நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

கலைவாணர்

அதற்கு முன்னும் - பின்னும் தன்னேரில்லாத தகைமையாளர்..

தனது நகைச்சுவையினால் மக்களைச்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்..

வறுமையுற்ற காலத்திலும்
வள்ளல் தன்மையிலிருந்து சற்றும் வழுவாதவர்..

அமரர் திரு N.S. கிருஷ்ணன்..

29 நவம்பர் 1908 - 30 ஆகஸ்ட் 1957
மக்களின் மனங்கவர்ந்து - தனித்ததோர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்..

எவரையும் புண்படுத்தாத பாணி அவருடையது..

வீட்டிற்குள் வெளியிடத்தில் காணும் இடங்களில் எல்லாம்
நம்முடனேயே வரும் இயல்பான நகைச்சுவை.. 

முல்லை மொட்டாக மலர்ந்து மணம் பரப்பி - மனம் நிறைக்கும் தன்மை..

தான் நடிக்கும் காட்சிகளுக்கான நகைச்சுவை அமைப்பினை 
தானே உருவாக்கிக் கொள்ளும் வல்லமையுடையவர்..

வில்லுப் பாட்டு, நாடகம், இசைக் கதாகாலட்சேபம் எனும் 
பன்முகத் திறமையால் அவருடைய கருத்துகள் நகைச்சுவையாக
எல்லா தரப்பு மக்களையும் எளிதாகச் சென்றடைந்தது...


கலைவாணர் அவர்கள் தனது மனைவி T.A. மதுரம் அவர்களுடன் வழங்கிய நகைச்சுவைக் காட்சிகள் காலத்தால் அழியாதது..

கலைவாணர் அவர்களுடைய நகைச்சுவை சொற்சித்திரங்களை மக்களிடையே நிலைநிறுத்தியதில் -

நமது வானொலி நிலையங்களுக்கு சற்றும் தொடர்பு இருந்ததேயில்லை...

கலைவாணர் அவர்களும் T.A. மதுரம் அவர்களும் நடித்திருந்த 
பல்வேறு நகைச்சுவைக் காட்சிகளை வழங்கிய பெருமை அனைத்தும்

அன்றைய இலங்கை வானொலிக்கே உரியது..

அந்த வகையில் நெஞ்சில் பதிந்த காட்சிகள் ஏராளம்.. ஏராளம்!..

நகைச்சுவை ததும்பிய பாடல்கள் தான் எத்தனை.. எத்தனை!..

அந்த மலரும் நினைவுகளைப் பதிவு செய்வதற்கே - பல பதிவுகள் வேண்டும்..

கிந்தனார் சரித்திரம் - எனும் காலட்சேபத்தினை மறப்பாரும் உண்டோ!..

மக்கள் திலகத்துடன் - மதுரை வீரன்
நடிகர் திலகத்துடன் - ராஜா ராணி
1967ல் N.S. கிருஷ்ணன் - என்றொரு திரைத் தொகுப்பு அப்போது வெளியிடப்பட்டது... 

அதில் கலைவாணர் நடித்த படங்களின் சிறந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன..

மக்கள் திலகம் அவர்கள் அறிமுகமான சதி லீலாவதி தான் கலைவாணர் அவர்களுக்கும் முதல் படம்..

நூற்றைம்பது திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர்..

நல்லதம்பி எனும் படம் அவருடையது. கதை வசனம் அறிஞர் அண்ணா..


1951ல் மணமகள் எனும் தனது சொந்தப் படத்தைத் தானே இயக்கினார்..

இந்தப் படத்தில் தான், 
நாட்டியப் பேரொளி பத்மினி - கதாநாயகி என அறிமுகம் ஆனார்..


1952ல் பணம் எனும் திரைப்படத்தை இயக்கினார்..
இந்தப் படத்திற்கு கதை வசனம் - கலைஞர் கருணாநிதி..

நடிகர் திலகம், பத்மினி இணைந்து நடித்த இந்த திரைப்படத்தில் -
M.S. விஸ்வநாதன் அவர்களுடன் T.K.ராமமூர்த்தி அவர்களை இணைத்து 
புதிய இசைக் கூட்டணிக்கு வித்திட்டார் - கலைவாணர்...
கலைவாணர் அவர்களின் கருத்துக்களை இனிய பாடலாக வடித்துத் தந்தவர்
உடுமலை நாராயணகவி அவர்கள்..


தனது உழைப்பினால் ஈட்டிய பொருளை சக கலைஞர்களுக்கு 
தாராளமாக வாரி வழங்குவதில் மகிழ்ந்திருக்கின்றார்...

இவரது மனதை அறிந்து கொண்ட ஒருவர் - ஓயாமல் உதவி என்று வந்து நின்றிருக்கின்றார்..

கலைவாணரிடத்தில் உண்மையை மற்றொருவர் சொல்லியிருக்கின்றார்..

அதற்கு கலைவாணர் அவர்கள் அளித்த பதில் -

போகட்டும் விடு.. அவன் என்ன கோட்டையா கட்டப் போகின்றான்.. வயித்துக்கு சாப்பிடப் போகின்றான்.. அவ்வளவு தானே!..

கலைவாணர் அவர்களின் இயல்பான நகைச்சுவைக்கு இன்னொரு நிகழ்வு..

குறித்த நேரத்தில் வரவேண்டிய ஒருவர் சற்று தாமதமாக வந்திருக்கின்றார்..

ஏன் தாமதம்.. என்று வினவுகின்றார் - கலைவாணர்..

ஐயா.. கேட்டு மூடிட்டாங்க!..

அந்த பதிலுக்கு - வழியில் இருந்த Railway Gate மூடப்பட்டதாக அர்த்தம்..

அதற்கு - கலைவாணர் அவர்கள் மெல்லிய புன்னகையுடன் சொன்னார்..

கேட்டு தானே மூடினாங்க.. கேட்க்காமல் மூடலையே!..



அந்த காலகட்டத்தில் - வளர்ந்து வந்த திராவிட இயக்கங்களின் தலைவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும் 

மகாத்மாவின் கொள்கைகளால் கவரப்பட்டவராக இருந்தார்..

காந்திஜியின் மறைவுக்குப் பிறகு -  நாகர்கோயில் நகராட்சிப் பூங்காவில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஸ்தூபி ஒன்றினை எழுப்பி காந்திஜிக்கு அஞ்சலி செய்தார்..

தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாகக் காரணமாக இருந்ததோடு
தனது நிலத்தையும் வழங்கியிருக்கின்றார்..

ஆனால் - புகழுடன் இருந்த காலத்தின் ஊடாக.
கொலை வழக்கு ஒன்றில் சிக்கிப் போராடியதில் - பொருளாதாரத்தை இழந்திருக்கின்றார்..

ஆயினும், கலைவாணர் அவர்கள் -
தனது நகைச்சுவையையும் வள்ளல் தன்மையையும் இழக்காதவராக திகழ்ந்திருக்கின்றார்..

கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
சிகிச்சை பலனளிக்காமல் 1957 ஆகஸ்ட் 30 அன்று காலமானார்..

அன்பின் துணையைப் பிரிந்த T.A. மதுரம் அவர்கள் -
1974 நவம்பர் 27 அன்று இயற்கை எய்தினார்..


மேலே உள்ள காட்சி இடம் பெற்ற திரைப்படம் அம்பிகாபதி..

அடுத்துள்ள புகழ் மிக்க பாடல் இடம் பெற்ற திரைப்படம் ராஜா ராணி..


வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்..

கலைவாணர் அவர்களும் T.A. மதுரம் அவர்களும் வழங்கிய நகைச்சுவையினால் கவலைகள் மாறுகின்றன..

இன்று ஆகஸ்ட் 30

கலைவாணர் அவர்களின் நினைவு நாள்

காலங்கள் மாறலாம்.. காட்சிகளும் மாறலாம்..
கலைவாணர் அவர்கள் நமக்களித்த மகிழ்ச்சி என்றும் மாறாதது..

நல்ல மனமும் நகைச்சுவை உணர்வும்
கலைவாணர் அவர்களின் வடிவாக 
என்றென்றும் நம்மிடையே
நிலைத்திருக்கும்..
***

சனி, ஆகஸ்ட் 27, 2016

மனிதம்

ஏழை ஒருவனை - தனது மனைவியின் சடலத்துடன் பத்து கி.மீ. தொலைவுக்கு  நடத்தி வைத்து பெருமை கொண்டிருக்கின்றது -

ஒடிசா மாநிலத்தின் பவானி பட்னாவிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை..


மருத்துவ மனையில் வாகன வசதி மறுக்கப்பட்டதால் - காச நோயால் மரணமடைந்த மனைவியின் சடலத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு,

தனது மகளுடன் பத்து கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்ற செய்தி உலகம் எங்கெங்கும் பரவிக் கிடக்கின்றது...

கலாஹண்டி மாவட்டம் மெல்காரா கிராமத்தைச் சேர்ந்த தானா மஜி என்பவருக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது..

காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை - 
மெல்காராவிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள பவானி பட்னா 
அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக சேர்த்திருந்தார்..

ஆனால், அன்றிரவே -
அன்புக் கணவனையும் 12 வயதுடைய மகளையும் பரிதவிக்க வைத்து விட்டு தானா மஜியின் மனைவி பரிதாபமாக இறந்து போனார்...

அங்கிருந்து - சடலத்தை தனது ஊருக்கு தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல வசதியில்லாத தானா மஜி - மருத்துவமனை அலுவலர்களிடம் வாகனத்திற்காக மன்றாடியிருக்கின்றார்..

மெத்தப் படித்து விட்டு பணம் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் -

படிப்பறிவில்லாத அந்த ஏழைக்கு ஏதொன்றும் நல்லது செய்தார்களில்லை...

பழங்குடியினர் என்று - தானா மஜியை ஏளனமாகப் பார்த்துள்ளனர்..

மனிதர்கள் எல்லோருமே ஆதியில் பழங்குடி காட்டுவாசிகள் தானே!..

அது மறந்து போயிருக்கின்றது - இந்த கற்றறிந்த கசடர்களுக்கு!..



மனம் வெறுத்துப் போல தானா மஜி - விறைத்துக் கிடந்த மனைவியின் உடலைப் பழந்துணிகளைக் கொண்டு மூடி தோள் சுமையாகத் தூக்கிக் கொண்டு - தன் மகளுடன் தனது ஊரை நோக்கி நடந்தார்..

பாமரனாக இருந்த போதும் - புத்தியுடன் நடந்து கொண்டிருக்கின்றார் தானாஜி..

சடலத்தை மருத்துவமனையின் வாசலில் கிடத்தி போராட்டம் அது.. இது என்று கிளப்பியிருந்தால் -

கடுப்புக்குப் பெயர் போன காவல் துறை என்ன வகையான நடவடிக்கையை எடுத்திருக்குமோ தெரியாது!.. கூடவே பதின்ம வயதில் மகள்!..

வியாழன்று Fbல் வெளியான செய்திகள் நெஞ்சைக் குடைந்தன..


தாயைப் பிரிந்த மகள் தகப்பனுக்கு நேரிட்ட கதியை எண்ணி விம்மி அழுதபடி பின் தொடர்ந்தாக செய்தியுடன் வந்த காணொளியைக் காணும் மனநிலையில் நான் இல்லை..

இரண்டு நாட்களாகத் தொடர்வேலை.. செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம்..

அதற்குள்ளாக, அன்பின் திரு துளசிதரன் அவர்களும் வெங்கட் நாகராஜ் அவர்களும் தங்கள் தளத்தில் வேதனையைப் பகிர்ந்திருந்தனர்..

படிப்பது எதற்காக?..

தான் பெற்ற கல்வியைக் கொண்டு - இல்லார்க்கும் எளியார்க்கும் இயன்றவரை உதவுவதற்காகவே!..

ஆனால் -

கல்வி கடைச்சரக்காகி விட்ட இன்றைய சூழலில் கற்றவர்கள் கடையர்களாகி விட்டனரோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது...

படித்தவர்களால் இயங்கும் அரசு அமைப்புகளின் அலுவலர்கள் பலரும்
ஏன் இப்படி, பணம் பணம்!.. - என்று பறக்கின்றார்களோ தெரியவில்லை..

இந்த சம்பவம் குறித்து மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் -

சடலத்தை எடுத்துச் செல்ல தானா மஜி வாகனம் கேட்ட விவரம் மருத்துவ மனை அதிகாரிகளுக்குத் தெரிந்தவுடன் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர் சடலத்தைத் தூக்கிக்கொண்டு 10 கி.மீ. தூரம் வரை சென்றுள்ளார்!... 

- என்று கூறியிருக்கின்றார்...

பத்து கி.மீ தொலைவினைக் கடந்த பிறகு தான் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் படம் பிடித்து வெளியிட்டிருக்கின்றது..

அதன் பிறகே - மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

பின்னர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து -  அங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்துக்கு அவர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர்.


உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் -

நான் ஏழை.. வாகனத்துக்கு என்னால் பணம் கொடுக்க இயலாது. அரசு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் எவ்வளவோ கெஞ்சினேன். ஆனால், மறுத்துவிட்டனர்..

- என்று, தானா மஜி கூறியுள்ளார்

இத்தனைக்கும் - கடந்த பிப்ரவரி மாதம் தான் அரசு மருத்துவ மனைகளில் இலவச வாகனத் திட்டத்தை ஒடிசாவின் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்..

அந்த செய்தி - ஏழையாளனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..

ஆனாலும், மருத்துவமனையின் ஊழியர்களால் - அரசின் உதவித் திட்டம் - அந்த ஏழைக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது..

படித்தவர்கள் - பாமரர்க்குச் செய்யும் உதவி இது தானா?..

வருவாய்த் துறை, காவல் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை - என,
அரசு ஊழியர்கள் பலர் மீதும் ஏதேனும் ஒரு அளவில் குற்றச்சாட்டு.. 

இதற்கு முன்னும் - மருத்துவமனைக்கு வரும் ஏழைகளின் மீது -
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஊழியர்களைக் கண்டதுண்டு.. கேட்டதுண்டு..

ஆனாலும், ஒடிசாவில் மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்திருப்பது அவலத்தின் உச்சம்..


கையில் காசில்லாதவன் கடவுள்
என்றாலும் கதவைச் சாத்தடி!.. 

இந்த வார்த்தைகள் வேறொரு தளத்தில் - சொல்லப்படுபவை...

அதெல்லாம் - இன்றைய காலகட்டத்தில் வழக்கொழிந்து போனாலும்

ஏழைகளுக்கான சேவை என்பதும் இல்லாமல் ஒழிக்கப்படுகின்றது..

மாவட்ட தலைமை மருத்துவமனை இருக்கின்றதென்றால் - பவானிபட்னா ஓரளவுக்குப் பெரிய நகராகவே இருத்தல் வேண்டும்...

அழுது கொண்டு வரும் மகளுடன் தோளில் சுமையுடன் நடக்கும் ஒருவனை நிறுத்தி -

என்ன.. ஏது?.. - என்று கேட்கக் கூடவா ஒருவருக்கும் மனமில்லை?..

அந்த பத்து கி.மீ தொலைவும் 
ஆள் அரவமற்ற வனாந்திரப் பகுதியா?...

பாலைவனப் பாழ் வெளியா?..

ஊர்களின் நடுவாகச் செல்லும் சாலையில் - அசாதாரணமான கோலத்தில் சென்ற சக மனிதனைக் கண்டும் காணாமல் நின்றவர்களை என்னவென்று சொல்வது?..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள் வைப்புழி ..

என்பார் வள்ளுவர்..

அழிபசி - என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டாலும் 
அநாதரவான சூழ்நிலை என்று கூடக் கொள்ளலாம்.. 

அந்நிலையில் சிக்கித் தவிக்கும் எவருக்கும் மனமுவந்து உதவிடுதலே மனிதம்...

அது - ஆங்கிருந்த மக்களுக்கு இல்லாமல் போனது வேதனைக்குரியது..

Courtesy : Nigeria Today
இத்துடன் வேறொரு சம்பவம்..

இறந்து போன மூதாட்டியின் சடலத்தின் இடுப்பில் ஏறி மிதித்து
இரண்டாக ஒடித்து மூட்டையாகக் கட்டித் தூக்கிச் சென்ற அவலமும்
அதே - ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது...

வேதனை மிகும் அந்த விவரத்தை இந்த இணைப்பில் காணலாம்..

இதோ - தமிழகத்திலிருந்து ஒரு செய்தி!..

துக்கம் நிகழ்ந்த வீட்டுக்கு அரசு வழங்கிய நிதியினைக் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்டிருக்கின்றார் - கிராம நிர்வாக அலுவலர்..

அந்த விவரம் - இந்த இணைப்பில்.. 


மனிதன்..
எய்த வேண்டிய அடுத்த நிலை புனிதன்..

அந்த நிலைக்கு அவனை ஏற்றுவதற்குத் தான்
எத்தனை எத்தனையோ நீதி நூல்கள்..

அவற்றைப் படித்தாலும் படிக்கா விட்டாலும்
கண் முன்னே மகத்தானவர்களின் சரித்திரங்கள்..

அத்துடன் கறைபட்டு மாண்டவர்களின் கதைகளும்..

புனிதன் ஆகாவிட்டாலும் குறைவில்லை..
மனிதன் கீழாகி மிருகமாகி விடக்கூடாது..
***

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்

இன்றைக்கென்று எவரையும் காணோமே!.. பொழுது வேறு இறங்கிக் கொண்டிருக்கிறது.. இருளாகிப் போனால் யார் உதவிக்கு வருவார்கள்!..

பரிதவிப்புடன் அந்தச் சாலையின் இப்புறமும் அப்புறமும் நோக்கிக் கொண்டிருந்தாள் - கோபிகா...

நீண்டு நெளிந்திருந்த சாலையில் எவரையுமே காணவில்லை..

விழிகளை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள்...

கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன பறவைகளெல்லாம்!..

மேல் வானம் மெல்ல மெல்ல செந்நிறமாகிக் கொண்டிருந்தது...

இன்னும் ஒரு பொழுதுக்குள் இருள் வந்து கவிந்து விடும்..

என்ன செய்வது?..

கண்களில் நீர் ததும்பியது - தனிமையை நினைத்து..


யமுனைக் கரையில் ஸ்ரீ கோகுலத்தில் தான் அவளுடைய வீடு...

நந்தகோபனின் மாளிகையிலிருந்து மூன்றாவது இல்லம் தான் அவளுடையது..

எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா!.. - என்றழைக்கும் யசோதா தேவிக்கு ஒரு வகையில் மருமகள் முறை...

அதெல்லாம் இப்போது கதைக்கு ஆகுமா?..

மரத்தடியில் இருந்து ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கும் அப்பனுக்காவது என் நினைவு வந்திருக்க வேண்டாமா?..

எங்கே மகளைக் காணோம்?.. - என்று..

நம்பிக்கை.. எல்லாம் நம்பிக்கை..

அத்தனையும் அந்த மாயக் கண்ணன் கொடுத்த நம்பிக்கை...

கண்ணன் இருக்கும் ஊரில் கன்னியரைப் பற்றி எதற்குக் கவலை?.. அவன் பார்த்துக் கொள்ள மாட்டானா!..

- என்ற தைரியம்.. நெஞ்சழுத்தம்!...

ஆனால், இன்றைக்கென்று கண்ணன் எங்கே போய் ஒளிந்து கொண்டானோ.. தெரியவில்லை...

நெஞ்சுக்குழிக்குள் படக்.. படக்.. - என்று சத்தம் வேறு கேட்க ஆரம்பித்தது..

சரி.. கோபிகைக்கு என்னதான் பிரச்னை?..

கோபிகாவின் அருகில் பாருங்கள்...

ஒரு கூடை இருக்கின்றதல்லவா!..
அது நிறைய மாம்பழங்கள் இருக்கின்றனவா!.. அவைதான் பிரச்னை!..

கோபிகா - தங்களுடைய மாந்தோப்பை சுற்றிப் பார்ப்பதற்காக
சற்று நேரத்திற்கு முன்பாக வந்தாள்...

அணில்களும் கிளிகளும் மைனாக்களும் மற்ற பறவையினங்களும் தின்று தீர்த்தது போக, ஏராளமான பழங்கள் தோப்புக்குள் உதிர்ந்து கிடந்தன..

அவற்றை அப்படியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் இல்லை..

எல்லாவற்றையும் சேகரித்து எடுத்துச் சென்றால் - இல்லாதவர் எவருக்கும் உண்ணக் கொடுக்கலாமே!.. - என்ற தயாள எண்ணம் அவளுள் எழுந்தது...

அப்படியே முடிந்த வரைக்கும் கூடையில் சேகரித்தாள்..

ஆயிற்று.. கூடையும் நிறைந்து விட்டது.. பெருஞ்சுமையாகவும் ஆகிவிட்டது..

இப்போது - தலைச் சுமையாகத் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க வேண்டியது தான்..

ஆனால் - முடியவில்லை...

கீழே குனிந்து கூடையைத் தூக்கும் போது -
கூடை சரிந்து மேலே உள்ள பழங்கள் கீழே சிதறுகின்றன...

மீண்டும் அவற்றைப் பொறுக்கிக் கூடையில் வைத்து - கூடையைத் தூக்கினால் - மீண்டும் பழைய கதை தான்.. பழங்கள் சரிகின்றன...

இடுப்பில் தூக்கிக் கூடையை வைத்துக் கொண்டு நடக்கலாம் என்றால்,
பாலும் நெய்யுமாக உண்டு வளர்ந்த உடம்பு .. ஒத்துழைக்கவில்லை..

வெண்ணெயுடன் சர்க்கரையைச் சேர்த்த நிறத்தில் சற்றே கனத்த சரீரம்..

அவள் அழுது விடக்கூடாதே!.. என்பதற்காக, அவளைப் பூங்கொடி என்பார்கள்..

அதனால், அவளும் நம்பிக் கொண்டிருந்தாள் - தான் பூங்கொடி தான் என்று!..

இங்கே ஒரு வேடிக்கை!.. என்ன அது?..

சில பழங்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டால் -
கூடையை எளிதாகத் தூக்கிக் கொள்ளலாம்..

ஆனால் - அவ்வாறு செய்வதற்கு கோபிகைக்கு விருப்பமில்லை....

இதுக்குத் தான் கஷ்டப்பட்டு பொறுக்கினேனா?..

தனக்குத் தானே சுமையைச் சேர்த்துக் கொண்டவள் -
தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்...

இவளைப் போலத்தானே நாமும் இருக்கின்றோம்...

ஆசை என்பது பழம் என்றால் - பழங்கள் இருக்கும் கூடையே பிரச்னை..

சில விஷயங்களைக் கைவிட்டால் பிரச்னை தீர்ந்து விடும்!..
ஆனால் - நாம் தான் விடுவதில்லையே!..

சரி.. சம்பவ இடத்திற்கு வருவோம்..

இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது - கோபிகாவின் நெஞ்சில்!..

அழைப்பவர் குரலுக்கு வருவேன்!.. - என்றானே, அந்தக் கள்வன்!..

அழைத்துத் தான் பார்ப்போமே!.. 
அன்றைக்குக் குன்றினை ஏந்திக் கோகுலத்தைக் காத்தவன் - 
கோதையின் குரல் கேட்டு வாராமல் போய்விடுவானோ!..



கிருஷ்ணா!... கிருஷ்ணா!..

ம்ஹூம்.. மாஞ்சோலையின் இலைகள் தான் அசைந்து கொண்டிருந்தனவே தவிர வேறொரு சலனமுமில்லை...

காலையில் உன் குரல் கேட்டேனே - என்
கண்ணனின் திருமுகம் பார்த்தேனே!..
சாலையில் உன் துணை வரவில்லையே - என்
சங்கடம் தீர்ந்திட வழியில்லையே!..

கோபிகாவின் கன்னங்களில் வழிந்திடக் காத்திருந்தன - கண்ணீர்த் துளிகள்..

அதோ.. கன்றுகளின் கழுத்து மணிகளின் சப்தம்..

உற்றுக் கேட்டாள் - கோபிகா..

ஆகா.. கூடவே குழலிசையும் கேட்கின்றது..

கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!..

பரவசமானாள் - கோபிகா!..

இதோ, கமலையும் செவலையுமாக - வீட்டுக்குச் செல்லும் ஆவலில் தாய்ப் பசுக்களை முந்திக் கொண்டு ஓடுகின்றன கன்றுகள்..

கண.. கண.. - என்ற மணி முழக்கத்துடன் தாய்ப் பசுக்களும் மற்ற இளங் கிடேறிகளும் அவற்றைத் தொடர்ந்திடும் வாட்டசாட்டமான காளைகளும்...

ஆநிரைகளின் ஓட்டத்தால் எழுந்த புழுதியின் ஊடாக, அதோ - புண்ணியன்..

வருகின்றான் ஸ்ரீ கிருஷ்ணன்!..

வாட்டம் போக்க வருகின்றான் - ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்...

அவன் வாயிதழ்களில் பொருந்தியதாய் - வேய்ங்குழல்!..

அதிலிருந்து பொங்கி வழியும் அமுதமாய் - வேணுகானம்

இதோ.. இதோ... அருகில் வந்து விட்டான்..

கோபிகை முகம் மலர்ந்தாள்..

கண்ணா.. இதோ இந்தச் சுமையை என் தலையில் ஏற்றி விடேன்!..

வேத வேதாந்தங்களும் காண்பதற்குக் காத்துக் கிடக்கும்
கடைவிழியால் நோக்கினான் - கண்ணன்...

அவ்வளவு தான்..
அவன் நிற்கவும் இல்லை.. நின்று, ஒரு மொழி சொல்லவும் இல்லை..

ஆநிரைகளைத் தொடர்ந்து சென்றே விட்டான்...

கிருஷ்ணா!... கிருஷ்ணா!.. - மீண்டும் கூவினாள்...

ஏதும் பயனில்லை..

கேளாச் செவியனோ.. நீ!..

கோபிகாவின் மனம் பதறியது.. துடித்தது.. துவண்டது..


அன்று நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..
மாம்பழம் வேண்டுமென்று நீ கேட்டாய்..
நான் கொடுத்தாலும் அதை நீ வாங்கவில்லை..
என் கன்னம் வேண்டும் என்று கேட்டனையே!..

பின்னும் ஒருநாள் - தூசு விழுந்து விட்டதா?..
என்று நீயாக கற்பனை செய்து கொண்டு
என் முகம் பற்றி விழிகளுக்குள் உற்று நோக்கி
உன் முகம் கண்டு களித்தனையே!..

அந்த பொழுதெல்லாம் மறந்து விட்டதா?.. 
ஏ.. கள்வனே!.. இது நியாயமா?..

கங்கையின் வெள்ளம் கண்ணீரோ - இல்லை
கன்னியர்கள் சிந்தும் கண்ணீரோ..
கண்ணனின் மனமும் கல்மனமோ.. - எந்தன்
மன்னனுக்கு இதுவும் சம்மதமோ?..


பாராமுகமாய்ச் சென்றனையே.. 
பாவை எனைப் பாவி எனக் கருதினையோ?..

ஆற்றாமையினால் கோபிகாவின் இதழ்கள் துடித்தன...

சட்டென மனம் இறுகிற்று.. ஒரு முடிவுக்கு வந்தாள்...
முயற்சி திருவினையாக்கும்!.. - என்று முனைந்தாள்...

தாவணியின் தலைப்பினை சுருளாகச் சுற்றித் தலையில் வைத்துக் கொண்டாள்..

ஒரு விநாடி மூச்சை நிறுத்தி - இரு கைகளாலும் மாம்பழக்கூடையைத் தூக்கி
சட்டெனத் தலையில் தாங்கிக் கொண்டாள்..

கன கச்சிதமாக உச்சந்தலையில் அமர்ந்தது - மாம்பழக் கூடை..

அப்படியும் இப்படியும் பார்த்தாள் - பழங்கள் ஏதும் விழுந்து விட்டனவா?.. என்று...

யாதொன்றும் விழவில்லை!..

கர்வமாக இருந்தது.. தனது சுமையைத் தானே தூக்கி விட்டோம்!.. - என்று...

சற்று முன் நடந்தவை எதுவும் - இப்போது நெஞ்சினில் இல்லை..

வீட்டை நோக்கி நடந்தாள்..

இன்னும் சற்று தூரம் தான்.. வீட்டுக்குச் சென்று விடலாம்...

கோபிகாவின் மனம் துள்ளியது.. துள்ளிக்குதித்த மனம் அடங்குவதற்குள் -

தன் வீட்டு வாசலில் யார்?.. கண்ணனா!..
அவன் தான்!.. அவன் எதற்கு வந்தான்?..

பாராமுகமாகப் பசுவின்பின் சென்றவன்
பாவை என் முகத்தைப் பார்த்திடவும் வந்தானோ?..

மனமே.. சொன்னால் கேள்.. மாயக்காரன் அவன்!..
அவன் விரிக்கும் வலைக்குள் விழுந்து விடாதே!..

ஏதொன்றும் பேசக்கூடாது... ஏன் பேச வேண்டும்?..
என்னைக் கண்டும் காணாதது போல் சென்றானே!..

என் பிரிவால் அவன் ஏங்கித் தவிக்க வேண்டும்!...
நீயின்றி நானில்லை - என்று துடிக்க வேண்டும்!..

பற்களைக் கடித்துக் கொண்டாள்.. பூவிதழ்களை இறுக மூடிக் கொண்டாள்..

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கின்றாளாம் - அவள்!...

ஆனால், மனமோ சிறகடித்துப் பறந்தது - கண்ணனைக் கண்டதும்!..


கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்..
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்..
கண் மயங்கி ஏங்கி நின்றேன்..
கன்னி சிலையாகி நின்றேன்!..

மனக்குயில் குக்கூ!.. என்று கூவிற்று..
அதன்பின் எல்லாம் நாடகம் போல எல்லாம் நடந்தன..

வீட்டு வாசலில் - தன் எதிரில் வந்து நின்ற கோபிகையின் -
தலையிலிருந்த கூடையை, அவனாகவே இறக்கி வைத்தான் - கண்ணன்..

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்..
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்..
பொன்னழகு மேனி என்றான்..
பூச்சரங்கள் சூடித் தந்தான்!...

கோபிகாவின் மனம் மருகிற்று.. உருகிற்று..

நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!..

பூட்டிக்கிடந்த பூவிதழ்கள் திறந்து கொண்டன..

கண்ணனின் கோலமணி மார்பில் சாய்ந்திருந்தபடிக்கு - 
தலையை மட்டும் உயர்த்தி, அவனது முகம் நோக்கிக் கேட்டாள் கோபிகா!..


பழக்கூடையை தலையில் ஏற்றி விடும்படி சொன்னேன்.. 
அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை - நீ!..

இப்போது நான் கேளாமலேயே வந்து - 
என் தலைச்சுமையை இறக்கி வைக்கின்றாயே?..
ஏனடா.. கண்ணா!.. இந்தப் பொல்லாத் தனம்?..

அதைச் செவியுற்ற
உள்ளங்கவர் கள்வனின் உதடுகளில் 
மந்தகாசப் புன்னகை மலர்ந்தது..

மெல்லிய குரலில் சொன்னான்..

நான் சுமைகளை இறக்கி வைப்பவன்!..

கோபிகையின் உள்ளமும் உணர்வுகளும்
பூக்களாகச் சரிந்தன
புண்ணியனின் திருவடிகளில்...
***
நன்றி - கேசவ் ஜி
இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி..

அவனன்றி ஆவதொன்றும் இல்லை..
ஆதியும் அவனே.. அந்தமும் அவனே!..

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
***  

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

தருமமிகு சென்னை

சென்ற ஆண்டில் இதே நாளில் -

சென்னையின் ஏரி குளங்களைத் திருடிச் சென்றது யாராக இருக்கும்?..

என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது - நமது தளத்தில்!..

திருடிச் சென்றவர் யாரென்று என்று இன்று வரை தெரியவில்லை..

ஆனால்,

ஏரி குளங்கள் திருடப்பட்டதால் -

சென்னை அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை..

அந்த வேதனையிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டெழுந்து 
இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகின்றது..

ஸ்ரீ கபாலீஸ்வரம் - திருமயிலை
சென்னைக்கு இன்று வயது 377!.. 

தருமமிகு சென்னை என்று வாயாரப் புகழ்ந்தவர் வள்ளலார் ஸ்வாமிகள்!..

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி இளைத்த உத்தமர் வள்ளலார்..

அத்தகைய புண்ணியர் - சில காலம் வாழ்ந்திருந்த திருநகரம் சென்னை!..

சென்னையில் அறச்செயல்கள் ஓங்கி வளர்ந்ததைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்ததனாலேயே - 

மனங்குளிர்ந்து அவ்வண்ணம் பாடியிருக்கின்றார்..

அன்றைக்கு அவ்விதம் பாடி மகிழ்ந்த வள்ளலார் ஸ்வாமிகள் 
இன்றைக்கு இருந்திருந்தால்!?..

சென்னையின் நிலையைக் கண்டு எவ்விதம் பாடியிருப்பார்!?..

St. மேரீஸ் சர்ச் - 1680
வாலாஜா மசூதி, திருவல்லிக்கேணி - 1795
சென்னை 1915
சென்னை 1930
சென்னை 1947
சென்னை என்று உருவாகும் முன்பே - மற்ற பகுதிகள் முழுதும் 
ஏரி குளங்களால் நிறைந்து விளங்கியிருக்கின்றன..

அடையாற்றிலும் கூவம் நதியிலும் மக்கள் மூழ்கிக் குளித்திருக்கின்றனர்..

கால ஓட்டத்தால் நதிகளின் ஓட்டம் மாறுதலுக்குள்ளாகியது..

அடையாறும் கூவமும் மக்களால் மிகக் கொடுமையான முறையில் பாழடிக்கப்பட்டது..

அடுத்தடுத்த காலகட்டத்தில் -

நதியின் மாசுகளை நீக்குவதாகச் சொல்லி 
காசு பணம் பார்த்தார்களேயன்றி
நதியும் கரைகளும் சீரமைக்கப்படவேயில்லை..

நதிக்கரையில் புகழ் கொண்டு வாழ்ந்த நாகரிகம் நம்முடையது... 
அந்த நதிக்கரைகளை நாசமாக்கிய பெருமையும் நம்முடையதே...

மனம் கறுத்துப் போன மனிதர்களால் 
கூவமும் அடையாறும் சிறுத்துப் போயின...

விளைவு!?..

விடாது பெய்த அடைமழையினை தாங்கிக் கொள்ள இயலவில்லை..
பெருக்கெடுத்து ஓடிய நீரினை தன்னுள் வாங்கிக் கொள்ள இயலவில்லை..





கடற்காதலனுடன் கைகோர்த்துக் கொள்ள முடியாதபடிக்கு 
ஏற்படுத்தப்பட்ட தடைகளால் மனம் தவித்த நதிக் கன்னியர் -
கொந்தளித்து எழுந்து இற்றுப் போயிருந்த கரைகளைத் துவம்சம் செய்தனர்..

நீர் மேலாண்மை என்பது ஏட்டுச் சுரைக்காய் என்றாகி விட - 
கடந்த மழைக்காலத்தில் - தமிழகம் தண்ணீரில் தவித்தது..

அதிலும் ஒருபடி மேலாக - 
சென்னைப் பெருநகர் அதிகமாகவே தடுமாறித் தத்தளித்தது...

காரணம் -

நீதிநெறி எனும் தடம் மாறியதால்!..
தெளிந்தோடிய தண்ணீரின் தடம் அழித்ததால்!..

சென்னையின் கண்ணீரைக் கொண்டு - 
அரசும் மக்களும் பாடம் கற்றுக் கொண்டார்களா?.. 
- என்பது வருகின்ற மழை நாட்களில் தெரிந்து விடும்..



சென்னையில் மழைக்காலம் சற்றே கஷ்டத்திற்கு உரியது என்றாலும்
இத்தகைய கஷ்டம் யாரும் காணாதது..

தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கரங்கள் நீண்டு 
ஆங்கிருந்த மக்களின் துன்பத்தைத் துடைத்தன..

மனித நேயம் மலர்ந்த நாட்கள் அவை..

அந்த மனிதநேயம் என்றென்றும் மலர்ந்திருக்க வேண்டும் என்பதே ஆவல்!..

பெருவெள்ளத்தின் துயரத்தினுள்ளுளேயும் 
தமக்குள்ளேயே அன்புக் கரம் நீட்டி 
ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக் கொண்ட 
பெருமையை நினைக்கும் அதே வேளையில் -

மக்கள் புழக்கம் உள்ள நடைமேடையில் 
கதறக் கதற இளம் பெண் வெட்டிச் சாய்க்கப்பட்டபோது 
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததையும் மறக்க இயலவில்லை...




எம்.ஜி.ஆர். நினைவிடம்
அப்படி இப்படி என்று, ஒருசில குறைகள் இருந்தாலும் -
பலநூறு நிறைகளைத் தன்னுடன் கொண்டது - சென்னை..

சென்னை உருவாகிய இந்த நாளில் -
சிங்காரச் சென்னையின் சில காட்சிகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..


விவேகானந்தர் இல்லம்
வள்ளுவர் கோட்டம்
மெரீனா


தமிழகத்தின் மக்களைத் தம்முடன் அரவணைத்துக் கொள்ளும் 
சென்னை மாநகரை நோக்கி தற்சமயம் - 
பாரதத்தின் எல்லா மாநிலத்து மக்களும்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர்..

இது - நல்லதற்கா?.. கெட்டதற்கா?.. 
விடை சரியாகத் தெரியவில்லை...



சென்னை - தன்னைத் தானே காத்துக் கொள்ளும்..

எனினும், 
சென்னையைக் காப்பதிலும் அதற்குப் புகழ் சேர்ப்பதிலும்
நமக்கும் பங்கு உண்டு.. 

அந்த வகையில் - நாமும் வாழ்த்துவோம்!..

வாழ்க சென்னை.. 
வளர்க சென்னை!.. 
***   

சனி, ஆகஸ்ட் 20, 2016

வெற்றி விழைக..

ஒலிம்பிக்..

பண்டைய கிரேக்கத்தில் எப்போதிருந்து இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன என்பது சரியாகத் தெரியவில்லை..

அப்போது இடம்பெற்றவை மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப்பந்தயம் எனும் தடகள விளையாட்டுகளே..

பின்னர், கிமு 776 வாக்கில் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ஓடுதலுடன் பாய்தல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவைகளும் சேர்ந்து கொண்டன..

கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடத்தப்பட்டதாலேயே ஒலிம்பிக் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது..

அவ்வப்போது தடை ஏற்பட்டாலும் பொதுவாக நான்காண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன..

புகழ் பெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் திறமையாளர்கள் வெற்றி பெற்று பதக்கம் வெல்வது தான் லட்சியம் என்றிருந்தாலும் -

போட்டிகளில் கலந்து கொள்வதே பெருமைக்குரிய விஷயம்..


இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நிகழும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய வீரர்கள் வீராங்கனைகள் என,

118 பேர் - பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ சென்றுள்ளனர்..
விளையாட்டுஆடவர்பெண்கள்மொத்தம்போட்டிகள்
வில்வித்தை1343
தடகள விளையாட்டு17173419
இறகுப்பந்தாட்டம்3474
குத்துச் சண்டை3033
வளைதடிப் பந்தாட்டம்1616322
குழிப்பந்தாட்டம்2132
சீருடற்பயிற்சிகள்0111
யுடோ1011
துடுப்பு படகோட்டம்1011
குறி பார்த்துச் சுடுதல்931211
நீச்சற் போட்டி1122
மேசைப்பந்தாட்டம்2242
டென்னிசு2243
பாரம் தூக்குதல்1122
மற்போர்5387
மொத்தம்645411868

மேலும் கீழுமாக உள்ள இரண்டு பட்டியல்களும்
விக்கிபீடியாவில் இருந்து பெறப்பட்டவை..

இரண்டு பட்டியல்களுக்கிடையே -
மற்போர் (Wrestling) பிரிவில் வேறுபாடு இருப்பதைக் காணலாம்..
SportsMenWomenTotalEvents
Archery1343
Athletics17173419
Badminton3474
Boxing3033
Field hockey1616322
Golf2132
Gymnastics0115[2]
Judo1011
Rowing1011
Shooting931211
Swimming1122
Table tennis2242
Tennis2243
Weightlifting1122
Wrestling4377
Total635411767


சில நாட்களாக பாரதம் முழுவதும் மிக ஆர்வமுடன் காத்துக் கிடக்கின்றது..

சாய்னா நெஹ்வால்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால்..

ரியோ ஒலிம்பிக் பயிற்சியின் போது முழங்கால் மூட்டில் வீக்கம் ஏற்பட்டது.. 
அதன் விளைவாக ஏதொன்றும் சாதிக்க இயலவில்லை..
தொடக்க சுற்றிலேயே சாய்னா வெளியேறினார்..

சாய்னா நேஹ்வால் - விரைவில் நலம்பெற வேண்டும்.. 

எதிர்வரும் காலங்களில் சிறப்பாக விளையாடி 
நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துவோம்.. 
*** 

தீபா கர்மாகர்
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டாலும் அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது பெருமைக்குரியது..

நான்கு வகையான போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 51.665 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றார்.


இந்திய ஒலிம்பிக் (ஜிம்னாஸ்டிக்) வரலாற்றில் வால்ட் போட்டியில் முதலாவதாகப் பங்கேற்றவர் எனும் பெருமையைப் பெற்றிருக்கின்றார்..

இந்தப் பிரிவிற்குள் 52 ஆண்டுகளுக்குப் பின் - இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையும் அவருடையதே!..

தான் - பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே,
இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளார் - தீபா..


இறுதிச் சுற்றில் வெங்கலம் வென்ற ஸ்விஸ் நாட்டின் வீராங்கனை ஜியுலியா பெற்ற புள்ளிகள் 15.216..

தீபா கர்மாகர் பெற்ற புள்ளிகள் - 15.066

நூலிழையில் வெங்கலப் பதக்கம் கைதவறிப் போனது..

ஆனாலும், அவரது சாதனை மகத்தானது.. சிறப்பானது.. 

அடுத்து வரும் நாட்களில் -
தீபா கர்மாகர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி 
தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பெய்த வாழ்த்துவோம்..
***

ஆகஸ்ட் 17..

மற்போர் வீராங்கனை சாக்ஷி மாலிக்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கென முதல் பதக்கத்தை வென்றெடுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்..

மற்போர் பிரிவில் வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்..

சாக்ஷி மாலிக் - மகளிருக்கான (58 Kg) காலிறுதிப் போட்டியில்
ரஷ்யாவின் வெலெரியாவிடம் தோல்வி கண்டார்..

ஆனாலும், ரெபிசேஜ் எனும் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு சாக்ஷிக்குக் கிட்டியது..

தொடக்கத்தில் போட்டி மிகக்கடுமை.. சாக்ஷிக்கு சாதகமாக அமையவில்லை..

ஆயினும்,

கடைசி 15 நிமிடங்களில் நிலைமை தலைகீழானது..




கிர்கிஸ்தானைச் சேர்ந்த டைனி பெகோவாவை வீழ்த்தி
வெங்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்..

அசாத்திய திறமையுடைய சாக்ஷி மாலிக்-
எதிர்வரும் நாட்களில் மேலும் 
பல சிறப்புகளைப் பெறுதற்கு வாழ்த்துவோம்....
***

2013ல் நடந்த பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் - இந்தியாவுக்கான தங்கப் பதக்கத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் - என்பதுடன்,

பல சாதனைகளுக்கும் உரியவர் - பேட்மின்டன் வீராங்கனை சிந்து..

பேட்மிண்டன் வீராங்கனை சிந்து
சர்வதேச தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருப்பவர்..

முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினைச் சேர்ந்த 
கரோலினா மரியாவை எதிர்த்து விளையாடி -
வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கின்றார்..

முதல் தகுதிச் சுற்றில் கனடாவின் மிஷெல் லி யையும்
அடுத்து - ஹங்கேரியின் லாரா சரோசி யையும் வென்றார்..

முன் காலிறுதியில் - தைபேயின் தாய் சு யிங் 
காலிறுதியில் - சீனாவின் வாங் யி ஹான்
அரையிறுதியில் ஜப்பானின் நொ சோமி ஆகியோரை வீழ்த்தினார்..

பாரதம் முழுதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது..

தங்கமா!.. வெள்ளியா?..

ஆயிரமாயிரம் விழிகள் ஆவலுடன் காத்திருந்தன..




வெற்றியின் மகிழ்வில் சிந்து - கரோலினா
இறுதிச் சுற்றின் -

முதல் செட்டில் (21/19) என, கரோலினா வை வென்றார் - சிந்து..

இதனால் அதிர்ச்சியடைந்த கரோலினா அதிரடியாக விளையாடினார்..

ஆட்டத்தின் முடிவில் -
12/21 மற்றும் 15/21 என்ற கணக்கில் சிந்துவின் வெற்றி வாய்ப்பு நழுவியது...

அபாரமாக அடித்து விளையாடி - 
சிந்து வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தையே 
தங்கமெனக் கொண்டாடி மகிழ்கின்றனர் - ஆரவாரத்துடன்..


சிந்து மேலும் பல வெற்றிப் பதக்கங்களைப் பெற்று
சிறப்புற வேண்டும் என்று வாழ்த்துவோம்... 
*** 


வெற்றி வீராங்கனைகளான -
சாய்னா நெஹ்வால், தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக், சிந்து - 
ஆகிய, எவராயினும் அவர்களது அசாத்திய திறமையும் 
கடின உழைப்பும் முழுமையான அர்ப்பணிப்பும் புகழுக்குரியன..
***

சின்னஞ்சிறிய நாடுகள் எல்லாம் நிறையவே பதக்கங்களைப் பெற்றிருக்கின்றன..

உலக மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கும்
நாம் பதக்கப் பட்டியலில் எந்த இடம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..

காமன்வெல்த் நாடுகளுக்கிடையே
நடக்கும் போட்டிகளில் பதக்கங்களை வாரிக் குவிக்கும்
நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பிரகாசிக்க முடிவதில்லையே?.. அது ஏன்?.. - என்ற மனக்குறை அனைவரிடமும் உண்டு..

குறைகள் திறமையாளர்களிடத்தில் இல்லை!.. 
- என்பது மட்டும் உண்மை..

வருங்காலத்தில் மேலும், 
பல திறமையாளர்கள் உருவாக வேண்டும்..

அவர்களால் பாரதமும் 
பற்பல சிறப்புகளை எய்த வேண்டும்..   

வாழ்க பாரதம்
வளர்க பாரதம்
ஜய் ஹிந்த்.. 
***