நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


சனி, பிப்ரவரி 13, 2016

மகாமகப் பெருவிழா 1

கோயில் நகரமாகிய திருக்குடந்தை மாநகரில் -
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 
மகாமகப் பெருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் 
கோலாகலமாகத் தொடங்கியது..மகாமகப் பெருவிழாவினை முன்னிட்டு - இன்று பகல் 12.30 மணியளவில்
ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயிலில் -
சிறப்பு அலங்காரத்துடன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள - வெகுசிறப்பாக
திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது..

இன்று தொடங்கி பத்து நாள்களுக்கு நடைபெறவுள்ள திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வரும் 22-ஆம் தேதி பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் நிகழ்வுறும்..

தீர்த்தவாரி நாளே மகாமகத் திருநாள்..
குடந்தை நகருக்குள் - மகாமகத் திருவிழாவுடன் தொடர்புடைய சிவாலயங்களின் தீர்த்தவாரி மகாமகத் திருக்குளத்திலும்,

வைணவக் கோயில்களின் தீர்த்தவாரி காவிரி ஆற்றின் சக்கரபடித்துறை தீர்த்தவாரி மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கொடியேற்றம் நிகழ்ந்த வேளையில்

ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
ஸ்ரீ அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
- ஆகிய சிவாலயங்களிலும் சனிக்கிழமை திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது..

இத்திருக்கோயில்களில் பத்து நாள்கள் பிரம்மோத்ஸ விழா நிகழ்கிறது.

மகாமகப் பெருவிழா தொடர்புடைய - மற்ற சிவாலயங்கள்..

ஸ்ரீ கௌதமேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ பாணபுரீஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ கோடீஸ்வரர் திருக்கோயில் - கொட்டையூர்.
ஸ்ரீ அமிர்தகலச நாதர் திருக்கோயில் - சாக்கோட்டை..

மேற்குறித்த சிவாலயங்களில் ஏக தின உற்சவமாக நடைபெறுகிறது.
குடந்தை நகருக்குள் மகாமக தொடர்புடைய வைணவத் திருக்கோயில்கள் -

ஸ்ரீ சார்ங்கபாணி
1) ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்,
2) ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்,
3) ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்,
4) ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்,
5) ஸ்ரீ வராகப் பெருமாள் திருக்கோயில்..


இத்திருக்கோயில்களில் நாளை காலை ( ஞாயிறு - பிப்/14)
திருக்கொடியேற்றத்துடன் மகாமகத் திருவிழா தொடங்குகிறது.முன்னதாக - மகாமகக் குளத்தில் அமிர்த கலச நீர் கலக்கும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பேஸ்வரர் திருக்கோயிலில் மகாருத்ர ஜபத்துடன் பூஜிக்கப்பட்ட அமிர்த கலசம் திருக்கோயிலில் இருந்து -

கண்ணாடி பல்லக்கில் வைக்கப்பட்டு, யானை முன்னே செல்ல - மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

மகாமகத் திருக்குளத்தைச் சுற்றி வந்த பல்லக்கு, வடக்கு கரையில் நிலைக்கு வந்தது.
இதையடுத்து, அமிர்த நீர் அடங்கிய கலசத்தை மகாமக குளத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டது..
குளத்தினுள் அமிர்த கலசத்துக்கு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்ட பின்,

திருக்குளத்தில் அமிர்த நீர் வார்க்கப்பட்டது..

கடந்த சிலநாட்களாக திருக்குளம் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு புதிதாக ஆற்று மணல் பரப்பட்டது.. இந்நிலையில் திருக்குளத்துக்கு அரசலாற்றில் இருந்தும், நகராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்தும் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.. 

விழாக் கோலம் பூண்டுள்ள திருக்குடந்தை நகர் முழுதும் 
கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது..

மகாமகத் திருவிழாவில் - அவசர கால உதவிக்காக - 150 பணியாளர்களுடன் முப்பது ஆம்புலன்ஸ்கள் (108) தயார் நிலையில் உள்ளன.

அகலம் குறைந்த சிறிய தெருக்களில் செல்லும் வகையில், இரு சக்கர ஆம்புலன்ஸுகளும் மக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ் (108)  உதவி கேட்டு வரும் தகவலை உடனடியாக பரிமாறிக் கொள்வதற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாற்காலிக இணைப்பு மையம் (Call Center) அமைக்கப்பட்டுள்ளது..

மகாமக தினத்தன்று 16 லட்சம் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட உள்ளன..
அன்னதான நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன..
குடந்தை நகருக்கு வெளியே ஏழு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன..

அவற்றிலிருந்து 2500 பேருந்துகள் தமிழகத்தின் பலபகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ளன..

கும்பகோணம் வழியாக இயக்கப்படும் 
சிறப்பு ரயில்களின் அட்டவணை..


குடந்தை நகருக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள்..

268 இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய குடிநீர்த் தொட்டிகள்..

147 இடங்களில் தற்காலிகக் கழிவறைகள்..

120 இடங்களில் மருத்துவ முகாம்கள்..

36 இடங்களில் தற்காலிகக் காவல் நிலையங்கள்..

28 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவலர்களும் ஆயிரம் தீயணைப்பு - மீட்புப் பணி வீரர்களும் மகாமகத் திருவிழாவில் நமக்காக கடமையாற்ற உள்ளனர்.

முந்தைய காலங்களைப் போலல்லாமல் -
அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.. 


மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவது நமது கடமை..

பல லட்சம் பேர் கூடும் திருவிழாவில் - நமக்கு நாம் தான் பாதுகாப்பு!.. - என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்..

திருவிழாவில் அவ்வப்போது வீண்புரளிகளும் வதந்திகளும் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்..

எல்லாவற்றையும் அனுசரித்து திருக்குளத்தில் தீர்த்தமாடி -
சிவதரிசனம் செய்து மகிழ்ந்திட வேண்டுகின்றேன்..


திருவளர் நாயகனாகிய சிவபெருமான்
தீர்த்த வடிவினன் என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு..

தீர்த்தனை சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதலான ஒருவனை
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ!.. (5/2)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *  .

14 கருத்துகள்:

 1. சிறப்பான தகவல்கள். நண்பர்கள் சிலர் இந்நிகழ்ச்சிக்காகவே தில்லியிலிருந்து குடந்தை சென்றிருக்கிறார்கள்......

  விழா சிறப்புற நடக்க எனது வாழ்த்துகளும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நிறைய தகவல்களோடு ஒரு சிறப்பான பதிவு. வீண்புரளிகள் பற்றிய எச்சரிக்கை அவசியமான ஒன்றுதான். தேர்தல் சமயத்தில் எதுவும் நடக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..
   பெருங்கூட்டத்தில் கவனமாக இருப்பது அவசியம் தானே..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. தகவல்கள் அனைத்தும் மகாமகம் செல்லும் அனைவருக்கும் உதவும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. நேற்று குடும்பத்துடன் சென்று வந்தேன். தாங்கள் கூறியுள்ள கோயில்களில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் தவிர பிற ஐந்து கோயில்களுக்கும் சென்றோம். தங்களது பதிவு மறுபடியும் என்னை கும்பகோணம் அழைத்துச் சென்றது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..

   மகாமகம் குறித்து நிறைய தகவல்களைத் தங்களுடைய தளத்தில் அளிக்கின்றீர்கள்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. தாங்கள் குவைத்தில் இருந்தாலும்
  தங்களின் மனம் கும்பகோணத்தில்தான் இருக்கும்அல்லவா
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..

   தாங்கள் கூறுவது சரியே..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஆஹா முதல் பதிவும் வந்ததா?

  சிறப்பான தகவல்கள்,, அழகிய புகைப்படங்கள், அனைத்தும் அருமை,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்டையீர் ..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. உங்கள் பதிவு ஒரு தகவல் கையேடு. பாராட்டுக்கள் இந்தமுறை மகாமகத்தின் போது எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா ..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு