நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 18, 2018

திருவாசகத் தேன்

ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்..
ஒற்றைச் சாலை..

அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி...

காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி -
அருகிருக்கும் எல்லாவற்றின் மீதும் படிந்து கொள்ளும்..

அந்த அளவுக்கு நுண்ணிய புழுதி...

அந்தப் புழுதிச் சாலையில் தான் அந்த ஊரின் மொத்த இயக்கமும்!...

கோழிகள் கூட்டமாகக் கூடிக் கொக்கரித்துக் கிளறுவதும்
நாய்கள் கூச்சலிட்டு முன்னிரு கால்களால் பிறாண்டுவதும்
கழுதைகள் கனைத்துக் குதுகலித்துப் புரண்டு எழுவதும்
அந்தப் புழுதிச் சாலையில் தான்!...

இந்தப் புழுதிச் சாலையில் தான்
இதோ குழந்தைகளும் ஆடிக் களித்துக் கொண்டிருக்கின்றன...

கால்களால் புழுதியை அளைந்து கொண்டும்
கைகளால் புழுதியைத் தூற்றிக் கொண்டும்!...

அப்படி விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தைகளுள் ஒன்று - 

அதோ தூரத்தில் வருகின்ற
தாயையும் தகப்பனையும் கண்டு கொண்டு விட்டது...

அதற்குப்பின் அதன் மனம்
புழுதிக்குள் ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டத்துள் லயிக்குமா!...

அம்மையே.. அப்பா!.. - என்று அரற்றிக் கொண்டு ஓடுகின்றது....

புழுதிக்குள் ஆடிக் களித்த குழந்தையைக் கண்டு
பூரிக்கின்றது - பெற்றோரின் உள்ளம்!...

வாரி அணைத்துக் கொள்கிறாள் தாய்..
வாஞ்சையுடன் வருடிக் கொடுக்கின்றான் தந்தை...

என்ன இது மேலெல்லாம்!.. - பரிவுடன் வினவுகிறாள் தாய்...

அவன் தான்.. இல்லையில்லை.. நான் தான்!..
- என்று, ஏதேதோ பிதற்றுகின்றது குழந்தை...

சரி.. வா.. வீட்டுக்குப் போகலாம்!...

தலை முடியைக் கோதுகின்றாள்...
காது மடல்களின் தூசியைத் துடைக்கின்றாள்..

அரையில் படிந்திருக்கும் அழுக்கை அகற்றுகின்றாள்...
கால் விரல்களுக்கு இடையில் கசடுகளை உதிர்க்கின்றாள்...

அந்தக் குழந்தை அப்படியே அன்னையை கட்டிக் கொள்கிறது...

அந்த அன்னையோ -
செம்பட்டுத் தானுடுத்தி செந்தூரப் பொட்டு வைத்து
செந்தாழம்பூவோடு சண்பகமும் சூடி - அத்தனை அழகு...

இந்தக் குழந்தையோ
கழுத்து மேலொரு கருமணியும் இன்றி
கால்களில் கலகலக்கும் தண்டையும் இன்றி
அரையினில் ஆங்கொரு ஆடையும் இன்றி...

ஆயினும் - அங்கே,
ஆற்றின்ப வெள்ளம் என, அன்பு பெருக்கெடுக்கின்றது...

அந்த அன்பெனும் வெள்ளம்
அழுக்கை எல்லாம் அடித்துக் கொண்டு போகின்றது..

என் அப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வா என்ற வான் கருணை!.. 
- அங்கே தான் மலர்கின்றது!.. 

பிறந்த பயனும் பெற்றெடுத்த புண்ணியமும்
இனியொரு பிரிவே இலாதபடிக்கு ஒன்று கலக்கின்றன...

அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாத என்றரற்றி
உரைதடுமாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி!...

இந்நிலைதனை அடைவதற்குத் தான்
எப்படியெல்லாம் பிழைக்க வேண்டியிருக்கின்றது!..


........ ....... வார்கடல் உலகினில்
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்!...

ஏ.. அப்பா!...

கர்ப்பத்துக்குள் இத்தனை கஷ்டங்களா!?...
சரி... இத்தனையில் இருந்தும் தப்பிப் பிழைத்தாயிற்று..

பிரச்னைகள் விட்டனவா!..

இல்லையே!...

ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து
எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கிடை போகாஇளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்

இது வேறயா!..

இதை எப்படிக் கடக்கிறது?...
இதில் எப்படிப் பிழைக்கிறது?...

இதைக் கடக்கிறேன்.. - என்று சொல்லிக் கருத்தழிந்து
தட்டுத் தடுமாறி தடம் மாறி தடுக்கி வீழ்ந்தோர் கோடானு கோடியாயிற்றே!..

சரி.. ஆற்றோடு போய்க் கரையேறுவதைப் போல
இதையும் கடந்தாயிற்று...

ஆனாலும்,
விடமாட்டோம்!.. - என்று சொல்லிப் பெருங்கூட்டம் சூழ்ந்து கொண்டது..

அதுவும் பித்தர் கூட்டம்!..

பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்

ஆகா... வாழும் வாழ்க்கைக்கு ஆசையானது ஆனையைப் போலாகிறது..

அறிவெனும் அங்குசம் இல்லையாயின் அவ்வளவு தான்...

ஆனை தன்னை வளர்த்தவனையே தூக்கிப் போட்டு மிதிப்பதைப் போல
ஆசை தன்னுடன் வளர்ந்தவனையே அழித்து ஒழித்து விடுகின்றது...

இதற்கு மேல் -

கல்வி என்னும் பெருங்கடற் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும்

கல்வி என்பது பெருங்கடல்..
ஆனால், என்னவொரு கர்வம் - கரை கண்டு விட்டேன்!.. என்று!...

செல்வம் என்பது அல்லல்!..
ஆனாலும், அஞ்சுக்கும் பத்துக்கும் கைநீட்டி லஞ்சம்.. ஊழல்.. கொள்ளை!..

உள்ளங்கையில் நெல்லிக்கனி இருந்தும் அறியா மூடர்கள்!..

அவர்களைத் தான் -
உலோகாயத வறுமையும் வறட்சியும்
விடங்கொண்ட பாம்புகளாகப் பின்தொடர்கின்றன...


நல்குர வென்னும் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம்பாய பல்துறைப் பிழைத்து,
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்

அப்பா!..
ஒருவழியாக தெய்வத்தைக் கண்டு கொண்டாயிற்று..

ஆனாலும் விட்டார்களா!...

ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்...

கடவுளைக் கற்பித்தவன் ...... !...

ஆகா.. நீங்களும் இங்கே இருக்கின்றீர்களா!?..

இறை என்பது உணர்வு... இனிப்பு போல!..
உண்டால் தால் தெரியும் அதன் சுவை!..

சரி..சரி.. நீங்க மேலே சொல்லுங்க!..

சுற்றம் என்னும் தொல்பசுக்குழாங்கள்
பற்றி அழைத்து பதறினர் பெருகவும்

அடடா!.. இதென்ன நெற்றியில் பட்டை
கழுத்தினில் உருத்திராட்சக் கொட்டை?..

பரதேசியாகப் போகிறாயா !..
வேண்டாமடா மகனே!.. வேண்டாம்!..

வயல் என்ன ஆகிறது?...
வரப்பு என்ன ஆகிறது?..
காடு என்ன ஆகிறது?..
கரை என்ன ஆகிறது?.
கட்டித் தங்கம் என்ன ஆகிறது?..
பெட்டிப் பணம் என்ன ஆகிறது?..

மாப்பிளே!.. உங்களுக்காக
வளர்த்திருக்கிறேனே வண்ணக்கிளி!..
அவள் தான் என்ன ஆகிறது!?..

பற்றிப் பதறாமல் சற்றுப் பொறுங்கள்!..

சிவானுபோகம் பெறச் செல்கிறேன்..
அதன்பின் -
பவானுபோகம் பெற வருகிறேன்!..

அப்போது தான்
இல்லறம் நல்லறமாகும்!..

அதுக்குள்ளே - இங்கே பாருங்க..
இவங்க என்னென்ன சொல்றாங்க..ன்னு!..

விரதமே பரமாக வேதியரும்
சரதமாகவே சாத்திரங் காட்டினர்...

விரதம் இரு.. வேதம் படி!..
அங்கே பார்.. அதிலே சொல்லியிருக்கு..
இங்கே பார் .. இதிலே சொல்லியிருக்கு!...

சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்

சக்தியுடன் இணைந்த சைவமா!..
சைவத்துடன் பிணைந்த வைணவமா?..

அதையெல்லாம் விட்டு விடு..
இங்கே வா.. இங்கேயே வந்துவிடு...
என்மதம்.. இனி அது உன் மதம்..
அது தான் உன்னை இனி ஈடேற்றும்!...

இப்படியும் கூச்சல்.. அந்தக் காலத்திலேயே..
கரடியாகத் தான் கத்தியிருக்கின்றார்கள்!...

மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆர்த்தது...

இவ்வளவும் போதாதுன்னு இன்னொரு கூட்டம்...

எல்லாமே மாயை... சூன்யம்!..
இவ்விடத்துக்கு வந்து விடு!..
சூன்யத்தைச் சொந்தமாக்கிக் கொள்!..

நல்லவேளை.. தப்பித்தேன்!..

சுழித்தடித்து ஆர்த்த சூறைக் காற்றுக்குள்
ஆழ்ந்து போகாமல் அழிந்து போகாமல்
அங்கும் இங்கும் அலைந்த நேரத்தில் -

அம்மையே.. அப்பனே..
உனதிரு பொற்பாதங்களைக் கண்டேன்!..

அப்படியே பிடித்துக் கொண்டேன்...
அதுவும் சிக்.. எனப் பிடித்துக் கொண்டேன்!..

இனி விடுவதற்கில்லை!..
என்றுமே விடுவதற்கில்லை!..



இன்று ஆனி மகம்..
மாணிக்கவாசகர் இறையொடு கலந்த நாள்...

காலை 9.34 மணிக்கு மேல் மக நட்சத்திரம்...


ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்
சிவாலயங்களில்
மாணிக்கவாசகப் பெருமானுக்கு சிறப்பு பூசனைகள் நிகழ்கின்றன..

பாண்டியப் பேரரசின் முதன்மந்திரியாக இருந்த சிறப்புடையவர்...
இளமையிலேயே ஞானம் எய்திய புண்ணியர்..

நம் பொருட்டு அவர் அருளியதே திருவாசகம் எனும் தேன்..


சிவபுராணத்துள் -
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்!.. - என்று அருள்கின்றார்...


புழுவாய்ப் பூச்சியாய்.. நாயாய்ப் பேயாய்!...

எல்லாப் பிறவிகளையும் நாம் அடைந்து விட்டோம்!.. 
என்பதைச் சிந்தித்தாலே -

ஆன்மிகப் பயணத்தின் 
மிகப் பெரிய தடையான ஆணவம் அகன்று விடுகின்றது...

ஸ்ரீ மாணிக்கவாசகர் - மதுரை
இன்றைய பதிவில் -
பெருமான் அருளிய போற்றித் திருஅகவலில் இருந்து
சில வரிகள் சிந்திக்கப் பெற்றன...

அதில் -
இறைவனைப் போற்றித் தொழுவதற்கு முன்பாக
கருவியலைத் ( Gynaecology) தொட்டுச் செல்கின்றார்...
உலோகாயதம் என்னும் வாழ்வின் இடர்களை
விவரித்துச் சொல்கின்றார் மாணிக்கவாசகப் பெருமான்...

முழு கர்ப்ப அவஸ்தைகளையும் விவரிக்கும் ஸ்வாமிகள்
அண்டப் பெருவெளியையும் ( Universe) அளந்துரைக்கின்றார்...

என்னே.. அவர்தம் ஞானம்!..


தேவாரமும் திருவாசகமும் நமதிரு கண்கள்...
அவற்றை முழுதுமாக உணர்ந்து கொள்ளவே இப்பிறவி போதாது...

இம்மட்டும் சிந்திக்கப் பெற்றதே -
எம்முன்னோர் செய்த தவப்பயன்...
***


உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்து என்குடி முழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருள்த் துணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெருமானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே!..

என்குடி முழுதாண்டு.. - என்றால் சந்ததி அல்லவா!..
பெருமானுக்கு ஏது சந்ததி!?..

அவர்தான் செம்பொற்சோதியில் 
இரண்டறக் கலந்தவராயிற்றே!..

அதுசரிதான்... ஆயினும்.,
அவரைப் பற்றி நாம் சிந்திக்கின்றோம்...
அகல் விளக்கேற்றி வைத்து வந்திக்கின்றோம்!..

ஆதலினால் - நாம் அவரது சந்ததியர் தான்!..
நம் பொருட்டே அனைத்தும் நிகழ்ந்தன...

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ 

17 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    திருவாசகத்தேனைச் சுவைக்க வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தமிழை துளித்துளியாய்ச் சுவைக்கிறீர்கள்.

    'சுவைக்கக் கொடுக்கிறீர்கள்.

    அந்தக் கலை பயின்ற நீங்கள் கொடுத்து வைத்தவர்.

    நானும் சுவைத்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம்.

    திருவாசகத் தேன் - திகட்டாத தேன்.

    சிறப்பாக பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி

    இனிப்பை சுவைத்தாலே உணரமுடியும். அருமை. அருமை.

    இன்றைய திருவாசகம் தித்திப்பானதே...

    பதிலளிநீக்கு
  5. முன்னோர் தவ பயன் தான்.
    அது தான் இவ்வளவு அழகாய் உணர்ந்து சொல்லமுடிகிறது உங்களால்.
    எவ்வளவு அருமையாக தொகுத்து கொடுத்து விட்டீர்கள்.
    திருவாசகம் தேன்.
    அதை சுவைத்து தான் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. 63 நாயன்மார்கள் படம் வைத்து இருக்கிறோம் வீட்டில் ஒவ்வொருவர் குருபூஜை சமயத்திலும் அவர்களுக்கு சேக்கிழார் பாடிய பாட்டு உண்டு அதை பாடி ஏதாவது பிரசாதம் செய்து வணங்குவேன், இப்போது அந்த புத்தகம் எங்கே என்றே தெரியவில்லை அவர்கள் திருநட்சத்திரம் அன்று பொட்டு வைத்து விடுகிறோம் பூ வைத்து வணங்கி விடுகிறோம். வீட்டில் இருக்கும் பழமோ, கல்கண்டோ உண்டு.

    பதிலளிநீக்கு
  7. சிக்கெனப் பிடித்தேன் உன் திருவடியை... இனிமேல் நீ என்னைவிட்டு விலக முடியாது. அவ்வளவு உறுதியாக உன்னைப் பற்றிக் கொண்டுவிட்டேன் என்ற திருவாசகம் மனத்தை மயங்கச் செய்கிறது.

    கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்பும், என் அப்பன், என் ஒப்பு இல், என்னையும் ஆட்கொண்டு அருளி - இறைவனின் பெரும் கருணையை மாணிக்கவாசகர் கண்ணில் நீர் துளிக்கும் வண்ணம் விளக்குகிறார். படிக்கப் படிக்க இனிமை.

    இடுகையைப் படிக்கும்போது, "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது, ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது" என்ற அவ்வையின் மொழிகள் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  8. மாணிக்கவாசகப் பெருமான் பிறந்த நாளில் சிக்கெனப் பிடித்தேன் என்ற இனிய சொல்லாடலைக் கொண்டு எங்களையும் அவரை சிக்கெனப் பிடிக்க வைத்துவிட்டீர்கள். சிக்கெனப் பிடித்தேன் என்ற சொல்லுக்கு இணையாக பொருள் கொள்ளும் அளவிற்கான விளக்கத்தினைத் தர முடியுமா? அதனை உணர்வுகளால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இனிய நாளில் அதனை உணர்த்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் படித்த பிறகு, திவ்யப்ப்ரபந்தத்தில் "சிக்கென" என்ற வார்த்தை எங்கே வருகிறது என யோசித்தேன்.

      திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழியில் (வாடினேன் வாடி-முதல் பத்து)

      கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
      தெள்ளியேன் ஆனேன் செல்கதிக்கு அமைந்தே'ன். "சிக்கெனத் திருவருள் பெற்றேன்"

      என்று எழுதுகிறார். "சிக்கென" அருமையான வார்த்தைப் பிரயோகம்.

      நீக்கு
  9. அந்த நாட்களிலேயே கருவில் நடக்கும் விந்தைகளை அழகிய தமிழில் சொல்லி இருக்கும் அறிவைப் பாராட்டுவதா? அழகுத் தமிழில் கொஞ்சி விளையாடும் சொற்களால் இறைவனுக்குப் பாமாலை சூட்டி இருக்கும் அழகைப் பாராட்டுவதா? நம் பெரியோர் எப்படி எல்லாம் இருந்திருக்கின்றனர்? இப்படி ஓர் அழகான பாடலை இன்றுள்ள நம்மால் இயற்றக் கூட முடியாது. பல அரிய சொற்களே மறைந்து ஒழிந்து விட்டன. தமிழை அணு அணுவாய் ரசித்து இருக்கிறீர்கள். அதிலும் திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும் வழக்கை நிரூபித்தும் இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வென்றிலும் பிழைத்து, பிழைத்து வந்தோம்....நின்னை சிக்கென பிடிக்கவே அதற்கும் நின்னருள் அல்லாவா வேண்டும்....ஒம் நமசிவாயா

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. ஒவ்வொரு வரியையும் படித்து மிகவும் ரசித்தேன். பக்திப் பெருக்கில் எங்களை மூழ்க செய்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. ஆவ்வ்வ் எந்தாப் பெரிய போஸ்ட். ஏன் துரை அண்ணன் இதை மூன்றாகப் பிரித்திருக்கலாமே...

    அதுசரி அந்த புழுதியில் விளையாடிய குழந்தை ஆர்?..

    பதிலளிநீக்கு
  13. துளசி: மிக மிக அருமையான பதிவு ஐயா. திருவாசகத்தின் கருத்துகளை எனக்கு ஒரு பெரியவர் சொல்லிக் கேட்டதன் விளைவு (மட்டுமல்ல சிவ புராணம் மற்றும் இவ்வண்டத்தின் முழு அறிவியலும் அதில் உள்ளதை விளக்கினார் பெரியவர்) இளம் வயதிலிருந்து சிவனை என் தெய்வமாகக் கொண்டேன். இப்போதும் அவரை சிக்கெனப் பற்றிக் கொள்ளுவதுண்டு சிறிய விஷயமானாலும் எல்லாமே அவன் செயல் என்று. தேன் தான் இனிய தேன் தான்.

    கீதா: தேன் தேன் இனிய தேன் சுவைத்தேன்!!!! சுவையான தேன்! தமிழ்த் தேனையும் சுவைத்தேன்.

    திருவாசகத்திற்கு உருகாதோர் எவ்வாசகத்திற்கும் உருகார் எனும் மொழி தான் நினைவுக்கு வருது.

    ஆம் குழந்தை பிறப்பு பற்றி அன்றே அழகாய் எழுதியிருப்பதை ஒரு சித்த மருத்துவர் வரிகளை மேற்கோள் காட்டி விளக்கியதைக் கேட்டுள்ளேன். உங்கள் பதிவை வாசித்ததும் அதுவும் நினைவுக்கு வந்தது அண்ணா.

    அருமை அருமை....பழைய விட்ட பதிவுகளையும் பார்க்க வேண்டும்...அண்ணா

    பதிலளிநீக்கு
  14. சிக் இந்த வார்த்தை.. நான் அடிக்கடி என் மகனுக்குச் சொல்வது. எங்கள் இருவருக்குமே ஸ்லோகம் கற்பது என்பதும் அதை நினைவில் வைத்துச் சொல்வது என்பதும் கொஞ்சம் அல்ல நிறையவே சிரமமான ஒன்று. அப்போ சினிமா பாடல்கள்? என்ற கேள்வி எழுப்பப்படலாம்...அதுவும் அப்படியே. ஹா ஹா ஹா நினைவுத் திறன் கொஞ்சம் கம்மிதான். அதனால் நான் பழகிக் கொண்டது "இறைவா எனக்கு உன்னைப் போற்றி எதுவும் சொல்லத் தெரியாது. எனக்கு ஒன்றுமே தெரியாது. உன் பாதங்களைச் சிக்குனு பிடித்துக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. உன் பாதங்களைப் சிக்குனு பிடிச்சுட்டேன் இனி நீ என்ன சொல்கிறாயோ அப்படியே ஆகட்டும் என்று...இதையேதான் என் மகனுக்கும் சொல்லியிருக்கேன். நீ எது சொல்கிறாயோ இல்லையோ உன் வேலைக்குப் புறப்படும் முன் இறைவனை நினைத்து சிக்குனு அவனைப் பிடிச்சுக்கோ எல்லாத்தையும் அவனிடம் விட்டுவிட்டு வேண்டுதல் இல்லாத பிரார்த்தனை செய்...உன் கடமையை நேர்மையாகச் செய் அப்படினு சொல்லிருக்கேன். இப்பத்தான் தெரிகிறது சிக்கென என்பது எப்படியான அழகான ஆழமான வார்த்தை என்று!!!

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..