நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 10, 2022

மழை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய சிறுகதை
-: மழை :-
****

மாலை மயங்கும் நேரம்.. 

மழை பெய்து கொண்டிருந்தது..

" வூழ்.. வூழ்ழ்.. வூழ்ழ்!.. " 

கத்திக் கொண்டே - பெய்யும் மழைக்குள் புகுந்து ஓடியது அந்த வெள்ளை நாய்..  

என்ன ஏதென்று புரியாமல்
அதன் பின்னாலேயே  இன்னும் சில நாய்கள்.. எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடின.. 

" சளக்... பளக்!..." - என்று, மழைத் தண்ணீரில் நாய்கள் ஓடுகின்ற ஒலி..

இவை அனைத்தும் இந்தத் தெருவில் கேட்பாரற்றுத் திரிபவை..

" டேய்.. யார்ராவன் நாய அடிக்கிறவன்... மழ நேரத்தில?.. "

திண்ணையில் படுத்திருந்த வேலாயுதம் சத்தம் போட்டார்..

சில நொடிகள் அமைதி..

மழைத் தூறலின் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது..

" அத யாரும் அடிக்கலே.. "

எதிர் சாரியில் மூன்றாவது வீட்டில் இருந்து சுப்பிரமணியின் குரல்..

" பின்னே?... "

" எரவானத்துல சொருவியிருந்த பிளாஸ்டிக் தாள்  நழுவி விழுந்திடுச்சி.. அதுல பயந்து போய் அலறிக்கிட்டு ஓடுது அந்த நாய்!.. "

" ஓகோ!...  சரி.. எரவானத்துல பிளாஸ்டிக் எதுக்கு?.. திண்ணயில ஒழுகுதா!.. "

இங்கிருந்து கேள்விக் கணை பறந்தது..

" ஆமா.. தாத்தா.."

தாத்தா.. அறுபது வயதைக் கடந்தவர் என்றாலும், மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்கவில்லை என்னும் கதை.. சத்தமும் நாட்டாமையும் குறையவில்லை..

" இதுக்குத் தான் நான் ஆவணி மாசமே சொன்னேன்.. கூரைய பிரிச்சு மாத்து..ன்னு.. சரி.. இப்ப அதப் பேசி என்ன பிரயோசனம்.. எல்லாருமா வந்து இங்க படுத்துக்குங்க.. "

" தாத்தா.. உங்களுக்கு ஏன் சிரமம்?.. "

" அட மழை நேரத்துல புள்ளைங்களுக்கு காச்சல் வந்தா என்னடா பண்ணுவ?.. "

உரிமையுடன் கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது..

" அதுக்கு.. ன்னு எத்தனை நாளைக்கு வந்து அங்க படுத்துக்க முடியும்?.. "

" எத்தனை நாளைக்கு வேணாலும் வந்து படுத்துக்குங்க..  நான் தலையிலயா தாங்கப் போறேன்?.. வீடு காலியாத் தானே கிடக்கு!.. " 

" சரி.. ஒருவாய் சாப்பிட்டுட்டு வர்றோம்!.. "

தாத்தாவின் குரல் பாசத்துடன்
இருந்ததால் அங்கிருந்து  மறுப்பு ஒன்றும் இல்லை..

சற்று நேரத்தில் ஓட்டமும் நடையுமாக  -  சுப்பிரமணி
தோளில் மகனை தூக்கிக் கொண்டு வந்தான்.. பின்னால் அவன் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும்.. கைகளில் பாய், போர்வை, தலையணைகள்..

" வாளி.. ல தண்ணி இருக்கு.. காலைக் கழுவிக்குங்க.. "
என்றபடி தலைமாட்டில் இருந்த சாவிக் கொத்தை எடுத்துக் கொடுத்தார் வேலாயுதம்..

அதை வாங்கிக் கொண்டு கதவை திறந்த சுப்பிரமணி வாசல் விளக்கு சுவிட்ச்சை போட்டான்.. 

இருண்டு கிடந்த திண்ணையில் மங்கலாக
வெளிச்சம் பரவியது.. 

பக்கவாட்டில் இருந்த அரிக்கனின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்தார் வேலாயுதம்..

" சாரல் அடிக்குமா?.. "

" அது எப்படிடா அடிக்கும்?.. மூங்கித் தட்டியில வச்சு கீத்து  முடைஞ்சிருக்குல்ல!.. "

வீட்டுக்குள் முன் கூடத்தில் பெண்டு பிள்ளைகள் படுத்துக் கொள்ள சுப்பிரமணி வெளித் திண்ணையில் பாயை விரித்துப் போட்டு அதில் சாய்ந்தான்.. 

" தாத்தா.. நீங்க சாப்பிட்டீங்களா?.. "

சுப்பிரமணியின் கேள்விக்கு கொட்டாவியுடன் பதில் வந்தது..

" அரும்பு தான் இருக்காள்..ல.. மத்தியானம் வந்து பரக்க பரக்க சோறாக்கி வத்தக் கொழம்பு வச்சி அப்பளம் பொரிச்சுக் கொடுத்துட்டுப் போனா.. மழ நாளா.. சீக்கிரமே பசிச்சது... சாப்டுட்டு மிச்சத்துல தண்ணி ஊத்தி வச்சிருக்கேன்.. காலை ல .. பழயதுக்கு ஆகும்!.. "

"' பட்டணத்து.. ல பெரிய உத்யோகத்துல பையன் இருக்குறாரு.. செவனே.. ன்னு அங்க போயி இருக்காம.. இங்க பழய வீட்ல கெடந்து வத்தக் கொழம்பு.. பொரிச்ச அப்பளம்.. ன்னு லோல் பட்டுக்கிட்டு?... " 

" நமக்கு டவுன் காத்து ஒத்துக்கிறதில்ல சுப்பிரமணி.. "

" அதிசியமா நீங்க மட்டுந்தான் டவுன் ல இருக்கீங்களாக்கும்?.. 

 - மெல்லச் சிரித்தான் சுப்பிரமணி..

" நான் அங்கே இருக்கலாம்.. ஆனா எம்மனசு இருக்க மாட்டேங்குதே!.. " 

" அதென்ன.. அப்படியான மனசு!.. தேடி வச்ச திரவியம் வீணாப் போகுதே.. ந்னா?.. "

" என்ன!.. நாலு மா மரம்... வருசத்துக்கு இருபதாயிரம் ரூபாய்க்குக் காய்க்கும்.. பதினைஞ்சு தேக்கு மரம்... இப்பவே பன்னண்டு லச்சத்துக்குக் கேட்டுக்கிட்டு இருக்கானுங்க.. இந்த காரை வீடு.. பின்னால கேணி.. எல்லாஞ் சேந்து அறுவது லச்சம் வரைக்கும் ஊடாடுது..
இதை எல்லாம்  தலையிலயா தூக்கிக்கிட்டு போகப் போறோம்.. மனுசனுக்கு அன்பு வேணும்.. ஆதரவு  வேணும்.. அது தான் முக்கியம்... "

" அதான் மருமக கண்ணுல வச்சி பாத்துக்குதே... அப்பறம் என்ன வேணும்?.. "

" அந்தப் புள்ள மேல ஒரு குத்தமுங் கிடையாது.. ஆனா அக்கம் பக்கத்துல யாருன்னு.. யாருக்கும் தெரியாது.. காடு.. கரையின்னு சுத்தித் திரிஞ்ச நமக்கு அது சரிப்படுமா?.. பாக்கெட்டுல பால வர்றதும் பாட்டில்ல தண்ணி தர்றதும்.. யாரோ அவிச்ச இட்டலிய யாரோ கொண்டாந்து கொடுக்கறதும்... "

" இது என்ன புதுசா நடக்குதா அங்கே... எப்பவும் இருக்கிறது தானே.. காலம் மாறிப் 
போச்சு.. ன்னு நாமளும் மாறிக்கிட வேண்டியது தான்.. அடுத்த ஊட்டுக் காரங்களப் பார்த்தா முடியுமா?.. "

" என்னால முடியல சுப்பிரமணி!.. "

" ஒங்களுக்கு என்ன தான் வேணும்?... "

" மனுசன்.. மனுசன் வேணும்!.. "

" ஏன்!.. அங்கே இருக்கறவங்க எல்லாம் மனுசங்களா தெரியலையா?.. "

" அடப்போடா... மனசே இல்லாதப்போ மனுசன் எங்கேயிருந்து வர்றது?.. தண்ணியில இருந்து தங்கம் வரைக்கும் சாதாரண கீரைக் கட்டுல இருந்து  பெரிய ஓட்டல் சாப்பாடு வரைக்கும் எல்லாத்துலயும் தில்லாலங்கடி.. ஒருத்தனை ஒருத்தன் அடிச்சுத் திங்கறதிலேயே குறியா இருக்கானுங்க.. சினேகமா சிரிச்சா கூட பைத்தியக்காரன் ஆயிடறோம்... காலம் பூரா நேர்மை நியாயம்.. ன்னு இருந்துட்டு அங்கே போய் இளிச்ச வாயா நிக்கிறப்போ மனசு திகைச்சுப் போயிடுது.. "

பேச்சை சற்று நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்தார்..

" வீடு நெருக்கமா இருந்து என்ன பண்றது..  " நெருக்கமா இல்லையே!... இதோ அதட்டுனதும் வாரி சுருட்டிக்கிட்டு வந்துட்டே... அங்கே ரோட்ல வாந்தி எடுத்தாலும் பார்க்க மாட்டாங்க.. வழுக்கி விழுந்தாலும் கேக்க மாட்டாங்க.. அவங்க அவங்க வேல தான் முக்கியம்.. ஈவு எரக்கத்துக்கு எடம் கிடையாது. நாளைக்கே எனக்கு ஒரு தலவலி காச்சல்.. ன்னா எட்டிப் பாக்க மாட்டியா?.. என்னா.. ன்னு வந்து கேக்க மாட்டியா?..

கண்களைப் பறித்தன மின்னல் கீற்றுகள்.. இடி முழக்கத்தில் ஊர் அதிர்ந்தது..

" அதெல்லாம் ஒன்னும் வராது.. பேசாம இழுத்துப் போர்த்திக்கிட்டு சிவனே.. ன்னு தூங்குங்க... எல்லாத்தையும் சாமி பார்த்துக்கும்... "
- வீட்டின் உள்ளிருந்து  
சுப்பிரமணியின் மனைவி குரல்..

" சுப்பிரமணி!.. ஒரு வேலை செய்யேன்... "

" சொல்லுங்க.. தாத்தா.. "

" இந்தப் பெரிய பேட்ரி  லைட்டை வீட்டுக்குள்ள கொடுத்திடு.. அவசரத்துக்கு ஆகும்.. வாசல்.. ல ராத்திரி வெளக்கை போட்டு விடு.. " 

" அப்போ ஒங்களுக்கு?.. "

" அதான் கை விளக்கு இருக்கே!.. " 

சுப்பிரமணி ராத்திரி விளக்கைப் போட்ட போது - சற்று முன் தலை தெறிக்க ஓடிய வெள்ளை நாய் திரும்பி வந்து வாசலில் நின்றது.. 

" எனக்கு இடம் இல்லையா?.. " - என்கிற மாதிரி தாத்தாவை நிமிர்ந்து பார்த்தது..

" திண்ணையில அந்த ஓரமா படுத்துக்க!.. " - என்றார்..

மழை பெய்து கொண்டிருந்தது..
***

22 கருத்துகள்:

  1. இனிய காட்சிகள்.  கிராமத்திலும் இப்போது காணக்கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. மிக அழகிய கதை. கிராமத்து அன்பைக் காட்டும் கதை.

    நீங்கள் காட்டும், காட்ட நினைக்கும் கிராம்ம் இப்போதும் இருக்கிறதா? தொலைக்காட்சி வந்த கிராமத்தில் மனித அன்பு மிஞ்சியிருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மனங்களில் அன்பு இப்போதும் மண்டிக் கிடக்கின்றது

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. கிராமம் இப்போவும் இப்படி இருக்கா? தெரியலை. ஆனால் பலரும் இப்போக்கிராமங்களுக்குத் திரும்புவதும் நடந்து வருது. நகரம் என்பதால் அங்கே அன்பில்லை/கவனிப்பில்லை என்றும் சொல்ல முடியாது என என் அனுபவங்களும் சொல்கின்றன. எங்கே இருந்தாலும் மனிதர் மனிதத்துடன் இருந்துவிட்டால் நகரம் என்ன? கிராமம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் சரிதான்.. ஜனங்கள் எப்போதும் இப்னடியும் அப்படியும் தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  4. துரை அண்ணா, அழகான கிராமத்து விவரிப்பு... என் கண் முன்னால் விரிகிறது என் கிராமம். திண்ணைகள் இருந்த கிராமம். இப்போது திண்ணைகள் இல்லாமல் எல்லாமே உருமாறிப் போயிருக்கின்றன. சென்றவருடம் சென்றிருந்த போது கண்டு அறிந்த விஷயம் இது. புதியதாகக் கட்டுபவர்கள் கூட திண்ணை வைத்துக் கட்டுவதில்லை க்ரில் தான் அந்தக்காலத்து அழிக்கதவு இல்லை. ஓரிரு வீடுகள்தான் அக்காலத்து முறையில் இருந்தன அவையும் திண்ணை கிரில்லுக்குள் ஜெயில் போன்று!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  5. நேர்மையானவனுக்கு பட்டம் இளிச்சவாயன் இதுதான் இன்றைய நிலைப்பாடு. நெகிழ வைத்த சிறிய கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான்.. இதே தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை. படிக்கும் போதே கிராமிய மணம் வீசுகிறது. பழகிய மண்ணை விட்டு பரபரக்கும் நகரம் செல்ல ஒரு சிலருக்கு மனம் உடன்படாததுதான். கதையை அருமையாக சொல்லி வந்தது ஒரு கிராமத்தையே மனதுக்குள் நிறுத்தியது போன்ற உணர்வை தந்தது. இந்த கலையில் வல்லவரான தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  8. மனித நேயம் கிராமங்களில்தான் வாழ்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  9. மனதை தொட்ட கதை. கேள்வியும் , பதிலுமாக கதையை சொன்ன விதம் அருமை.
    கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு பிடிக்காதுதான்.

    திண்ணையில் அமர்ந்து பேசியவர்கள், நகரத்தில் அடைத்த கதவுகளை பார்த்து பெருமூச்சு விட வேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு பிடிக்காதுதான்.. //

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. அக்கம் பக்கத்தை சொந்தமாக நினைத்து மாமா, அத்தை என்று அழைத்து உறவு கொண்டாடி வாழ்ந்த காலங்களை நினைத்து வாழ வேண்டும் இப்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கம் பக்கத்தை சொந்தமாக நினைத்து மாமா, அத்தை என்று அழைத்து உறவு கொண்டாடி வாழ்ந்த காலங்களை நினைத்து//

      அப்படியான நெஞ்சங்கள் இன்றும் இருக்கின்றன.

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. செல்லத்திற்கும் இடம் இருக்கு திண்ணையில். "மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்.// என்ற பாடல் நினைவுக்கு வருது.

    மனம் மனம் விரிந்தால் வியன் உலகம் கைகளில்.

    பதிலளிநீக்கு
  12. // மனம் விரிந்தால் வியன் உலகம் கைகளில்.//

    மனம் விரிவடைய வேண்டுமே...

    அது இன்றைய மக்களிடம் குறைந்து விட்டது..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..