நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 05, 2023

உத்திரம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 22
புதன் கிழமை
உத்திரத் திருநாள்

தஞ்சை திருவையாறு சாலையில் வீட்டுக்கு 
அருகில் 3 கி.மீ தொலைவில் உள்ளது   அரசூர் கிராமம்.. ஊரின் எல்லையில் முருகன் கோயில்..

கார்த்திகை, சஷ்டி நாட்களில் திரளான 
மக்கள் வழிபடும் கோயில்..

அரசூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணிஸ்வாமிக்கு 
எளியேன் தொடுத்த கவிமாலை


ஆறுபடை வீட்டின் அழகனே முருகா
ஆனந்த வரம் நல்குவாய்
வேறுதுணை யாரும் விதிவழியில் இல்லை
வினை மாற்றி நலம் காட்டுவாய்

குளிர்மேகம் தேடும் பயிராக வாடினேன்
குமரா உன் அருள் தேடினேன்..
வழிமீது வழியாக விதிவழி ஆடினேன்
நானுமொரு கவி பாடினேன்..

உத்திரத்தின் காவடியில் ஆடி வரும் 
முருகா உன்பாதம் நாடி வந்தேன்
உயிரோடும் உணர்வோடும் ஒன்றாகி 
நின்றவன் உன்னையே பாடி வந்தேன்..

தடி கொண்டு அடித்தாலும் தாங்கியே 
காப்பது கந்தா உன் கையல்லவா..
தாயாகித் தந்தையாய் தமிழாகி நிற்பது
என்றென்றும் நீயல்லவா..

ஈசன் திருமகனே எந்தையே முருகா
என்னோடு நீ நின்றனை 
என்தீவினை கண்டு ஈடேறுவான் என்று
இன்னருளும் தான் தந்தனை..

தண்டாயுதம் கொண்டு தனியாக நின்றவா 
தமிழ் கொண்டு உனைப் போற்றினேன்
தஞ்சமென்று வந்து தலைவா நின் வாசலில் 
நானும் ஒரு சுடர் ஏற்றினேன்..

ஆறுபடை வீட்டின் அருளான முருகா 
அஞ்சாதே எனச் சொல்லுவாய்..
ஆதாரம் நீயென்று ஆலயம் வருவோர்க்கு
அன்போடு வழிகாட்டுவாய்..

கோமகள் குஞ்சரி குறமகள் வள்ளியும்
வரவேணும் வரவேணுமே
வண்ண மயிலாடி வர வளர் சேவல் கூவி வர
வசந்தங்கள் தான் வேண்டுமே..

நான் செய்த பிழையெலாம் இல்லாது 
அகல என் சாமி வழி காட்டுவாய்..
நன்றாகும் நாளில் நல்லதொரு பொழுதில்
நல்ல அருள் நீ காட்டுவாய்..


செந்தூரின் முருகனே சிவமுத்துக் குமரனே
எந்தன் குரல் நீ கேட்டு வா
நானாக நான் செய்த பிழை தன்னை நீக்கியே
நீங்காத நல்லருள் நீ கூட்டுவாய்..

ஐயா உன் அருளின்றி அருமருந் தொன்றில்லை
அருள் கொண்டு நீ ஆற்றுவாய்
அரசூரின் எல்லையில் ஐயா நீ என்றென்றும் 
அன்போடு வழி காட்டுவாய்..

பரங்குன்றம் தன்னிலே பைந்தமிழ்க் குஞ்சரி
குலமகள் ஆகி நின்றாள்
மங்கலம் காணுவார் மனையறம் பாடுவார்
ஆடுவார் ஆடி மகிழ்வார்..

மனம் எலாம் மங்கலம் மனை எலாம் நன்கலம்
 அருள்கின்ற அரசூரிலே  
ஆதரவு நல்குவாய் அன்பு முகங் காட்டுவாய்
அடியவனின் குலம் வாழவே..

சித்தனுக்குச் சித்தன் என்றாகி நிற்கின்ற
செவ்வேளும் நீ அல்லவோ..
தென்பழனி மீதிலே திசையாளும் முருகனே 
பரமனே ஞான மூர்த்தி

தண்டாயு தத்துடன் தவக் கோலம் கொண்டனை 
சிவ குமரன் நீ அல்லவா
குன்றாது குறையாது   அளக்கின்ற குமரனே
அரசூரின் மன்னன் அல்லவா..


எங்கெங்கு நின்றாலும் நினைக்கின்ற 
நெஞ்சிலே நிலை கூட்டும் ஏரகத்தான்..
கதிராடும் வயல் தன்னில் சதிராடி 
நிற்கின்ற காவேரி ஊரகத்தான்..

ஈசனொடு வேதம் பேசுகின்ற ஞானம் 
தான் கொண்ட சீரகத்தான் 
சீராடும் நெஞ்சத்து அடியார்கள் தன்னோடு
அரசூரின் ஆறுமுகத்தான்..

தணிகாசலம் நிற்கும்  தலைவனே 
பணிபவர் பகை தீர்க்கும் செல்வகுமரா
குஞ்சரி தன்னோடு குறமங்கை நின்றாட
கொண்டாடும் கோலக் குமரா..

அருகாக நிற்கும் எனை அரசாக மாற்றுவாய்..
அடியேனும் கை கூப்பினேன்
அரசூரின் நாயகா ஆயுளும் நல்குவாய்
ஆரோக்யம் அருளுவாயே..

மழைமுகில் இழைகின்ற சோலை வளர் 
முருகா பிணி தீர்க்க வருவாயப்பா
முன்வினை தீர்ப்பாய் முகந்தனைப் பார்ப்பாய்
உகந்தெனைக் காப்பாயப்பா..

தமிழ் கூறும் இறைவனே அடியவர்க்
கன்பனே அழகனே தமிழ்க் குமரனே
தண்கழனி அரசென அரசூரில்  நிற்கின்ற
தங்கமே தவச் செல்வனே..

இணங்கி நின்றிரப் போர்க்கும் வணங்கி வழி செல்வோர்க்கும் வாழ்வருள் முருகா போற்றி..
நலிகின்ற நிலை நீக்கி பொலிகின்ற நலம் 
நல்கும்  கந்தனே போற்றி போற்றி..

உயிர் தனில் ஓவியம் என்று நீ வந்தருள்க
வரமெலாம் தந்து அருள்க..
வருகவே வருக என வரவேற்கும் கவி கேட்டு
கந்தனாய் காட்சி தருக..


சிங்கார மயிலோடு கொடிச்சேவல் தன்னோடு
குறையெலாம் தீர்க்க வருக..
குடி கொண்ட அடியார்கள் குறையேதும் பாராமல் கோடானுகோடி தருக..

குஞ்சரி குறமகள் கொண்டாடும் குமரனே
வருகவே வருக வருக
அரசூரின் அழகனே செண்டாடும் வேலனே
வருகவே வருக வருக..

வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா..
***

18 கருத்துகள்:

  1. முருகனுக்கு கவி மாலை அருமை.
    ஆறு படை வீட்டின் முருகா அருள்வாய் அனைவருக்கும்.
    முருகா சரணம், கந்தா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      முருகா சரணம்..

      நீக்கு
  2. ஐயா உன் அருளின்றி அருமருந் தொன்றில்லை அருள் கொண்டு நீ ஆற்றுவாய்


    அருமை.. அருமை.. முருகா நீ இரங்காய் எனில் புகல் ஏது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..

      முருகா சரணம்..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை படங்களில் முருகனை தரிசித்துக் கொண்டேன். பங்குனி உத்தரத்தன்று அருமையான பாமாலையை படிக்கத்தந்த தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். தாங்கள் இறைவனுக்கு தொகுத்தளித்த பாமாலை மிகவும் நன்றாக உள்ளது.

    /அருகாக நிற்கும் எனை அரசாக மாற்றுவாய்..
    அடியேனும் கை கூப்பினேன்
    அரசூரின் நாயகா ஆயுளும் நல்குவாய்
    ஆரோக்யம் அருளுவாயே../

    தப்பாது ஆயுள் உள்ளவரை ஆரோக்கியத்தை தந்து விடு முருகா... என நானும் பக்தியோடு வேண்டிக் கொள்கிறேன். அது ஒன்றுதான் நான் வேண்டுவது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆயுள் உள்ளவரை ஆரோக்கியத்தை தந்து விடு முருகா... அது ஒன்றுதான் நான் வேண்டுவது.//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      முருகா சரணம்..

      நீக்கு
  4. முருகனுக்கு அரோகரா
    கருப்பபிள்ளைமடம் முருகன் கோயிலிலிருந்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி ..

      முருகா சரணம்..

      நீக்கு
  5. மிக அருமையான பாமாலை. இன்று குலதெய்வம் கோயிலுக்குப் போக நினைத்து முடியலை. அவள் அருளால் அழைக்க வேண்டும். கந்தனுக்கு அரோஹரா! இன்னிக்கு இங்கே பூந்தேர் உற்சவம் என நினைக்கிறேன். நேற்று மட்டையடி உற்சவம் ஆனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கே பூந்தேர் உற்சவம் என நினைக்கிறேன்.//

      ஸ்ரீரங்கம் உற்சவங்களை Fb ல் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ..

      முருகா சரணம்..

      நீக்கு
  6. கவிதை மிக மிக நன்றாக இருந்தது (இது சும்மா எழுதும் டயலாக் அல்ல).

    செய்யாது நான் செய்த பிழை தன்னை - இது மாத்திரமே எனக்கு பொருள் குற்றம் உள்ளது போலத் தெரிந்தது. தெரியாது நான் செய்த என்று வந்திருந்தால் சரி.

    பெரும் கவிஞர்கள், இதனையே எழுதியிருந்தால் முதல் வரியின் ஆரம்ப வார்த்தைக்கு ஈடாக அடுத்த வரி ஆரம்ப வார்த்தை அமைந்திருக்கும். அப்படி இல்லாததனால் சுவை குன்றவில்லை. சந்தத்தோடு இருந்தது. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களது பாராட்டுரைக்கு நன்றி..

      ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன்.. அது சரியான அர்த்தம் தரவில்லை..

      மாற்றி இருக்கின்றேன்.. கவனிக்கவும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      முருகா சரணம்..

      நீக்கு
  7. துரை அண்ணா உங்கள் கவி மாலை அழகு! அருமை.

    இன்று பங்குனி உத்திரம் - திருவரங்கம் தாயாருக்கு இன்று விசேஷம்.. சாஸ்தா பூஜையும் எங்கள் ஊரில் நடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கத்தில் திருவிழா அறிவேன்..

      கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பதிவு போட்டிருக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..

      முருகா சரணம்..

      நீக்கு
  8. மங்குனி உத்தரம் முருக வணக்கம். ஓம் முருகா. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      முருகா சரணம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..