நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 16, 2017

அருள் மழையில் மக்கள்

சுந்தரராஜன்..

அது தான் அவனுடைய பெயர்... திருப்பெயர்!..

ஆனாலும்,
அந்தப் பெயர் கொண்டு அவனை அறிந்திருப்போர் வெகு சிலரே!..

அழகன்.. அழகர்!..

கள்ளழகர்!..

இப்படிச் சொன்னால் கருவில் இருக்கும்
உயிர் கூட - உவகை கொண்டு கை கூப்புகின்றது!...


அவன் ஒருவன் தானே -
வழி நடையாய் வாஞ்சையுடன் நடந்து வருபவன்!..
வாட்டம் தீர்ந்து வாழ்க!.. - என, வாழ்வு தருபவன்!..

ஏறத்தாழ 25 கி.மீ தொலைவு..

அழகர் மலைக்கும் மதுரைக்கும்!..

அங்கேயிருந்து இங்கே வந்து விட்டு திரும்பிச் செல்வதென்றால் 50 கி.மீ..

ஆனந்தக் கும்மாளத்துடன் அழகர் வருகின்ற அழகுதான் என்ன!..
மக்களிடம் விடைபெற்றுச் செல்கின்ற போது நடையில் தளர்வு தான் என்ன!..

மக்கள் வெள்ளத்தில் நீந்திக் களிப்பதற்கென ஓடி வரும் கள்ளழகர் -
தன்னைக் காணும் மக்களின் கவலைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கின்றார்...

மக்களுக்கு ஆசை - கள்ளழகர் இங்கேயே இருந்து விடக்கூடாதா!..

அழகனுக்கும் ஆசை தான் - இந்த மக்களுடனேயே இருந்து விடலாகாதா!..

ஆனாலும் - இந்த இரண்டுக்கும் இடையில் எத்தனை எத்தனையோ விஷயங்கள்!...

கடந்த 8/5 அன்று திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட அழகர் -
10/5 அன்று அதிகாலையில் வைகையில் இறங்கினார்..

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஆனந்த மயமாகின.. -

வேண்டுவார் வேண்டுவதே வழங்கிய வண்ணம்
விருப்புற்றோர் தம்முடைய அன்பு மழையில் நனைந்தார்...

காலமும் நேரமும் செல்லச் செல்ல
கள்ளழகர் மலைக்குத் திரும்ப வேண்டிய நாளும் வந்தது..

கடந்த 13/5 அன்று அதிகாலை மதுரையிலிருந்து புறப்பட்ட அழகர் -
14/5 அன்று முற்பகல் 11.30 மணியளவில் பதினெட்டாம்படி கருப்பசாமி வாசலை அடைந்தார்..

அங்கே கோலாகலமாக வரவேற்பு வழங்கப்பட்டது..

பெண்கள் குலவையிட்ட வண்ணம் பதினெட்டு பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர்...

நேற்று (15/5) காலை சம்பிரதாய பூஜைகளுடன் உற்சவ சாந்தி நிகழ்ந்தது...

இனி அழகர் எப்போது வருவார்?.. - என,
இப்போதே நாட்களை எண்ணத் தொடங்கி விட்டனர் மக்கள்...

கடந்த ஏப்ரல் மாதம் (28/4) மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருக்கொடியேற்றம் ஆனதிலிருந்து மக்கள் மனமெல்லாம் பரவசம்..

வீட்டுக்கு வீடு திருவிழாவின் உற்சாகம்...

எந்த ஒரு பேதமும் இல்லாமல் எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்..

நாம் நேரில் பார்க்கக் கூடவில்லையே தவிர -
அவற்றுக்கெல்லாம் கண்கண்ட சாட்சிகளாக இதோ இந்தப் படங்கள்!...





தேனூர் கிராமத்தின் வைகைக் கரையில் நடந்து கொண்டிருந்த திருவிழாவை மதுரை மாநகரில் நிகழும்படிக்கு மாற்றியமைத்தவர் -மன்னர் திருமலை நாயக்கர்..




அத்துடன் மாசியில் நிகழ்ந்த மீனாட்சி வைபவத்தை சித்திரைக்கு மாற்றி அதனுடன் அழகர் திருவிழாவினையும் இணைத்தவர் திருமலை நாயக்கர்..





அந்த வகையில் -
இப்படியொரு பெருவிழாவினை நமக்கு வழங்கிய 
மன்னர் திருமலை நாயக்கர் அவர்களுக்கு நன்றி கூறுதற்குக் 
கடமைப்பட்டிருக்கின்றது - தமிழ் கூறும் நல்லுலகு!..











அழகிய படங்களை வழங்கிய 
குணா அமுதன், ஸ்டாலின், அருண் மற்றும்
அனைத்து நண்பர்களுக்கும்
மீண்டும் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்..


மாநகரை ஆளுகின்ற மீனாளின் திருவிழா என்று சொல்வதா!..
மாமலையிலிருந்து வரும் மாலவனின் திருவிழா என்று சொல்வதா!..

மண்ணும் விண்ணும் புகழும்படிக்கு நடந்தது
மக்களின் திருவிழா என்பதே உண்மை!..

நாட்களை எண்ணி எண்ணி விரல்கள் தேய்ந்தாலும்
என்றும் தேயாதது இதயத்தில் கொண்ட அன்பு!..

இதோ - அடுத்த சித்திரைக்கு
வெகு சில நாட்களே!..

கள்ளழகர் திருவடிகள் போற்றி..
மீனாட்சி சுந்தரேசர் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

11 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை அழகுடன் புகைப்படம் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அழகு படங்கள்...

    நானும் திரு. ஸ்டாலின் அவர்களின் படங்களை முக நூலில் ரசிப்பது உண்டு....கோணங்களும் ,பார்வைகளும் வித்தியாசமாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  3. மதுரையின் பெருமைக்கு
    மற்றுமொரு விழாதானே
    இந்தத்சித்திரைப் பெருவிழா

    எப்போதும் இந்தத் திருவிழாவில் கல்ந்து
    மனம் குளிர்ந்துபோகும் நான்
    தற்சமயம் வெளி நாட்டில் இருப்பதால்
    எதையோ இழந்ததைப் போல்
    உணர்ந்திருந்தேன்

    அற்புதமான படங்களுடன் கூடிய
    தங்கள் பதிவு அந்த மனக் குறையைத்
    தீர்த்துவைக்கிறது

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள் நேரில் கண்ட அனுபவம் தந்தது.
    மக்களின் அன்பு ம்ழையில் அழகர், அழகரின் அருள்மழையில் மக்கள்.
    மழையும் பெய்து மதுரை மக்களை மகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
  5. ஐயா... நீங்கள் சொல்லும் விதமே ஒரு தனி அழகு...

    வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. அங்கங்கே சரியான நண்பர்களை வைத்து படங்களை வாங்கிவிடுகிறீர்கள். அழகான படங்கள். நேரில் பார்த்த பிரமை உண்டாகிறது.

    பதிலளிநீக்கு
  7. கொதிக்கும் வெய்யிலையும் எதிர்க்கும் திருவிழா உற்சாகம்.

    பதிலளிநீக்கு
  8. அழகர் வைகைக்கு வரும் போது கூடவேயும் முன்னும் பலர் வேடமணிந்து வருவதைக் கண்டிருக்கிறேன் வருகிறவழியில் இளைப்பாறவும் சேவிக்கவும் என்று தோன்றுகிறது பல இடங்களில் மண்டகப் படி நடக்கிறது

    பதிலளிநீக்கு
  9. அழகான புகைப்படங்கள். உங்கள் தமிழ் அன்னையும் இனிக்கும் நடை போடுகிறாள்! அதுவும் ஒய்யாரமாய்!!!

    --இருவரின் கருத்தும்

    பதிலளிநீக்கு
  10. ஸ்டாலின் அவர்களின் படங்கள் செம அழகு

    ---இருவரின் கருத்தும்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..