நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் நீங்கிட வேண்டும்..
***
2015 நவம்பர் கடைசி நாட்கள்..
சென்னையில் அன்று வான் பொழிந்த நீர் சாக்கடை நீராகி தேங்கி நின்றதற்கும்
இன்று (2021 நவம்பர்) அதே மாதிரி தேங்கி நிற்பதற்கும் ஒரே காரணம் -
மழை.. மழை.. மழை மட்டுமே!.. வேறெதுவும் இல்லை!..
இந்தப் பதிவு 2015 டிசம்பர் முதல் தேதி வெளியிடப்பட்டதாகும்..
ஃஃஃ
ஆடுமாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா..
புள்ளகுட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா!..இது, தஞ்சை மண்ணில் வழங்கி வரும் சொல்வழக்கு!..
கடந்த ஐப்பசி மாதத்தின் கடைசி நாட்களில் -
தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தபோது -
தஞ்சை திருச்சி மாவட்டங்களில் பரவலான மழைதான்!..
தென் மாவட்டங்கள் மழையினால் திக்குமுக்காடிய போது கூட - தஞ்சை வட்டாரங்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன..
ஸ்ரீ வருணன் - தஞ்சை பெரியகோயில் |
விடியற்காலையில் மழை பெய்யத் தொடங்கிற்று.. சற்று நேரத்தில் கனமழையாகி - இரவு வரை பெய்து கொண்டிருந்தது..
திங்களன்றும் - விடாதே.. பிடி!.. - என்று விரட்டிக் கொண்டு வந்ததால் - நேற்று இரவும் நல்ல மழை..
இதனால், வேளாண் நிலங்கள் - மழைநீரில் மூழ்கியுள்ளன..
துரத்திக் கொண்டுவரும் கருமேகங்களைக் கண்டு மக்கள் திகைத்து நிற்கின்றனர்..
இவ்வேளையில்,
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்து வருகின்றது.. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் - அடுத்த ஐந்து தினங்களுக்கு கனமழை பெய்யும்!..
- என, வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது..
வங்கக்கடலின் தென்மேற்காக - உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளதாம்..
தமிழகத்தில் இயல்பு நிலைக்கு மேலாக, அதிக மழை பெய்துள்ள நிலையில் - மேலும், ஐந்து நாட்களுக்கு கனமழை - என, எதிர்பார்க்கப்படுவதால் -
கல்வி நிலையங்களுக்கு - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே பெய்த தொடர்மழை - நமக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்துள்ளது..
(கீழுள்ள படங்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை)
இதுவும் போதாதென்று, சென்னையின் சாலைகளில் - திடீரென பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளதாக செய்திகள்..
அதிக மழையின்போது - மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து - இறுக்கம் குறைவான பகுதிகளில் - சற்றே மண் உள்வாங்குவது இயல்பு..
இதுமாதிரியான மண் உள்வாங்குதலை பல இடங்களில் பார்த்திருக்கின்றேன்..
கிராமங்களில் - கார்காலத்துக்கு முன்னால் - மழையை எதிர்பார்த்து, மாந்தோப்பு தென்னந்தோப்புகளை ஆழமாக உழுது வைப்பார்கள்..
அடுத்து பெய்யும் மழை - உழப்பட்டிருந்த மண்ணை ஊடுருவிக் கொண்டு பூமிக்குள் சென்று சேரும்..
அப்போது மண் உள்வாங்கி விளங்கும்..
புதிதாகக் கட்டப்பட்ட வீடு - முதல் மழைக்காலத்தைச் சந்திக்கும் போது - வீட்டைச் சுற்றிலும் மண் உள்வாங்குவதைக் காணலாம்..
நன்றி - தின்மலர் |
சென்னையின் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு காரணம் என்ன?.. - என்ற கேள்விக்கு -
பெருமழை பெய்யும் நேரங்களில் மண் அடுக்கில் ஏற்படும் வெற்றிடங்களால் இது போன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன..
பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது பெய்த பெரும் மழை, அதிக அளவு நீர்த்தேக்கம் மற்றும் மண் அரிப்பு காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர், கழிவு நீர் குழாய்கள் பதிப்பு, மெட்ரோ ரயில் பணி தான் - இதற்குக் காரணம் எனக் கூற முடியாது..
சாலையில் அவ்வப்போது தோண்டப்படும் பள்ளங்கள் சீரமைக்கப்படுகின்றன.. இதில் - எல்லா இடங்களிலும் 100% அழுத்தம் கிடைக்காது..
தளர்வான மண்ணில் மழையினால் ஈரப்பதம் அதிகரிப்பதால் இந்தப் பள்ளங்கள் ஏற்படுவது சகஜம் தான்!.. இது இயற்கையாக நடப்பதுதான்!..
- என்று சொல்லியிருக்கின்றார்கள்..
மக்கள் நல்வாழ்வுக்கென லட்சோப லட்சங்களைக் கொட்டியது ஒரு காலம்..
அவை மக்களுக்கு நன்மையளித்தனவா இல்லையா என்பதை - யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் - காலம் கண்முன்னே சொல்லிவிட்டது..
செல்லும் வழியின்றித் தவித்த கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து கொள்ள -
சென்னையின் சிலபகுதிகளில் மக்கள் அடைந்த இன்னலை காலத்துக்கும் மறக்க இயலாது..
ஆனாலும்,
முன்பு - 1978ல் வேடசந்தூரில் குடகனாறு உடைந்ததால் ஏற்பட்ட பெருத்த சேதங்கள் மறந்து போயின..
1985ல் மதுராந்தகம் ஏரி உடைந்து - பயணிகளுடன் பேருந்து வெள்ளத்தில் மூழ்கிப் போனதும் - ரயில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதும் மறந்து போயிற்று..
மதுராந்தகம் ஏரி உடைப்பில் பயணிகளுடன் மூழ்கிய பேருந்திற்கு சற்று முன் சென்ற பேருந்தில் தான் -
நான் சென்னைக்குப் பயணித்தேன் என்பது கூடுதல் செய்தி!..
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட, இயற்கைப் பேரிடராக ஆழிப்பேரலை..
சில வருடங்களுக்கு முன், கடலூரைத் தாக்கிய - ''தானே'' புயல்..
பின்னும் கால சூழ்நிலைகளால் - மழை வெள்ளம்..
இப்படிப் பல அவலங்களை - சேதங்களைச் சந்தித்திருக்கின்றது - தமிழகம்..
அவற்றிலிருந்து - பயனுள்ள பாடம் பயிலப்பட்டிருக்கின்றதா?..
இல்லை.. இல்லவே இல்லை!..
அகற்றப்படாத குப்பை மேடுகள்..
வெளியேற்றப்படாத கழிவுநீர்த் தேக்கங்கள்..
மழையினூடாக திருப்பதி சென்று விட்டு ரயிலில் திரும்பியபோது - காலை வேளை..
ஆவடி - திருமுல்லைவாயில் - அம்பத்தூர் - வில்லிவாக்கம் - பெரம்பூர் - வியாசர்பாடி - என, கடந்து வரும்போது ரயில்பாதையின் இருமருங்கிலும் சொல்லொணாத அவலங்கள்..
இவற்றுக்கெல்லாம் - எத்தனை எத்தனையோ காரணிகள்..
ஆனாலும், அதிகபட்ச கொடுமையாக -
தேங்கிக் கிடக்கும் கழிவு நீர் - துர்நாற்றம் வீசும் குப்பை மேடு - இவைகளுக்கு இடையே மறைவிடம் தேடும் மக்கள்..
இதெற்கெல்லாம் விடிவு காலமே இல்லையா!..
இதற்கிடையில், இப்போது - மழை வெள்ளத்தால் சீரழிந்த கட்டமைப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கென -
கோடானுகோடிகள் கொட்டப்படுகின்றன..
இதனால் எல்லாம் - எதிர்கால வாழ்வு நலமாக அமையுமா?..
சொல்லத் தெரியவில்லை..
நம்மைக் காப்பதற்கு இயற்கையைத் தவிர
வேறெதுவும் இல்லை என்பதே உண்மை..
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.. (015)
வாழ்க நலம்
* * *
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவெள்ள நீர் சூழ்ந்துள்ள படங்களை பார்க்கும் போதே மனதிற்கு கஸ்டமாக இருக்கின்றன. பருவ நிலை மாற்றங்கள் எப்போதுமே "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல்தான். இதற்கு மக்களாகிய நாமும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறோம் என எண்ணும் போது எதை குற்றம் சொல்வது? மார்ச்,ஏப்ரல் மாதங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக வீதி வீதியாக அலைவோம். நாங்களும் சென்னையில் இது போன்ற நேரங்களில் அவதிபட்டுள்ளோம். இயற்கையன்னைதான் நம்மையெல்லாம் காப்பாற்ற வேண்டும். வேறு வழியில்லை.. அனைவரும் பாதிப்புகள் ஏதுமின்றி நலம் பெற பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவில் உள்ள படங்கள் 2015 ல் நிகழ்ந்த சென்னை துயரத்தின் காட்சிகள்.. சாட்சிகள்..
நீக்குகாலம் மாறினாலும் கோலம் மாறவில்லை என்பதே உண்மை..
தங்களது அன்பின் வருகைக்கு நன்றி..
நாளிதழ்களில் செய்திகளைப் படிக்கும்போது மக்கள் படும் துன்பங்களை பார்க்க வேதனையாக உள்ளது.
பதிலளிநீக்குபதிவில் உள்ள படங்கள் 2015 ல் நிகழ்ந்த சென்னை துயரத்தின் காட்சிகள்.. சாட்சிகள்..
நீக்குகாலம் மாறினாலும் கோலம் மாறவில்லை என்பதே உண்மை..
தங்களது அன்பின் வருகைக்கு நன்றி ஐயா..
படங்கள் எல்லாம் பார்க்கும் போது வேதனை தருகிறது .
பதிலளிநீக்குஒவ்வொரு மழை காலமும் மக்கள் படும் துன்பங்களை பார்க்கும் போது இதற்கு தீர்வு எப்போது கிடைக்கும் என்ற கேள்வியும் வருகிறது.
இயற்கை தான் கருணை புரிய்வேண்டும்.
இயற்கை தன் செயல்களில் தவறுவதில்லை..
நீக்குபதிவில் உள்ள படங்கள் 2015 ல் நிகழ்ந்த சென்னை துயரத்தின் காட்சிகள்.. சாட்சிகள்..
காலம் மாறினாலும் கோலம் மாறவில்லை என்பதே உண்மை..
ஆட்சி மாறினும் காட்சி மாறவில்லை..
தங்களது அன்பின் வருகைக்கு நன்றி..
2015 என்று தெரிந்தது. அன்றும் இன்றும், தவறாக போடவில்லை வருடத்தை அன்றும் இப்படித்தான் இருக்கும் நிலை மாறாது என்று போட்டு இருந்தீர்கள் என்று நினைத்தேன்.
நீக்குஇயற்கையின் வல்லமை :-
பதிலளிநீக்குநான் / எனது என்றிருக்கும் மனிதனின் செருக்கினை மழை பெய்யாமல் நின்று அடக்கி உணர்த்துகிறது...
பதிவில் உள்ள படங்கள் 2015 ல் நிகழ்ந்த சென்னை துயரத்தின் காட்சிகள்.. சாட்சிகள்..
நீக்குதன்களது அன்பின் வருகைக்கு நன்றி தனபாலன்..
இந்த இழிவு நிலைக்கு காரணம் அரசாங்கம் மட்டுமல்ல... மக்களுமே...
பதிலளிநீக்குஆயிரம் முறை சொன்னாலும் திருந்த மாட்டார்கள்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு நன்றி ஜி..
ஒரு சிறு திருத்தம். இன்னும் 2022 வரவில்லை. இது 2021 தான்!
பதிலளிநீக்கு2022!?...
நீக்குதிருத்தி விட்டேன்.. நன்றி..
தண்ணீரில் மூழ்கி நிற்கும் பஸ் படம் பீதியைக் கிளப்புகிறது - பழைய படமாக இருந்தாலும்.
பதிலளிநீக்குபுதிய படமும் கை வசம் உள்ளது..
நீக்குஇன்னும் எவ்வளவு காலம் சென்றாலும் மக்களும், அதிகாரிகளும் தங்கள் கடமைகளை சரிவரைச் செய்யாமல் இப்படிப் புலம்பிக் கொண்டேதான் இருப்பார்கள். நீர்நிலைகளை சரிவராது தூர் வாருவதில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை தெருவிலும், சாலைகளிலும் கண்டபடி போடுவதை நிறுத்துவதில்லை. ஆக்கிரமிப்புகளை சரி செய்வதில்லை. அரசாங்கம் கொடுக்கும் நிதியை ஒழுங்காக அதற்கென்றே செலவழிப்பதில்லை. இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
பதிலளிநீக்குயாரும் கேட்கப் போவதில்லை..
நீக்கு2022 அல்ல 2032 ல் கூட இதே நிலை திரும்ப வரலாம்..
ஏனெனில் நமது நாட்டின் கட்டமைப்பு அப்படி..
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்...
ஏரிகள், வயல்களில் வீடு கட்டி விட்டார்கள்.
பதிலளிநீக்குஅப்புறம் குளம் , குட்டைகளை தூர்த்து விட்டார்கள்
அப்புறம் எப்படி எங்கு மழை நீர் போகும்?
இன்று வந்த வாட்ஸப் பதிவு :-
மழை வெள்ளத்தை திட்டாதீர்கள்
திருடபட்ட தன் ஏரிகளையும், குளங்களையும்
பரிதாபமாக அது தேடி அலைகிறது
தன் இருப்பிடத்தை ஆக்கிரமித்து
கட்டிடங்கள் கட்டியதால் சாலையில்
இறங்கி மறியல் செய்கிறது.
அண்ணா இது 2015ல் என்றாலும் இன்றும் அதே நிலைதான். இதற்கு முன்னும் இதே நிலைதான்...இனியும் இதே நிலைதான். நம் குழந்தைகள் கொள்ளுப் பெயரன்கள் பெயர்த்திகள் எடுத்த பிறகும் கூட இதே நிலைமைதான் இருக்கும் இப்படியே நம் அதிகாரிகள் ஆளுபவர்கள் மக்கள் எல்லாரும்.
பதிலளிநீக்குபார்க்கப் போனால் நான் சிறுமியாக இருந்த போது எங்கள் ஊரில் இந்த அளவு குப்பை இருந்ததாக எனக்குச் சற்றும் நினைவில்லை. ஆனால் இப்போது எங்கள் ஊர் குப்பைக் காடாக இருக்கிறது. ஆற்றில் பிளாஸ்டிக் மிதந்து போனதாக நினைவில்லை. சாக்கடை நீர் கலந்தது இல்லை ஆனால் இன்று இரண்டும் நடக்கிறது. படம் எடுத்து வைத்திருக்கிறேன். மனம் வேதனையாக இருக்கிறது நான் அப்போது கண்ட வயல்கள் எல்லாம் தோப்புகள் எல்லாம் இன்று கட்டிடங்கள். குளங்கள் வீடுகளாக இருக்கின்றன.
மீதி பதிவில் எழுதியுள்ளதால் இத்தோடு இங்கு நிறுத்திக் கொள்கிறேன்
கீதா
உண்மை..
நீக்குஉண்மையான வார்த்தைகள்..
மக்கள் மனம் திருந்துவார்கள் என்பது கற்பனை...
ஊழலில் புரண்ட அரசியல் வாதிகள் இனிமேல் நாட்டுக்காக உழைப்பார்கள் என்பதுவும் கற்பனையே!..
நாம் நம்மைப் பொறுத்து நேர்மையாக வாழ்வோம்!..
அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
மக்கள் மனம் மாறித் திருந்தினால் தான் உண்டு. ஆனால் பேசிக்கொண்டே இருப்பார்கள். எல்லாவற்றையும் அரசு வந்தே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இலவசங்களுக்கு அடித்துக் கொள்வார்கள். அதிலேயே மனம் நிறைந்து அரசு செய்யும் தவறுகளை மறந்து மன்னித்துவிடுவார்கள் மீண்டும் ஒரு வெள்ளம் வரும் வரையிலும். இதூ தான் இப்போதைய தமிழ்நாட்டு நிலைமை. கடந்த ஐம்பது வருடங்களாகவே மக்கள் இப்படித்தான். இயல்பை விட மிக அதிகமாக மழை பொழிந்துள்ளது இந்த வருடம். இப்போது மறுபடியும் ஆரம்பித்துள்ளது. எல்லாம் வல்ல ஆண்டவன் தான் தமிழக மக்களைக் காக்க வேண்டும். வேறே என்ன செய்வது?
பதிலளிநீக்கு