நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 16, 2016

மாமதுரைத் திருவிழா 3

மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
ஐந்தாம் திருநாள் மற்றும் ஆறாம் திருநாள் வைபவத்தின் நிகழ்வுகளை - இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..


கயிலாசம் பட்டியிலிருந்து -  
மதுரைக்கு திருவிழா பார்க்க வந்திருப்பவர்கள் - 
கனகசுந்தரமும் மச்சக்கன்னியும்!... 
***

ஏ.. சாமீ!... எம்மாம் பெரிய கோவுரம்!... ஏம்.. மச்சான்.. இதெல்லாம் எப்படி..ங்கறேன் கட்டியிருப்பாங்க.. அந்த காலத்துல!...

மருதைக்கு வந்து.. சரியான பட்டிக்காடு...ன்னு காட்டிட்டியே!...

ஏ..ங்!...

இதெல்லாம் மனுசனால ஆவுற காரியமா!..

பின்னே?..

ராவோட.. ராவா... பூதங்.. கட்டுன கோயிலு.. புள்ளே!..

பூதமா!..

ஆமா!.. பின்னே யாரு ஒங்க..அப்பாவா!...

மாமனார சீண்டலேன்னா.. மனசுக்கு நிம்மதியே இருக்காது.. போல!..

பின்னே.. என்ன.. ஊரு.. ஒலகமே.. வந்து பார்த்துட்டு மூக்குல விரலை வெக்கிது.. இவ கேக்கிறா மனுசங் கட்டுனதான்னு!..

உன்னைய எனக்கு கட்டி வெச்சாரு பாரு!.. எங்க அப்பாரு.. அவரைச் சொல்லனும்!...

ஏம்..புள்ளே?.. கட்டி வச்சதுல.. என்னா குறை?..

மர மண்டையில.. களி மண்ணு கூட இல்லையே..ன்னுதான்!..

ஏன்?... ந்நீ... பெரிய்ய.. அறிவாளி வம்சம்!.. ஒங்க அப்பா ஒரு மேதாவி!..

சொன்னாலும் சொல்லாட்டாலும் அறிவாளிதான்.. மேதாவிதான்!...

ஏன்.. நீதான் சொல்லேன்.. இம்மாம் பெரிய்ய்...ய கோவுரத்த யாரு கட்டுனாங்க..ன்னு!..

பரம்பர.. பரம்பரையா.. வந்த பாண்டிய ராசாக்க... மத்தவங்க..ன்னு ஆளாளுக்கு அவுக பங்குக்கு... கட்டுனது தான் இந்தக் கோயிலு... கோவுரம்.. எல்லாம்!.. தெரிஞ்சுக்க!... பூதம் வந்து கட்டுன.. கோயிலா இது?.. குண்டக்க.. மண்டக்க.. ன்னு எதையாவது உளறிக்கிட்டு!...

ம்ம்.. ஒங்க அப்பாரு.. உன்னைய படிக்க வெச்சாரு!..

ஏன்... உன்னையுந்...தான் படிக்க வெச்சாங்க... நீ பள்ளிக்கூடம் பக்கம் போனதே இல்ல... சினிமா கொட்டாய்... மூணு சீட்டு...ன்னு திரிஞ்சே!...

ஏன்.. அதெல்லாம் இப்போ? .. இன்னங்... கொஞ்சம் சத்தமா சொல்லு... நாலு பேரு கேக்கட்டும்!...

சரி.. அதெல்லாம் கிடக்கட்டும்.. அந்தா பாரு.. சாமி வருது!.. ஆத்தா.. மகமாயி.. காளியம்மா!.. மக்க.. மனுசங்களைக் காப்பாத்துடி..யம்மா!..

சரியான.. வெளக்கெண்ணெய்.. ஏம்..புள்ளே.. மருதைக்கு வந்து மீனாச்சி.. மீனாச்சி..ன்னு சாமி கும்புடாம.. மாரியாத்தா.. காளியாத்தா..ன்னுகிட்டு!...

ஒனக்கு ஒன்னும் புரியாது.. எல்லா சாமியும் ஒன்னுதான்!...

ஆமா...மா... எல்லாம் ஒன்னுதான்... நீயும் சமயத்துல சிரிச்சுக்கிற..  சமயத்துல சிலுத்துக்குற.. எனக்குத் தான் ஒன்னும் புரியலே!..

வீட்டுக்கு... வா... மச்சான்.. வெவரமா... சொல்றேங்!..

யாரப்பா.. அது?.. ஓரமா.. ஒதுங்கி நின்னு சாமி கும்புடுங்க!.. வண்டி வாகனம் வருதுல்ல!..

சரி தானுங்க!...

ஏம்மா.. காதுல கழுத்துல நகைய போட்டுக்கிட்டு.. அசால்டா நிக்கிறே.. கவனமா இரும்மா!...

பாத்தியா.. போலீஸ் காரவுங்க.. எவ்வளவு நல்ல மாதிரி சொல்றாங்க... நான் ஊருலய சொன்னேனுங்க ஐயா!..

வெளியூரு ஆளுங்களா.. நீங்க!..

ஆமாங்க.. வடக்கே கயிலாசம் பட்டி!.. மருதையில திருவுலா பார்க்க வந்தோமுங்க!..

அது ரொம்ப தூரமாச்சே!.. ராத்திரி சாமி பார்த்துட்டு எப்படி போவீங்க!..

இவுக.. அக்கா வீடு அனுப்பானடியில இருக்கு!.. அங்கே போய்க்குவோமுங்க!.. எங்க அண்ணன் ஒருத்தரு.. இங்கே கோயில்ல தான் வேலை செய்றாருங்க!..

யாருலா.. என்ன வேலை... ங்குறே!..

இன்ன.. வேலை...ன்னு இல்லீங்க.. எல்லா வேலையும் செய்வாரு!.. கோயிலயே.. சுத்திக்கிட்டுக் கிடப்பாரு!... சங்கு எடுத்து ஊதுவாரு... தார.. தப்பட்ட அடிப்பாரு...

அட.... நம்ம தமுக்கு!.. அவந்.. தம்பியா.. நீயி!...

ஒன்னு விட்ட பங்காளி..ங்க!..

இப்ப நீ.. அவனப் பார்க்கணுமா.. எங்கேயாவது போயிருப்பானே!..

இல்லீங்க... நான் அப்புறமா செல்ப்போன்..ல பேசிக்கிறேன்..

அப்படியா.. சரி.. ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க... அதோ அந்த மண்டகப் படியில பொங்கல் புளியோதரை...ன்னு பிரசாதம் தர்றாங்க.. வாங்கி சாப்பிட்டுட்டு பத்திரமா புறப்படுங்க!.. எங்கே பசங்க யாரும் கூட வரலையா!..

இல்லீங்க... இப்பதான் கலியாணம் கட்டி ரெண்டு வருசமாவுது!..

ஆகா!.. ரொம்ப நல்லது.. இந்த வருசம் போகட்டும்.. அடுத்த வருசம் மூணு பேரா வந்து சாமி கும்புடுங்க.. நா வரட்டுமா!.. சாமிக்கு பின்னால போகணும்.. வர்ரேன்.. தாயி!..

ஆகட்டுமுங்க!.. மனுசன்னா இப்படியில்ல... மவராசன் நல்லாருக்கணும்!.. 
***


கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்துருகி பத்தி
பண்ணியது உன்னிரு பதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் எது என்அம்மே புவி ஏழையும் பூத்தவளே!.. (12)
-: அபிராமி அந்தாதி :-
***
இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :- 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின்., 
ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *

ஐந்தாம் திருநாள் (14/4) 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

காலை - தங்கச் சப்பரம்.








-: இரவு :-
தங்கக் குதிரை வாகனம்
ஸ்ரீசொக்கநாதப் பெருமான் சோமாஸ்கந்த திருக்கோலத்திலும் -
மரகதவல்லி மீனாட்சி ஏகாந்த நாயகியாகவும்
தனித் தனியே குதிரை வாகனங்களில் எழுந்தருளினர்.






ஆறாம் திருநாள் (15/4) 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

காலை - தங்கச் சப்பரம்.

-: இரவு :-
விடை வாகன திருக்காட்சி 
ஸ்ரீ சுந்தரேசப் பெருமான் தங்க ரிஷப வாகனத்திலும் -
வேல்நெடுங்கண்ணி மீனாட்சி வெள்ளி ரிஷப வாகனத்திலும்
திருவீதி எழுந்தருளினர்.










அம்மையும் அப்பனும் நந்தி வாகனத்தில் 
எழுந்தருளும் திருக்கோலம் ஆருயிர்களுக்கு எல்லாம் 
அருள் தரும் அனுக்கிரகத் திருக்கோலம் என்பர் - ஆன்றோர்.
* * *


பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த 
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் 
எங்கெழுந்து அருளுவது இனியே!..
-: மாணிக்க வாசகர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

12 கருத்துகள்:

  1. ஆஹா...
    கிராமத்து மனுசங்க பேசுவது போல் அன்னை மீனாட்சியின் அழகிய படங்களுடன் அற்புதமான படைப்பு ஐயா...

    மீனாட்சியை கண்குளிர தரிசிக்க முடிந்தது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஆம் எல்லாக் கடவுள்களும் ஒன்றுதான் மீனாட்சி, காளியாத்தா மாரியம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி கிராமத்து பேச்சு வழக்கில் பதிவு மிகவும் ரசித்தேன் நன்று தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      கலகலப்பாக இருக்கட்டும் என்று தான்!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதிவில் தேவக்கோட்டையார் பாணி தெரிகிறதே. மதுரைக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
      என்னுடன் மதுரைக்கு வந்தமைக்கும் நன்றி..

      நீக்கு
  5. அருமையான பதிவு ...
    அழகான படங்களுடன்....

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்களுடன் பதிவு அருமை. உங்கள் பதிவுகளில் திருவிழாவை கண்டு வந்த நான் நேற்று ஆறாம் திருவிழாவை தரிசனம் செய்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஆகா.. மதுரையில் கண்குளிர தரிசனம்.. மிக்க மகிழ்ச்சி
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. ஆஹா கிராமத்துப் பேச்சுவழக்கில் உரையாடலில் பகிர்ந்த விதம் அருமை. படங்கள் வழக்கம் போல் வெகுச் சிறப்பு. மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..