நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 11
திங்கட்கிழமை
திருப்பதிகப் பாடல்கள்
நன்றி: பன்னிரு திருமுறை
கரும்பைப் பற்றிய பதிவுகள் தொடரும் நிலையில் வழக்கம் போல தேவாரத்தில் கரும்பு பேசப்படும் அழகினைக் காண்போம்..
இந்தப் பதிவில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச் செய்த திருப்பாடல்கள் சிலவற்றை சிந்திப்போம்..
கானூர் முளைத்த கரும்பினை.. என்று ஈசனைப் போற்றுகின்ற அப்பர் ஸ்வாமிகள் -
கரும்பின் இன்மொழிக் காரிகை.. என்றும்
இன்சொற் கரும்பனையாள்.. என்றும்
கரும்பமரும் மொழி மடவாள்.. என்றும் அம்பிகையை புகழ்ந்தேத்துகின்றார்..
திரு ஊர்த்தொகை
ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
4/15/2
திரு இடைமருதூர்
கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனி மலர்க்குழற் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கு இடை மருதனே.
(5/14/10)
திரு ஐயாறு
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே.. 5/28/7
திருவீழிமிழலை |
திருவீழிமிழலை
காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையில் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும்
வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே ( 4/64/2)
திருவீழிமிழலை
பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார்
பெரும்பற்றப் புலியூர் மூலட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார்
இன்னம்பரார் ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகாவூரார்
கருப்பறியலூரார் கரவீரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழிமிழலையே மேவினாரே.. 6/51/6
திருவீழிமிழலை
ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.. 6/52/2
திருபுள்ளிருக்கு வேளூர்
(வைத்தீஸ்வரன் கோயில்)
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே..6/54/3
பெரும்பற்றப்புலியூர்
(சிதம்பரம்)
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/6
திருநாகேஸ்வரம் |
திருநாகேச்சரம்
(திருநாகேஸ்வரம்)
அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கும் அரியான் தன்னை
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறல்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே. (6/66/9)
திருக்கயிலை
மாலை எழுந்த மதியே போற்றி
மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..6/56/3
திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
ஓம் நமசிவாய. நமசியவாய வாழ்க. நல்ல பதிவு.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம் ..
நலம் வாழ்க..
DD திருக்குறளில் புகுந்து விளையாடுவதுபோல நீங்கள் தேவார, திருவாசகங்களில் சிறந்து விளங்குகிறீர்கள்.
பதிலளிநீக்குஅப்படி ஒன்றும் இல்லை.. இதற்கு சிலநாட்களில் தனிப் பதிவு தர வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் நன்றி ஸ்ரீராம் ..
நலம் வாழ்க.
தேவார பதிகங்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஇயற்கை நலம் அருமை.
தேவார பாடல்களில் கரும்பு இடம்பெற்று இனிமை சேர்த்தது.
தித்திக்கும் சிவபெருமான் அல்லவா!
நானேயோ தவஞ்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே
அன்பின் வருகையும்
நீக்குதிருவாசகப் பாடலும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
நலம் வாழ்க.
ஓம் நமசிவாய வாழ்க வையகம்
பதிலளிநீக்குஓம் நமசிவாய
நீக்குவாழ்க வையகம்..
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
பாசுரங்கள் பக்தியை உண்டுபண்ணுகின்றன. நீங்கள் தலத்திற்கு யாத்திரை சென்று எழுதினால் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குதிருமலைக்குச் சென்று தரிசனம் செய்தும், திரு ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனைத் தரிசித்தும் பல சிவாலய தரிசனம் செய்தும் பல பதிவுகள் எழுதியிருக்கின்றேன்..
நீக்குகடந்த ஆண்டு சப்த ஸ்தானம் திரு நெய்த்தானம் , குரங்காடுதுறை, ஜகத்ரட்சகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு தரிசனப் பதிவுகள் வந்திருக்கின்ற்னவே...
ஒரு வருடமாக கால் வலியாலும் வேறொரு பிரச்னையாலும் வெளியூர் செல்வது குறைந்து விட்டது..
நெல்லை அவர்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
அருமை ஐயா...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
ஓம் சிவாய நம..
தேவார, திருவாசகங்களைக் கரைத்துக் குடித்திருக்கீங்க என்பது புரிகிறது. மிக அருமையான தொகுப்பு. நெல்லை சொல்லி இருக்காப்போல் அந்த அந்த ஸ்தலங்களுக்குச் சென்று வந்த பின்னரும் விரிவாக எழுதி இருக்கலாம். இன்னும் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்கு//தேவார, திருவாசகங்களைக் கரைத்துக் குடித்திருக்கீங்க என்பது புரிகிறது.//
நீக்குஇதற்கெல்லாம் எனக்கு அருகதை உண்டோ..
ஏதோ தெரியும்.. அவ்வளவு தான்..
// அந்த அந்த ஸ்தலங்களுக்குச் சென்று வந்த பின்னரும் விரிவாக எழுதி இருக்கலாம்..//
காலம் எனக்கு ஏதோ கட்டளையிடுகின்றது போலும்..
கடந்த ஆண்டு சப்த ஸ்தானம் திரு நெய்த்தானம் , குரங்காடுதுறை, ஜகத்ரட்சகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு தரிசனப் பதிவுகள் வந்திருக்கின்ற்னவே..
சென்ற புரட்டாசியில் வைத்தீஸ்வரன் கோயில், திரு ஆரூர் தரிசனப் பதிவுகள் தந்திருக்கின்றேனே..
இப்போது புதிதாக எந்தத் தலமும் செல்வதற்கு இயலவில்லை.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகிய படங்கள். அமுதமாய் தித்திக்கும் பாசுரங்கள். தெய்வீகமான தேவார திருவாசகத்தை நன்கு படித்தறிந்து மனனமாக உருவேற்றியுள்ளீர்கள். அந்த பக்திக்கு முன் நானெல்லாம் வெகு சாதாரணம். இறைவன் மேல் தாங்கள் கொண்டிருக்கும் உங்களின் ஆழ்ந்த பக்திக்கும், தேவார, திருவாசக பாடல்களின் பொருளறிந்து தாங்கள் பதிவில் பொருத்தும் பாங்கிற்கும் உங்களை பணிவுடன் வணங்கிக் கொள்கிறேன். இறைவனை பக்தியோடு உணர்வதுடன் அவர்தம் அடியார்களை வணங்குவது சாலச் சிறந்ததாயிற்றே.. வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிலளிநீக்குமனனம் எல்லாம் கிடையாது..
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து - என்று திருவாசகத்தில் ஒரு வாசகம்..
அதைப் போல ஏதேதோ நினைவுகளின் போராட்டத்தில் உழன்று கொண்டிருக்கும் நான் தங்களுக்கு அடியார் போல் தெரிகின்றேன் என்றால் -
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் - என்று அபிராம பட்டர் சொல்கின்ற மாதிரி தான்..
நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய் என்ற திருநாவுக்கரசர் திருவாக்கு போல -
பணிவிலும் பணிவாக வணங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..
தங்களது அன்பின் வருகையும் கருத்தும் நன்றி..
ஓம் நம சிவாய..
திருப்பதிகப் பாடல்களை வாசித்தேன். இனிமை. அப்பப்ப நீங்க தரும் போது வாசித்துக் கொள்கிறேன்! சின்ன வயதில் மனதுக்குள் ஏறியது மட்டுமே நினைவிருக்கு.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் நன்றி சகோ.
நீக்குஓம் நம சிவாய..
தேவாரப் பதிகங்களுடன் நிறைவான திருவாலய தரிசனங்கள் .
பதிலளிநீக்கு