நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த வாரத்தில்
அன்புக்குரிய வல்லியமா,
அன்புக்குரிய கோமதிஅரசு,
அன்புக்குரிய கமலாஹரிஹரன்
ஆகியோரது
வலைத்தளங்களில்
கடிதங்கள் பல
மலர்ந்திருக்கின்றன..
அந்த வகையில் அப்போதே
மடல் ஒன்றினை
நானும் வரைந்தேன்..
வேறு சில இனிய பதிவுகளில்
கவனம் செலுத்தியது
இக்கவிதையை மேலும் மேலும்
செதுக்கியது - என,
வலைத் தள
அஞ்சலில் சேர்ப்பதற்குத்
தாமதமாகி விட்டது..
அஞ்சல் தாமதமாயினும்
அஞ்சல் என்று வருபவள்
அனைத்தையும் அறிவாள்...
இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன்,
பேச்சியம்மன், இசக்கியம்மன்,
பிடாரியம்மன்
முதலானோர் எங்களது
குலதெய்வக்கோயிலில்
விளங்குகின்றனர்..
ஸ்ரீ நாறும் பூ நாயகி
ஆவுடையாள் (கோமதி)
எனும் திருப்பெயர்கள்
எனது தாத்தா வாழ்ந்த ஊரில்
விளங்கும் அம்பிகையின்
திருப்பெயர்களாகும்...
அன்னைக்கு எழுதப்பட்ட
அந்த மடல்
இன்றைய பதிவில்!..
அம்மா உந்தன் அருள் நோக்கி
அடியேன் வரைந்திடும் கடிதம்..
அம்மா நீயும் இரங்கி வந்தால்
அடியேன் மடலுக்கும் புனிதம்..
நாயகி உந்தன் நல்லருளாலே
நானும் நலமே நாளும் நலமே
நலமே நலமாய் நின்றிருக்க
நற்றமிழ் மலரை நான் தொடுத்தேன்..
தாயே தமிழே தலைமகளே
தாள்மலர் பணிந்தேன் குலமகளே..
தண்மலர் தமிழ்மலர் தானெடுத்து
தாய் உன்னிடத்தில் நலம் கேட்டேன்..
அசுரர் நலத்தினைத் தீர்த்திட்ட
கூர்முனைச் சூலம் நலந்தானா..
நல்லவர் தம்மை வாழ்விக்கும்
அக்கினிக் கொழுந்தும் நலந்தானா..
வஞ்சகர் வலியைத் தீர்க்கின்ற
வாட்படை தானும் நலந்தானா..
கயவர் கூட்டக் கதை முடிக்கும்
பெருங் கதை அதுவும் நலந்தானா..
பேரிடி என்றே ஓசையிடும்
உடுக்கை யதுவும் நலந்தானா..
கொஞ்சு தமிழ்த் திரு ஓங்கார
சங்கு சக்கரம் நலந்தானா..
அரவுடன் பாசம் காபாலம்
ஐங்கணை அனைத்தும் நலந்தானா..
பொன்மணி கேடயம் ஈட்டியுடன்
கூர்வேல் அதுவும் நலந்தானா..
அணங்குகள் உந்தன் பரிவாரம்
அவைகளும் ஆங்கே நலந்தானா..
கோமகள் உன்னுடன் விளையாடும்
கோளரி அதுவும் நலந்தானா!..
அனைத்தும் நலமாய் விளங்கட்டும்
அவனியை நன்றாய் காக்கட்டும்..
ஆயினும் அம்மா எனக்கென்று
ஆசைகள் சொன்னேன் உனக்கின்று..
அம்மா உன் அருள் விழிகள்
ஆறுதலைக் காட்டாதா
அங்கும் இங்கும் விளையாடி
அடும் பகையை ஓட்டாதா..
அம்மா உன் புன்னகை தான்
அருள் நெறியைக் கூட்டாதா
அண்டி வரும் பிள்ளை மனம்
மகிழ்வதற்குத் தேற்றாதா..
அம்மா உன் கையிரண்டும்
வாரி என்னைச் சேர்க்காதா
வாட்டமுறும் என் அகத்தில்
வருங்கவலை தீர்க்காதா..
அம்மா உன் திருச்செவியில்
எந்தன் குறை கேட்காதா
என் மகனே.. மகனே.. என்று
செவ்விதழ்கள் மலராதா..
தஞ்சை மகா மண்டலத்தில்
தங்க மாரி ஆனவளே..
சஞ்சலத்தைத் தீர்த்தருளும்
சமயபுர சங்கரியே..
பத்ரகாளி என்றெழுந்து
பகை விரட்டும் அம்பிகையே..
அருள் சுரக்கும் ஆவுடையாளே
ஆதி சிவ நாயகியே..
பிரியமுடன் பிரம்ம சக்தி
என்று எங்கும் காப்பவளே
கை கொடுத்து வழி நடத்தி
நல்வினையில் சேர்ப்பவளே..
காத்து அருளும் தாயாகி
கனியமுதம் கொடுத்தவளே..
கோடி நலம் தானருளும்
கோமதியாய்ப் பொலிபவளே..
பேச்சி முத்து என்றே வந்து
பிரியமுடன் பேசுகின்றாய்..
இன்னல் தீர்த்து எந்தன் நெஞ்சில்
இசக்கி என்றே வசிக்கின்றாய்..
எங்கும் பிணி தீர்ப்பவளே
இளங்காளி பிடாரியம்மா..
பீடைகளைப் பிளந்தெறிந்து
பெருந்துணையாய் நிற்பவளே...
தங்க மலர்த் தாமரையில்
தான் பிறந்து வந்தவளே..
எங்கும் துயர் தீர்க்க என்று
சிங்கத்துடன் நின்றவளே..
மஞ்சள் முக மல்லிகையில்
செம்பவளக் குங்குமப்பூ
கொன்றை தவழ் வேணியனின்
மேனி திகழ் சண்பகப்பூ..
தங்க நிறத் தாமரையும்
தண்முல்லை மருக்கொழுந்து
தாழம்மடல் வாசத்துடன்
மகிழம்பூ தாய் உனக்கு..
நாறுங் குழல் நாயகியாள்
நாளும் நலம் சூடிடவே
பவளமல்லி வெட்சியுடன்
தனிநீலக் குவளைப் பூ..
ஸ்ரீ வடபத்ர காளி - தஞ்சை.. |
அம்மா உன் திருவடியில்
அணி மலர்கள் ஆயிரமாம்
பொன் மலராய் ஒளி சிந்தும்
அகல் விளக்கும் ஆயிரமாம்...
அம்மா உன் திருவடிகள்
என் கண்ணில் ஒளியாகும்...
அம்மா உன் திருவடியில்
என் சொல்லும் பூவாகும்!..
***
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்
ஃஃஃ