நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


செவ்வாய், செப்டம்பர் 13, 2016

தங்க மாரி

மாரியப்பன் தங்கவேல்..

தமிழகத்தின் தங்க மகன்..


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் -

தனது முத்திரையைப் பதித்து - தங்கப் பதக்கத்தை வென்றெடுத்த வீரர்..

மாற்றுத் திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் T42 எனும் பிரிவில் (1.89மீ) சாதித்துள்ளார்...

இதே பிரிவில் இந்திய வீரர் வருண் பாதி (Varun Bhati) மூன்றாமிடம் (1.86மீ) பெற்று வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்..


மாரியப்பன் தங்கவேல் அவர்களையும் வருண் பாதி அவர்களையும் மனதார வாழ்த்துவோம்..

மாரியப்பன் தங்கவேல் - சேலத்தில் இருந்து 50 கி.மீ., தொலைவிலுள்ள பெரிய வடகம்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்..

இவரது தந்தை தங்கவேல்.. தாய் சரோஜா.. இரண்டு சகோதர சகோதரிகளுடன் பெரிய குடும்பம்..

இந்த ஆண்டு தான் B.BA., முடித்துள்ளார்..

இந்தியா முழுதிருந்தும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்த மாரியப்பன் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்..

தந்தை செங்கல் சூளைகளில் வேலைக்குச் செல்வதும் தாய் சைக்கிளில் வைத்து காய்கறி விற்பதும் - எனச் சுழன்ற வாழ்க்கைச் சக்கரத்தில் பயணித்த மாரியப்பன் - 

தனது அயராத உழைப்பினால் - 

என்னாலும் முடியும்!. - என, சாதித்திருக்கின்றார்..


மது போதையுடன் லாரியை ஓட்டி வந்த ஒருவன் ஏற்படுத்திய விபத்து மாரியப்பனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது..

பள்ளிக்குச் சென்ற வழியில் ஏற்பட்ட விபத்தினால் வலது கால் நசுங்கியது.. அப்போது மாரியப்பனுக்கு வயது ஐந்து.. 

எத்தனை கொடுமை.. தாயும் தந்தையும்எவ்வளவு சிரமப்பட்டிருக்கக்கூடும்..

மகனின் மருத்துவச் செலவுகளுக்காக -
அப்படியும் இப்படியுமாக கடன் வாங்கிய தொகை மூன்று லட்சம்..

இப்போது மாரியப்பனின் வயது 21..

பதினைந்து வருடங்களுக்கு முன் வாங்கிய கடன் தொகைக்கு
இன்னும் வட்டி தான் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்..

கல்லூரி நாட்களின் விடுமுறையின் போது தாய்க்கும் தந்தைக்கும் துணையாக வேலைக்குச் சென்று உதவியாக இருந்திருக்கின்றார்..

மனம் தளராமல் கடும் பயிற்சியையும் மேற்கொண்டிருக்கின்றார்....


இதன் மூலம் நான் என்னை உலகம் அறியலாம். ஆனால், என்னுடைய வாழ்க்கை மிகக் கடுமையானதாக இருந்தது.. விளையாட்டில் உயிராக இருந்தேன்.. ஆனால் - பள்ளி நாட்களில் எனது ஊனத்தைக் காட்டி விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்!..

இவ்வாறாக - சிறுவயதில் தனக்கேற்பட்ட வேதனையை விவரிக்கின்றார்..

இங்கே பதக்கம் வெல்ல முடியவில்லை எனில், விளையாட்டு உலகில் இருந்தே வெளியேறிருப்பேன்.. இது தான் என்னுடைய கடைசி அஸ்திரமாக இருந்தது..

இது நாள் வரை நான் எதுவும் சம்பாதித்தது இல்லை.. கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றபோதும் கூட நான் எதையும் பெறவில்லை..

மாதம் ஐயாயிரம் சம்பாதிக்கும் என் அம்மாவினால் அந்த மூன்று லட்ச ரூபாய் கடனை அடைக்க முடியவில்லை.. அதனால் தான் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடினேன்.. இப்போது கிடைக்க இருக்கும் பணத்தைக் கொண்டு முதலில் கடனை அடைக்க வேண்டும்.. இவ்வளவு வறுமையிலும் எனது கனவுகளுக்கு உதவிய என் தாய்க்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!...

பொருளாதார சிரமத்தில் இருந்தபோது - பள்ளித் தோழர்களும் ஆசிரியர்களும் ஊர் மக்களும் பண உதவி செய்துள்ளனர்..

என்னால் உயரம் தாண்ட முடியும் என்பதை என்னுடன் இருந்தவர்களே நம்பவில்லை.. அவர்கள் முன் நான் தாண்டிக் காட்டியதும் அயர்ந்து போனார்கள்.. அதன்பிறகு அவர்களுடைய உதவிகளினால் தான் என்னால் பல போட்டிகளில் கலந்து கொண்டேன்.. 

நான் உடல் ஊனமுற்றவன்.. என, ஒருபோதும் நினைத்ததேயில்லை..

மாரியப்பனின் வார்த்தைகளைக் கேட்டு மனம் நெகிழ்கின்றது..


தனது பதினான்காம் வயதில் - முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து தன்னை அடையாளங்காட்டியிருக்கின்றார்..

மாரியப்பனின் முதல் பயிற்சியாளர் - அரசுப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியரான திரு. ராஜேந்திரன் ..

மாவட்ட அளவிலான போட்டிகள் 2011ல் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான போட்டி - இவற்றிலெல்லாம் தனது அபார திறமையினால் பதக்கங்களை வென்றெடுத்தார் - 

2013ல் நடந்த தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் மாரியப்பனின் திறமையைக் கண்டறிந்து வியந்தார் பெங்களூரு பயிற்சியாளர் சத்யநாராயணா..

அதன் பின், சத்யநாராயணா - தனது சீரிய கவனிப்பில் -
மாரியப்பனுக்குப் பயிற்சியளித்தார்..

இலங்கையிலும் நெதர்லாந்திலும் நடைபெற்ற போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் - மாரியப்பன்..


2016 மார்ச் மாதம் துனிஸியாவில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் மாரியப்பன் தாண்டிய உயரம் 1.78 மீ.. 

இதன் மூலமே ரியோ பாரா ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார்..

தான் நினைத்தபடி மகத்தான வெற்றியும் பெற்றார்.. 


தாயகத்தின் பெருமையை நிலைநாட்டிய மாரியப்பனைப் பாராட்டி
பாரதப் பிரதமரும் தமிழக முதல்வரும் வாழ்த்துரைத்துள்ளனர்..

தமிழக முதல்வர் - இரண்டு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்..

தமிழகத்தின் அரசியல் தலைவர்களும்  ஏனைய விளையாட்டு வீரர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்..

தன்னம்பிகை ஒன்றையே துணையாகக் கொண்டு ரியோ டி ஜெனிரோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் -

பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் மாரியப்பன்..

இந்த நேரத்தில் மாரியப்பனை திறம்பட உருவாக்கிய பயிற்சியாளர்களும் பாராட்டிற்குரியவர்கள்.. 

தன்னம்பிக்கை இழக்காத தங்க மகனால் தாய்நாடு பெருமை அடைகின்றது..


நாட்டுக்குப் பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேல் அவர்களுக்கு
மேலும் ஒரு சிறப்பினை இந்திய பாரா ஒலிம்பிக் குழு வழங்கியுள்ளது.. 

பாரா ஒலிம்பிக் நிறைவு நாள் அணிவகுப்பில் நமது தேசியக் கொடியினை மாரியப்பன் தங்கவேல் ஏந்திச் செல்வார் .. 

- எனும் செய்தியினை இந்திய பாரா ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது..

பாரா ஒலிம்பிக் வரலாற்றில் நம் நாடு பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவே!..

அதை வென்றெடுத்து புகழ் சேர்த்த
மாரியப்பன் தங்கவேல் 

மேலும் பற்பல வெற்றிகளை ஈட்ட வேண்டும் 
என, மனதார வாழ்த்துவோம்..

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையானுழை.. (0594) 
*** 

16 கருத்துகள்:

 1. தாய்மண்ணிற்குப் பெருமை செய்த தங்க மகனைப் போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்க மகனை வாழ்த்துவோம்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. தங்க மகன் மாரி.... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்க மாரியப்பனை வாழ்த்துவோம்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்க மாரியப்பனை வாழ்த்துவோம்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்க மாரியப்பனை வாழ்த்துவோம்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. தங்க மகனுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  மேலும், மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்க மாரியப்பனை வாழ்த்துவோம்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஆங்கிலத்தில் NOTHING SUCCEEDS LIKE SUCCESS என்பார்கள் மாரியப்பனுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்களின் கருத்து சாலப் பொருந்தும்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு