நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மழைச் சொல் அதனைத் தேடிய ஞான்று கண்ணிணை கண்ட விலையார் ஆரம்..
(வேறொன்றும் இல்லை..சங்கப் பாடல்களுக்குள் சுற்றித் திரிவதால் வந்த வினை!..)
முதற்கண் நன்றி:
நூலகம் - தமிழ் இணைய கல்விக் கழகம்..
தலையாலங்கானத்துச்
செரு வென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன்
வள்ளல் மன்னர்
சிறந்தோர் பகுதி:
ஆலம்பேரி சாத்தனார் பாடல்
அகநானூறு - 175.
பாலை
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்
5
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும் 'வினைமுடித்து
வருதும்' என்றனர் அன்றே தோழி!
10
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
15
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
மண் பயம் பூப்பப் பாஅய்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?..
சொற்பொருள்:
9 தோழி -
1-8. வீங்கு விளிம்புஉரீஇய - தமது தடித்த தோளின் விளிம்பினை உரசிய,
விசை அமை நோன் சிலை - வேகம் அமைந்த வலியவில்லில் வைத்து,
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் - இழுத்து விடும் அம்பு குறி தப்புதல் இல்லாத தறுகண்மையை உடைய மறவர்,
விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி - எய்யுந்தோறும் ஒலித்துச் செல்லும் கொடிய வாயினை உடைய அம்பு,
ஆறு செல்அம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின் - வழிச்செல்லும் புதியரது உயிர்கெடப் போக்குதலால்,
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் - பருந்து தன் கிளையினை அழைத்து மிக்க புலாலை உண்ணும்,
வெஞ்சுரம் இறந்த காதலர் - கொடிய சுரநெறியைக் கடந்து சென்ற நம் காதலர்,
நெஞ்சு உணர - தமது நெஞ்சு உணர,
அரிய வஞ்சினம் சொல்லியும் -
கடிய சூள் உரைத்தும்,
பல்மாண் தெரிவளை முன்கை பற்றியும் - பன்முறை ஆராய்ந்த வளையினையுடைய எனது முன் கையினைப் பற்றித் தலையளி செய்தும்;
10-18.
தண் பெயல் எழிலி - தண்ணிய மழையைப் பெய்யும் மேகம்,
கால்இயல் நெடு தேர் கைவண் செழியன் - காற்றுப் போல இயலும் நெடிய தேரினையும் கைவண்மையினையும்உடைய பாண்டியன் நெடுஞ்செழியன்,
ஆலங்கானத்து அமர்கடந்து உயர்த்த - தலையாலங்கானத்துப் போரை வென்று உயர்த்த,
வேலினும் பல் ஊழ் மின்னி - வேற்படைகளைக் காட்டில் பன்முறை மின்னி,
முரசு எனமா இரு விசும்பில் கடிஇடி பயிற்றி - கரிய பெரிய வானின்கண் (அவனது வென்று எறி) முரசம் எனக்கடிய இடியினைப் பலகாலும் தோற்றுவித்து,
நேர்கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் - நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழியை உடைய திருமாலின்,
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் - பகைவர் போர் ஒழிதற்குக் காரணம் ஆய மார்பினிடத்தே தங்கிய மாலை போல,
உருகெழு திருவில் தேஎத்துக் குலைஇ - பன்னிறம் வாய்ந்த அழகிய வில்லை அவ்விசும்பினிடத்தே வளைத்து,
மண்பயம் பூப்பப் பாஅய் - நிலம் பயனைத் தரப் பரவி,
தாழ்ந்த போழ்து - இறங்கிப் பெய்யுங் காலத்து;
8-9:
வினை முடித்து வருதும் என்றனர் அன்றே - தாம் செல்லும் வினையை முடித்துக் கொண்டு மீண்டும் வருவேம் என்றாரன்றோ?..
(அங்ஙனம் வந்திலரே ; என் செய்வல்!)
முடிபு :
வெஞ்சுரம் இறந்த (கொடுவழி கடந்த)
காதலர், வஞ்சினம் (சூளுரைத்து) சொல்லியும், முன்கை பற்றியும் தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்து வருதும் என்றனரே? (அங்ஙனம் வந்திலரே; என்செய்வல்!)
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது:
***
பாடல் விளக்கத்தின் ஒருங்கிணைப்பு உரையினை - என்னளவில் செய்து வழங்கியுள்ளேன்..
தோழி..
(எமது காதலர்) வீறு கொண்டு புடைத்த தோளின் விளிம்பினை உரசும்படி வேகம் பொருந்திய வலிய வில்லினை வைத்து,
அதில் கூரிய அம்பினைத் தொடுத்து தப்புதல் இல்லாதபடிக்கு நாணேற்றும் திறனுடைய வீரர் - எய்யுந்தோறும் ஒலித்துச் செல்லும் கொடிய கூர்முனை உடைய அம்பு,
வழிச் செல்லும் புதியவரது உயிரைப் போக்குதலால் விழுந்து கிடக்கும் சடலங்களின் மீது அமர்ந்து முடை நாற்ற ஊனினைத் தின்னும் கழுகுக் கூட்டங்கள் நிறைந்த கொடிய வழியினைக் கடந்து சென்றாரே!..
(அப்படிச் செல்லும் முன்)
பன்முறை ஆராய்ந்த பின்னர் செய்யப்பட்ட வளைகளை உடைய எனது முன் கையைப் பற்றிக் கொண்டு
தமது நெஞ்சறிய சூளுரை செய்தாரே..
காற்றைப் போல இயங்கும் நெடிய தேரினையும் கை வண்மையினையும் உடைய பாண்டியன் நெடுஞ்செழியன்,
தலையாலங்கானத்துப் போரில் வென்று உயர்த்திய வேற்படையைக் காட்டிலும் பன்முறை மின்னல்களை தோற்றுவித்து (அத்துடன்),
அவனது வெற்றி முரசைப் போல் - அகன்ற வானில் இடி ஓசையினை ஓயாமல் முழக்கியபடி,
பகைவர் ஒழிவதற்குக் காரணமாகிய (அழகிய
ஒளிக் கதிர்களைக் கொண்ட) சக்கரத்தினை உடைய திருமாலின், வீரம் செறிந்த மார்பில் அழகாக விளங்கும்
(பல நிறப் பூக்களுடன் கூடிய) மாலையைப் போல,
வில்லினை, அகன்ற வானிடத்தே வளைத்துக் காட்டி,
நிலத்திற்குப் பயனைத் தருவதற்காக நிறைந்த நீருடன் கரிய நிறங் கொண்டு இறங்கிய மேகங்கள் - மழையைப் பெய்விக்குங் காலத்தில் -
தாம் செல்லும் வினையை முடித்துக் கொண்டு ' மீண்டும் வருவேன்.. ' - என்றார் அன்றோ?..
(அங்ஙனம் வந்திலரே..என் செய்வேன்!..) என்று வருந்திய தலைவிக்கு,
நீர் கொண்ட கரிய மேகங்கள் மின்னலுடன் இடி முழக்கி மழையாகப் பெய்து அகன்ற வானில் வில்லினைக் காட்டும் கார்காலம் இதுதான்.. காதலர் வந்து விடுவார்.. கவலற்க.. - என்று மறுமொழி இறுத்தனள் தோழி..
இப்பாடலில்
திருவில் தேஎத்து - என்று வானவில் சொல்லப்பட்டிருப்பதையும் உணர்ந்து மகிழ்க..
பாடலின் வரிகளுக்கு அன்றைய இலக்கணப்படி முன் பின்னாக இருந்த உரை மொழியை சீராக அமைத்து பொருள் மாறுபாடு ஏற்பட்டு விடாதபடிக்கு கவனத்துடன் செய்துள்ளேன்..
இப்பதிவில்
நிறைகளைக் கொள்ளுக..
குறைகளைச் சொல்லுக..
மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
சிறப்பான இலக்கிய பதிவு. இங்கு தொடை என்பது அம்பு என்கிற பொருளில் வருகிறது. அதே போல வானவிலுக்குக்கும் வேறு வார்த்தையா? அந்தக் காலத்தில் படிக்கையில் இது எளிய தமிழாய், பேச்சு வழக்காய் இருந்திருக்கும். இப்போது பொருள் கொள்வதே சிரமமாயிருக்கிறது. கடந்து வெகுதூரம் வந்து விட்டோம்.
பதிலளிநீக்குசிலசமயம் தோன்றும். இது மாதிரி பாடல்களுக்கு வெளிப்படையாக ஒரு பொருளும், மறைபொருள் ஒன்றும் இருக்குமென..
பதிலளிநீக்குஇணைத்திருக்கும் ஓவியங்களும் வெகு அருமை. மாருதி!
பதிலளிநீக்குஓவியங்கள் அருமை. சங்கத் தபிழுக்குள் மூழ்கிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குபெரும் இலக்கிய வரலாறு கொண்டது நம் தமிழ் மொழி
சட் என்று ஜீவி சார் பதிவுக்குள் நுழைந்துவிட்ட ஃபீலிங்.
போற்றுதலுக்கு உரிய இலக்கியப் பதிவு
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குபாடல் விளக்கம் அருமை. படங்களும் துணை போகின்றன.
பதிலளிநீக்குஅருமையான வார்த்தை கோர்வையாக விளக்கம் நன்று.
பதிலளிநீக்குபாடல் பகிர்வும், விளக்கமும் அருமை.
பதிலளிநீக்குதேடல் தொடரட்டும். மாருதி ஓவியத்திற்கு முன்பு வெங்கட் பதிவில் கவிதை கேட்டு இருந்தது நினைவு வந்தது.
ஆமாம் கோமதிக்கா எனக்கும் நினைவு இருக்கு வெங்கட்ஜி தளத்தில் இப்படத்திற்குக் கவிதை கேட்டு இருந்த நினைவு
நீக்குகீதா
பாறு - பருந்து, படுமுடை - புலால், தொடை - அம்பு, திருவில் தேஏத்து - வானவில்.....பொருள் எல்லாம் அறியும் போது பள்ளி மற்றும் கல்லூரியில் ஆர்வமுடன் கற்ற தமிழ் வகுப்பு நினைவுக்கு வருகிறது. அத்தனை ஆர்வம் அப்போது, இலக்கணச் சுத்தமாகக் கவிதையும் எழுதியதுண்டு...எல்லாம் போயே போச் என்று வருந்திய காலம் அதன் பின்...
பதிலளிநீக்குஅருமையான விளக்கம் அழகான பாடலுக்கு. படங்கள் பொருத்தமாகச்சிறப்பாக இருக்கின்றன.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சங்கத்தமிழ் பாடலும், அதன் விளக்கமும் வெகு அருமை. படிக்கவே மிகவும் ரசனையாக உள்ளது. தங்களது முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.