நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 18, 2024

உடையவர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 5  
சனிக்கிழமை

ஸ்ரீ உடையவரின் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு அப்போது எழுதிய பதிவு - சிறு மாற்றங்களுடன்..


ஓம் நமோ நாராயணாய!..

அஷ்டாங்க விமான தளத்திலிருந்து கேட்கின்றது அந்தப் பெருங்குரல்!..

ஆங்காங்கும் பற்பல வேலைகளைச் செய்து கொண்டிருந்த
உழைப்பாளிகளும் பாமர மக்களும் திடுக்கிட்டனர்..

தேஜோ மயமான துறவி ஒருவரை அஷ்டாங்க விமானத்தின் அருகில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

திருக்கோஷ்டியூர் விமானம

ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளின் திருக்கோயிலின் 
முன்பாகக் கூடி -  விமான தளத்தினை வியப்புடன் 
நோக்கினர்..

இதோ மீண்டும்...

ஓம் நமோ நாராயணாய!..

யார் இவர்!.. எப்படி மேலேறிச் சென்றார்?..

இதோ மீண்டும் மூன்றாவது முறையாக - 

ஓம் நமோ நாராயணாய!..

கதிரவனால் கவரப்பட்ட கமல மலராக - கீழே திரண்டிருந்த அனைவரது முகங்களிலும் ஆனந்தப் பரவசம்!..

அவர்களை அறியாமல் ஆனந்தப் பெருக்குடன் முழங்கினர்..

ஓம் நமோ நாராயணாய!..
ஓம் நமோ நாராயணாய!..
ஓம் நமோ நாராயணாய!..

மேலே நின்று முழங்கிய துறவியின் கண்களிலிருந்து நீர்த் துளிகள் திரண்டு  அஷ்டாங்க விமான தளத்தில் விழுந்து கொண்டிருந்தன..


புண்ணிய பூமியாகிய திருக்கோஷ்டியூர்...

பரமானந்த அலைகளினூடே தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் -
திருக்கோயிலின் அருகில் இருந்த இல்லத்தின் கதவுகள் வேகமாகத் திறந்து கொண்டன..

அவ்வீட்டினுள்ளிருந்து சிவந்த கண்களுடன் வெளிப்பட்டார் - திருக்கோஷ்டியூர் நம்பி..

சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயிலின் முன்பாக -

ஆயிரக் கணக்கில் ஏழை எளியோர்.. ஏதும் அறியாப் பாமரர்.. கூப்பிய கரங்களுடன் கசிந்துரும் நெஞ்சங்கள்.. 

அண்ணாந்து நோக்கிய வண்ணம் கலங்கித் ததும்பும் கண்கள்!..

இதோ எம்மையும் கரையேற்ற ஒருவர் வந்து விட்டார்!... - என, சொல்லாமற் சொல்லின...

எல்லாவற்றையும் கவனித்த திருக்கோஷ்டியூர் நம்பி சினம் கொண்டார்..

இதன் பொருட்டோ நீ பதினெட்டு முறை எமது வாசலுக்கு வந்தனை?..

இதன் பொருட்டோ யாம் உனக்கு மகாமந்த்ரத்தை உபதேசித்தோம்?..
இந்த மகாமந்த்ரம் முக்தி தரவல்லது.. புனிதமானது.. ரஹஸ்யமானது.. 
சாமான்யர் எவர்க்கும் உபதேசித்தல் ஆகாது!.. - என, கூறியிருந்தோம்..

நீயும் எமக்கு ரஹஸ்யம் காப்பதாக பிரமாணம் செய்திருந்தாய்..
ஆயினும், எமக்கு அளித்த வாக்குறுதியினை மறந்து 
நீ பிழை புரிந்ததனால் 
கொடுநரகில் கிடந்து உழல்வாயாக!.. "

அங்கே அஷ்டாங்க விமானத்தின் அருகே -
நின்று கொண்டிருந்த இளந்துறவியை நோக்கிக் கூவினார்..

அதற்கு பதில் அளிக்கின்ற விதமாக -

" ஸ்வாமி!.. அடியேனைத் தாங்கள் பொறுத்து அருளல் வேண்டும்!... 

நாராயண மந்த்ரத்தின் துணை கொண்டு நானொருவன் மட்டும் 
வைகுந்தம் புகுதல் சரியோ?.. அது நீதியோ?...

கரையேற்றுவார் இன்றிக் கிடந்துழலும் இந்த மக்கள் அனைவரும் வைகுந்தம் செல்லும் பேறு எய்துதல் வேண்டாமோ!..

மகாமந்த்ரத்தினை உச்சரித்த இவ்வளவு பேரும் 
வைகுந்தத்திற்கு ஏகுவார்கள் எனும்போது எளியேன் நரகிற் புகுந்தாலும் பாதகமில்லை!...

எளியேனைத் தாங்கள் மீண்டும் பொறுத்தருளல் வேண்டும்!... "

அஷ்டாங்க தளத்திலிருந்து இனிய குரல் காற்றலைகளில் தவழ்ந்தது..

அந்த மாத்திரத்தில் கீழே நின்று கொண்டிருந்த 
மக்கள் அனைவரும் தம்மை மறந்து ஆரவாரித்தனர்...

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் கண்கள் பனித்தன..

என்ன தவம் செய்தனை மனமே!.. இத்திருமகனை மாணாக்கனாகப் பெறுதற்கு!.. - என, அவருள்ளம் பேருவகை கொண்டது..

அதற்குள்ளாக -  அஷ்டாங்க விமானத்திலிருந்து அந்த இளந்துறவி கீழே இறங்கி ஏழை எளிய மக்களுடன் கலந்திருந்தார்..

தமது ஆச்சார்யராகிய திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களை நெருங்கிப் பணிந்து நின்றார்..

" ராமானுஜனே!..  என்னிலும் பெரியவன் நீ!.. "

தனது மாணாக்கனை ஆனந்தப் பெருக்குடன் ஆரத் தழுவிக் கொண்டார் - திருக்கோஷ்டியூர் நம்பிகள்...

தற்போது ஸ்ரீபெரும்புதூர் என்றழைக்கப்படும் 
ஸ்ரீபெரும்பூதூர் தான் உடையவரின் அவதாரத் திருத்தலம்..

அக்காலத்தில் ஸ்ரீபெரும்பூதூரின் திருப்பெயர் - ஸ்ரீ பூதபுரி என்பதாகும்..

120 ஆண்டுகள் இப்பூலகில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர்..

வாழ்ந்த காலத்திலேயே ஜாதி பேதங்களைக் கடந்த நிலையைக் காட்டியவர்..

சமயத்திலும் சமூகத்திலும் பற்பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்..

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் அன்பு காட்டி - அவர்களைத் திருக்குலத்தார் என்று அழைத்துப் பெரும் புரட்சி செய்தவர்...

தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கருணை கொண்டு அவர்களைத் தம்முடன் அரவணைத்துக் கொண்ட உத்தமர்...

ஸ்ரீ ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள் - ஒடுக்கப்பட்ட மக்களைத் தாழ்வாகக் கருதும் மனோநிலையில் இருந்து மீளாதிருந்ததுவே ஸ்ரீ ராமானுஜர் துறவு கொள்வதற்குக் காரணமாயிற்று..


எண்ணற்ற அருஞ்செயல்களைப் புரிந்தவர் ஸ்ரீ ராமானுஜர்...

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார அடிசில்சொன்னேன்
ஏறுதிரு உடையான் இன்றுவந்து இவைகொள்ளுங் கொலோ..(89)
-: நாச்சியார் திருமொழி:-

அன்றைக்கு நேர்ந்து கொண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்..

ஆனால், அவள் வேண்டிக் கொண்டபடி அவளுக்குக் கைகூடவில்லை..

திருமாலிருஞ்சோலைக்கு உடையவர் தரிசனம் காண வந்தபோது ஆண்டாளின் நேர்ச்சை நினைவுக்கு வந்தது..

அழகர்கோயிலில் கள்ளழகருக்கு முன்பாக சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளின் நேர்த்திக் கடனை நிறைவேற்றியருளினார்...

அதன்பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உடையவர் எழுந்தருளியபோது,
திருமூலத்தானத்தின் உள்ளிருந்து -

" வாரும் எம் அண்ணாவே!.. "

- என்றழைத்தவாறு எதிர் நின்று வரவேற்று மகிழ்ந்தாள் - கோதை நாச்சியார்...

நிலமகளாகிய 
கோதை நாச்சியாருக்கு 
ஆதிசேஷனாகிய உடையவர் - அன்பினால் அண்ணன் ஆகினார்!.. 
- என்றால் மேனி சிலிர்க்கின்றது..

உடையவரை ஆராதித்து வணங்குவோர்க்கு அவர் தம் நல்லாசிகளினால் சகல பாவங்களும் குற்றங்களும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு..

பரிபூரணமான பக்தி சரணாகதி இவையிரண்டும் தான் இறைவனை அடைவதற்கான எளிய வழிகள் 

- என, உபதேசித்தருளியவர் ஸ்ரீ ராமானுஜர்..

திருஅரங்கத்தில் இருந்தபோது திருக்கோயிலில் நடத்தப்பெறும் வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்தார்.. 

அந்த நடைமுறைகளே இன்றளவும் பின்பற்றப்படுகின்றன..

திருவரங்கத்தில் 
தானான திருமேனியாக 
ஸ்ரீ பெரும்பூதூரில் 
தானுகந்த திருமேனியாக  
திருநாராயணபுரத்தில் 
தமருகந்த திருமேனியாக
உடையவர் ஸ்ரீ ராமானுஜர் அருளாட்சி செய்கின்றார்.. 

சக மனிதரை மதித்து ஆதரித்து அரவணைப்பவர் அனைவரும்
உடையவரின் அன்புக்குரியவர்களே!..


மனுக்குலம் மேம்படுவதற்கான நல்வழியைக் காட்டியவர்
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர்..

அவர் காட்டிய வழியில் பயணித்து பரமனின் நல்லருளைப் பெறுவோமாக..
 
ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே போற்றி..

ஓம் நமோ நாராயணாய..
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. வாழ்க உடையவர் புகழ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க உடையவர் புகழ்...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓம் நமோ நாராயணாய..
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஸ்ரீ உடையவரின் திருப்புராணம் மெய்சிலிர்க்க வைப்பவை. இன்றும் படிக்கும் போது அவர் அடைந்த புகழைக் உணர்ந்து நம் மனதிலும் பரமானந்தம் உண்டாகிறது. அவர் காட்டிய வழியில் நாமனைவரும் சென்று. ஸ்ரீமன்நாராயணனின் அன்பையும், அருளையும் பெறுவோம். நாராயணன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அவர் காட்டிய வழியில் சென்று. ஸ்ரீமன் நாராயணனின் அன்பையும், அருளையும் பெறுவோம்.///

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஜாதிபேதங்களைக் கடந்து சாதாரணமக்களுக்கும் நாராயண நாமம் உபதேசித்த மகான் பகிர்வு சிறப்பு.

    ஸ்ரீராமானுஜரின் பாதம் பணிவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அவர் காட்டிய வழியில் சென்று. ஸ்ரீமன் நாராயணனின் , அருளைப் பெறுவோம்.. ///

      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  5. சக மனிதரை மதிக்கும், பண்பும் , அன்பும் உடையவர்கள் ஸ்ரீ உடையவரின் அன்புக்குரியவர்கள்தான்.
    திருக்கோஷ்டியூரில் அஷ்டாங்க விமானத்தை போய் பார்த்த போது உடையவரின் கதை நினைவுக்கு வந்து கண்கள் பனித்தன.
    ஸ்ரீராமானுஜரின் பாதம் போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// திருக்கோஷ்டியூரில் அஷ்டாங்க விமானத்தைப் பார்த்த போது உடையவரின் கதை நினைவுக்கு வந்து கண்கள் பனித்தன..///

      நானும் திருக்கோஷ்டியூர் தரிசனம் செய்து இருக்கின்றேன்..

      ஓம் நமோ நாராயணாய..

      மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..