நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


சனி, செப்டம்பர் 10, 2016

இதற்கு என்ன பெயர்?..

மனிதனாக வாழ்வோம்.. 
மனிதாபிமானத்தோடு வாழ்வோம்!..

எனும் சீரிய கருத்துடன் அன்பின் நண்பர் பரிவை சே. குமார் அவர்கள் தனது தளத்தில் பதிவு செய்திருந்தார்..

அந்தப் பதிவு - மனிதனாக வாழ்வோமே!..


கடந்த 2013 - மே மாதத்தில் நடந்த சம்பவம்..

தலைநகர் தில்லையைச் சேர்ந்தவர் பிரீத்தி ரதி.. 23 வயதுடையவர்..
மும்பை ராணுவ மருத்துவமனையில் செவிலியராக வேலை கிடைத்தது..

பணியினை ஏற்றுக் கொள்வதற்காக பெற்றோருடன் மும்பைக்கு வந்தார்..

பிரீத்தி ரதி
அவர்களைத் தில்லியில் இருந்தே தொடர்ந்து வந்த கயவன் ஒருவன் -
மும்பையில் வைத்து பெற்றோர் அருகிருந்த பிரீத்தி ரதியின் முகத்தில் அமிலம் வீசி விட்டுத் தப்பிச் சென்றான்..

முகத்தில் வீசப்பட்ட அமிலம் தொண்டையைத் துளைத்துக் கொண்டு சென்றதில் நுரையீரல்கள் முதலான உள்ளுறுப்புகள் சேதமடைந்தன..

உயிருக்குப் போராடிய பிரீத்தி - பரிதாபமாக இறந்து போனார்..

அமிலம் வீசி விட்டு ஓடியவன் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டான்..

அந்தப் பாதகன் - பக்கத்து வீட்டுக்காரன் என்பதே கொடுமை...


மரணத் தருவாயில் பிரீத்தி அளித்த வாக்குமூலத்தில்,

தனது அண்டை வீட்டுக் காரனான அவன் பலமுறை தன்னைத் தொடர்ந்து வந்து - காதலிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தியதாகவும் 

தான் அதற்கு மறுத்து விட்ட நிலையில் தன்னை மிரட்டியதாகவும் - கூறியிருந்தார்...

குற்றவாளிக்கு எதிராகத் தொடரப்பட்டு வழக்கு விசாரண நிறைவடைந்த நிலையில், சில தினங்களுக்கு முன் (2016 செப்டம்பர் 7) -

மும்பை சிறப்பு மகளிர் நீதிமன்ற நீதிபதி A.S. ஷெண்டே - 
குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்..

மேலும் விவரத்தினை - இந்த இணைப்பில் காணலாம்..


கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்ட தனொடு நேர்.. (0550)

கொலையெனும் கொடுஞ்செயல் புரிந்தோரை அரசன் தண்டிக்கும் செயலானது - பயிர்களைக் காப்பதற்காகக் களையைக் களைவது போன்றதாகும்...

சட்டம் தனது இரும்புக் கரங்களைக் கொண்டு கொடியோரை அடக்க வேண்டும்..

குற்றவாளிகள் பாரபட்சமின்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்..

சிறார்களுக்கும் மகளிருக்குமான குற்றங்களும் கொடுமைகளும் 
முற்றாக முழுமையாக அகற்றப்படவேண்டும்...

நீதியும் நேர்மையும் மீண்டும் தழைக்க வேண்டும்..

பெண்மை சிறப்புற்று வாழ வேண்டும்..


சக மனித உயிர்களை அதிலும் குறிப்பாக -
மங்கையரை மதிக்கத் தெரியாத மடையர்களால் நிறைகின்றது - நாடு..

மலரினும் மெல்லியது காதல்!.. - என்றார்கள்..

அத்தகைய காதலின் பெயரால் -
அமில வீச்சுகள் சாதாரண நிகழ்வுகளாகின்றன..

கடந்த சில மாதங்களுக்குள் - எத்தனை எத்தனை துயர சம்பவங்கள்..

வீச்சரிவாள் கொண்டு வெட்டுவதும்

தீ வைத்துக் கொண்டு உருவழிப்பதும்

உருட்டுக் கட்டையால் மண்டையைப் பிளப்பதும்

ரயில்வே நடைமேடை, கல்லூரியின் வகுப்பறை,
ஆலயத்தின் தேவ சந்நிதானம் - என, ஆங்காங்கே நிகழ்ந்தவற்றால்
அயர்வுற்றுக் கிடக்கின்றன நல்லோர் தம் நெஞ்சங்கள்..

பணத்தை ஈட்டுவதற்கு மட்டுமே பயனுறும் கல்வியால் -
பண்பை நிலைநாட்டுதற்கு இயலவில்லை...

ஒரு பெண்ணைக் கண்டதும் அவள் மீது மோகம் கொண்டு 
அவள் பின்னாலேயே திரிந்து தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்துவதும்

முடியாதபோது கொடூரமாக அவளைக் கொன்று போடுவதும் எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை...


பாசம் நேசம் - இவை ஊட்டி வளர்க்கப்படாத பதர்களாலேயே
இம்மாதிரியான கொடூரங்கள் அரங்கேற்றப்படுகின்றன..

அதற்குப் பிறகும் சிலர் -
சாதி சமயம் என்னும் போர்வைகளுக்குள் புகுந்து கொண்டு - 
இறந்த பெண்ணைப் பற்றிய அவதூறுகள் பலவும் கிளப்பி விடுகின்றனர்..

இதெல்லாம் முடிவற்ற செயல்களாக ஆகிப் போகுமோ? - என, 
பெண்ணைப் பெற்றவர்கள் அஞ்சுகின்றனர்..

இந்நிலையில்,

மும்பையில் வழங்கப்பட்ட தீர்ப்பு பரவலாக வரவேற்கப்பட்டிருக்கின்றது..

தீர்ப்பு அப்படியே நிறைவேற்றப்படுவதில் என்னென்ன தடைகள் குறுக்கிடுமோ?..

யாரறியக்கூடும்!?..

மனிதனை மனிதன் அறிந்து கொள்ளாத - 
உணர்ந்து கொள்ளாத சூழ்நிலையில் -

இதோ இந்தக் காணொளி!..


இவையிரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத உயிரினங்கள்..

ஒன்று நிலத்திலும் மற்றொன்று நீரிலும் காலத்தைக் கழிப்பன..

நீரில் விழுந்த நாயை சுறாவிடமிருந்து காக்க வேண்டும் என்று
டால்பினுக்கு ஏற்பட்ட அன்பின் உணர்வையும்
அதற்கான அற்புதமான செயல்பாட்டையும் கண்டு மெய் சிலிர்க்கின்றது...


இயற்கையாகவே டால்பின்கள் இத்தகைய இரக்க குணமுடையவை என்று படித்திருந்தாலும் நேரில் காணும் போது நெஞ்சம் நெகிழ்கின்றது..

பக்கத்து வீட்டுப் பெண் என்ற அன்பு கூட இல்லாமல்
துடிக்கத் துடிக்க கொன்று ஒழித்தவர்கள் வாழும் 
உலகத்தில் தான் இத்தகைய டால்பின்களும் வாழ்கின்றன..

மனிதருக்கு மனிதர் உதவி செய்யும் போது - மனித நேயம் என்கின்றோம்..

இருப்பினும், ஆறறிவு மனிதர்களே -
அடுத்தவர்க்கு உதவும் மனப்பான்மையின்றி ஒதுங்கிச் செல்லும் வேளையில் 

இங்கே டால்பின் - சக உயிரைக் காத்து அளித்திருக்கின்றதே..
இதற்கு என்ன பெயர் சொல்வது!?..

பெண்மையைக் காப்பவனே பெருந்தகையாளன்
உயிர் என்பது - சதை இரத்தம் எலும்பு
இவற்றால் பின்னப்பட்ட உடலோடு இணைந்திருக்கின்றது..

எல்லாம் இருந்தும் எலும்பினால் மட்டுமே -
உயிர் ஒட்டிய உடம்பு பேசப்படுகின்றது..

எலும்பு இல்லையேல் - அதற்குப் பெயர் பிண்டம்..

வெறும் சதைப் பிண்டம் தான்.. அப்படிப் பிறந்தவர்களே துரியோதனாதிகள்...

எலும்புகளுடன் கூடிய உடலில் உயிர் இருந்து வாழ்ந்தாலும்

அன்பு, அறிவு, ஆற்றல், பண்பு, பாசம் - 
எனும் நற்பண்புகள் ஏதும் இல்லாத வாழ்க்கை அமையப் பெற்றால் - 

அந்த வாழ்வும் பிண்டம் தான்.. பயனேதும் இல்லாத தண்டம் தான்!..

அதனால் தான் -

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்பொடு இயைந்த தொடர்பு.. (0073)

- என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகின்றார்...

சரி.. அன்பில்லாத பண்பில்லாத வாழ்க்கை எனில், என்ன ஆகும்!?..

எலும்பில்லாத சதைப் புழுக்களை வெயில் சுட்டெரிப்பதைப் போல
அன்பில்லாத உயிர்களை அறம் சுட்டெரித்து அழிக்கும்..

என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்.. (0077)

மனிதனாக வாழ்வோம்..
மனிதனாகவே வாழ்வோம்!..  
***

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையான பகிர்வு ஐயா...
  தங்கள் பகிர்வில் என் பதிவுக்கும் இணைப்பு... நன்றி ஐயா...
  மனிதநேயத்தோடு வாழ்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. மனிதன் மனிதத்தைத் தொலைத்துவிட்டான். மிருகம் மனிதத்தன்மையோடு நடந்துகொள்கிறது என்று இனிகூறக்கூடாது. மிருகம் மிருகத்தன்மையோடு நடக்கிறது என்றே கொள்ளவேண்டும் என்று கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   உண்மைதான்.. மனிதன் மனிதத்தைத் தொலைத்து விட்டான்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. குறைந்த பட்சம் நாமாவது மனிதத் தன்மையோடு வாழ்வோம் என்பதல்லாமால் வேறு என்ன சொல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   நிஜம் தான்.. நாம் நம் வழியில் சிறப்பாக வாழ்வோம்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. மிக மிக அருமையான பதிவு அதுவும் அந்தக் காணொளியுடன் சொன்ன விதம் வெகுச் சிறப்பு!! அதை மிகவும் ரசித்தோம் கண்களில் நீருடன்!! என்ன அன்பான விலங்குகள்!!! ஆறறிவு படைத்த நாம் தான் விலங்குகள்! குமாரின் பதிவையும் வாசித்தோம் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..

   இயற்கையின் இனிய படைப்பு - டால்பின்..
   மனிதர்களைக் கண்டால் டால்பின்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றன..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு