நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 12, 2023

எள்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 29
  புதன்கிழமை


எள்..

நம் நாட்டுப் பாரம்பரியங்களில் இதுவும் ஒன்று..


எள்ளில் இருந்து எடுக்கப்படுவதே
நல்லெண்ணெய்.. மருத்துவ குணங்கள் நிறைந்தது..

இது எல்லாருக்கும் தெரிஞ்சது தானே!.. 

தெரிஞ்சிருந்தாலும் மறுபடியும் சொல்றதில எனக்கொரு சந்தோசம்!..

உன்னோட சந்தோசத்துக்காக எங்களப் போட்டுக் குடையிறதா?..

அப்படியெல்லாம் இல்லை.. நல்ல
எண்ணெய்யோட மருத்துவம் எங்கேருந்து ஆரம்பிக்குது?..

யாருக்குத் தெரியும்?..

நல்லெண்ணெயில இருந்து தான் வாழ்க்கையே ஆரம்பிக்குது.. தொட்டுத் தொடங்குறதும் நல்லெண்ணெயில.  விட்டு விலகுறதும் நல்லெண்ணெயில!.. 

சரி.. சரி.. விசயத்துக்கு வா!..

எண்ணெய தலைக்கிட்டுக் குளிக்கிறதில இருந்து!..

அவனும் இவனும் எண்ணெ தேச்சிக் குளிக்காமயே நல்லா இல்லையா?..

அவனும் இவனும் எண்ணெ தேச்சிக் குளிக்காம இருக்கலாம்.. அவன் சூழ்நிலைக்கு அது தேவையில்லே தான்.. ஆனா நல்லா இருக்கான்..ந்னு மட்டும் நம்பாதே.. நல்லா இருந்தா எதுக்கு அடுக்கு மேல அடுக்கு வச்சி ஆசுபத்திரி கட்றான்?..

சரி.. அதை விடு.. வந்த விசயத்தச் சொல்லு..

எள்ளில் ஜிங்க் என்னும் சத்து  நிறைந்துள்ளது. 

என்ன.. நல்ல தமிழா!..


ஆமாம்.. நல்லெண்ணத் தமிழ்.. தமிழும் நல்லது தான்..

இந்த எண்ணெயில் இருந்து எலும்புகளுக்கான கால்சியம் இயற்கையாகவே கிடைக்கின்றது.. 


நல்லெண்ணெய் சற்றே கசப்பும் இனிப்பும் கலந்த சுவையினை உடையது..

நல்லெண்ணெய் கர்ப்பப் பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கு உறுதியையும் கொடுத்து நோய் எதிர்ப்பாற்றலையும் தருகின்றது..

இதில் உள்ள  செசாமின் (Sesamin), எனும் நுண்பொருள் சாதாரண கிருமி முதற்கொண்டு  புற்றுநோய் வரை விரட்டியடிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது..

47 சதவிகித பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலத்தை உடையது  நல்லெண்ணெய்..

இயற்கையான எந்த  எண்ணெயினாலும்  ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதில்லை.. 

இயற்கையான நல்லெண்ணெய்க்கு என்ன பண்றது?..

இருபது கிலோ திடமான எள்ளையும் ஒரு கிலோ நல்ல வெல்லத்தையும் செக்கில் இட்டு ஆட்டிப் பிழிந்து எடுத்தால் - நல்லெண்ணெய்..  

உத்தேசமாக இருபது கிலோ எள்ளில் இருந்து எட்டு லிட்டர் வரைக்கும் எண்ணெய் கிடைக்கலாம்..

இதுவே  இயற்கையான எண்ணெய்.. அருமையான மணமும் சுவையும் உடையது.. 


அந்தக் காலத்தில்
செக்கில் ஆட்டி எடுத்த  எண்ணெய் எதுவானாலும்   அப்படியே வெயிலில் காய வைத்து எவ்வித வடி கட்டுதலும் இன்றி  உபயோகித்தனர். 

மரச் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட எண்ணெய் பார்ப்பதற்கு பளிச் என்று இருக்காது.. 

அடர்த்தியாகவும், பழுப்பு நிறமாகவும், நறுமணமாகவும், வழவழப்பாகவும் இருக்கும் ..
ஒரு வருடத்திற்கு கெட்டு போகாமல் இருக்கும்..

இதற்குக் காரணம் அந்த எண்ணெயில் உள்ள ஊட்டச் சத்துக்கள், உயிர் சத்துக்கள் தான்..


தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டாரத்தின் புதிதாக ஆட்டி எடுக்கப்பட்ட எண்ணெய் குடத்தை வைத்து இனிப்பு வகைகளுடன் வீட்டு தெய்வம் கும்பிடுவது உண்டு..

நல்லெண்ணெய்யை தொடர்ந்து  உபயோகித்தால் வாத நோய் வராமல்  தடுக்கலாம்.. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ  கொலஸ்ட்ராலைக் குறைத்து
இதயத்தைக் காக்கின்றது..

இன்றைக்கு எண்ணெயை
வடி கட்டித் தருவதாகச் சொல்லி  நம்மை அடி முட்டாள் ஆக்கி விட்டார்கள்..

இதை வீட்டுக்குள் ஆச்சியும் ஆத்தாவும் சொன்னபோது யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை.. 

அப்படி கேட்காமல் போன காதுகளுக்கு நல்லெண்ணெய் வைத்தியமும் உண்டு.. 

ஆனால் அதை முறையாக சித்த வைத்தியம் பயின்றவரிடம் தான் செய்து கொள்ள வேண்டும்..  

ள்ளிக்கு பிரம்மாண்டமான இலுப்பைத் தோப்பு வழியாகத் தான் ஒற்றையடித் தடம்.. 


வழியில் ஙைய்ங்.. ஙைய்ங்.. என்று ஓயாத சத்தத்துடன் செக்குகள்.. அந்தப் பகுதியில் எண்ணெய் வாசமே கமழ்ந்திருக்கும்.. 

வழி நடந்து செல்லும் எங்களைக் கூப்பிட்டு செக்கினுள்ளிருந்து  தேங்காய் பிண்ணாக்கும் எள் பிண்ணாக்கும் சுடச்சுட அள்ளித் தருவார்கள்.. 

எண்ணெய் கசியக் கசிய இருக்கும் அவை அத்தனையும் சத்து என்று அப்புறமாகத் தான் புரிந்தது..

அந்த நாட்கள் எல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை...



எள் உருண்டை , கடலை மிட்டாய் என்று இனித்திருந்த நாட்கள் இனி எப்போது வரும்?..


இந்தப்படத்துக்கும்
பதிவுக்கும் என்ன சம்பந்தம்?..

ஒன்றுமில்லை.. அதான்!..
**

கவி காளமேகப் புலவர் 
பாம்பையும் எள்ளையும் 
இணைத்துப் பாடிய 
சிலேடை வெண்பா..

ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரஎனும் பாரிற்பிண்ணாக்கும் உண்டாம்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது..
***

பாடலின் விளக்கம்:

பாம்பு:
பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் 
குடத்தில் அடைந்து கொள்ளும்.

படமெடுத்து ஆடும் போதே 'உஸ்'  என்று இரையும்.

பாம்பாட்டி பாம்புப் பெட்டியின் மூடியைத் 
திறந்தால் பாம்பு தன் முகத்தைக் காட்டும்.

ஓடிப்போய் மண்டையைப் பற்றினால் சுருட்டிக் கொண்டு பரபர என்று அசையும்.

பார்க்கப்போனால் அதற்குப் பிளவுபட்ட நாக்கும் உண்டு.

எள்:
எள்ளானது செக்கில் ஆடி எண்ணெயாகக் குடத்தில் அடையும்.

செக்கில் ஆட்டப்படும் போது செக்கின் இரைச்சல் கேட்கும்.

எண்ணெய்க் குடத்தின் மூடியைத் திறந்தால் நம் முகத்தை அது நிழலாகக் காட்டும்.

நம் மண்டைக்குள் (செல்லும் பொருட்டு) பரபர என்று தேய்க்கப்படும்.

பார்க்கப்போனால் எள்ளுக்குப் பிண்ணாக்கும் 
உண்டு.

இத்தன்மைகளால் பாம்பும் எள்ளும் பொருத்தம் என்று சொல்வாயாக!..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

14 கருத்துகள்:

  1. காளமேகப்புலவர் பாட்டு உட்பட பதிவை ரசித்தேன்.  முன்னர் கிடைத்த நல்லெண்ணெய் சுவை மிகுந்தது.  இப்போது செக்கு எண்ணெய் என்று சொன்னாலும் சரி, ஆர்கானிக் என்று சொன்னாலும் சரி என்னவோ குறைகிறது.  கசப்பு சுவை மட்டுமே தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது செக்கு எண்ணெய் என்று சொன்னாலும் சரி, ஆர்கானிக் என்று சொன்னாலும் சரி என்னவோ குறைகிறது. //

      பலரும் இப்படித்தான் சொல்கின்றனர்..

      ஏனென்று தெரியவில்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. வாரம் இருமுறை புதன் சனி கொஞ்சமாவது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கணுமாம். நான் ஆயில் புல்லிங்கும் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு ஆயில் புல்லிங் செய்து கொண்டிருந்தேன்.. இப்போது இல்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. மிக அருமையான பதிவு. காளமேகப் புலவர் பாட்டும், விளக்கமும் அருமை.
    வாய் புண் வந்தால் தயிரில் நல்லெண்ணய் விட்டு வாய் கொப்பளிக்க சொல்வார்கள். சரியாகி விடும். என் மாமியார் எண்ணெய் தேய்த்து குளிப்பதை விடாமல் செய்தார்கள்.
    மருத்துவர் வேண்டாம் என்று சொன்னார் என்று விட்டு விட்டு அவதி படுகிறோம்.

    எள் உருண்டை பிள்ளையார் சதுர்த்திக்கு உண்டு கண்டிப்பாய்.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மருத்துவர் வேண்டாம் என்று சொன்னார் என்று விட்டு விட்டு அவதி படுகிறோம்..//

      காலக் கொடுமை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. எள்ளைப்பற்றிய படங்களும், பயனுள்ள செய்திகளும் அருமை.

    "நெய்யில்லா உண்டி பாழ்" என்பதை போல "எள் இல்லா இட்லி மிளகாய் பொடியும் பாழ்"
    எள்ளுருண்டை . எள் சாதம் என எள் மணக்கும் உண்டிகள் எப்போதுமே சுவையானது.

    செக்கெண்ணைதான் முன்பு தவறாது வாங்கினோம். நானும் சமையலுக்கு முக்கால்வாசி நல்லெண்ணைதான் பயன் படுத்துகிறேன் .

    காளமேகம் புலவர் பாடிய பாடல் அருமை. தேங்காய்க்கும், நாய்க்கும் உள்ள ஒற்றுமை போல..

    படத்தில் அந்தப் பெண் அழகாக உள்ளார்.
    "சம்பந்தம் ஒன்றுமில்லை அதான்." என்று சொல்லி விட்டீர்கள். ஆனால், வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் கண்டிப்பாக இந்தப் பெண்ணைப் போல இளமை குன்றாது அழகாக இருக்கலாம்.

    நாங்கள் எங்கள் பிறந்த வீட்டிலும் சரி, திருமணமாகி குழந்தைகள் பிறந்து வளர்ந்து வரும் போதும் சரி, வாரம் ஒருமுறை நலெண்ணெய குளியல் கண்டிப்பாக உண்டு. பின் காலப்போக்கில் இப்போது அந்த பழக்கம் துரதஷ்டவசமாக விட்டுப் போய் விட்டது.

    நல்லபதிவு. ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் கண்டிப்பாக இந்தப் பெண்ணைப் போல இளமை குன்றாது அழகாக இருக்கலாம்//

      நல்ல அழகு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  5. எள் பிண்ணாக்கெல்லாம் சின்ன வயசில் தாத்தா வீட்டில் சாப்பிட்டிருக்கோம். பின்னர் கிடைக்கவில்லை. நான் இப்போவும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் வைத்து வெந்நீரில் சூடாக்கித் தலைக்குத் தேய்த்துக் கொள்வேன். நல்ல பலன் அளிக்கும். தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயம், வசம்பு, கொம்பரக்கு, மற்றும் மருந்து சாமான்கள் சேர்த்துக் கஸ்தூரி மஞ்சளும் சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு உடம்புக்குத் தேய்ச்சுக்கலாம். இதை அம்மா எப்போவும் தயார் நிலையில் வைச்சிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூச்சிக் கடிக்காக இப்போது மருந்து சாப்பிடுவதால் நல்லெண்ணய்க்குத் தடை...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..