 

''அறம் செய விரும்பு'' , ''ஐயம் இட்டு உண்'' - என்றார் ஒளவையார்.

அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத்துணை..

என்று வள்ளுவப்பெருந்தகை வலியுத்துவதும் இதற்காகத்தான்!.. 

ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு 
எழுமையும் ஏமாப்பு உடைத்து..

கல்வி என்பதில் நாம் வாழும் நல்வகை எல்லாம் அடங்கும். எனவே நாம் இயற்றும் - சிரார்த்தம் தர்ப்பணம்,  தான தர்மங்கள் - ஆகியனவற்றின் நற்பலன்கள் நம்மைத் தொடர்ந்து வரும் என்பதில் ஐயமில்லை!..

வேதாரண்யம்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தலும், தெய்வத்தைப் போற்றுதலும், விருந்தோம்புதலும், சுற்றம் பேணுதலும்  ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை  இல்வாழ்வானுக்குரிய  ஐவகை அறநெறிகளாவன - என்று வள்ளுவப்பெருமான் வழிகாட்டுகின்றார். 

எனவே, எஞ்சியிருக்கும் மஹாளய பட்ச நாட்களில்  -

வைதீக முறையிலாவது - நம் மனம் விரும்பியபடியாவது தான தர்மங்களை,  அற்றார்க்கும் அலந்தார்க்கும் செய்து -

நாம் நம் தலைமுறைக்கு நலம் சேர்த்துக் கொள்வோம்!..

தானமும் தவமும் தான் செய்வராயின் 
வானவர் நாடு வழி திறந்திடுமே!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

சனி, செப்டம்பர் 28, 2013

திருவேங்கட மாமலை

ஆனந்த நிலையம் விளங்கும் அற்புத மாமலை!..

எந்தநேரமும் பெருமானின் திருநாமம் ஒலித்துக் கொண்டிருக்கும் மாமலை!..

அலை அலையாய் திரண்டு வரும் அன்பர் கூட்டம், ஆனந்த வெள்ளத்தில் அழுந்தித் திளைக்கும் மாமலை  - திருவேங்கட மாமலை!.. 


வேங்கடம் எனில் பாவங்களைச் சுட்டெரிப்பது என்பது பொருள். இத்திருமலையினைப் பற்றி பிரம்மாண்ட புராணம், வராக புராணம், பத்ம புராணம் எனும் புராணங்கள் வழங்கும் விவரங்கள் ஏராளம். 

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறுஏழ் வென்றான் அடிமைத் திறமல்லால் 
கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து 
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!..

கிருதயுகத்தில் கருடாத்ரி எனவும் திரேதாயுகத்தில் வ்ருஷபாத்ரி எனவும் துவாபர யுகத்தில் அஞ்சனாத்ரி எனவும் கலியுகத்தில் வேங்கடாத்ரி எனவும் வழங்கப்படும் மாமலை. 


இத்திருமாமலையில் - வைகுந்தவாசனே விரும்பி எழுந்தருளி, கலியுகம் முடியும் வரை அன்பர்களின் குறைதீர  அருள் பாலிப்பதாக திருவாய் மலர்ந்தருளினார். அதன் பொருட்டே தேவர்களும் மகரிஷிகளும் மானுடர்களும் ஸ்ரீநிவாசப் பெருமானை எந்த நேரமும் துதித்து நிற்பதாகவும் ஆன்றோர்கள் கூறுகின்றனர். 

திருமலைக்குச் சென்று திருவேங்கடத்தானைச் சேவிப்பது  பாக்கியம்.  கேட்ட வரங்களை அள்ளித் தரும் பெருமானைச் சேவிக்க  நினைப்பதும் பெரும் பாக்கியம். 

ஒண்பவள வேலை உலவுதண் பாற்கடலுள் 
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு 
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும்  வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருஉடையேன் ஆவேனே!.. 

வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி  - எனும் ஏழு திருப்பெயர்களுடன் ஏழுமலையாக விளங்கி வரும் இத்திருத்தலத்தில் ஸ்ரீநிவாசப்பெருமான் திருக்கோயில் கொண்டுள்ளார்.  

 

ஸ்ரீநிவாசப்பெருமான் இத்திருத்தலத்தில் எழுந்தருளும் முன்பே  ஸ்ரீமந்நாராயண மூர்த்தி  - ஸ்ரீவராகப் பெருமானாக இங்கு திருக்காட்சி தந்தருளினார் என்பது ஐதீகம். எனவே இத்தலம் வராக க்ஷேத்திரம் எனவும் படும். 

தற்போதும் ஸ்வாமி புஷ்கரணிக்கு அருகில் விளங்கும் ஸ்ரீஆதிவராகப் பெருமானைச் சேவித்த பின்பே - ஸ்ரீநிவாசப்பெருமானை சேவிக்க வேண்டும் என்பது நியதி.   


கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து 
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் 
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல் 
தம்பமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே!.. 

பெருமானின் திருக்கரங்களில் எவர் கண்களுக்கும் விளங்காமல் இருந்த சங்கு சக்கரங்களை  - அனைவரும் காணும்படி விளங்க அருள் புரிய வேண்டும் என பெருமானிடமே வேண்டிக் கொண்டவர் உடையவராகிய ஸ்ரீராமானுஜர்.  

திருவேங்கட மாமலையில் 108 தீர்த்தங்கள் விளங்குவதாகவும் அவற்றுள் பல அரூபமாக இருக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றது. குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், பாண்டு தீர்த்தம், பாபவிநாசன தீர்த்தம் என்பன பிரசித்தமானவை. 

அதிகாலையில் பெருமான் நீராடுவது ஆகாசகங்கை தீர்த்தத்தில்!.. சித்ரா பெளர்ணமி அன்று இதில் நீராடினால் சகல செல்வங்களும் சேரும் என்பது நம்பிக்கை!..

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ 
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் 
தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில் 
மீனாய்ப் பிறக்கும் விதிஉடையேன் ஆவேனே!..

எல்லாவற்றுக்கும் மேலாக பெருஞ்சிறப்புடன் விளங்குவது ஸ்வாமி புஷ்கரணி!.. 

மார்கழி வளர்பிறை துவாதசி அன்று சூர்ய உதயத்திற்கு முன்  ஆறு நாழிகையில் இருந்து பின் ஆறு நாழிகை வரை திருமலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும் இதில் கூடுவதாகவும் அப்போது புஷ்கரணியில் நீராடுவோர் பூவுலகில் சீரும் சிறப்புடனும் விளங்கி - சகல பாவங்களில் இருந்தும் நீங்கியவராக பெருமானின் திருவடியில் இன்புறும் பேறு எய்துவர் என வழங்கப்படுகின்றது.
 
திருவேங்க மாமலை  (தொண்டரடிப் பொடி ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் - ஆகியோர் தவிர்த்த) பத்து ஆழ்வார்களால் 200 திருப்பாசுரங்களுக்கு மேலாக மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.


இப்பதிவில் வழித்துணையாய் வருவன ''குலசேகர ஆழ்வார்'' அருளிய திருப்பாசுரங்கள்..

திருமலையில் பறவையாய்ப் பிறந்து -  பறந்து திரிந்து பெருமானை காண மாட்டேனா!.. திருமலையில் வண்டினங்கள் மொய்க்கும் செண்பக மரமாக நிற்க மாட்டேனா!.. 


மண்டிக் கிடக்கும் குறுஞ்செடிகளுள் ஒன்றென ஆகி பெருமானே உன்னைக் காண மாட்டேனா!.. திருமலையின் ஊடாக காட்டாறாகப் பெருகி, உருக மாட்டேனா!..  திருமலையின் சுனையில் மீனாக ஆகித் திரிந்து உன் திருவடி தரிசனம் பெற மாட்டேனா!..  

திருமலையின் படிக்கல்லாகக் கிடந்து உன் பவளவாய் அழகைக் காண மாட்டேனா!.. என்று  குலசேகர ஆழ்வார்  உருகுகின்றார்.  

இந்தத் திருப்பாசுரத்தின் வாயிலாகத் தான் - 

திருவேங்கடவனின் முன்னிருக்கும் வாயிற்படியினை ''குலசேகரன் படி'' என ஆன்றோர் வழங்கி மகிழ்கின்றனர்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் 
அடியாரும்  வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் 
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!.. 

ஓம் நமோ நாராயணாய!..

புதன், செப்டம்பர் 25, 2013

தஞ்சை ஸ்ரீ வீரநரசிம்மர்

வைகுந்தத்தில் பெருமாளையும் எம்பிராட்டியையும் தரிசித்துத் தொழுது வணங்கிய பராசர மகரிஷி - ஒரு வரம் கேட்டார். 

அவ்வாறே - பெருமானும் புன்னகையுடன் அருளினார்.


அந்த நிம்மதியுடன் பூவுலகுக்கு வந்த மகரிஷியின் கண்களில் வியப்பு!.. 

''..நாம் தேடி வந்த இடம் இதுதான்.. சந்தேகமேயில்லை!..''

பார்க்கும் இடம் எங்கும் பட்டு விரித்தாற் போல - பச்சைப் பசேலென்று - மனதுக்கு ரம்யமாக இருந்தது. 


இருப்பினும் ஒரு சந்தேகம் அவருக்குள் எழுந்தது. கால மாறுபாடுகளால் இந்தப் பசுமை வளங்குன்றி விட்டால் - நீராதாரத்துக்கு வேறு எங்கே செல்வது?.. 

திருப்பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனைத் தியானித்தார்.  தாம் அன்று - வள்ளல் பெருமானிடம் வேண்டியபடி,   வரத்தினை பிரசாதிக்கக் கோரினார். 

அதன்படியே விண்ணிலிருந்து இறங்கிய  - நீர்ப் பிரவாகம் -  மகரிஷியின் பாதங்களை வணங்கியபடி நதியாகத் தவழ்ந்தது.

மிகவும் சந்தோஷத்துடன் பர்ணசாலை அமைத்தார். உலகு உய்வதற்கான வேள்விகளில் ஈடுபட்டார் - தன் அடியார்களுடன்.

துஷ்டர்களுக்கு அது பொறுக்குமா!.. நாளும் பிறர்க்கு இன்னல் தந்து அதில் மகிழ்வதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்த அசுரர்களுள் சிலரான -

தஞ்சகன், தண்டகன், கஜமுகன் என்பவர் தம் கண்களை - பராசர மகரிஷியின் பர்ணசாலை - உறுத்திற்று. விளைவு!.. 

அரக்கர்களால் உபத்ரவம்!.. மகரிஷியின் ஜப, தவங்களுக்கு இடையூறு!..


மீண்டும் பராசர் - வைகுந்தவாசனை சரண் புகுந்தார்.

கருட வாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமான் - கஜமுகனைச் சங்கரித்தார். 

அஞ்சி நடுங்கிய தண்டகன் -   பாதாளத்தில் நுழைந்து உயிர் பிழைக்க எண்ணி, பூமியைக் குடைந்து கொண்டு ஓடினான்.

சினங்கொண்ட பெருமான் - வராக மூர்த்தியாகப் பொலிந்து - பாதாளத்தில் நுழைய முற்பட்ட தண்டகனைத்  - தன் கோரைப் பற்களால் கீறிக் கிழித்து அழித்து - பூமியைப் பிளந்து கொண்டு பூவராகப் பெருமாளாக எழுந்தருளினார்.

இதைக் கண்டு மனம் பதைத்த தஞ்சகன் -  கோபாவேசத்துடன் மதங்கொண்ட யானையென பெருமானின் மீது போர் தொடுக்க, பெருமான்  வீறு கொண்ட சிங்கமாகி - தஞ்சகனைத் தாக்க,

பெருமாளின் திருக்கரத்தால் தீட்சை பெற்றவனாகி அடங்கி நின்றான். அன்பு கொண்டு அழுது நின்றான். அண்ணலைத் தொழுது நின்றான். அந்நிலையில் தஞ்சகாசுரனுக்கு மோக்ஷம் அருளினார். 

அப்போது அவன் பெருமானைப் பணிந்து - கேட்டுக் கொண்டதன் பேரில் அந்தத் தலம் - தஞ்சமாபுரி என விளங்க அருளப்பட்டது. தஞ்சகாசுரனுக்கு மோக்ஷம் அருளியதால் இத்தலத்துக்கு ''மோக்ஷ ஸ்தலம்'' எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

நரங்கலந்த சிங்கமாக - தஞ்சகாசுரனுக்கு மோக்ஷம் அருளிய நிலையில் விளங்கிய பெருமானை பராசர மகரிஷி போற்றி வணங்கினார். அந்த நிலையிலேயே இன்றும் இத்திருத்தலத்தில் பெருமான் சேவை சாதிக்கின்றார்.

இப்படி - மூர்த்தி, தலம், தீர்த்தம் - என மூன்றும் சிறந்து விளங்க, தஞ்சமாபுரி - என அருளப் பெற்ற திவ்ய தேசம் தான்  -

தஞ்சாவூர்.

திருக்கோயில் - தஞ்சை மாநகரின் வடக்கே - அன்று பராசர மகரிஷிக்காக இறங்கிய விண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. 

மகிழ மரம்
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் - மங்களாசாசனம் செய்த திருத்தலம். தல விருட்சம் மகிழ மரம். 

இங்கே ஆதியில் - 
பராசரருக்குப் ப்ரத்யட்சமாகிய ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
பின்னும் ஸ்ரீமணிக்குன்றப்பெருமாள்
தஞ்சகனை வதம் செய்த ஸ்ரீ வீர நரசிங்கப் பெருமாள் 
-  என மூன்று திருக்கோயில்கள். 

ஆழ்வார்கள் இம் மூன்றினையும் ஒருங்கே மங்களாசாசனம் செய்ததாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

திருமங்கை ஆழ்வார் - தஞ்சை யாளி என்று நரசிங்க மூர்த்தியைப் புகழ்ந்துரைக்கின்றார்.

ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் சந்நிதி
மூலவர் - ஸ்ரீவீரநரசிம்மர் (கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்).
தாயார் - தஞ்சை நாயகி
தீர்த்தம் - விண்ணாறு, ஸ்ரீசூர்ய புஷ்கரணி.
பின்னாளில் மார்க்கண்டேய மகரிஷிக்கும் ப்ரத்யட்க்ஷம்.

ஸ்ரீவீரநரசிம்மர் திருக்கோயிலுக்கு சற்று மேற்கே - மணிக்குன்றப்பெருமாள் திருக்கோயில்.

ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் சந்நிதி
மூலவர் - ஸ்ரீமணிக்குன்றப்பெருமாள் (கிழக்கு நோக்கி அமர்ந்த திருக் கோலம்). 
தாயார் - அம்புஜவல்லி
தீர்த்தம் - விண்ணாறு, ஸ்ரீராம தீர்த்தம்.

ஸ்ரீமணிக்குன்றப்பெருமாள் திருக்கோயிலுக்கு சற்று மேற்கே நீலமேகப் பெருமாள் திருக்கோயில்.

ஸ்ரீ நீலமேகப் பெருமாள் சந்நிதி
மூலவர்- ஸ்ரீநீலமேகப்பெருமாள் (கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்). 
தாயார் - செங்கமலவல்லி
தீர்த்தம் - விண்ணாறு, அம்ருத தீர்த்தம்.

பராசர மகரிஷிக்கு நீலமேகனாக, மணிக்குன்றனாக - பெருமாள் ப்ரத்யட்க்ஷம் ஆனதால் பராசர க்ஷேத்திரம் எனவும், தஞ்சகனுக்கு மோஷம் அருளியதால் மோக்ஷஸ்தலம் எனவும், மார்க்கண்டேய மகரிஷிக்கு வீர நரசிங்க கோலங் காட்டியதால் மார்க்கண்டேய க்ஷேத்திரம் எனவும்  புகழப்படும் திருத்தலம்.

வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயிலில் -

கருவறை வீர நரசிங்கன், ஆழியுள் அமர்ந்த நரசிங்கன், வைகுந்த நரசிங்கன், கல்யாண நரசிங்கன், விதானத்து வீர நரசிங்கன்,

நீலமேகப் பெருமாள் திருக்கோயிலில்  -

அபய வரத நரசிங்கன், கம்பத்தடி யோக நரசிங்கன், வலவெந்தை லக்ஷ்மி நரசிங்கன் -

என - அஷ்ட நரசிம்ம தரிசனம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் 
எனக்கரசு என்னுடை வாணாள் அம்பினால் 
அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் 
செகுத்தஎம் அண்ணல் வம்புலாம் சோலை 
மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி 
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் 
நாராயணா எனும் நாமம்!..(953)

என்று திருமங்கை ஆழ்வார் - நமக்கு வழிகாட்டுகின்றார். 

தமர் உள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் 
தமர் உள்ளும் தண் பொருப்புவேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே 
ஏவல்ல எந்தைக்கு இடம்!.. (2251)

- என்பது பூதத்தாழ்வாரின் திருப்பாசுரம்.

வெண்ணாறு
இன்றும், வெண்ணாறு - நீலமேகப்பெருமானின் அருட்கொடையால்  வற்றாத நீர் பெருக்குடன், வளங்குன்றாது விளங்குவது அதிசயம்!.. 

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து - திருவையாறு மற்றும் அய்யம்பேட்டை செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும், வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயிலின் வாசலில் நின்று செல்கின்றன.

தவிர - வெண்ணாற்றின் வடகரையில், பள்ளியக்ரஹாரத்தில் -  
ஸ்ரீவரதராஜப் பெருமாள்திருக்கோயில், 
ஸ்ரீகல்யாணவெங்கடேசர் திருக்கோயில், 

என, வெண்ணாற்றின் தென்கரையிலும் வடகரையிலுமாக ஐந்து பெருமாள் கோயில்கள் விளங்கும்  புண்ணிய திருத்தலம் - 

தஞ்சையம்பதி!.

இவை தவிர - பதினெட்டு வைணவத் திருக்கோயில்கள் தஞ்சை மாநகருக்குள் -  விளங்குகின்றன.

புரட்டாசியின் புதன்கிழமை!.. பொன் கிடைத்தாலும் கிடைக்காத புண்ணிய நாள்!.. 

வம்புலாம் சோலை மாமதிள் 
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி 
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் 
நாராயணா எனும் நாமம்!..

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

தேர்த் திருப்பணி

தஞ்சை பெரிய கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்யும் திருப்பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. 


''ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!..''

என்று - திருநாவுக்கரசு சுவாமிகள் திரு ஆரூரில் பெருமானைக் கண்ட விதம் பற்றித் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார். 

திருவிழாவும் தேரோட்டமும் நமது கலாச்சாரத்துடன் இணைந்தவை. கொடியேற்றம் முதல் தெப்பம் தீர்த்தவாரி வரையிலான வைபவங்களுள் மக்கள் பேராவலுடன் எதிர் நோக்குவது தேர் இழுக்கும் வைபவத்தினையே!.. 

தேர் - பல்லுயிர்களும் அடங்கிய உலகின் பிரதி வடிவமாகக் கருதப்படுவது. தேரில் இறைவன் ஆரோகணித்து பவனி வரும் போது - அதனை இழுக்கும் மக்கள் வேறுபாடுகளையும்  கடந்தவர்களாக பேரானந்தத்தில் இன்புற்று மகிழ்கின்றனர். 

திருஆரூர் ஆழித்தேர்
தமிழகத்தின் முதன்மையான தேர் - திருஆரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானின் திருத்தேர் ஆகும். மதுரை, ஸ்ரீரங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம் - இங்கெல்லாம் நிகழும் தேரோட்ட வைபவங்கள் பிரசித்தமானவை. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்ததும் ஆகிய, தஞ்சை மாநகரில் - மாமன்னன் ராஜராஜ சோழன், முழுதும் கருங்கற்களால்  - ஒரு பெருங்கோயிலை எழுப்பி - அதில் மாபெரும் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தான். வரலாற்றின் ஏடுகளில் என்றும் அழியாத பெரும் புகழினைப் பெற்றான். 


ராஜராஜேஸ்வரம் எனும் திருப்பெயருடன் எழுந்த இப்பெருங்கோயில் - இன்று பெரிய கோயில் என்றும் ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. தட்க்ஷிணமேரு எனப்படும் ஸ்ரீ விமானம் 13 நிலைகளை உடையது. விமானத்தின் உயரம் 216 அடி. மாமன்னன் ராஜராஜ சோழன் எழுப்பிய  - பெருங்கோயிலைக் கண்டு உலகமே வியக்கின்றது. 

 

அதனால் தானே மத்திய அரசின் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் இத்திருக்கோயில் -  யுனெஸ்கோவினால் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்மீகமும் அறிவியலும் கலையும் கற்பனைத் திறமும் பின்னிப் பிணைந்து காண்பவரைத் திகைக்கச் செய்யும் காலப்பெட்டகமாகத் திகழ்கின்றது. 

காண்பவர் கண்டு வணங்கி, கண் களித்து நிற்கச் செய்யும் இத்திருக்கோயில் - தமிழரின் கட்டடக் கலைக்குத் தலை சிறந்த சான்றாகத் திகழ்கின்றது. 

இத்தகைய பெருமை மிக்க பெரிய கோயிலில்  - பல்வேறு விழாக்களுடன் தேர்த் திருவிழாவும் நடைபெற்று வந்ததாக, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள  வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலும் சான்றாக, தஞ்சை மேலராஜவீதியில் - இடிபாடுகளுடன் தேரடி காணப்படுகின்றது. 

 

திருவிழாக்காலங்களில் - தஞ்சை மாநகரின் நான்கு ராஜ வீதிகளிலும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பவனி வந்ததாகவும் பெருந் தேரினை இழுக்க  27,394 ஆட்கள்  - பல்வேறு கிராமங்களில் இருந்தும் கோயில் கட்டளையாக வந்ததாகவும் ஆவணங்கள் கூறுகின்றன. 

தஞ்சையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிகழ்ந்த திருவிழாக்கள் - அதன் பின் வீசிய அரசியல் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டன. திருவிழாக்கள் நின்று போக,  தேர்களும் பறிபோயின. பலகாலம் ஆயிற்று. 

தஞ்சை மக்களும் ஆசைப்பட்டனர். மீண்டும் பெரிய கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற வேண்டும் என்று!.. 

மக்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக - பெரிய கோயிலுக்குப் புதிதாக தேர் செய்யும் திருப்பணிக்கு ஐம்பது லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதன்படி  16¾ அடி உயரத்தில் புதிய தேர் செய்யும் திருப்பணி சில தினங்களுக்கு முன் தொடங்கியது. 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் இருந்து இலுப்பை மரக் கட்டைகள் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  மேலராஜவீதியில் உள்ள ஸ்ரீ கொங்கணேஸ்வரர் ஆலய வளாகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஸ்தபதி திரு. வரதராஜன் தலைமையில் திரு.முருகேசன், திரு.சிங்காரம், திரு.கண்ணன், திரு.செங்கமலை, திரு.நல்லுசாமி, திரு.கோவிந்தராஜ் ஆகிய கலைஞர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தலைமை ஸ்தபதி திரு. வரதராஜன் அளித்த விவரங்கள். திருத்தேர் செய்ய 1150 கன அடி இலுப்பை மரக்கட்டைகளும் 25 கன அடி தேக்கு மரக்கட்டையும் டன் இரும்பும் பயன்படுத்தப்பட உள்ளன. 3 முதல் 3½ டன் எடையில் தேரின் சக்கரங்களும் அச்சும் - திருச்சி BHEL நிறுவனத்தில் வடிவமைக்கப்படுகின்றன. புதிய தேர் 52 டன் எடை கொண்டதாக விளங்கும். 

நன்றி - Facebook
தேரின் முதல் அடுக்கில் 72 சிற்பங்களும் இரண்டாவது அடுக்கில் 65 சிற்பங்களும் மூன்றாவது அடுக்கில் 64 சிற்பங்களும் இடம் பெறுகின்றன. மேலும் தேர் முழுதும் 225 போதியல் சிற்பங்களும் அமைக்கப்படுகின்றன. 

பெரிய கோயிலின் ஆகம விதிகளுக்கு உட்பட்டு சிற்பங்கள் வடிவமைக்கப் படுகின்றன. கோயிலில் விளங்கும் விநாயகர், முருகன், மஹாவிஷ்ணு, அம்பிகை, சிவபெருமான் - திருக்கோல சிற்பங்கள் 75 சதவீதம் தேரிலும் அமைக்கப்படும். 

பூமியில் இருந்து பலகை மட்டம் வரை 12¼ அடி உயரம். தேவாசனம் அடி உயரம் சிம்மாசனம் 2 அடி உயரம் என - மொத்தம் 16¾ அடி உயரத்தில் தேர் விளங்கும். 

தேரோட்டம் - திருஆனைக்கா

பங்குனியில் வெள்ளோட்டம் நிகழ்த்தி  சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

ஸ்ரீபிரகந்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் - பெருந்தேரில் எழுந்தருளி - தஞ்சை மாநகரின் ராஜவீதிகளில் பவனி வருவதைக் காண  -  மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

திருநாவுக்கரசு சுவாமிகள், சிவபெருமானை - ஆழித்தேர் வித்தகர் என்று திருப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

கோழிக் கொடியோன்தன் தாதை போலும் 
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும் 
ஊழி முதல்வரும் தாமே போலும் 
உள்குவார் உள்ளத்தினுள்ளார் போலும் 
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும் 
அடைந்தவர்க்கு அன்பராய் நின்றார் போலும் 
ஏழு பிறவிக்குந் தாமே போலும் 
இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே!.(6/89/2)

ஆழித்தேரில் எழுந்தருளும் ஈசன் 
எல்லாருக்கும் நலமும் வளமும் 
பொழிந்து காத்தருள்வாராக!..

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்!..

சனி, செப்டம்பர் 21, 2013

திருவேங்கடம்

''வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்!..''

ஈராயிரம் வருடங்களுக்கு முன் -

தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய, பனம்பாரனார் எனும் பெரும் புலவர் - குறிப்பிடும் தமிழகத்தின் எல்லைகள். 


இதில் வடவேங்கடம் என்பது  - திருமலையையும் தென்குமரி என்பது இன்றைய குமரி முனையையும் குறிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

இளங்கோவடிகள் - சிலப்பதிகாரத்தில் -  

நீலமேகம் நெடும்பொற்குன்றத்துப்
பால்விரிந்தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் 
திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும் 

- என்று திருஅரங்கத்தையும்,


வீங்கு நீரருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு

நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையினேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

- என்று திருவேங்கடத்தையும்

- மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்  குறிப்பிடுகின்றார்.

நீலத் திரைக் கடல் ஓரத்திலே நின்று 
நித்தம் தவஞ் செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் 
மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!..

- என்று, மகாகவி பாரதியார் குதுகலிக்கின்றார்.


கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் ஒன்று இல்லாமையால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்து அறியேன்
குன்றேய் மேகம்அதிர் குளிர் மாமலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!.. 1030

திருவேங்கடமுடையான். இது திருவேங்கடம் எனும் திருமலையினை உடையவர் என்ற பொருளில் அமைந்த காரணப்பெயர். இன்று வழங்கும் ஸ்ரீஸ்ரீநிவாசன் எனும் திருப்பெயரும் 500 வருடங்களாகத்தான்!..


தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா
அரியே! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!.. 1034

திருவேங்கட மாமலையில் , திருக்கோயிலின் வடமேற்குத் திசையில் - சற்று தொலைவில் ''சிலாதோரணம்'' எனும் பாறைகள் அமைந்துள்ளன. இந்தப் பாறைகளில் இருந்தே பெருமான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். பெருமானின் திருமேனியும் இந்தப் பாறைகளும் ஒரே விதமாக விளங்குகின்றன. உலகில் இங்கு மட்டுமே உள்ள இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடங்கள்.

கண்ணார் கடல்சூழ் இலங்கைக்கு இறைவன்தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய 
அண்ணா! அடியேன் இடரைக் களையாயே!.. 1038

பெருமானுடைய திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் உஷ்ணத்திலேயே உள்ளது. ஆனால் மூவாயிரம் அடி உயரத்திலுள்ள திருமலை குளிர் பிரதேசம். அதிகாலையில் குளிர்ந்த நீர், பால் கொண்டு அபிஷேகம் செய்து முடித்தவுடன் பெருமான் திருமேனியில் வியர்வைத் துளிகள் அரும்புகின்றன. வியாழன்று அபிஷேகத்திற்கென ஆபரணங்களைக் கழற்றும் போது - அவை சூடாக இருக்கின்றன. 


நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏர்ஆலம் இளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய 
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!.. 1040

வியாழன்று அபிஷேகங்கள் முடிந்ததும் - ஆபரணங்கள் ஏதுமின்றி வேஷ்டி அங்கவஸ்திரத்துடன் பெருமான் திருக்காட்சி அருள்வார். ஸ்வாமியின் நெற்றியில் மெல்லிய நாமம் மட்டுமே விளங்கும். 

உண்டாய் உறிமேல் நறு நெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே
விண்தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா! அடியேனுக்கு அருள் புரியாயே!.. 1041

பெருமாள் ஆனந்த விமானத்தின் கீழ் கிழக்கு முகமாக அருள்பாலிக்கின்றார். பதினான்காம் நூற்றாண்டில் அன்னியர் திரண்டு வந்து திருவரங்கத்தைக் கொள்ளையடித்தபோது, அரங்க நாதனின் உற்சவத் திருமேனி - திருமலையில் தான் - பாதுகாப்பாக இருந்தது. அந்த இடமே ரங்க மண்டபம்.


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்!..இனியான் உன்னை என்றும் விடேனே!.. 1046

புரட்டாசி சனிக்கிழமை விரதம் - திருவேங்கடம் உடைய பெருமானைக் குறித்தே அனுசரிக்கப்படுகின்றது. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடி தரிசிக்கும் -  புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. அப்போது மூலவரின் திருமேனியில் திகழும் மஹாலக்ஷ்மி ஆரத்தினை உற்சவ மூர்த்தியாகிய மலையப்ப ஸ்வாமி அணிந்து வருகிறார்.

இப்பதிவில் - திருமங்கை ஆழ்வார் அருளிய திருப்பாசுரங்கள் - வழி நடைத் துணையாய் வந்தன 

சீரார் திருவேங்கட மாமலை மேய 
ஆரா அமுதே!.. அடியேற்கு அருளாயே!..
பெருமானே சரணம்!..
பெருமாளே சரணம்!..