நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 29, 2024

திருநெடுங்களம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 13
 ஞாயிற்றுக்கிழமை


இறைவன்
ஸ்ரீ நித்யசுந்தரர்.
நெடுங்களநாதர்


அம்பிகை
ஸ்ரீ மங்கலநாயகி 
ஒப்பிலாநாயகி.

தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்..

நினைத்து எழுவார் தம் இடர்களைக் களைகின்ற
இறைவன் உறையும் தொன்மையான திருத்தலம் - திருநெடுங்களம்..

அம்பிகை தவம் செய்த திருத்தலங்களுள் திருநெடுங்களமும் ஒன்று..

 தவஞ்செய்த அம்பிகையின் எதிரே இறைவன் கள்ள உருவில் தோன்றி அம்பிகையின் - கைத்தலம் பற்றினன். 

ஆரென்று உணராத அம்பிகை அச்சமுற்று ஓடி ஒளிந்து கொண்டனள். 

பின்னர் ஐயன் அருள் வடிவங்காட்ட
 அம்பிகை ஐயனை ஆரத் தழுவிக் கொண்டனள்.. ஐயனும் ஆட்கொண்டருளினன் - என்பது தலவரலாறு..

மூலத்தானத்தில் சிவலிங்கத் திருமேனியுடன் அம்பிகையும் அருவமாக உறைவதாக ஐதீகம். எனவே மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து காட்சியளிக்கின்றன..    

இத்திருத்தலத்தில் -
சித்தாசனத்தில் அமர்ந்து, மானும் மழுவும் தாங்கி, 
சின்முத்திரையுடன்  திருநீற்றுப் பெட்டகம் ஏந்திய வண்ணம், 
இடக்காலைச் சுற்றி யோக பட்டம் அணிந்த திருக்கோலத்துடன் ஈசன் -  யோக தட்சிணாமூர்த்தி என விளங்குகின்றனர்.   

அருணகிரி நாதர் பாடிப் பரவிய திருமுருகன் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் திருச்சுற்றில் திகழ்கின்றனன். 

அகத்தியர் வணங்கிய திருத்தலம். 
வங்கிய சோழன் எனும் மன்னன் பூஜித்த தலம். 

திருஞானசம்பந்தர் தரிசித்த திருத்தலம்...

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகத்தின் திருப்பாடல் ஒவ்வொன்றிலும் இடர் களையாய்!.. -  என  விண்ணப்பித்துக் கொண்டிருப்பதால் - 
இடர் களையும் திருப்பதிகம் என்ற சிறப்புடையது..


திருநெடுங்களம் - சோழநாட்டின் காவிரியின் தென்கரையில் உள்ள திருத்தலம். திருஎறும்பூருக்குக் கிழக்கே உள்ளது. 

தஞ்சை - திருச்சி சாலை வழியில் துவாக்குடி வந்து 

அங்கிருந்து வடக்கே - மாங்காவனம் வழித்தடத்தில் செல்ல வேண்டும். 

திருச்சி மாநகரிலிருந்து பேருந்து வசதிகள்  உள்ளன.

அனைத்து விசேஷங்களும் பிரதோஷ வழிபாடுகளும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன.

வாழ்வில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும தரிசிக்க வேண்டிய திருத்தலம் - திருநெடுங்களம்.. 

திருக்கோயிலின் கோபுர வாசலில் ஸ்ரீ கருப்பஸ்வாமியைக் கண்டதுமே நம் கெட்ட வினைகள் ஓடிப்போகும்.

வரமருளும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் - ஸ்ரீதேவி, பூதேவியருடன்  திருச்சுற்றில் விளங்குகின்றார்.

தவிரவும் - திருச்சுற்றில்
நம் கஷ்டங்களைக் கரைத்தருள, அன்னை ஸ்ரீ ஜேஷ்டா தேவி தன் மக்களுடன் கனிவுடன் காத்திருக்கின்றாள். 


ஸ்ரீ ஜேஷ்டாதேவி நம் வணக்கத்துக்கு
உரியவள். 

தேவியின் வலப்புறம் மகன் விருஷபன்..
இடப்புறம் மகள் நமனை..

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பெருமையை நமக்கு உணர்த்துபவள்..

சோம்பல் இல்லாது சுறுசுறுப்பாக இயங்கும் வல்லமையைத் தருபவள்!.  

பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் மாதாந்திரப் பிரச்னைகளை - தாயைப் போல பரிவுடன் தீர்த்து வைப்பவள் ஸ்ரீ ஜேஷ்டா தேவியே!..

ஸ்ரீ ஜேஷ்டாதேவியின் அன்புக்கு நாம் பாத்திரராகி விட்டால் 

எதிர்பாராத விபத்துக்களில் இருந்து நம்மைக் காத்தருளும் பொறுப்பை ஸ்ரீ ஜேஷ்டா தேவியே ஏற்றுக் கொள்கின்றாள் என்பது .ஐதீகம்..

நெய்விளக்கேற்றி வைத்து - ஜேஷ்டாதேவி சந்நிதியின் முன் சற்று நேரம் அமர்ந்திருக்க 

காற்றின் கையில் அகப்பட்ட தூசியாக -
நம் தொல்லைகள் தொலைந்து போயிருப்பதை உணரலாம்..

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னை எதுவாயினும் சரி. 

திருநெடுங்களம் சென்று வந்தால், திரும்பிப் பார்க்கும் பொழுதுக்குள் 

அந்தப் பிரச்னை நம்மை விட்டு  - வெகு தூரத்தில் இருக்கும்!..

இயன்றவரை இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.. 

எம்பெருமானுக்கு விபூதிக் காப்பு செய்து வழிபட்டு -

அந்த விபூதியையே பிரசாதமாக பெற்றுக் கொள்வது நலம் பயக்கும்..

திருநெடுங்களம் - 

இத்தலத்திற்கு இரண்டு முறை சென்றிருக்கின்றேன்..
மீண்டும் மீண்டும் தரிசிக்கும்படியான உணர்வினை நல்கும் திருத்தலம்..

இந்தப் பதிவு 2016 ல் வெளியானதாகும்..
சூழ்நிலையக் கருதி
 மீண்டும் பதிவு செய்கின்றேன்..


நின் அடியார் 
இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!...

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. திருநெடுங்குளம் சிறப்புகள் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு சொல்கிறார்கள். வேண்டிக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்கத்தின் சிறப்புகள் எண்ணற்றவை

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. திரு நெடுங்களம் ஈசனை தரிசித்துக் கொண்டோம். தலச் சிறப்புகளும் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அழகான படங்களுடன் பதிவு அருமை.

    திருநெங்களம் கோவில் பற்றி அறிந்து கொண்டேன்.கோபுர தரிசனம் பெற்று, அழகிய இரு விமானங்களையும் தரிசித்துக் கொண்டேன். அங்குள்ள இறைவன், இறைவி பெயராகிய ஸ்ரீ நித்யசுந்தரர், ஸ்ரீமங்கலநாயகி என்பனவற்றை உச்சரிக்கும் போதே மனதுக்கு எத்தனை மகிழ்வை தருகிறது. 🙏🙏. இருவரையும் பணிந்து வணங்கி கொண்டு, அனைவரின் வாழ்வும் வளமாக இருக்கட்டுமென பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    திருநெடுங்களம் குறித்த தகவல்கள் சிறப்பு. சென்று வர எண்ணம் உண்டு. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  5. நெடுங்கள இறைவனை வணங்கி கொண்டேன்.
    ஜேஷ்டாதேவி அனைவருக்கும் அனைவரின் கஷ்டங்களை போக்கி நலங்களை அருள பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
    உடல், மன துன்பங்களை போக்கி அனைவரையும் ஆரோக்கியத்துடன் வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..