நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

மார்கழிப் பனியில் - 14

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 14. 


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் 
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..

ஆலய தரிசனம்

ஸ்ரீ வாஞ்சியம்.


இறைவன் - ஸ்ரீவாஞ்சிநாதர்.
அம்பிகை - மங்களாம்பிகை, வாழவந்த நாயகி.
தலவிருட்சம்  - சந்தனமரம்
தீர்த்தம் - குப்தகங்கை.

ஸ்ரீ எனும் திருமகளை அடைய விரும்பிய ஸ்ரீ மஹாவிஷ்ணு,
ஈசனை வேண்டித் தவமிருந்த தலம். 

ஆதலால் - ஸ்ரீ வாஞ்சியம் என்றானது. 

ஸ்ரீவாஞ்சியம் - காசிக்குச் சமமாகக் சொல்லப்படும் ஆறு தலங்களுள் ஒன்று. 

திருவையாறு, திருவிடைமருதூர்,  திருவெண்காடு, மயிலாடுதுறை, திருச்சாய்க்காடு - ஆகியவை மற்ற ஐந்து தலங்கள். 

திருக்கோயிலின் தீர்த்தமாகிய  - குப்த கங்கை எனும் திருக்குளம்  - கோயிலின் நுழைவாயிலின் வடபுறம் பரந்து காணப்படுகின்றது. இந்தக் குளத்தினுள் தான் கங்கை பூரணகலைகளுடன்  சூட்சுமமாகக் கலந்திருக்கின்றாள் என்கின்றது தலபுராணம்.

குப்த கங்கையில் கார்த்திகை - ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி - ஸ்ரீ வாஞ்சி நாதரை வணங்குதல்  சிறப்பு.

தென் புறம் யமதர்மராஜனின் தனிக்கோயில். தெற்கு நோக்கிய சன்னதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் சித்ரகுப்தன்.


எல்லா உயிர்களையும் ஈவு இரக்கமில்லாமல் எடுப்பதனால், பெரும் பழிச் சொல்லுக்கு ஆளாகின்றேனே!.. 

- என்று வருந்திய யம தர்மன் - தன் துயரம் தீர வேண்டி, தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய ஈசன் - 

நீ ஏற்று நடத்தும் பணி ஆன்மாக்களை அறச்செயலில் ஆற்றுப்படுத்துதல் அன்றோ!..மற்ற தேவர்களைக் காட்டிலும் சிறந்தவன் நீ!.. உயர்ந்ததும் உன்னதமானதும்  உனது பணியே!.. 

தர்மங்களைப் பரிபாலிப்பவன் நீ அல்லவோ.. இனி நீ தர்மராஜன் என அழைக்கப்படுவாய்!..

- என திருவருள் பொழிந்ததுடன் திருவாஞ்சியத்தின் க்ஷேத்ரபாலகன் என நியமித்தார்.

தனது பணியின் உன்னதத்தினை உணர்ந்த யம தர்மராஜன் மன வாட்டம் தீர்ந்து அமைதியுற்றார். 


பின்னும் இறைவனை வேண்டி  - ஐயனையும் அம்பிகையையும் சுமந்து சேவை புரியும் வாய்ப்பினை  விரும்பிப்  பெற்றார் யமதர்மன். 

இறைவன் யமதர்மராஜனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்த  திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது.

இத்தலத்தில் வந்து சேவித்தவர்க்கும் நினைத்தவர்க்கும் மரித்தவர்களுக்கும் மரண அவஸ்தை கிடையாது. 
 
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் விளங்குகின்றது.

முன் மண்டபத்தில்  விநாயகர், சுப்ரமணியர் சந்நிதிகள்.   உள்வாயிலைக் கடந்ததும்  மங்களாம்பிகை சந்நிதி . அன்னை நின்ற திருக் கோலத்தினள்..

அடுத்து கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, நர்த்தன விநாயகர் சந்நிதி.  அருகில்  அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கத் திருமேனி உயர்ந்த பாணம்.  தரிசித்து வணங்கும் போதே மனம் அமைதி அடைகின்றது . கவலைகள் எல்லாம் காற்றில் பறந்து எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தாற்போல இருக்கின்றது.

உள் திருச்சுற்றில்  விநாயகர், சுப்ரமணியர், பஞ்ச லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான்  - சந்நிதிகள் உள்ளன. 

ஆறுமுகப்பெருமான் இத்தலத்தில் பன்னிரு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.

இத்திருக்கோயிலில் நவக்ரஹங்கள் இல்லை. ஏனெனில் -

யம வாதனையே  இல்லை!.. என்றான பிறகு நமக்கு என்ன வேலை என்று நவக்கிரக அதிபதிகள் - இறையன்பர்களுக்கும் மெய்யடியார்களுக்கும் எவ்வித துன்பத்தையும் கொடுப்பதில்லை. 


அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவரும் பாடித் தொழுத திருத்தலம்.

ஈசனை - யமதர்மன் பணிந்த வரலாற்றை - அப்பர் சுவாமிகள்  அருள்கின்றார்.

மாணிக்க வாசகர்  - திருவாசகத்தில் -

திருவாஞ்சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 


- என்று போற்றுகின்றார். 

இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி இறைவனுக்கு அபிஷேகம் செய்து, ஆயுள் விருத்தி ஹோமம் அல்லது தில (எள்) ஹோமம் செய்து  அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும் என்பர்.

தஞ்சாவூர் - குடவாசல் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன. நன்னிலத்திற்கு அருகில் (10 கி.மீ) உள்ள திருவாஞ்சியத்திற்கு திருஆரூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான் திகழுந்நகர்
ஒருத்திபாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே!.(5/67) 
திருநாவுக்கரசர்.

சிவாய திருச்சிற்றம்பலம்

14 கருத்துகள்:

  1. ஸ்ரீவாஞ்சியம் அறிந்தேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. ஸ்ரீவாஞ்சியம் பற்றிய சிறப்பான தகவல்கள் ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஸ்ரீவாஞ்சியம் பற்றிய அறியாத தகவல்கள்...
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. மார்கழிப் பனியில் - 14

    அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திரு துரை செல்வராஜு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. சிறப்பான பாசுரத்துடன் திருத்தல வரலாறு மிகச் சிறப்பு

    // நீ ஏற்று நடத்தும் பணி ஆன்மாக்களை அறச்செயலில் ஆற்றுப்படுத்துதல் அன்றோ!..மற்ற தேவர்களைக் காட்டிலும் சிறந்தவன் நீ!.. உயர்ந்ததும் உன்னதமானதும் உனது பணியே!..

    தர்மங்களைப் பரிபாலிப்பவன் நீ அல்லவோ.. இனி நீ தர்மராஜன் என அழைக்கப்படுவாய்!.. //

    யமனுக்கு யமதர்மராஜன் எனும் பெயர்ச் சிறப்பு இப்போதுதான் உங்கள் பதிவினால் அறிந்தேன் ஐயா!.. அருமை!

    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. ஆண்டாள் பாசுரம் அருமை. ஸ்ரீவாஞ்சியம் கோயில் பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய பாராட்டுரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு நன்றி..
      இனிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..