நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 29, 2021

காழி நின்ற கார்முகில்

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
 நேற்று வைகாசி
 மூல நட்சத்திரம்..

திருஞானசம்பந்தர்
சிவசாயுஜ்யம் பெற்ற நாள்..


திருமுருகனின் அம்சமாக
திருஞானசம்பந்தர்
அவதரித்தார்
என்பது அருணகிரி நாதரின் அருள்வாக்கு..

சைவம் தழைக்கும் பொருட்டு
சீர்காழியில் தோன்றி
அம்பிகையின் ஞானப்பாலினை
அருந்தியவர்
காழிப் பிள்ளையாகிய
திருஞானசம்பந்தர்..


திருநாவுக்கரசரை அப்பர் என்றழைத்து அகங்குளிர்ந்தவர் ஞானசம்பந்தர்..

திருக்குலத்தவராகிய
திருநீலகண்ட யாழ்ப்பாணரையும்
அவரது மனைவியாகிய
மதங்க சூளாமணி அம்மையையும்
தமது திருக்கூட்டத்தினராக
ஏற்று மகிழ்ந்திருந்தவர்..

பதினாறு ஆண்டுகளே
இவ்வையகத்துள் வாழ்ந்திருந்த
ஞானசம்பந்தப் பெருமான்
அருளிச் செய்த
திருப்பதிகங்கள் 16000..

அவற்றுள் ராஜராஜ சோழன் வழியாக நமக்குக் கிடைத்திருப்பவை 383 மட்டுமே..

இவையே
திருக்கடைக் காப்பு
எனப்படுபவை..

ஞானசம்பந்தர் அருளிச் செய்த
திருப்பதிகங்கள்
முதன் மூன்று திருமுறைகளாக
இலங்குகின்றன..

ஞானசம்பந்தப் பெருமான்
அருளிச் செய்த
திருப்பதிகத்
திருப்பாடல்களுள்
ஒரு சில இன்றைய பதிவில்.. 

நேற்று வெளியாகி இருக்க வேண்டிய பதிவு இது.
கால தாமதமாகி விட்டது..
 

தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமா புரம் மேவிய
 பெம்மான் இவனன்றே.. (1/1)

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள்
மழலைம் முழவதிர
அண்ணாமலை தொழுவார் வினை 
வழுவா வண்ணம் அறுமே.. (1/1)


எம்பிரான் எனக்கமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழிற் பிரமபுரத் துறையும் வானவனே.. (2/40)

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.. (2/66)


துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள் தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த
வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.. (3/22)

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து வந்து எய்த்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.. (3/22)


சீர்காழியை அடுத்துள்ள
ஆச்சாள்புரத்தில்
திருஞான சம்பந்தருக்கும்
தோத்திரப் பூர்ணாம்பிகா
எனும் நங்கைக்கும்
திருமணம் நிகழ்வுற்றது..

அவ்வேளையில்
ஆங்கு மூண்டெழுந்த சிவஜோதியுள்
திருமண மங்கலங்களை நிகழ்த்திய திருமுருக நாயனார், திருநீலநக்க நாயனார்,
திருநீலகண்ட நாயனார் அவரது மனைவி மதங்க சூளாமணியார்
மற்றும் தாய் தந்தை ஏனையோருடன்
ஞானசம்பந்தப் பெருமான்
தனது மங்கை நல்லாளுடன்
இரண்டறக் கலந்து
சிவலோகம் சென்றடைந்தார்..

கீழுள்ள காணொளி
திரு மயிலை
கபாலீச்சரத்தில்
ஞான சம்பந்தப் பெருமான்
சிவிகையில் எழுந்தருளிய
திருக்காட்சி..

உடன்
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்,
திருமுருக நாயனார் - என
மூவரையும் தரிசிக்கலாம்..

காணொளி வலையேற்றிய
அன்பர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி.


திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி.. போற்றி..
***
நேற்று (28/6) வெள்ளிக்கிழமை
எங்களது 
ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயிலில்
வருடாந்திர உற்சவத்தின்
முதல் நாள்..

ஊரடங்கு விதிகளை அனுசரித்து
சந்நிதி முறைகள் மட்டுமே..

நேற்று நிகழ்ந்த 
மகா அபிஷேக அலங்கார
தீப ஆராதனை தங்களுக்காக!..



தேடி வந்து நின்றாய் காளி
தீமை யாவும் வென்றாய்..
பாடி உன்னைப் பணிவேன் காளி
பக்கம் நின்று அருள்வாய்!..

அன்னை உந்தன் அருளில்
எங்கள் அகமும் குளிருதம்மா..
அன்பின் வடிவமாக ஆங்கோர்
மழலை வளருதம்மா!..

அருளி வந்த நீயும் ஆங்கே
அமர்ந்து காக்க வேண்டும்..
கருவும் கொண்ட மகளைத் தாயே
கருதி நோக்க வேண்டும்..

வண்ணம் கொண்டு வந்தாய் காளி
வாழ்வு மலர வந்தாய்..
சொன்ன சொல்லில் நின்றாய் தாயே..
சூழ்ந்து உன்னைத் தொழுவேன்!..
ஃஃஃ

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.

ஃஃஃ

புதன், மே 26, 2021

முருகா வருக

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று வைகாசியின்
நிறைநிலா நாள்...

முருகப் பெருமான் அவதரித்த விசாகத்தை முன்னிட்டு
நேற்று வெளியாகி இருக்க வேண்டிய பதிவு இது..
தாமதமாகி விட்டது..

மேலும்
கடந்த சில பதிவுகளாக
தளம் தேடி வருகை தரும்
தங்களை எல்லாம்
வரவேற்று நன்றி நவிலாமல்
இருப்பதற்கு வருந்துகின்றேன்..

குறையேதும் கொள்ளாமல்
வாருங்கள்...
குமரனின் சந்நிதியில்
விளக்கேற்றுவோம்..


குடி கொண்டு அருள்கின்ற
குமரேசன் இருதாளில்
குறை சொல்லி
 சுடர் ஏற்றினேன்..

மடிகின்ற நலம் கண்டு
மருள்கின்ற மனம் கண்டு
மயிலோனும் வருக என
மலர் சாற்றினேன்..

அப்பா நீ அருளாமல்
ஆர் துணையும் அடையாமல்
ஆருயிர்கள் மாள்வதும் சரியோ..
ஆகாத அதர்மங்கள்
அணி கொண்டு எதிர் வந்து
கொள்ளை என்றாவதும் முறையோ..

தப்பான தடம் சென்ற
தருக்கர் நிலை தான் வென்ற
தமிழ் வேலன் தண்முகம் வருக..
சங்கடம் தனைப் போக்க
சஞ்சலம் தனை நீக்க
சரவணன் சண்முகம் வருக..


சுரலோக அமுதினை
அருட்கரம் ஏந்திடும்
குஞ்சரி அவளோடு வருக..
மலை தந்த தேனமுது
மான்மகள் வள்ளியுடன்
மயிலேறி வந்து நீ தருக..

வேல் தந்த நெடுங்கண்ணி
வினை தீர்த்து நின்றனள்
வேளூரில் வைத்திய நாயகி..
அவளிடம் கேட்கவும்
அருமருந்து நல்குவாள்
அதையேந்தி வருக முருகா..

ஆருயிர் பிழைக்கவும்
அடியவர் தழைக்கவும்
அருள் புரிக செல்வ முருகா..
அங்கிங் கெனாதபடி
எங்கும் திளைக்கின்ற
தெய்வ மணி சித்தனே முருகா..

சித்தமும் ரத்தமும்
சிவமயம் சிவமயம்
செல்வனே சிவமுத்துக் குமரனே..
சித்தா அமிர்தமும்
சரவணத் தீர்த்தமும்
வரும்பிணி தீர்த்தருள்கவே..

சேவலின் குரல் கேட்டு
கொடுநோயும் குழிவீழ
குமரனே வழி காட்டுவாய்..
பெருந்தோகை மயிலதுவும்
பிரமித்து ஆடிட
பிணி தீர்த்து ஒளி ஏற்றுவாய்..
***



இன்றைய சூழ்நிலையில்
மக்கட் பணியாற்றும்
மருத்துவர்களும் செவிலியர்களும்
காவல் துறை அலுவலர்களும்
தம்முயிரைப் பணயம் வைப்பது
பற்றி வெளியாகின்ற
செய்திகளைக் கண் கொண்டு படிக்க இயலவில்லை..


கொரானாவுக்கு எதிராக
பணி புரிந்து கொண்டிருக்கும்
மருத்துவர்களையும்
செவிலியர்களையும்
காவல் துறை அலுவலர்களையும்
துப்புரவுப் பணியாளர்கள்
மற்றும் ஏனைய முன்களப் பணியாளர்களையும்
என்றும் காத்து நிற்க
இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்..

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. 

காக்க காக்க கனகவேல் காக்க

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

திங்கள், மே 24, 2021

வாளாதிருப்பதுவோ!..

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மீண்டும் ஒரு பதிவு
செய்தி முகப்புகளுடன்...

செய்தி முகப்புகள்
தினமலர் நாளிதழின்
இணைய தளத்தில் இருந்து..


தேடி வரும் உயிர்களுக்குத்
திசை காட்டும் தாயே..
தீ நுண்மி தீர்ப்பதற்கு
துணை கூட்டுவாயே..

வகை கொண்ட மாந்தருக்கும்
வாழ்வழிந்து போவதெனில்
வருந்துகின்ற நெஞ்சகத்தில்
வரும் வார்த்தை இல்லையம்மா..

வளைக் கரத்து வாள் அதுவும்
வாளா இருப்பதுவோ!..
அனல் அதுவும் கரு விழியில்
மூளா திருப்பதுவோ!..

காளி என நீலி என
கடுந்துயரம் தீர்த்தவளே!.
கொடியவனாம் மகிடனையும திருவடியால் தேய்த்தவளே!..

கண் திறந்து பாரம்மா
கவலைகளைத் தீரம்மா..
கொடியவினை விஷமி தன்னை
விழி இணையால் தீர்த்திடம்மா!..
***
மனதை மிகவும் ரணப்படுத்துகின்ற
செய்தி இது..


கொரானா தீநுண்மிக்கு எதிரான
போரில்
திரு அண்ணாமலை  - போளூரைச் சேர்ந்த முதுநிலை பயிற்சி மருத்துவர்
கார்த்திகா (29) தன்னுயிரை ஈந்திருக்கின்றார்..

அவர் கர்ப்பிணி என்பது வேதனையிலும் வேதனை..

சில தினங்களுக்கு முன்
மதுரையில் ஷண்முக பிரியா (30) எனும் மருத்துவரும்
இன்னுயிரை ஈந்திருக்கின்றார்..


இப்படி மக்கட் பணியாற்றும்
மருத்துவர்களும் செவிலியர்களும்
காவல் துறை அலுவலர்களும்
தம்முயிரைப் பணயம் வைப்பது
பற்றி வெளியாகி இருக்கும்
செய்தியினைக் கண் கொண்டு படிக்க இயலவில்லை..

கொரானாவுக்கு எதிராக
பணி புரிந்து உயிர் துறக்கும்
மருத்துவர்களையும்
செவிலியர்களையும்
ஏனைய முன்களப் பணியாளர்களையும்
என்றும் நினைவில் கொள்வோம்..

கார்த்திகாவும்
அவர் தாங்கியிருந்த சேயும்
இறைநிழலில் கலந்திருக்க
வேண்டிக் கொள்வோம்..


***
இச்செய்தி முகப்புகள்
தினமலர் இணைய தளத்தில் இருந்து பெற்றவை..








கீழுள்ள இணைைப்பில்
காணொளியைக் காணலாம்..

சென்னை ஆவடி பகுதியில்
ரோட்டரி கிளப் இளைஞர்கள்
பசித்த உயிர்களைக் கண்டு
உணவு வழங்குகின்றார்கள்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த
நன்றியும் வணக்கமும்..

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

சனி, மே 22, 2021

கண்டு வந்த காட்சி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
நேற்று படித்த செய்திகளின்
முகப்பினை வழங்கியிருக்கின்றேன்..

முதல் செய்தி
தஞ்சை நகரில் அறம் புரிவோரைப்
பற்றியது..
Fb வழியாக அனுப்பி வைத்தவர்
தஞ்சை ஞானசேகரன் அவர்கள்..


பசித்த முகம் பார்த்துப்
பதறும் நல்லுள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த
நன்றியும் வணக்கமும்..
***
அடுத்து வரும் செய்திகள்
தினமலர் இணைய தளத்தில் இருந்து பெற்றவை..







பட்டுக்கோட்டை 
நகரில்
உணவகம் நடத்துகின்ற
திரு. சிவா என்பவர்
பசித்த வயிறு கண்டு உணவு வழங்குகின்றார்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த
நன்றியும் வணக்கமும்..




கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்த கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

திங்கள், மே 17, 2021

மக்கள் பணி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கொடுமையான இக்காலகட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுடையோர் சிகிச்சை பெறுவதற்காக -

தருமபுர ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் அவர்கள் -  தருமையாதீனக் கலைக் கல்லூரியில் நூறு படுக்கைகளை அமைத்து வழங்கியுள்ளார்கள்..

 மேலும் சுற்றுப் புற கிராமங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் சுகாதார நிலையங்களிலும் நாள்தோறும் இரண்டாயிரம் பேருக்கு  ஆதீனத்தில் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கிடவும் ஆவன செய்துள்ளார்கள்..





மக்கள் பணியே மகேசன் பணி என்றுரைத்தனர் ஆன்றோர்.. அப்படிச் செய்பவரே தொண்டர் எனப்பட்டனர்..

தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!.. என்பது ஔவையார் திருவாக்கு..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

சனி, மே 15, 2021

ஆரா அமுதன்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

அன்றொரு இலையினில் துயின்றவன்
அந்த இரணியன் உடலம் வகிர்ந்தவன்
ஆமை எனக் கடல் அளைந்தவன்..
அமுதாய் அவனியில் குழைந்தவன்..

வராக வடிவுடன் வந்தவன் அவனே
வையகம் காத்து நின்றவன் அவனே..
மீனமும் ஏனமும் பகை வெல்லும்
நாரணன் புகழைப் புவி சொல்லும்..

ஆனைக் கன்று அலறிடக் கண்டு
அன்றோர் முதலையைத் துணித்தவன்
அன்புடன் மதலை அழைத்தது கேட்டு
ஆங்கோர் தூணில் உதித்தவன்..


நற்றவன் வடிவம் நர சிங்கம்
நாயகன் அருளால் நலம் தங்கும்...
கோளரியாய் நின்று குறை கேட்க்கும்
கோவிந்தன் விழிகள் வினை தீர்க்கும்..

வாமன வடிவினில் தனியழகன்
மார்பினில் பத்மம் பேரழகன்
பெருந்துயர் தீர்க்க அவன் வருவான்
பெருநலம் என்றும் அவன் தருவான்..


கோபியர் மனம் தொட்டு ஆடியவன்
கோதையின்  தோள் தொட்டு சூடியவன்..
குருவாய் கீதை உரைக்கின்றவன்
கொடியவர் கௌரவம் தகர்க்கின்றவன்..


அன்னையர் அன்பினில் தவழ்ந்தவன்
அறம் கொண்டு கானில் நடந்தவன்
அனுமன் அன்பினில் களிக்கின்றவன்
நல்லவர் நடுவினில் இனிக்கின்றவன்..

சங்கொடு சக்கரம் தரிக்கின்றவன்..
கடும்பகை கனலாய் எரிக்கின்றவன்..
சார்ங்க நந்தகம் ஏந்தியவன் துயர்
சங்கடம் தீர்த்துத் தாங்கியவன்..


அவன் கதை அசுரர் கதை தீர்க்கும்
அடியவர் மனதில்  நலம் சேர்க்கும்..
அருளே அன்பின் மனம் கொண்டு
ஆரா அமுதாய் பிணி தீர்க்கும்..

ஆய்ச்சியின் மடியில் அமுதுண்டான்
அருள் விளையாடல் பல கொண்டான்..
அவனே அமுதாய்த் திகழ்கின்றான்
அடைக்கலம் நானெனப் புகல்கின்றான்..

மலை போல் கவலை எதற்காக..
மாதவன் சிறுவிரல் அதற்காக..
கோ வர்த்தனமது குடை ஆகும
கோ விந்த நாமம் விடையாகும்.


நாரண நாரண நாரணனே
நலமருள் நாயக பூரணனே..
நாரண நாரண நாரணனே
நல்லவர் வாழ்வின் காரணனே..
ஓம் ஹரி ஓம்..
ஓம் ஹரி ஓம்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்...
***