நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 08, 2024

புள்ளிருக்கு

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
தை 18
வியாழக்கிழமை


திரு புள்ளிருக்கு வேளூர்


இறைவன்
ஸ்ரீ வைத்ய நாதர்
அம்பிகை
ஸ்ரீ தையல்நாயகி

திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 13


இத்திருப்பதிகத்தில்
2, 4, 6, 8, 9, 10 திருப்பாடல்களில் ஜடாயுவும் 
3, 5, 7 ஆகியவற்றில் சம்பாதியும்  
சொல்லப்பட்டுள்ளதாக 
ஆன்றோர்தம் திருக்குறிப்பு..

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார்
உறையுமிடம்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.. 1

தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்
பொய்சொல்லா துயிர் போனான் புள்ளிருக்கு வேளூரே..2

வாசநலஞ் செய்து இமையோர் நாடோறு மலர்தூவ
ஈசன் எம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.. 3


மாகாயம் பெரியதொரு மானுரிதோல் உடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. 4

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.. 5


திறங்கொண்ட அடியார்மேற் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.. 6

அத்தியின் ஈருரி மூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப்போல் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற 
வைத்து கந்தான் புள்ளிருக்கு வேளூரே.. 7

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. 8

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.. 9


கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவர் எம் பெருமானார் தாமினிதாய்  உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென்று இராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. 10


செடியாய உடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.. 11
**

ஞானசம்பந்தப் பெருமான் தமது 
திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும்

எட்டாவது திருப்பாடலில்
இராவணன் திருக்கயிலை மாமலையின் கீழ் 
சிக்கிக் கொண்ட நிகழ்வையும்

ஒன்பதாவது திருப்பாடலில்
ஒளிப் பிழம்பாக நின்ற ஈசன் எம்பெருமானின் 
அடிமுடி அறிய இயலாத தன்மையையும்

பத்தாவது திருப்பாடலில் 
சைவத்தைப் புறங்கூறும்
புத்த சமண சமயங்களைப் 
பற்றியும் அருளிச் செய்வார்..

இத்திருப்பதிகத்தில் முழுமையாக 
சம்பாதியும் ஜடாயுவும் புகழப்பட்டுள்ளனர்..

மாறுபட்ட திருப்பதிகம்  
என்பது குறிப்பிடத்தக்கது..
**

-: நன்றி :-
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. அன்பின் கோமதி அரசு அவர்கள் வழங்கிய கருத்து..

    வைத்திய நாதன் உங்கள் உடல் சோர்வை, மன சோர்வை போக்கட்டும். விரல் வலி குண்மாக பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    பாடல்களை பாடி வைத்திய நாதனையும், தையல் நாயகி அம்மனையும் வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. புள்ளிருக்கு வேலூர் இறைவனை வணங்கிக் கொண்டோம்.

    அனைவர் நலன்களையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..