நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 30
புதன்கிழமை
அமுதே தமிழே நீ வாழ்க
நினைவெல்லாம் பகுதி தொடர்கின்றது..
எட்டாம் வகுப்பு..
அது நடுநிலைப் பள்ளி..
ஆறு ஏழு எட்டு என மூன்று வகுப்புகளுக்கும் தமிழாசிரியர்களாக வந்தவர்கள் திரு மணியன் ஐயா அவர்கள் திரு ஜெயராமன் ஐயா அவர்கள் திரு புலவர் க. சின்னையன் ஐயா அவர்கள் ஆகியோர்...
இவர்களில் மணியன் ஐயா அவர்களிடம் மட்டுமே - பள்ளி வளாகத்தில் புழங்காமல் இருந்த கிணற்றில் எச்சில் துப்பியதற்காக அறை வாங்கியிருக்கின்றேன்..
மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள்
நேரடி இணைப்பு குழாயடி என்று எதுவும் இல்லாத காலம்..
புழக்கத்தில் இல்லாதது என்றாலும் கிணறு தானே... அதற்கு மரியாதை கொடுக்கத் தவறியது தவறு தானே..
அன்றைக்குக் கன்னத்தில் கிடைத்த ஒரு அறை பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தது..
பள்ளியின் தலைமை ஆசிரியர் வித்வான் திரு நாராயணசாமி ஐயா அவர்கள்..
இவர்களிடமே நான் ஒழுக்கத்தையம் தமிழை கற்றுக் கொண்டேன்..
இவர்கள் திருப்பனந்தாள் ஆதீனத்தில் தமிழ் பயின்றவர்கள்.
அப்போதைய
பாடப் பகுதியின் மனப் பாடப் பாடல்கள் இதோ..
மனப் பாடப் பகுதி எனில் திருக்குறள் இல்லாமலா!..
அவற்றைக் குறிப்பிட்டு பதிவு எனில் நூறு வாரங்களுக்கு மேல் எழுதலாம்...
எனவே திருக்குறளுக்கு பணிவுடன் வணக்கம் சொல்லி விட்டு ஏனைய இன்தமிழ்ப் பாடல்களைக் குறிக்கின்றேன்..
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு...
மருத நிலத்தின் அழகினை வர்ணித்து கம்பர் இயற்றிய பாடல் இது...
(பாடலுக்கான விளக்கம் எல்லாம் இன்றைய சிந்தனையில்!..)
தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளை கண் விழித்து நோக்க
தெண் திரை எழினி காட்டத் தேம்
பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட -
மருதம் வீற்றிருக்கும் மாதோ.
நீர் வளம் மிக்க குளக்கரைச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்து ஆடவும் குளத்து நீரில் தாமரை மலர்கள் விளக்குகளைப் போல் அழகூட்டவும் மேகங்கள்
மத்தளங்களைப் போல ஒலிக்கவும் குவளைப் பூக்கள் விழித்துப் பார்க்கவும் நீர் ததும்புகின்ற நிலையின் அலைகள் திரைச் சீலை போல அசைந்திருக்கவும் தேனை ஒத்த மகர யாழின் இசை போல வண்டுகள் ஒலி எழுப்பவும் ஆகிய சூழலில் மருத நிலமானது இளவரசி போல வீற்றிருக்கின்றாள்..
என்று வர்ணிப்பது கம்ப நாட்டாழ்வாரின் கவித்திறம்
**
இந்தப் பாடலும் அற்புதம்.. திருக்குற்றால மலையின் வளத்தினை மாண்பினைக் காட்டுவது..
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே..
-: குற்றாலக் குறவஞ்சி :-
**
மழை வர இருப்பதற்கான அறிகுறிகள் இந்தப் பாடலில்..
எளிதில் பொருள் விளங்கும்படியான அழகிய பாடல்..
பாடலை வாசிக்கும் போதே மண் வாசம் கமழும்..
காலச் சூழ்நிலையின் அவதானிப்பினை உழவர் பெருமக்களும் அறிந்திருந்தமைக்கு இப்பாடலும் முக்கியமான சான்றாகும்..
ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி மலை
யாள மின்னல் ஈழமின்னல்
சூழமின்னுதே
நேற்றும் இன்றுங் கொம்பு சுற்றிக்
காற்றடிக்குதே கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்றடைக்குதே மழை
தேடியொரு கோடி வானம்பாடி யாடுதே
போற்று திரு மாலழகர்க்
கேற்றமாம் பண்ணைச் சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே..
-: முக்கூடற்பள்ளு :-
**
கவி காளமேகப் புலவர் சிலேடைக் கவியில் திறன் உடையவர்..
திரு ஆனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளால் -
போகின்ற போக்கில் கவி சொல்லக் கூடிய வல்லமை பெற்றவர்..
யானைக்கும் வைக்கோலிற்கும் ஒப்பு வைத்து அவர் மொழிந்த பாடல் இது..
சிலேடைக் கவிகள் இரட்டுற மொழிதல் என்றும் சொல்லப் பெறும்..
இத்தொடரில் பதிவாகின்ற பாடல்கள் பலவும் மனதில் ஊடாடிக் கொண்டு இருப்பவை.
உடல் நலன்
சூழ்நிலையின் காரணமாக இணையத்தில் தேடி எடுத்து இங்கே பதிவு செய்கின்றேன்..
பாடலின் கருத்துக்களை மீண்டும் உணர்ந்து கொண்டு இயன்றவரை ஒற்றை விரலால் தட்டச்சு செய்கின்றேன்..
வாரிக் களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டை புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் சீருற்ற
செக்கோல மேனித் திருமலை ராயன் வரையில் வைக்கோலும் மால் யானையாம்..
-: காளமேகப் புலவர் :-
நினைவெல்லாம்
தொடரும்
அழகே உந்தன் புகழ் வாழ்க..
ஓம் சிவாய நம ஓம்
***
அருமை... அருமை... இதில் கம்பராமாயணப்பாடல்கள் வேறு சில பாடல்கள்தான் - அதுவும் அரைகுறையாக - நினைவில் இருக்கிறது. குற்றாலக்குறவஞ்சி அப்போதே ரசித்துப் படித்த பகுதி. தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள் பாடலில் வரும் சிவாஜி குரலில் வரும் பகுதி போல வாசிக்கலாம் இதை.
பதிலளிநீக்குசீறாப்புராணத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் அரைகுறையாய் நினைவில் இருக்கு!
தஞ்சை தூய அந்தோனியார் பள்ளியில் நல்ல தமிழாசான்கள் யாரும் எனக்கு வாய்க்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு வரும்போது புலவர் பா சங்கரன் என்னும் இளைஞர் பாடம் எடுத்தார். அவரும் ஓரளவுக்குத்தான் ரசிக்க வைத்தார். அவர் இலக்கிய மன்ற கூட்டம் நடத்துவதிலும், இன்னொரு ஆசிரிய நண்பருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் காட்டினார்.
பதிலளிநீக்குகாளமேகப் புலவரதும் மழைப் பாடலும் எனக்கு புதியவை. ஏனையவை பாடசாலையில் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஎங்களுக்கு உங்கள் பகிர்வுகள் மீள் நினைவை தருகின்றன.
ஆஹா! எல்லா பாடல்களும் அந்தக் காலத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎனக்கும் பழைய நினைவுகள் வருகின்றன. நம் காலம் பொற்காலம்
பதிலளிநீக்குநீர்நிலைகளில் அசுத்தம் செய்யக்கூடாது என்று வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள். ஆறு , குளம், கிணறு எல்லாம் சுத்தமாக பராமரித்த காலம்.
பதிலளிநீக்குவானரங்கள் கனி கொடுத்து பாடல், தண்டலை மயில்கள் ஆட பாடல் எல்லாம் மனபாடப்பகுதி.
ஆற்றுவெள்ளம் பாடல் முக்கூடற்பள்ளு பாடலை கல்கியின் பொன்னியின் செல்வனில் படித்து மகிழ்ந்து இருக்கிறேன்.
நினைவுகள் அருமை.
உங்கள் நினைவு பெட்டகத்திலிருந்து சிறப்பான தகவல்கள். அந்த நாட்களில் படித்த தமிழ் பாடல்கள் இன்றைக்கும் நினைவில். எத்தனை இனிமையான நாட்கள்.
பதிலளிநீக்குஒரு விரலில் தட்டச்சு - கவனமாக இருங்கள். உடல் நலம் முக்கியம்.