நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 26, 2016

நெஞ்சில் உரமுமின்றி...

கடந்த வெள்ளிக்கிழமை (24/6) அன்று காலை 6.30 மணியளவில் பரபரப்பு மிகுந்த சென்னை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் -

ஸ்வாதி எனும் இளம்பெண் 24 வயதுடையவர் - துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார்..


ஸ்வாதி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர். செங்கல்பட்டு செல்வதற்காகக் காத்திருந்த வேளையில் இந்த கோரம் நிகழ்ந்துள்ளது..

ரயில் நிலையத்திற்கு அவரது தந்தையுடன் வருவது வழக்கமாம்..

அன்றைக்கும் அப்படித் தான் வந்திருக்கின்றார்..

என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு - அங்கே காத்திருந்தாரோ!..

அருகில் வந்தவன் ஒற்றையாய்த் தனி ஆள்..

கண்ணிமைக்கும் போதில் - வெட்டிச் சாய்த்திருக்கின்றான்..


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி..
***

இந்தக் கொடுமை நடத்தப்பட்டபோது - ரயில் நிலையத்தில் அங்குமிங்குமாக இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர்..

ஏதும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு!..
-  என்று நினைத்துக் கொண்டார்களோ - என்னவோ!..

உயிருக்குப் போராடுகின்ற சக பயணிக்கு ஒத்தாசையாக - கூக்குரலிடக் கூட அவர்களுக்கு இயலவில்லை...

அதுமட்டுமல்லாமல் - 

ஸ்வாதியை - இரத்தச் சகதியில் வீழ்த்தி விட்டு கொலைகாரன் நிதானமாக வெளியேறிய பின் சுற்றி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர்..

மகாகவி - ஊமை ஜனங்கள் - என்றுரைத்தாரே..

அப்படி ஆயினர் போலும்!..

அல்லது -

தான் ... தன் சுகம்!... - என்று வாளாயிருந்து விட்டனர் போலும்...


சொந்த சசோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மறந்தாரடி..
*** 

அங்கிருந்தோரில் எவருக்கேனும் -
இந்த ஸ்வாதி உடன் பிறப்பாக உற்றாராக இருந்திருந்தால் - 
இப்படி வாய் மூடி வேடிக்கை பார்த்திருக்கக் கூடுமோ?..

கூக்குரலிட்டு களேபரம் செய்வதற்கு - உடன் பிறப்பாக உற்றாராக இருக்கத் தான் வேண்டுமெனில் - அங்கிருந்தோர் எவரும் மனிதரில் சேர்த்தியில்லை..

தன் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து ஏதும் செய்ய முடியாதவராக நடைமேடையில் விழுந்த சுவாதி உயிருக்குப் போராடிய கணம் மிகக் கொடுமையானது...

குப்பை மேட்டில் மேய்ந்து திரியும் கோழிக் கூட்டத்துள் வல்லூறு புகுந்து விட்டால் - உடனிருக்கும் மற்ற கோழிகள் பெருங்குரலெடுத்துச் சப்தமிடுவதைக் கிராமங்களில் வசித்தவர்கள் கேட்டிருக்கக் கூடும்..

அந்த கோழிகளுக்கு உள்ள உணர்வுகள் கூட -
அங்கிருந்தவர்களுக்கு இல்லாமல் போனது பெரும் சோகம்...

கொலை செய்து விட்டு நிதானமாகச் சென்ற படுபாவியைத் துரத்திப் பிடிக்கக் கூட அங்கிருந்தோர் முயலவில்லை - எனில் ,

இவர்களைக் குறை கூறுவதற்கு -
உலக மொழிகள் எவற்றிலும் வார்த்தைகள் இல்லை!. - என்பது தான் உண்மை..

பெண் என்றால் பேயும் இரங்கும்!.. - என்பார்கள்..

திட்டமிட்டு வந்தவன் இதயத்தில் அதற்கெல்லாம் இடம் இருக்க நியாயமில்லை தான்!...

ஆனால் - அங்கிருந்தோருடைய இதயங்களிலும் இல்லாமல் போனதே!..

அப்படி எங்கேதான் போய்த் தொலைந்ததோ - இரக்கம்!..


மாதரைக் கற்பழித்து வண்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயிரைக் - கிளியே பேணி இருந்தாரடீ..  
***

அந்தோ பரிதாபம்!...

துடிதுடித்து இறந்து போன ஸ்வாதி -
துறுதுறுப்பாக சமூக சேவை ஆற்றுவதில் ஆர்வம் உடையவராம்!..

சென்ற ஆண்டின் இறுதியில் சென்னை பெருமழையில் சிக்கிக் கொண்டபோது தன்னார்வமாக - மக்களுக்குத் தொண்டாற்றியிருக்கின்றார்..

தன் கைப்பொருளையும் பிறரிடம் வேண்டிப் பெற்ற பொருளையும் -
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி துயர் துடைத்திருக்கின்றார்..

தர்மம் தலை காக்கும்.. தக்க சமயத்தில் உயிர் காக்கும்!..

கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது..

ஆனால் - ஸ்வாதிக்கு அவ்விதம் நடக்கவில்லையே!..

துயருற்றோர் தம் துன்பம் தீர்ப்பதற்குத் தன் கரத்தை நீட்டியிருக்கின்றார்...

ஸ்வாதிக்கு ஆதரவாக ஒரு கரம் கூட நீளவில்லையே..

டேய்.. விடாதே.. பிடி!.. - என்றொரு குரல் கூட எழும்பவில்லையே...

ஓர் உயிரை எடுத்து விட்டு - நிதானமாக நடந்து சென்ற கொலைகாரனைத் துரத்திச் செல்வதற்குக் கூட யாருக்கும் துணிவில்லை... எனும் போது ,

நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது மனிதர்களின் மத்தியில் தானா?.. -என்று ஐயம் எழுகின்றது...

மனிதம் மாண்டு போனதோ!..

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுள் -
ஸ்வாதிக்கு நேர்ந்தது முதலும் அல்ல.. கடைசியும் அல்ல!..

இன்னும் எத்தனையோ - காத்திருக்கின்றன..

என்ன செய்யப் போகின்றோம் - பெண்களின் துயர் துடைக்க!..

மூன்றாண்டுகளுக்கு முன் காரைக்கால் பேருந்து நிலையத்தில் விநோதினி என்ற இளம் பெண் அமில வீச்சுக்கு ஆளானாள்..

கொடூர காயங்களுடன் படாத பாடுபட்டு - அகால மரணத்தைத் தழுவினாள்..

குற்றவாளி நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றான்..
இன்னும் சில வருடங்களில் விடுதலையாகக் கூடும்..

சென்ற ஆண்டில் நிகழ்ந்த சம்பவம் இது...

கிழவன் ஒருவன் பதினைந்து வயதுடைய - தன் பேத்தியை சக கிழவர்களுடன் பகிர்ந்து கொண்டான்..

அந்தப் படுபாவிகள் இன்னும் நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றார்கள்..

வயது குறைந்தவன் இவன் - என்ற நோக்கில் அரசு அவனைப் பரிபாலித்தது..

அவனோ - தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை - வயதுக்கு மூத்த நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வன்புணர்வு செய்தவன்..

குற்றுயிராகக் கிடந்த அந்த இளம் பெண்ணை மீண்டும் அனுபவித்ததோடு கையினால் துழாவி - கம்பி ஒன்றினால் அவளது குறியைக் குத்திக் கிழித்து அவளுடைய மரணத்திற்கு வித்திட்டவன்...

குறைந்த தண்டனைக்குப் பின் அவனது நல்வாழ்விற்கு அரசே பெருந்துணை புரிந்தது...

அவனும் இன்று நல்ல சோறு தின்று கொண்டிருக்கின்றான்...

இத்தகைய இழிபிறவிகளுக்காத்தான் இந்தத் திருக்குறள்..

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்.. (0550)

வள்ளுவப் பெருமானுக்கு - 
நீருக்கு நடுவே சிலை எழுப்பி வைப்பதெல்லாம் பெருமையே அல்ல!..
நெஞ்சுக்கு நடுவே எழுப்பி வைத்து நீதியைக் காப்பதுதான் பெருமை!..

இதை நினைவில் கொள்ளாவிடில் நமக்குத் தான் சிறுமை!..


கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே நாளில் மறப்பாரடி..  
***

நம்பிக்கை!..

கொள்வதும் கொடுப்பதும் அந்த ஒன்றுதான்!..
அந்த ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் நாம் அனைவரும் இயங்குகின்றோம்..

நம்பிக்கை கொள்ளவும் இல்லை..
நம்பிக்கை கொடுக்கவும் இல்லை!... எனில்
- என்ன மாதிரியான கட்டமைப்பு இது!..
கேவலம்..
***


பதிவில் உள்ள படங்கள் - இணையத்தில் பெற்றவை...
காணொளி :- தந்தி தொலைக்காட்சி.. அவர்தமக்கு நன்றி..

எல்லாவற்றுக்கும் மேலாக -
இரத்த தானம் செய்வதில் மிகுந்த விருப்புடைய - ஸ்வாதி
தனது நண்பர்களிடம் கூறுவது - இப்படி...

இறைவன் படைத்தது ஒரு பிறப்பு..
அதற்கு இரத்த தானம் கொடுப்பது - மறு பிறப்பு!..

அதன்படியே , 

மண் மகளுக்கும்
 தன் குருதியைக் கொடையாய்க் 
கொடுத்து விட்டு சென்று விட்டார் ..

மனித நேயம் கொண்டு மலர்ந்த மலர்
மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டது..

ஸ்வாதி 
உன் ஆன்மா அமைதியுறட்டும்!..  
***

18 கருத்துகள்:

  1. படிக்க, படிக்க மனம் வேதனிக்கின்றது ஜி இனியெனும் நடவாதிருக்க இந்த அரசு என்ன செய்கின்றது மக்களுக்கு எந்த கவலையும் இல்லை தனக்கு நடக்கும் பொழுது மட்டுமே வலிக்கின்றது மதப்பிரச்சினைகளுக்கு கூடும் மக்கள் இப்படி பிரச்சினைகளை கண்டு ஒதுங்கி விடுகின்றோமே இதன் அடிப்படை காரணம் சட்டத்தில் மாற்றம் வேண்டும் உடனே வேண்டும் அரபு நாட்டு சட்டங்கள் இந்தியாவுக்கு உடனடி தேவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாங்கள் கூறுவது உண்மைதான்..
      ஆனாலும் ஒவ்வொருவரின் பின்னாலும் சட்டமும் ஒழுங்கும் போக இயலுமா.. சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் பொதுமக்களின் பங்கு தான் என்ன?..

      கடுமையான சட்ட வரைவுகள் தேவைப்படும் நேரம் இது.. இருப்பவற்றை முறையாக நடைமுறைப் படுத்தினாலே போதும்...

      அரபு நாட்டில் இதற்கு மேலான கொடூரர்கள் இருக்கின்றார்கள்.. தங்களுக்கு தெரியும் என்றே நினைக்கின்றேன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. படிக்கும் போதே வேதனை கொண்டது மனது.

    எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      நாம் சென்று கொண்டிருக்கும் திசை தான் எது?..
      இன்னும் போகப் போக என்ன்வெல்லாம் நேருமோ?..
      மனம் தவிக்கின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. படித்ததும் மனம் கனமாகி விட்டது. கொஞ்ச நாட்களாக செய்தித் தாள்களை படிக்காததால் இந்த செய்தி பற்றித் தெரியவில்லை.

    மனிதர்களிடையே சுயநலம் அதிகமாகி விட்டது. கருணை, மனித நேயம் எதற்குமே வர வர அர்த்தங்கள் குறைந்து வ‌ருகின்றன. அந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒரு நல்ல ம‌னம் கூட அங்கே இல்லாமல் போய் விட்டது!

    //சொந்த சசோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
    சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மறந்தாரடி.. // உங்களைப்போல் பாரதியின் வரிகளைத்தான் நினைவு கூர்ந்து நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இன்னும் போகப் போக என்ன்வெல்லாம் நேருமோ?.. அச்சமாக இருக்கின்றது.. பொறுப்பற்றவர்களால் சூழப்பட்டிருக்கின்றோம்.. மனம் கிடந்து தவிக்கின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. மனிதம் என்பதை மறந்துவிட்டு தவறான பாதையில் செல்கிறோம். வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மனிதத்தை மீட்டெடுக்க வேண்டாமா..
      வருங்காலம் எப்படியிருக்குமோ?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. மனிதம் மறந்த மனிதர்கள்
    மனம் கணக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இனிமேல் வருங்காலம் எப்படியிருக்குமோ?.. எதிர்கால சந்ததிகளின் நிலை?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. மானுடம் மரித்து தான் போனது. என்கோ தவறுகிறோம். கல்வி பயிற்றுவிக்கும் போதா? வளர்ப்பிலா? புரியவில்லை.

    சுவாதியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அதையாவது செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வருங்காலம் எப்படியிருக்குமோ?.. சூழ்நிலைகள் எல்லாமே காரணங்களாக அமைந்து விடுகின்றன.. எந்தநிலையிலும் கண்காணிப்பு என்பதே இல்லை..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. இன்னும் அந்தக் கொலைகாரன் பிடிபடவில்லையாமே. இத்தனைக்கு கொலை செய்து விட்டு நிதானமாகவே அந்த இடத்தை விட்டு அகன்றான் என்னும் செய்தியையும் படித்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அந்தக் கொலைகாரன் நிதானமாகவே சென்றிருக்கின்றான்.. அப்படிச் சென்றவனைக் கூட - பிடிக்க முயற்சிக்காமல் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. மனிதாபிமானம் மரணித்து மாமாங்கம் ஆகிவிட்டது.

    ஸ்வாதிக்கு எமது அஞ்சலிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மனிதாபிமானம் தழைக்காவிடில் மனிதன் வாழ்ந்து பயன் என்ன?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. படங்களும், உங்களது ஆதங்கமான வரிகளும் நெஞ்சை கனக்கச் செய்து விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      கொலைகாரன் சிக்கி விட்டான் என்ற செய்தி வராதா?.. என்று அவ்வப்போது - அலைபேசியில் தேடிக் கொண்டேயிருக்கின்றேன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..