நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
சகலகலாவல்லி மாலை
பிறந்த கதை
திருநெல்வேலியை அடுத்துள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் சிவகாமசுந்தரி தம்பதியருக்கு திருச்செந்தில் நாதனின் திருவருளால் மகனாகப் பிறந்தார் குமரகுருபரர்..
ஐந்து வயது வரை குழந்தைக்குப் பேச்சு வரவில்லை..
இதனால் மிகுந்த வேதனை அடைந்த பெற்றோர் திருச்செந்தூர் கோயிலில் தங்கி கடும் விரதம் ஏற்று வழிபட்டனர்..
நாற்பத்தைந்தாம் நாளில் பேச்சு வரப் பெற்ற குமரகுருபரர் செந்தில் நாதனைப் புகழ்ந்து பாடினார்.. பணிந்தார்.. துதித்தார்..
அதுவே - கந்தர் கலிவெண்பா ..
இவரது பேர் எங்கும் பரவியது..
திருமலை நாயக்கரது அழைப்பை ஏற்று மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மனின் பேரில் பிள்ளைத் தமிழ் பாடியபோது மீனாட்சியம்மன் சிறு பெண்ணாகத் தோன்றி முத்துமாலை பரிசளித்துச் சென்றாள்..
இந்நிலையில் திருவாரூருக்குச் சென்று அங்கு தியாகராஜப் பெருமானைப் போற்றி திருவாரூர் நான்மணி மாலை பாடினார்..
பின் அங்கிருந்து தருமபுரம் திருக்கயிலாய பரம்பரை ஆதீனத்துக்குச் சென்றார்.. அங்கு ஆதீனகர்த்தராக இருந்த மாசிலாமணி தேசிக ஸ்வாமிகளை குருவாக ஏற்றார்..
தருமபுரம் மடத்திற்கு வந்த பிறகு, சைவ சித்தாந்த ஆய்வில் ஆழ்ந்து - தம்பிரான் பட்டத்தையும் பெற்றார்..
சில காலம் கழித்து குருவின் ஆணைப்படி, காசிக்குச் சென்றார்..
அப்போது வடக்கில் முகலாயர் ஆட்சி..
கோயில்கள் சொல்லும் நிலையில் இல்லாதிருந்த காலம்..
காசிக்குச் சென்ற குமரகுருபரர் அங்கே பழுது பட்டிருந்த ஸ்ரீ கேதாரேஸ்வர் கோயிலைப் புதுப்பிக்க எண்ணினார்..
அத்துடன் காசியில் சைவத் திரு மடம் ஒன்றையும் அமைப்பதற்கு விரும்பினார்..
திருமடம் அமைப்பதற்கு இடமும் வேண்டும்.. பொருளும் வேண்டும். அப்போது டில்லியில் பாதுஷாவாக ஷாஜஹான்.
ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷிக்கோ காசியில் அரச பிரதிநிதி.
காசியில் திருமடம் கட்டுவதற்கு அனுமதி
பெறுவதற்காக குமரகுருபரர் அரசவைக்குச் சென்றார்..
அங்கே பன்மொழிப் புலவர் இருப்பர் என்ற நினைவில் செந்தமிழில் பேசினார்..
அரசவையில் இருந்தவர்கள் எள்ளி நகையாடி இகழ்ந்து பேசினர்..
ஸ்வாமிகளுக்கு
அங்கிருந்த மொழிப் பிரச்னையால் தாரா ஷிக்கோவிடம் தனது கோரிக்கையைச் சொல்ல் முடியவில்லை..
அங்கிருந்தவர்களின் ஏளனத்துக்கு ஆளானார்..
மற்ற சமயத்தவர்களை இழிவாகக் கருதும் வழக்கமுடைய அவர்கள் ஸ்வாமிகளை மதிக்கவும் இல்லை.. ஆசனம் கொடுத்து மரியாதை செய்யவும் இல்லை..
ஆனாலும், அனுமதி பெறவேண்டியிருந்தது.
ஸ்வாமிகள் தமது இருப்பிடத்திற்குத் திரும்பினார்..
தமக்கு ஹிந்துஸ்தானிய மொழி சித்திக்க வேண்டும் என, சகலகலைகளுக்கும் தாயாகிய ஸ்ரீ சரஸ்வதி தேவியைச் சரணடைந்தார்..
சகலகலாவல்லி மாலை பாடித் துதித்தார்..
அந்த அளவில் ஸ்ரீ சரஸ்வதி குமரகுருபரர் நாவில் ஹிந்துஸ்தானி மொழியினை அமரச் செய்தாள்..
மறுநாள் காலையில்,
தம்முடைய யோக சக்தியால் சிங்கம் ஒன்றை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்து கொண்டு தாரா ஷிக்கோவின் அரசவைக்கு மீண்டும் சென்றார்..
சிங்கத்தின் மீது வருகின்ற ஸ்வாமிகளைக் கண்டதும்
அரசவையில் ஏளனம் செய்தவர் அனைவரும் வெலவெலத்துப் போயினர்..
கண் எதிரில் நடப்பதைக் கண்ட தாரா ஷிக்கோ இறங்கி வந்து நின்றான்.. அவனிடம் தமது கோரிக்கையை அவனது மொழியிலேயே எடுத்துரைத்தார்..
இதைக் கேட்ட தாரா ஷிக்கோ - ஒரு இரவிற்குள் இவரால் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்ள முடிந்தது எப்படி?.. - என்று வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தான்..
அவனுள் பயமும் பணிவும் ஏற்பட்டது..
இருந்தாலும், ஏதோ மாய வேலை காட்டுகின்றார் - என்று எண்ணினான்..
மீண்டும் முரண்டு..
கருடன் பறக்காத காசியில் உங்களுக்கான இடத்தில் அது வந்து பறக்கட்டும்.. அடையாளம் காட்டட்டும்.. பார்க்கலாம் !.. - என்றான்..
ஸ்வாமிகள் புன்னகைத்தார்..
அந்த அளவில் கருடன் வட்டமிட்டுப் பறந்தது..
இறுமாப்பு அழியப் பெற்றதால் தாரா ஷிக்கோ
ஸ்வாமிகளுடைய விருப்பப்படி திருமடம் கட்டிக் கொள்ள இடம் கொடுத்ததோடு பொருளும் வழங்கி - தன் பிழையை தீர்த்துக் கொண்டான்.
முகலாயர்களால் ஹிந்து கோயில்கள் பலவும் அழிக்கப்பட்ட நிலையில் சைவத் துறவி ஒருவர் தான் பெற்ற அருட்திறத்தால் திருமடம் எழுப்பியதும் இடிந்து கிடந்த கோயிலை புனரமைத்ததும் மிகப் பெரிய விஷயம்..
ஸ்ரீ குமரகுருபரர் காசியில் எழுப்பிய திருமடமும் அதன் கிளையாக திருப்பனந்தாளில் ஏற்படுத்தப்பட்ட திருமடமும் இன்றளவும் சிறந்து விளங்குகின்றன..
தாமிரபரணிக் கரையில் பிறந்து வளர்ந்து வைகைக் கரையில் நடந்து காவிரிக் கரையில் வாழ்ந்து கங்கைக் கரையில் தமிழையும் சைவத்தையும் வளர்த்த பூரணர் ஆகிய ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் - (1.6.1688)
விளம்பி வருடம் வைகாசி -18, தேய்பிறை திரிதியைத் திதியன்று இறைவனடியில் கலந்தார்.
சமய இலக்கியங்கள் பலவற்றோடு - நீதிநெறி விளக்கம் எனும் அற நூலை இயற்றியவர் இவரே..
ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகளின் காலம் 1625 - 1688 என்கிறது விக்கி..
கீழ்வரும் நீதிநெறி விளக்கத்தின் பாடல்கள்
ஏழாம் வகுப்பில் பயின்றவை..
நீதியாவது நெறியாவது
என்றாகி விட்டது இக்காலம்!..
இணையத்தில் தேடி எடுத்து இங்கே தந்திருக்கின்றேன்..
( நன்றி : தமிழ்ச்சுரங்கம்)
கற்றோர்க்குக் கல்வி நலனே கலன் அல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகு செய்வார்.. 12
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்று அகமகிழ்க - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாமென்று.. 14
நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்று இகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - தக்கார்
நெடுமொழி கோறல் குணம் பிறிது ஆதல்
கெடுவது காட்டுங் குறி.. 34
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.. 52
**
குமரகுருபரர் திருவடிகள்
போற்றி.. போற்றி!..
***
ஸ்ரீ குமரகுருபரர் பற்றிய இந்த சம்பவங்களை இதுவரை நான் அறிந்தததில்லை.
பதிலளிநீக்குபள்ளிப் பாடத்தில் நீதிநெறி விளக்கப் பாடல்கள் இருக்கின்றதா.. இல்லையா.. தெரியவில்லை..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
குமரகுருபரர் அவர்களைப் பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்கிறது.
பதிலளிநீக்கு//தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்று அகமகிழ்க //
எனக்கு மிகவும் விருப்பமான வரிகள். முன்பு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
//தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
நீக்குஅம்மா பெரிதென்று அகமகிழ்க //
எனக்கும் பிடித்த வரிகள்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஸ்ரீகுமர குருபரர் பற்றி விளக்கமாக கூறியிருப்பது நன்றாக உள்ளது. அன்னை சரஸ்வதியின் அருள் அவரிடம் தங்குதடையின்றி வந்த நிகழ்வைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
நீதிநெறி பாடல்கள் முன்பு படித்தது. இறுதியில் தாங்கள் பகிர்ந்தது முன்பு மனப்பாடம். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// நீதிநெறி பாடல்கள் முன்பு படித்தது. இறுதியில் தாங்கள் பகிர்ந்தது முன்பு மனப்பாடம்.. //
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
பதிவு அருமை.
பதிலளிநீக்குஸ்ரீகுமர குருபரர் பற்றி அருமையான பதிவு.
இன்று சரஸ்வதியை ஆராதிக்கும் நாளுக்கு பொருத்தமான பதிவு.
சகல கலாவல்லி மாலை பாடி சரஸ்வதியை துதிக்கும் போது குமர குருபரரை நினைக்காமல் இருக்க முடியாது.
நீதி நெறி பாடல் பகிர்வு அருமை.
குமரகுருபரர் திருவடிகள் போற்றி போற்றி.
நீக்கு// சகல கலாவல்லி மாலை பாடி சரஸ்வதியை துதிக்கும் போது குமர குருபரரை நினைக்காமல் இருக்க முடியாது...//
உண்மை தான்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி
தம்மின் மெலியாரை, மெய்வருத்தம் - இரண்டும் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன். இப்போதைய காலத்து தமிழ்ப்புத்தகங்களைப் பார்க்கவேண்டும், எதையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள், எதையெல்லாம் எடுத்திருக்கிறார்கள் என்று.
பதிலளிநீக்கு// தம்மின் மெலியாரை, மெய்வருத்தம் - இரண்டும் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.. //
நீக்குநான் படித்தபோதும்
மனப்பாடப் பகுதி..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி நெல்லை..
இணையத்தில் பாடல்களும், படங்களும் காணாமற்போவதற்குள் இந்த மாதிரி பதிந்தால்தான் உண்டு. இல்லை என்றால், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.
பதிலளிநீக்கு// இணையத்தில் பாடல்களும், படங்களும் காணாமற் போவதற்குள் இந்த மாதிரி பதிந்தால்தான் உண்டு.//
நீக்குஉண்மை தான்.. இருந்தாலும் இவையெல்லாம் சாகாவரம் பெற்றவை..
தங்கள் அன்பின் வருகைக்கு கருத்துரைக்கு நன்றி நெல்லை..
குமரகுருபரர் சுவாமிகள் பற்றி படிக்கும் காலத்தில் அறிந்ததுண்டு இவ்வளவ் விளக்கம் இப்போதுதான் அறிந்தேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..
நீக்கு