நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2016

திருநெடுங்களம்

நினைத்து எழுவார் தம் இடர்களைக் களைகின்ற
இறைவன் உறையும் தொன்மையான திருத்தலம் - திருநெடுங்களம்.

அருள்மிகு நித்ய சுந்தரர்
இறைவன் - ஸ்ரீ நித்ய சுந்தரர்.
அம்பிகை - மங்கலநாயகி, ஒப்பிலாநாயகி.
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்..

அருள்மிகு ஒப்பிலா நாயகி
அம்பிகை தவம் செய்த திருத்தலங்களுள் திருநெடுங்களமும் ஒன்று..

இறைவன் கள்ள உருவில் தோன்றி தவஞ்செய்த அம்பிகையின் - கைத்தலம் பற்றினன். 

ஆரென்று அறியாத அன்னை அச்சமுற்று ஓடி ஒளிந்து கொண்டனள். 

பின்னர் ஐயன் ஆனந்தத்துடன் அருள் வடிவங்காட்டி அம்பிகையை ஆட்கொண்டருளினன் - என்பது தலவரலாறு. 


மூலத்தானத்தில் சிவலிங்கத் திருமேனியுடன் அம்பிகையும் அருவமாக உறைவதாக ஐதீகம். எனவே மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து காட்சியளிக்கின்றன.    

இத்திருத்தலத்தில் -

சித்தாசனத்தில் அமர்ந்து, மானும் மழுவும் தாங்கி, 
சின்முத்திரையுடன்  திருநீற்றுப் பெட்டகம் ஏந்திய வண்ணம்
இடக்காலைச் சுற்றி யோக பட்டம் அணிந்த திருக்கோலத்துடன்
ஈசன் - யோக தட்சிணாமூர்த்தி என விளங்குகின்றனர்.   

அருணகிரி நாதர் பாடிப் பரவிய திருமுருகன் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் திருச்சுற்றில் திகழ்கின்றனன். 

அகத்தியர் வணங்கிய திருத்தலம். 
வங்கிய சோழன் பூஜித்த தலம். 

திருஞானசம்பந்தர் தரிசித்த திருத்தலம்...

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகத்தின் திருப்பாடல் ஒவ்வொன்றிலும் இடர் களையாய்!.. -  என  விண்ணப்பித்துக் கொண்டிருப்பதால் - 
இடர் களையும் திருப்பதிகம் என்ற சிறப்புடையது..


திருஞானசம்பந்தர் அருளிய - 
இடர் களையும் திருப்பதிகம் 
முதல் திருமுறை. திருப்பதிக எண் - 52 .

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுஉனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால்  உயர்ந்த
நிறையுடையார்  இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (1)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! வேதங்களைத் தன்னுடைமையாய்க் கொண்ட வேதியனே, புலியின் தோலினை ஆடை என அணிந்த தூயவனே, அழகாய் முடித்த நீள்சடையின் மேல் வளர் பிறையினைச் சூடியவனே - என்றெல்லாம் உன்னைப் புகழ்ந்து வாழ்த்தினால் குறையுடையார் குற்றத்தை மனதில் கொள்ளாமல் - அவர்களுக்கு அருள் புரியும் பெருமானே!..

உன்னை வணங்கும் கொள்கையினால் உயர்ந்து நிறையுடையார் ஆகிய அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!.. 

கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடல்ஆடல் பேணிஇராப் பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (2) 

திருநெடுங்களம் மேவிய இறைவனே!... வெண்ணிற அலைகள் புரளும் பெருங்கடலில் ஆரவாரத்துடன்  பொங்கி எழுந்த நஞ்சினை - சின்னஞ்சிறு தினையின் அளவாக்கி, அதையும் கண்டத்தில் நிறுத்தி நீலகண்டனாக அருளிய தேவதேவனே!.. 

உன்னை மனத்தகத்தில் நிறுத்து உன் புகழினை விரும்பி - பாடியும் ஆடியும் அல்லும் பகலும் உன்னையே தியானித்து வாழ்ந்து வரும் அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற்று உதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (3)

திருநெடுங்களம் மேவிய இறைவனே!.. நிமலா!... நீயே சரண்!.. - என, நின் திருவடிகளை வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்கு வந்த வலிய கூற்றுவனை - 'என் அடியவன் உயிரைக் கவராதே!.. - என்று உதைத்தருளிய பெருமானே!.. 

உன் பொற்றிருவடிகளை வழிபடுவதற்காக நறுமணம் மிக்க மலர்களையும் திருக்குடங்களில் தூய நீரையும் நாளும் சுமந்து வரும் அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

மலைபுரிந்த மன்னவன்தன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும்  அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்  தாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (4)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! மலையரசனின் திருமகளைத் திரு மேனியில் ஓர்பாதியாகக் கொண்டு மகிழ்பவனே!..  அலைபுரளும் கங்கையை விரிந்த சடையினுள் கொண்ட திருஆரூரனே!.. கபாலத்தில் பலியேற்று மகிழும் தலைவனே!.. 

உனது திருவடி நிழலின் கீழ் நின்று அநவரத தியானத்தால் உன்னை மறவாத அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்  தாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (5)

திருநெடுங்களம் மேவிய இறைவனே!.. நற்குணமுடையவர்களும், தவநிலை தாங்கியவர்களும் - பலருடைய இல்லங்களிலும் பலி ஏற்கும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களைப் பாடி உன் திருவடிகளைத் தொழுது வணங்குகின்றனர். கரை கடந்த வெள்ளம் எனப் பொங்கிப் பெருகி வரும் அன்பினால்  தலைவனாகிய -

உனது திருவடி நிழலை நீங்கி நிற்க இயலாதவராகிய அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

விருத்தனாகிப் பாலனாகி வேதம்  ஓர்நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.. (6)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! வழிபடும் அடியார் பொருட்டு அவரவர் தன்மைக்கேற்ப விருத்தராக வேடந்தாங்கியும், பாலனாக இளமை வடிவங் கொண்டும் அருள் புரிந்து ஆட்கொள்பவனே! நான்கு வேதங்களையும்   உணர்ந்த தலைவனே! நானிலம் வாழும் பொருட்டு நங்கை எனும் கங்கையை நறுமணம் கமழும் சடையின்மிசை மறைத்து வைத்துள்ள பெருமானே! கலைஞானங்களின் முதற் காரணனாகவும் மெய்ஞானங்களின் நிறைந்த பொருளானவனாகவும் திகழ்பவனே!.. 

உன் இணையடிகளின் புகழினை எல்லோரும் உணரும் வண்ணம் -
தாம் அறிந்த ஆடலாலும் பாடலாலும் பரவிப் பணிந்து - நாளும் பணி செய்து வாழ்கின்ற அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டிஓர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம்எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தம் ஈதென்று  எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (7)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்ட பெருமானே! அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டி அமைத்த அம்பினால் - அன்பருடனும் அடியாருடனும் பகை கொண்டு மாறுபாடுற்று திரிந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்துப் பொடியாக்கிய மன்னவனே!   இடபக்கொடி உடைய  ஏந்தலே!.. 

இதுவே மணம் நிறைந்த சந்தனம் என்று,
எம்பெருமான் அணிந்த திருநீற்றை விரும்பி அணிந்து மகிழும்
அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற  அரக்கர்கோனை  அருவரைக்கீழ்  அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால்  ஏத்திஇராப் பகலும்
நின்றுநைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (8)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! காற்றில் ஆடும் கொடிகள் விளங்கும் மதில்களால் சூழப்பட்டு குன்றின்மேல் திகழ்வதாகிய இலங்கையின் அரக்கர் கோன் என்ற செருக்குடன் - திருக்கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயற்சித்த இராவணனை அம்மலையின் கீழேயே அல்லலுறும்படி கால் விரலால் அடர்த்த  பெருமானே! 

இத்தகைய நின் பெருமையினைப் புகழ்ந்தும் வாய்மொழியாகிய தாய்மொழி கொண்டு - நல்ல தோத்திரங்களால் போற்றி,

இரவும் பகலும் உன்னையே நினைத்து நெஞ்சம் உருகி மனம் கனியும் அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

வேழவெண்கொம்பு  ஒசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழஎங்கும் நேட ஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம்பு  அணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியி
நீழல்வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (9)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! கஞ்சனின் ஆணைப்படி தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் தந்தங்களை ஒடித்த கண்ணபிரானாகிய  திருமாலும், புகழ்  விளங்கும் நான்முகனும், தங்களைச் சுற்றியுள்ள இடமெங்கும் தேவரீரைத் தேடி நின்றபோது இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்ற ஜோதியனே! பன்றியின் கொம்பினை மார்பில் அணிகலனாக அணிந்த பெருமானே!..

உனது பொன்னடி நீழலையே எண்ணி வாழ்கின்ற அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவம்  ஒன்று அறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.. (10)

திருநெடுங்களம் மேவிய இறைவனே! உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணர்ந்து அறியாதவர்களாகி - தாம் கைக்கொண்ட தவநிலைக்கு சிறிதும் பொருந்தாமல் கொடுஞ்சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு உண்மைப் பொருள் இல்லாது ஒழுகும் சமண, சாக்கியர்களை விட்டு விலகி, அழியாப் புகழுடைய வேதங்களாலும், தோத்திரங்களாலும் உன்னைப் பரவி -

உனது திருவடித் தாமரைகளை நெஞ்சில் வைத்து வாழ்கின்ற அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக!..

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.. (11)

மேன்மேலும் வளர்ந்து பொலியும் சடைமுடியுடன் திகழும் பெருமான் மேவிய  திருநெடுங்களத்தை - மூத்தோர் வாழும் பெரிய வீதிகளைக் கொண்ட சிரபுரம் எனும் சீர்காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றி வணங்கி,  பனுவல் மாலை எனப் பாடிய,  

திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் நலங்கொண்டு உணர்ந்து -
எம்பெருமானை வழிபட வல்லவர்களின் பாவங்கள் விலகும் என்பது உறுதியே!..

(மேன்மைமிகு தருமபுர ஆதீனம் அருளிய - பன்னிரு திருமுறை - பாட்டும் பொருளும் - உரையை அனுசரித்து எழுதப் பெற்றது.) 

***

திருநெடுங்களம் - சோழநாட்டின் காவிரி தென்கரையில் உள்ள திருத்தலம். திருஎறும்பூருக்குக் கிழக்கே உள்ளது. 

தஞ்சை - திருச்சி பேருந்து வழியில் துவாக்குடி வந்து 
அங்கிருந்து வடக்கே - மாங்காவனம் வழித்தடத்தில் செல்ல வேண்டும். 

திருச்சி மாநகரிலிருந்து பேருந்து வசதிகள்  உள்ளன.

அனைத்து விசேஷங்களும் பிரதோஷ வழிபாடுகளும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன.

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலம் - திருநெடுங்களம்.. 


திருக்கோயிலின் கோபுர வாசலில் ஸ்ரீ கருப்பஸ்வாமியைக் கண்டதுமே நம் கெட்ட வினைகள் ஓடிப்போகும்.

வரமருளும் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் - ஸ்ரீதேவி, பூதேவியருடன்  திருச்சுற்றில் விளங்குகின்றார்.

தவிரவும் - திருச்சுற்றில்,

ஸ்ரீ ஜேஷ்டா தேவி (Hindu Spiritual Articles)
நம் கஷ்டங்களைக் கரைத்தருள, அன்னை ஸ்ரீ ஜேஷ்டா தேவி தன் மக்களுடன் கனிவுடன் காத்திருக்கின்றாள். 

ஸ்ரீ ஜேஷ்டா தேவி நம் வணக்கத்துக்குரியவள். 
தேவியின் வலப்புறம் மகன் விருஷபன்..
இடப்புறம் மகள் நமனை..

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பெருமையை நமக்கு உணர்த்துபவள் - ..

சோம்பல் இல்லாது சுறுசுறுப்பாக இயங்கும் வல்லமையைத் தருபவள்!.  

பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திரப் பிரச்னைகளை -
ஒரு தாயைப் போல பரிவுடன் தீர்த்து வைப்பவள் ஸ்ரீ ஜேஷ்டா தேவியே!..

ஸ்ரீ ஜேஷ்டாதேவியின் அன்புக்கு நாம் பாத்திரராகி விட்டால் 
எதிர்பாராத விபத்துக்களில் இருந்து நம்மைக் காத்தருளும் பொறுப்பை ஸ்ரீஜேஷ்டா தேவியே ஏற்றுக் கொள்கின்றாள் என்பது நமது பெரும்பேறு!...

நெய்விளக்கேற்றி வைத்து -
ஜேஷ்டாதேவி சந்நிதியின் முன் சற்று நேரம் அமர்ந்திருக்க

காற்றின் கையில் அகப்பட்ட தூசியாக -
நம் தொல்லைகள் தொலைந்து போயிருப்பதை உணரலாம்..

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னை எதுவாயினும் சரி. 
திருநெடுங்களம் சென்று வந்தால், திரும்பிப் பார்க்கும் பொழுதுக்குள் 
அந்தப் பிரச்னை நம்மை விட்டு  - வெகு தூரத்தில் இருக்கும்!..

இயன்றவரை இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.. 

எம்பெருமானுக்கு விபூதிக் காப்பு செய்து வழிபட்டு -
அந்த விபூதியையே பிரசாதமாக பெற்றுக் கொள்வது நலம் பயக்கும்..

திருநெடுங்களம் - 
மீண்டும் தரிசிக்கும்படியான உணர்வினை நல்கும் திருத்தலம்..

நின் அடியார் 
இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***  

10 கருத்துகள்:

  1. திருநெடுங்களம் - கேள்விப்படாத கோவில். திருச்சி அருகே என்பதால் அடுத்த பயணத்தில் சென்று வர முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. திருநெடுங்குளம் முதல் முறை கேள்விப்படுகிறேன் ஐயா...
    பாடல்கள் விளக்கத்துடன் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  3. திருநெடுங்களம் சென்று வந்திருக்கிறேன்..நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. முன்பு பார்த்து தரிசனம் செய்து இருக்கிறேன். நமக்கு கஷ்டங்கள் வரும் போது தேவார, திருவாசங்களை ஏடு சாற்றி பார்ப்பார்கள் எந்த திருமுறையில், எந்த பதிகம் வருகிறதோ அதை படித்தால் நம் துன்பங்கள் விலகும் என்று சொல்வார்கள். எனக்கு திருநெடுங்களம் பாடல் தான் வந்தது படித்து வருகிறேன்.

    இன்று உங்கள் தளத்திலும் படித்தேன், இடரை நீக்கி நலபயக்க வேண்டும் சிவபெருமான்.

    பாடலையும், அதற்கு விளக்கங்களையும் தந்தமைக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆழ்வார்கள் பாடிய திருத்தலங்களுக்கு திவ்விய க்ஷேத்திரங்கள் என்ற பெயர் இருப்பதுபோல் சைவப் பெரியோர்கள் பாடிய கோவில்களுக்கு பெயர் இருக்கிறதா

    பதிலளிநீக்கு
  6. திருச்சி திருவெறும்பூர் அருகே ஆண்டுகள் பல வசித்தாலும் திரு நெடுங்களம் அறியவில்லை

    பதிலளிநீக்கு
  7. அருமையான தலம் பற்றி அறிந்து கொண்டோம்..மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..